மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 19

கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்த சாமி

இரவு 10 மணி. சேலம்  பெங்களூரு பைபாஸ் சாலையில், நமக்காகக் காத்திருந்தது ஸ்ரீராஜகணபதி என்ற பெயர் கொண்ட லாரி. டிரைவர் சேகரைச் சந்தித்தோம். சக டிரைவர் சிவாவுக்கு 24 வயதுதான். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு, சூடம் கொளுத்தி லாரிக்கு பூஜை செய்தனர். இந்தச் சடங்கு, லோடு ஏற்றிப் புறப்படுபோது இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். லாரியில் ஏறி நமக்கான இடத்தை ஒழுங்குசெய்துகொண்டு புறப்பட ஆயத்தமானோம். இந்தமுறை அசோக் லேலாண்டின் டாரஸ் வகை லாரி. அடக்கமான கேபின். நால்வரும் அட்ஜஸ்ட் செய்துதான் பயணிக்க வேண்டும்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 19

'கல் மாவு’ எனச் சொல்லப்படும் கெமிக்கல் பவுடர், ஸ்டீல் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் ஒன்று. இதை சேலத்தில் இருக்கும் ஓர் ஆலையில் இருந்து, மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள வார்தா என்ற ஊருக்கு லோடு ஏற்றியிருந்தனர். சரக்கின் எடை 16 டன். வாடகை 30,000 ரூபாய்.  

டிரைவர் சேகரின் மச்சான் தான் சக டிரைவரான சிவா. 15 ஆண்டுகள் உழைப்பில் வாங்கிய லாரிக்கு, மைத்துனரை சக டிரைவராக வைத்திருப்பது அவருடைய சிக்கனத்தையும் சேமிப்பின் அருமையையும் உணர்த்துகிறது. ''மலைக்குப் போனாலும் மாமன் மச்சான் வேணும்னு சொல்வாங்க. நாங்க ஊர் ஊரா ஒண்ணா சுத்துறோம்!'' என கலகல வெனப் பேசுகிறார் சிவா.

சேலம் தாண்டி தொப்பூர் வந்ததும் ஓரங்கட்டினார் சேகர். அங்கு ஏராளமான லாரிகள் நின்றிருந்தன. அங்கிருந்த தனது சக டிரைவர் நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார். என்னதான் திறமையான, அனுபவமான டிரைவராக இருந்தாலும், பயணப்படும் சாலையில் ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்பதை அடிக்கடி அப்டேட் செய்வது நல்ல டிரைவருக்கான அடையாளம். இவ்வளவு தூரம் முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் அசம்பாவிதங்கள் நடப்பது, இந்தத் தொழிலில் புதிது அல்ல.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, மகாராஷ்ராவில் தான் பிரச்னை அதிகம் என்பது சேகரின் அனுபவம். சேலம் பகுதியில் லாரியுடன் காணாமல் போனவர்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 19

''வருஷத்துக்கு ரெண்டு மூணு லாரியாவது காணாமப் போகுது. டிரைவருங்க உயிரோட இருக்காங்களா, செத்துட்டாங்களானு தெரியாம, அவங்க குடும்பம் தவிச்சுக்கெடக்கும். எவ்வளவு போலீஸு, அதிகாரிங்க இருக்காங்க... கொஞ்சம் வசதியானவங்க காணாமப் போயிட்டா விட்ருவாங்களா? லாரி டிரைவருங்கதானேனு எல்லாருக்கும் மட்டமான நெனைப்பு. எல்லார் உசுரும் ஒண்ணுதான்னு பேச்சுக்கு வேணும்னா சொல்லலாம். ஆனா, நெசத்துல ஒவ்வொண்ணுக்கும் ஒரு மதிப்பு இருக்கு'' என்றவரின் வார்த்தைகள் சத்தியமானவை.      

தங்கத்தைவிட மதிப்புமிக்க பொருளாக எதை நினைக்க முடியும்? கடத்தல்காரர்களுக்கு தாமிரம்கூட விலை மதிப்புள்ள உலோகம்தான். லாரி உரிமையாளர்கள் விலை மதிப்புள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லத் தயங்குவது இயல்பு. காரணம், எங்கே, எப்படி, என்ன நடக்கும் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

விலை மதிப்புள்ள பொருட்கள் எவை என்றால், கம்ப்யூட்டர் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், நுகர்பொருட்கள், உணவுப் பொருட்கள் எனச் சொல்லப்படும் பூஸ்ட், ஹார்லிக்ஸ், எண்ணெய் போன்றவைகூட சரக்குப் போக்குவரத்தர்களுக்குக் கிலி ஏற்படுத்தவைப்பவை. ஏனென்றால், இவை கடத்தலுக்கு எளிதாக இலக்காக்கப்படும். காரணம், இவைதான் உடனடிப் பணமாக மாற்றக்கூடிய செலாவணி. எனவே, இதுபோன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும்போது, கூடுதல் கவனத்துடன் இருப்பார்கள்.

பணத்துக்காக, மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை உணரும்போது, வீட்டைப் பாதுகாப்பாகப் பூட்டிக்கொள்வது பற்றி ஆழ்ந்து யோசிப்போம். ஆனால், சாலையே வீடாக, வானமே கூரையாக வாழும் டிரைவர்கள் அப்படி இருக்க முடியாது. வழிகளில் ஏற்படும் சிக்கல்களில் வாழப் பழகிவிட்டவர்களுக்கு, சாண் போனால் என்ன; முழம் போனால் என்ன எனும் சொல் வழக்குக்கு ஏற்ப, ரிஸ்க் எடுக்கத் துணிகிறார்கள்.  

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 19

சமீபத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் தாமிரத் தகடுகளை, குஜராத் மாநிலத்துக்கு லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்ட லாரி, கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சூளகிரி என்ற ஊரில் வைத்து ஆந்திர மாநிலத்துக்குக் கடத்தப்பட்டது. அந்த லாரியில் இருந்த தாமிரத் தகடுகளின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய். ''இதுபோல கடந்த மூன்று ஆண்டுகளில் நாமக்கல், சங்ககிரி பகுதியைச் சேர்ந்த 11 லாரிகள் காணாமல்போயிருக்கின்றன. இதில் பயணம் செய்த 13 டிரைவர்களில் ஆறு பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மீதி டிரைவர்கள் என்ன ஆனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை'' என்கிறார் நாமக்கல் லாரி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த நல்லதம்பி.

சூளகிரியில் கடத்தப்பட்ட லாரியில், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது. திடீரென ஜிபிஎஸ் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்தேகமடைந்த லாரி உரிமையாளர், டிரைவர்களை போனில் அழைத்துள்ளார். அதுவும் வேலை செய்யவில்லை எனத் தெரிந்ததுமே, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் சொல்லித் தேட ஆரம்பித்துள்ளனர். தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில், அந்த இரு டிரைவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மாமனாரும் மருமகனுமான டிரைவர்கள் இருவரையும் கொன்று ஆற்றில் வீசிய ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல், தாமிரத் தகடுகளை வேறு லாரியில் மாற்றிப் பதுக்க முற்பட்டபோது, போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இதில் உறுத்தலான ஒரு விஷயம்; ஹார்லிக்ஸ், சோப், எண்ணெய், எலெக்ட்ரானிக் போன்ற பொருட்களைக் கொண்டு உடனடியாக கள்ள மார்க்கெட்டில் காசு பார்க்க முடியும். ஆனால், மூலப் பொருளான தாமிர உலோகத்தை, அப்படி விற்க முடியுமா? அப்படியானால், இதன் பின்னணியில் உள்ள சந்தை எப்படிப்பட்டது, யார் இயக்குகிறார்கள் என்பதை ஆராய வேண்டியது, அனைத்து மாநில அரசுகளின் கடமை.

(நெடுஞ்சாலை நீளும்)