திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.