மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 20

வரவு எட்டணா; செலவும் எட்டணா!கா.பாலமுருகன்

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 20

சேலத்தில் புறப்பட்டு கிருஷ்ணகிரியை அடைந்தபோது, நள்ளிரவு 12 மணி. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள நாக்பூருக்குச் செல்ல, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூரு, அனந்தபூர், கர்னூல், ஹைதராபாத் வழியாக நான்கு வழிச் சாலை உண்டு. ஆனால், நால்வழிச் சாலையில் பெங்களூரு வழியாகச் செல்வதைத் தவிர்த்தால், டோல் பூத்களுக்குக் கொடுக்கும் கணிசமான பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். அதனால், கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்து குப்பம், பழமனேரி, மதனப்பள்ளி, கதிரி வழியாக, அனந்தபூரில் நால்வழிச் சாலையில் இணைந்துகொள்வது லாரி டிரைவர்களின் வழக்கமான வழி.

பெங்களூரு வழியாகச் சென்றால், கூடுதலாக 1,000 ரூபாய் செலவாகும். அதனால், இருவழிச் சாலை வழியைத் தேர்ந்தெடுக்கிறார் சேகர். ஏனென்றால், தமிழகத்தில் இருந்து லோடு ஏற்றிப் போகும்போது, லாரி வாடகை மிகக் குறைவு. அதுவே, அங்கிருந்து வருவதற்கு வாடகை அதிகம். ஒரு வழியில் கிடைக்கும் லாபத்துக்காக, ஒரு வழிப் பயணத்தில் லாபம் இல்லாமல் ஓட்டுவது தமிழக லாரிகளுக்குப் பழக்கமாகவே ஆகிவிட்டது. அதனால்தான், கூடுமானவரை காசை மிச்சம் பிடிக்க, பல்வேறு வழிகளை, முறைகளைக் கையாள்கிறார்கள். (நியூட்ரல் அடித்து ஓட்டுவதும் உண்டு.)

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 20

இங்கிருந்து போகும்போது 30,000 ரூபாய் வாடகை என்றால், வரும்போது சுமார் 42,000 ரூபாய். இதில் லாபம் என்பது 12,000 ரூபாய். ஆக, ஆறு நாட்களில் 12,000 லாபம். மாதத்துக்கு 60,000 ரூபாய் லாபம் எனக் கணக்கிட்டுவிடக் கூடாது. ஏனென்றால், மூன்று நாட்கள் பயணம் செய்து நாக்பூரில் லோடு இறக்கிவிட்டு, ஏஜென்ட் அலுவலகத்துக்குத் தகவல் சொல்லிவிட்டுக் காத்திருக்க வேண்டும். சில நேரங்களில் உடனே லோடு கிடைக்கலாம்; சில சமயம் நான்கு நாட்கள்கூட ஆவது உண்டு. எனவே, மாதம் ஐந்து முறை ட்ரிப் அடித்துவிட முடியாது. மூன்று முறை சென்றுவரலாம். அந்த லாபத்தில்தான் தவணை செலுத்த வேண்டும்; டயர் தேய்மானம், ஆயில், பராமரிப்பு, குடும்பம், சொந்தச் செலவு என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள வேண்டும்; பார்த்துப் பார்த்துச் செலவழித்து, மிச்சம் பிடித்து வாழப் பழக வேண்டும். அதனால்தான் சொந்த மைத்துனரை சக டிரைவராக அழைத்துச் செல்கிறார் சேகர்.  

கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் நோக்கிச் செல்லும் இருவழிச் சாலையில் புகுந்தபோது, முன்னே ஏராளமான வாகனங்கள் அந்த இரவு நேரத்தில் ஊர்ந்துகொண்டிருந்தன. குப்பம் செல்லும் வழியில் ஒரு மலைத் தொடரைக் கடக்க வேண்டும். முன்னால், சட்டெனெ மேடேறி வளையும் மலைச் சாலை. அதில், எக்ஸ்ட்ரா கியரில் அலறியபடி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருந்தது பாரமேற்றிய லாரி ஒன்று. அது கடந்து மேலே ஏறட்டும் எனக் காத்திருந்தார் சேகர். 'இப்போது பரவாயில்லை, கொஞ்சம் அகலப்படுத்திவிட்டார்கள். முன்பு முழு லோடு ஏற்றிக்கொண்டுவந்தால், இந்த இடத்தைக் கடக்க பெரும்பாடு ஆகிவிடும்’ என்றார் சேகர். இன்ஜின் திணறல் சத்தத்துடன் மலை ஏறி இறங்கி, சமதளத்தை அடைந்ததும்தான் திணறல் அடங்கியது. குப்பம் கடந்து பழமனேரியை எட்டியபோது, விடியத் துவங்கியிருந்தது.

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 20

டீ சாப்பிடலாம் என லாரியை ஓரங்கட்டினார் சேகர். அங்கு ஏற்கெனவே நின்றிருந்த லாரியின் டிரைவர், சேகரின் அண்ணன் செல்வராஜ். நாக்பூரில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவை நோக்கிச் செல்லும் லாரி அது. அனைவரும் பல் துலக்கி, முகம் கழுவி டீ குடித்துவிட்டு, ரிலாக்ஸ்டாகப் பேச ஆரம்பித்தோம். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சாலைகளின் நிலை, வாடகை, தொழில் நசிவு, திருட்டு என பேச்சு நீடித்தது. போக்குவரத்து, சாலை மேம்பாடுகள் முன்பைவிட பல மடங்கு மேம்பட்டிருந்தாலும் திருட்டு, கொள்ளை, கொலை மட்டும் குறையவில்லை என்று கவலை தெரிவித்தனர்.

நெடுஞ்சாலைக்கு என பேட்ரோல் போலீஸ் இருந்தாலும், அது எல்லா மாநிலங்களிலும் பெயருக்குத்தான் செயல்படுகிறது. மேலும், அவர்களால் பாதுகாப்பு என்பது விலகி, மாமூல் என்ற பயம்தான் மேலோங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ''ஒவ்வொரு மாநிலத்தின் வணிக வரித் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, வனத் துறை என எல்லாவற்றையும் சந்தித்து, சமாளித்து சென்றுசேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னையைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை'' என்று வருத்தப்பட்ட செல்வராஜ், ''நேஷனல் பெர்மிட் வாங்கிய லாரிகளுக்கு, மத்திய அரசுதான் ஒட்டுமொத்தமாகத் தீர்வு வழங்க முடியும். ஏனென்றால், மோட்டார் வாகனச் சட்டம் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு விதிமுறை வகுத்துக்கொள்கின்றன. இதனால் பல சங்கடங்கள் நேர்கின்றன!'' என்றார்.

தேசிய அளவில் மத்திய அரசுதான் இதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்பது இந்தப் பயணங்களில் நாம் சந்தித்தவர்களின் ஒட்டுமொத்தமான கோரிக்கை. கடந்த 2014 அக்டோபர் மாதத்தில், 'சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2014’  எனும் சட்ட வரைவு வெளியிடப்பட்டது. இதில், சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு என ஒரு தேசிய கமிட்டியை அமைப்பது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேசிய கமிட்டி, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்புப் படை என்ற அமைப்பை உருவாக்கி மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும். இந்த நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் படை, போக்குவரத்தை ஒழுங்கு செய்வதுடன் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், தேவைப்பட்டால் கைது செய்யலாம் என்றும் புதிய சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நெடுஞ்சாலை வாழ்க்கை! - 20

மேலும், நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால், அதன் விபரங்களை நேரில் பார்த்து விசாரணை செய்து, முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் அளிக்கும் பொறுப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை அப்படியே அமல்படுத்தினால், நெடுஞ்சாலை மனிதர்களின் துயரம் குறையும். காரணம், நெடுஞ்சாலையில் தேசிய பாதுகாப்புப் படையின் கட்டுப்பட்டில் இருந்தால், கொள்ளையர்களின் நடமாட்டம் குறையும். விபத்து, திருட்டில் இழக்க நேரும் பொருட்களின் மதிப்பை, தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியாத அளவுக்கு இன்னல்கள் இருக்கின்றன. தேசிய பாதுகாப்புப் படை இருந்தால், அந்தக் கவலையும் குறையும். ஆனால், புதிய சட்ட வரைவில், சில அம்சங்கள் சாதகமாக இருந்தாலும், சில அம்சங்கள் பாதகமாகவும் இருக்கின்றன. அவை என்ன என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்!

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

(நெடுஞ்சாலை நீளும்)