Published:Updated:

``ஸ்கூல்ல சிவன் விடுற பேப்பர் ராக்கெட்ல என்ன விசேஷம் தெரியுமா?!'' - இஸ்ரோ சிவனின் நண்பர் மதன்

சிவன் படித்த பள்ளியில், அதே காலத்தில் படித்தவர் மதன். 'சிவன் சார் ...' என்ற வார்த்தையைக் கேட்டதும் உற்சாகமாக எங்களுடன் உரையாடத் தொடங்கினார்.

ISRO Sivan with Madhan
ISRO Sivan with Madhan

இன்றைய நாளில் அனைத்து ஊடகங்களிலும் அதிகமாக உச்சரிக்கும் பெயர் `இஸ்ரோ' தலைவர் சிவன். `சந்திரயான்-2' திட்டத்தில், தான் நினைத்ததை முழுமையாகச் சாதிக்க முடியாமல் போனதை நினைத்துக் கலங்கிப்போய் அமர்ந்திருக்கும் அவருடைய புகைப்படம், காண்பவரை கலங்கவைத்தது.

Modi consoles ISRO Chief Sivan
Modi consoles ISRO Chief Sivan

1957-ஆம் ஆண்டில் ஏப்ரல் 14-ம் தேதி சரக்கல்விளை என்ற சாதாரண குக்கிராமத்தில் கைலாசவடிவு - செல்லம்மா தம்பதிக்குப் பிறந்து கடுமையான உழைப்பை மட்டுமே நம்பி இவ்வளவு தூரம் பயணித்திருக்கும் சிவனின் உயரமென்பது ஏதோ மாயாஜாலத்தால் திடீரென நிகழ்ந்ததல்ல. அது கடும் வலிகொண்ட பயணம். இவரின் பயணத்தை உள்வாங்கிக்கொள்ள, இவரின் பள்ளி, கல்லூரி நாள்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரப் பிரிவில் பணிபுரியும் மதன்குமார் என்பவரைக் கண்டுபிடித்தோம். சிவன் படித்த பள்ளியில் அதே காலத்தில் படித்தவர் மதன். 'சிவன் சார் ...' என்ற வார்த்தையைக் கேட்டதும் உற்சாகமாக எங்களுடன் உரையாடத் தொடங்கினார்.

"சரக்கல்விளை அரசு பள்ளிக்கூடத்தில் சிவன் 10-ம் வகுப்பு படித்த போது 6-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். `அம்மா, அப்பாவுக்கு வேண்டிய உதவிகளையும் செய்துகொண்டு படிப்பிலும் கெட்டிக்காரப் பிள்ளையாக இருக்கும் சிவனைப்போல்தான் நீயும் வர வேண்டும்' என்று என் பெற்றோர் அடிக்கடி சொல்வார்கள்.

ISRO Sivan
ISRO Sivan
Vikatan

பள்ளியில் மட்டுமல்ல கல்லூரிக் காலத்திலுமே அவர் மிகவும் எளிமையாக இருப்பார். வேட்டியைக் கட்டிக்கொண்டு காலில் செருப்புகூட இல்லாமல் அவர் கல்லூரிக்குச் செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.

பள்ளி நாள்களில் நூலகத்தில் அதிகமான நேரத்தைச் செலவிடுவார். அறிவியல் சம்பந்தமான பத்திரிகையாக இருந்துவிட்டால் சொல்லவேண்டியதே இல்லை. பொறுமையாக மணிக்கணக்கில் காத்திருந்துதான் அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கிப் படிக்க முடியும், வாசிப்பின் மீது அவ்வளவு ஆர்வம் அவருக்கு!

இன்று இஸ்ரோவில் அவருடைய சாதனைகளுக்கெல்லாம் அதுதான் அடிப்படையோ என்னவோ?!
மதன்

அவருக்கு விளையாட்டுகளில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. மற்ற மாணவர்கள் கபடி, கோ-கோ என விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில், இவர் சில நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு காகிதத்தில் ராக்கெட் செய்து விட்டுக்கொண்டிருப்பார். அதிலும் மற்ற மாணவர்களை விடவும் இவர் விடும் ராக்கெட்தான் உயரமாகப் பறக்கும். இன்று இஸ்ரோவில் அவருடைய சாதனைகளுக்கெல்லாம் அதுதான் அடிப்படையோ என்னவோ?" என்று சொல்லி ஜாலியாக சிரிக்கிறார் மதன்.

"அறிவியலைத் தாண்டி, சிவன் ஆர்வம் காட்டிய வேறு துறைகள் உண்டா?" என்ற கேள்விக்கு, "அறிவியலுக்குப் பிறகு அவருக்குப் பிடித்தது கணிதம்தான். சில நாள்களுக்கு முன்பு சிவனின் பள்ளிக்காலக் கணித ஆசிரியர் கணேசன் என்பவரைச் சந்தித்துப் பேசும்போது கூட, கிட்டத்தட்ட 1973-களில், சிவன் மாதாந்திரத் தேர்வுகளில் தொடங்கி பல தேர்வுகளிலும் 100/100 எடுத்த மதிப்பெண் பட்டியலைக் காட்டி பெருமைப்பட்டார்." என்றார்.

ISRO Sivan with School Students
ISRO Sivan with School Students

சிவனுக்கும் அவருடைய ஊருக்குமான இப்போதைய உறவு பற்றிக் கேட்டபோது, "அவர் இஸ்ரோவின் சேர்மனான பிறகும் தான் பிறந்த ஊரின் மீதும், குறிப்பாகத் தான் படித்த பள்ளிக்கூடம் மீதும் மாறாத அன்புடையவராக இருக்கிறார். அவர் படித்த பள்ளிக்கூடம் ஓட்டுக்கட்டடத்துடன் மிக மோசமான நிலையில் இருந்ததைப் பார்த்து, கணினி வசதியுடன் கான்கிரீட் கட்டடமாக்கினார். குழந்தைகள் ஆர்வமாகப் படிக்க வண்ணமயமான மேஜைகள் அமைப்பது போன்ற ஏற்பாடுகளையும் இஸ்ரோவின் உதவியுடன் செய்துகொடுத்தார். பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 20-ஆக இருந்தது மாறி, தற்போது 60-ஆக உயர்ந்ததற்கு காரணமும் சிவன் படித்த பள்ளி என்பதாலும்தான்.

சிபாரிசு செய்வது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது. ஊர்க்காரன், சொந்தக்காரன் என்று சொல்லிக்கொண்டு ரெக்கமன்டேஷனுக்காக அவரிடம் சென்றால், கடுமையாகக் கோபப்படுவார். அது, தன் பிள்ளைகளாகவே இருந்தாலும்கூட தன்னைப்போல் நேர்மையாலும் கடுமையான உழைப்பாலுமே உயரவேண்டும் என விரும்புவார்.

Sivan Towards Spirituality
Sivan Towards Spirituality

ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டு அவருக்கு. எந்த புராஜெக்ட்டைத் தொடங்குவதாக இருந்தாலும் எங்கள் ஊரிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபட்ட பிறகே தொடங்குவார். வரமுடியாத சூழலிலும் என்னிடம் சொல்லி பூஜை செய்யச் சொல்வார்.

எங்கள் ஊரைச் சேர்ந்த குழந்தைகள் பெரியவர் என வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே அவர்தான் ரோல்மாடல். அவரை குருவாகக் கொண்டு, அவர் வழியைப் பின்பற்றி உழைத்த எங்களூரைச் சேர்ந்த நாகராஜன், நாராயணன் இருவருமே இப்போது அறிவியல்துறையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

மிஷன் இஸ் ஆன்!

கடைக்கோடியில் எங்கோ ஒரு மூலையில் உள்ள எங்கள் மேலசரக்கல்விளை கிராமம், இன்று இந்திய அளவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றால் அதற்கு காரணமானவர் சிவன். சில மாதங்களுக்கு முன்புகூட மேலசரக்கல்விளையில் சிவன் தங்கியிருந்த வீட்டிற்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், `இது சாதாரணமான இடமில்லை, ஒரு புண்ணியத்தலம்' என்று சொன்னார்" என்று நெகிழ்கிறார் மதன்.