மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 18

ஏமாறாதே... ஏமாறாதே!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி, ஓவியம்:கண்ணா

சேலத்தில் இருந்து ஹைதராபாத் வழியாக நாக்பூர் வரை செல்லும் லாரிக்காகக் காத்திருந்தோம். நமது முதல் பயணமான கோவை டு கொல்கத்தா பயணத்தில் உடனிருந்த டிரைவர் சிவகுமார், ஹைதராபாத் ரூட் செல்பவர். அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், ரூட்டை மாற்றிக்கொண்டு எங்களுடன் வந்திருந்தார். அவருக்கு நிகழ்ந்த திகில் கிளப்பும் சம்பவத்தை, நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 18

''ஹைதராபாதில் இருந்து தமிழகத்துக்கு லோடு ஏற்றிக்கொண்டு, நால்வழிச் சாலையில் அனந்தபூர் நெருங்கிக்கொண்டிருந்தோம். மாலை நான்கு மணி இருக்கும். கிளீனர் ஜலேந்திரன்  பக்கவாட்டு சீட்டில் அமர்ந்திருக்க, நான் டிரைவர் சீட்டில் இருந்தேன். ஹாரன் அடித்தவாறே லாரியை ஓவர்டேக் செய்து கொண்டுபோன ஒரு ஜீப், திடீரென எனது லாரிக்கு முன்பாக சாலையோரம் நின்றது. அதிலிருந்து இறங்கியவர், லாரியை நிறுத்துமாறு கைகாட்டினார். 'நிறுத்துவதா வேண்டாமா?’ எனக் குழம்பிய கணத்தில், அவர் சாலையில் நின்றவாறே அரசு முத்திரை பதித்த அடையாள அட்டையைக் காண்பித்தார். சட்டென லாரியை பிரேக் செய்து ஓரங்கட்டி, ஜீப் முன்பாக நிறுத்தினேன். லாரி அருகே வந்தவர், 'கொஞ்சம் பொறு’ என்று, செல்போனில் யாருக்கோ போன் செய்தார். பிறகு, லாரியைச் சுற்றிவந்து நோட்டமிட்டார். நாம் தவறான பொருள் எதுவும் கொண்டு வரவில்லை. அதனால், பயப்பட வேண்டியது இல்லை. என்னெவென்று விசாரிக்கலாம் என லாரியைவிட்டுக் கீழே இறங்க முயற்சித்தபோது, 'லாரியைவிட்டு இருவரும் கீழே இறங்க வேண்டாம்’ என எச்சரித்தவர், 'செல்போன் இருக்கிறதா?’ எனக் கேட்டு இருவரிடமும் இருந்த செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டார். லேசாக பயம் எட்டிப் பார்த்தது.

நமக்கே தெரியாமல் நாம் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என இருவரும் மாறி மாறி விசாரித்துக் கொண்டோம். என்னவாக இருக்கும் என்ற குழப்பம் கொஞ்ச நேரத்தில் பயமாக மாறத் தொடங்கியது. சாலையில் ஏராளமான வாகனங்கள் வந்துபோய்க்கொண்டுதான் இருந்தன. எங்கள் லாரியைக் கடந்து செல்லும் மற்ற லாரிகள், ஒரு கணம் வேகம் குறைத்து, என்ன என்பதுபோல பார்த்துவிட்டு மீண்டும் வேகம் பிடித்தன.

சற்று நேரத்தில் மேலும் ஒரு ஜீப் வந்து நிற்க. அதிலிருந்து திபு திபுவென ஆட்கள் இறங்கினார்கள். '’பிடிச்சாச்சா... இந்த லாரிதானா?' என்றபடி லாரி கேபினைச் சூழ்ந்து கொண்டனர். முதலில் வந்த அரசு அதிகாரியானவர், எங்களைக் கீழே இறங்கச் சொன்னார்.

இறங்கியதும், ஜலேந்திரன் அமர்ந்திருந்த பக்கத்துக்கு அழைத்துச் சென்று, பின் வீல்களுக்கு முன்பாக சாம்பார் சாதம் சிதறிய தடத்தைக் காண்பித்தார். 'இது என்னவென்று தெரிகிறதா?’ என்று கேட்டார். எனக்கு எதுவும் புரியவில்லை. மீண்டும் லாரியில் ஏறச் சொல்லிவிட்டு, கேபினின் இருபக்கமும் இருவரை நிறுத்திவைத்துவிட்டு, உள்ளே மூவர் ஏறி கண்ணாடிப் பக்கமாக அமர்ந்துகொண்டார்கள். இப்போது உண்மையிலேயே பயந்து நடுங்கத் தொடங்கினோம்.

அதிகாரியானவர் என்னிடம், 'சாப்பாடு வாங்கிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்ற சின்னப் பையன் மீது நீங்கள் மோதிவிட்டீர்கள்’ என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆளில்லா சாலையில் மெதுவாக ஊர்ந்துகொண்டு வருகிறோம். எப்படி சாத்தியம் எனக் குழம்பி, 'இல்லையே...’ என்றபோது, 'டிரைவர் சீட்டில் இருக்கும் உனக்குத் தெரிந்திருக்காது. ஆனால், இந்தப் பக்கம் அமர்ந்திருந்த இவனுக்குத் தெரியும்’ எனச் சொல்லிக்கொண்டிருந்தபோதே... ஜலேந்திரன் கன்னத்தில் ஒருவன் அறைந்தான். ''ஏன்டா... நீதான் அந்தப் பையன் ரோட்டை கிராஸ் பண்றதைப் பார்த்தியே... டிரைவர்கிட்ட ஏன் சொல்லலை?'' என்றவாறு இன்னொருவனும் ஜலேந்திரனை அறைந்தான். 'அப்படி எதுவும் நடக்கவே இல்லை' என ஜலேந்திரன் அலற, அதைக் கண்ட எனக்கு பயத்தில் நா குழற ஆரம்பித்துவிட்டது.

உதவிக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்கத் துவங்கியது. எதிரே செல்லும் வாகனங்கள் நின்றிருக்கும் லாரியைப் பார்த்தால், ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள். எப்படி இதில் இருந்து விடுபடுவது என்றே சிந்தனை ஓடியது. 'சரி, விபத்துதானே... வாருங்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்வோம்’ என்றதும், ஒருவன் என்னை அடிக்கப் பாய்ந்தான். 'கேஸ் கொடுத்திட்டு ஜாமீன் வாங்கிக்கிட்டுப் போயிடுவ... அப்புறம் வந்து ஐநூறு ரூபா ஃபைன் கட்டிட்டு கேஸ் முடிப்ப... நாங்க, அடிபட்ட குழந்தையை வெச்சு வைத்தியம் பார்த்துக்கிட்டு உட்காந்திருக்கணுமா? இப்பவே உங்களைக் கொன்னுடுவோம்’ என்றான். இன்னொருவன், 'நமக்கு எதுக்குப் பிரச்னை. இவனுங்களை லாரியோட ஊருக்குக் கூட்டிட்டுப் போயி ஒப்படைச்சுடுவோம். அதுக்கப்புறம் ஊர்க்காரங்க பாடு, இவங்களோட பாடு' என்றான். இதற்கிடையே அதிகாரியானவருக்கு போன் வர... எடுத்துப் பேசியவர், அப்படியா... அப்படியா? என்றவாறு, 'ஊர்ல இருந்து ஆளுங்கெல்லாம் கெளம்பி வந்துக்கிட்டு இருக்காங்களாம். அவங்ககிட்ட ஒப்படைச்சிடுவோம்’ என்றார். 'ஊர் ஆளுங்க இவனுங்களை அடிச்சே கொன்னுடுவாங்களே’ என்று எங்களுக்காகக் கவலைப்பட்டனர் உடன்வந்தவர்கள்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 18

எனக்கு திகில் அதிகமாகிவிட்டது. ஏனென்றால், விபத்து என நடந்தால், அந்த இடத்தில் இருந்து டிரைவர் தப்பி, பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதுதான் புத்திசாலித்தனம். கிராம மக்களிடம் சிக்கி, அடிவாங்கியே உயிரைவிட்ட டிரைவர்களும் உண்டு. அதனால்தான், விபத்து ஏற்பட்டால், டிரைவர்கள் அந்த இடத்தில் இருந்து விரைவாகத் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், விபத்து வழக்கில் இருந்து தப்பிக்க நினைக்க மாட்டார்கள். பாதுகாப்புக்காக அருகே இருக்கும் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைவார்கள். சரி, இப்போது இதில் இருந்து தப்பியாக வேண்டும். அதிகாரியானவரிடம், 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்றேன். 'பணம் கொடு, மிச்ச விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றவரிடம், 'காலையில்தான் டீசல் போட்டேன். சரக்கைக் கொண்டுபோய் சேர்த்தால்தான் வாடகை கிடைக்கும். கையில் செலவுக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் இருக்கிறது’ என்று சொன்னதும், அடிக்கப் பாய்ந்தனர் மற்ற மூவரும். ஆளாளுக்குக் கத்துவதும் ஒருவன் அடிக்க வந்தால் மற்றவன் தடுப்பதுமாக, கிலியை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். சட்டென அதிகாரியானவர், 'உன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வை’ என்றார். பாக்கெட்டில் இருந்ததை எல்லாம் எடுத்துப் போட்டேன். பேன்ட் பாக்கெட், சீட்டுக்குக் கீழே என அவர்களாகவே தேட ஆரம்பித்தனர். பணத்தைப் பிரித்துவைக்கும் பழக்கம் எல்லா டிரைவர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள்.

மொத்தம் 15,000 ரூபாய் இருக்கும், பறித்துக்கொண்டு கீழே இறங்கினர். அதிகாரியானவர், 'கொஞ்ச நாளைக்கு இந்த ரூட்டுல வராதே. கிராமத்துக்காரர்களுக்கு உன் லாரி நம்பர் தெரியும். வந்து பிரச்னையில் மாட்டிக்கொள்ளாதே’ என எனக்கு அறிவுரை வழங்கிவிட்டு, ஜீப்புகளில் ஏறிப் பறந்தனர். 100 கி.மீ தாண்டிய பிறகுதான் லாரியை நிறுத்தி மூச்சு வாங்கினோம்.  

எவ்வளவு கச்சிதமாக நாடகம் நிகழ்த்தியிருக்கிறார்கள். நடக்காத விபத்தை நடந்ததாகச் சொல்லி பணம் பறிக்கும் கும்பல் என்பது அப்போது எங்கள் மூளைக்கு எட்டவில்லை. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தபோது ஏற்பட்ட கசப்பு உணர்வு, அடி வாங்காமலேயே எனக்குக் கண்ணீரை வரவழைத்தது. ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தோம். இவ்வளவு கேவலமாக, கீழ்த்தரமாக நடத்தப்படுகிறோமே என நினைத்து மனது ஆறவில்லை. லோடு இறக்கிவிட்டு லாரியை நிறுத்தி வீட்டில் முடங்கிவிட்டேன். சுமார் ஒரு மாதம் எங்குமே செல்லவில்லை. லாரி கடனுக்கான தவணைக் கட்டச் சொல்லி போன் வந்த பிறகுதான் சுயநினைவு திரும்பியவன் போலானேன். கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறித்திருந்தால்கூட, இவ்வளவு தூரம் மனம் வருந்தியிருக்க மாட்டேன். ஆனால், தெரிந்தே ஏமாந்ததால் வரும் அவமான உணர்ச்சி, என்னைக் குறுகச் செய்துவிட்டது. ஜீப்பில் வந்த அதிகாரி அடையாள அட்டை காட்டியதாகச் சொன்னேன் அல்லவா? அது பான்கார்டு என்பது பிறகுதான் தெரியும்!'

ஹைதராபாத் ரூட் வேண்டாம் என சிவக்குமார் முடிவுசெய்யக் காரணம், இந்தச் சம்பவம்தான். அந்த ரூட்டில்தான் வேறு ஒரு டிரைவருடன் நமது பயணம் ஆரம்பம்.

(நெடுஞ்சாலை நீளும்)