தேவை.. தனி பாதுகாப்புப் படை! கா.பாலமுருகன், ஓவியம்:கண்ணா
தேசிய நெடுஞ்சாலைகளுக்குத் தனிப் பாதுகாப்பு ஏற்பாடு வேண்டும் என்ற கருத்தை ஆமோதித்தார், டிரைவர் சேகர். நெடுஞ்சாலையில் ஏற்படும் கொலை, கொள்ளை போன்ற பிரச்னைகளால், இந்தத் தொழிலைவிட்டே பலர் விலகியுள்ளனர். ''நெடுஞ்சாலையில் ஒவ்வொரு டிரைவரும் ஒவ்வொருவிதமான பிரச்னையைச் சந்தித்திருப்பார்கள். எதிர்பாராத சிக்கலை எதிர்கொண்டு, அதைக் கடந்துசெல்லும் மனப்பக்குவம் எல்லோருக்கும் இருக்காது. தாக்குப்பிடிக்க முடியாதவர்கள், வேறு தொழிலுக்கோ அல்லது உள்ளூரிலோ செட்டிலாகிவிடுகிறார்கள்.

சுமார் 10 ஆண்டுகளாக நேஷனல் பர்மிட் லாரியில் க்ளீனராக இருந்து, படிப்படியாக டிரைவரானவர் மயில்சாமி. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒருமுறை கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்டார். அதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வெளிமாநில வேலையே வேண்டாம் என உள்ளூரில் விறகு லாரி ஓட்டிக்கொண்டிருக்கிறார்'' என்றார் சேகர்.
மயில்சாமியிடம் பேசினோம். காங்கேயம் அருகே உள்ள வானவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், 18 வயதில் லாரி ஏறியவர். 10 ஆண்டுகள் ஸ்டீயரிங் பிடித்த அனுபவம். மகாராஷ்ட்ரா என்று பேச்சை எடுத்தாலே, அவர் கண்களில் இன்னும் பயம் மின்னுகிறது. அவருக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தை திகில் விலகாமல் சொன்னார் மயில்சாமி.

''இது நடந்து சுமார் ஒரு வருஷம் இருக்கும். சங்ககிரியைச் சேர்ந்த லாரியை ஓட்டிக்கிட்டு இருந்தேன். நான் இன்னும் நெனைச்சுப் பயப்படுற அந்த ட்ரிப்ல, என்கூட டிரைவரா வந்த மூர்த்தி அண்ணனுக்கு 40 வயசு இருக்கும். என்னைவிட நிறைய அனுபவம் உள்ளவர். உடுமலைப்பேட்டையில பேப்பர் லோடு ஏத்திக்கிட்டு, மகாராஷ்ட்ராவில் ஷீரடி தாண்டி துலியாங்கிற ஊருக்குப் போனோம். லோடு இறக்கிட்டு அங்கே இருந்து மக்காச்சோளம் லோடு ஏத்தி, அஹமதாபாத் போனோம். அங்க இருந்து தாராபுரத்துக்கு பஞ்சு பேல் லோடு கிடைச்சது.
லாரி ஏறி 10 நாளைக்கு மேல ஆயிடுச்சு. தாராபுரத்துல லோடு இறக்கிட்டா, ஒரு வாரம் ரெஸ்ட் கிடைக்கும். அந்த எதிர்பார்ப்போட அஹமதாபாத்துல இருந்து வண்டியை எடுத்தேன். மகாராஷ்ட்ராவில் நுழைஞ்சு ஷீரடி வரும்போது சாயந்திரம் ஏழு மணி இருக்கும். 'நீ தூங்கு; நான் வண்டி எடுக்கிறேன்’னாரு மூர்த்தி அண்ணன். நான் பெர்த்ல படுத்தேன். கொஞ்ச தூரம்தான் வண்டி போயிருக்கும். திடீர்னு பயங்கரக் கூச்சல், லாரியைத் தட்டுற சத்தம்; என்ன ஏதோன்னு பயந்துபோயிட்டேன். லாரியோட சைடுல ரெண்டு பைக்குல நாலு பேரு வந்துக்கிட்டு இருந்தானுங்க. அவனுங்கதான் லாரியை நிறுத்துன்னு சத்தம் கொடுத்துக்கிட்டே தட்டிக்கிட்டு வந்தானுங்க.
என்ன பிரச்னைன்னு தெரியலையே. ஏன் இப்படி நிறுத்தச் சொல்லி விரட்டுறானுங்கனுட்டு புரியலை. சரி, நிறுத்தி என்னன்னு கேட்போம்னு ரோட்டோரத்துல இருந்த ஒரு சின்ன ஹோட்டல் முன்னாடி வண்டியை நிறுத்தினார் மூர்த்தி. 'வண்டியைவிட்டு நீ இறங்காதே, நான் என்னன்னு பார்க்கிறேன். டிரைவர் சீட்ல உட்கார்’னு அவர் இறங்கினார். பைக்குல வந்த நாலு பேரும் மூர்த்தி அண்ணனை சரமாரியா அடிக்க ஆரம்பிச்சானுங்க. அதுல ஒருத்தன் டிரைவர் சீட்டு சைடு ஏறி என்னோட சட்டையைக் கிழிச்சுட்டான். எதுக்காக அடிக்கிறாங்கங்கிறது எங்களுக்குப் புரியவே இல்லை. நாங்க வண்டியை நிறுத்தியிருந்த ஓட்டல் ரொம்ப சிறுசு. அங்கே வேற வண்டிகளும் இல்லை. அந்த ஹோட்டல்காரன் வேற ஏதோ பிரச்னைன்னு புரிஞ்சுக்கிட்டு, 'இங்க சண்டை போடாதீங்க... முதல்ல வண்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்புங்க’னு விரட்டினான். டக்குனு மூர்த்தி அண்ணன் வண்டியில ஏறவும் நான் கிளப்பிட்டேன்.

திரும்பவும் அவனுங்க லாரியைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டே இருந்தானுங்க. இவ்வளவுக்கும் நாங்க போயிட்டிருந்த ரோடு, மும்பை டெல்லி ஹைவே. ரோட்ல ஏராளமான வண்டிங்க போய் வந்துகிட்டுதான் இருந்துச்சு. 'திருட்டுப் பசங்ககிட்ட மாட்டிக்கிட்டோம். இன்னும் ஆறு கிலோ மீட்டர் தாண்டினா, அஹமதுநகர் வந்துடும். அங்க இருக்கிற தமிழ்நாட்டுக்காரங்க ஹோட்டலுக்குப் போயிரலாம். வண்டியை நிறுத்தாம ஓட்டு’ன்னாரு மூர்த்தி அண்ணன்.
எனக்குக் கை காலெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப்போச்சு. அப்படி இருந்தும் ஆக்ஸிலரேட்டருல இருந்து காலை எடுக்கவே இல்லை.
அவனுங்க அடுத்து ஒரு காரியம் பண்ணானுங்க... முன்னாடி போயிட்டிருந்த மகாராஷ்ட்ரா லாரியை மறிச்சு நிறுத்தி, ரோட்டையே டிராஃபிக் ஜாம் பண்ணிட்டானுங்க. நான் டக்குன்னு லாரியை சைடுல இருந்த மண்ணுல இறக்கி, அந்த இடத்தைத் தாண்டிட்டேன். திரும்பவும் லாரிக்கு முன்னால குறுக்க மறுக்க பைக் ஓட்டுறானுங்க. ரோட்டுல போறவங்க, நாங்க ஏதோ தப்பு பண்ணிட்டு நிறுத்தாமப் போறோம்னு நினைக்கிற மாதிரி அந்தச் சூழ்நிலை இருந்தது. வேற வழியே இல்லை. வண்டியை நிறுத்தித்தான் ஆகணும். தூரத்துல காலேஜ் ஒண்ணு தெரிஞ்சது. அதுக்கு முன்னாடி கொஞ்சபேர் பஸ்ஸுக்காக நிக்கிற மாதிரி தெரிஞ்சது. டக்குன்னு மூர்த்தி அண்ணன், 'வண்டியை காலேஜ் முன்னாடி நிறுத்திட்டு, அந்தக் கூட்டத்துக்கிட்ட போயி சொல்லுவோம்’னாரு. லாரியை காலேஜ் வாசல்ல நிறுத்திட்டு, சாவியை எடுத்துக்கிட்டு அந்தக் கூட்டத்துக்கிட்ட போயி திருடனுங்க துரத்துறானுங்கன்னு சொன்னோம். பைக்குல இருந்து இறங்கி வந்தவனுங்க, எங்க ரெண்டு பேரையும் கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பிச்சானுங்க. அங்க இருந்தவங்க ஒரு வழியா அவனுங்களத் தடுத்து, 'எதுக்கு அடிக்கிறீங்க?னு கேட்கவும், 'இவனுங்க எங்களை ரோட்டுல ஓரமா அணைச்சுவிட்டுட்டு வந்துட்டானுங்க. நாங்க நாலு பேரும் செத்திருப்போம்’னு ஒரு புதுக் குண்டைத் தூக்கிப் போட்டானுங்க. நாங்க மிரண்டு போயிட்டோம்.
'அங்கே இருந்து நிறுத்துடான்னு சொல்றோம். மதிக்காம வர்றானுங்க’னு சொல்லவும், 'சரி, அவங்க தப்பு செஞ்சிருந்தா, சட்டப்படி கேஸ் போடுவோம். மொழி தெரியாத வேற மாநிலத்துக்காரங்கள அடிக்கக் கூடாது. போலீஸைக் கூப்பிட்டு இவங்களை ஒப்படைப்போம்’னு சொல்லவும் டென்ஷன் ஆகிட்டானுங்க. 'இந்த லாரிக்காரங்களே இப்படித்தான். ரோட்டுல போறவங்க எல்லாத்தையும் கொல்றானுங்க. நீங்க அவனுங்களை சப்போர்ட் பண்றீங்க. போலீஸ் வந்தா காசு வாங்கிட்டு இவனுங்களை விட்டுருவாங்க’னு சொல்ல ஆரம்பிச்சான். ஆனா, அங்க இருந்த மத்தவங்க ஏத்துக்கலை.
இதுக்கு இடையில லாரியில ஏறினவன் கேபினையே தலைகீழாப் புரட்டிட்டான். சாவியை எடுத்துட்டு வந்ததால, வண்டி ஸ்டார்ட் ஆகலை; காசும் கிடைக்கலை. அந்தக் கடுப்புல விண்ட் ஷீல்டு கண்ணாடியையும் ரெண்டு ஹெட்லைட்டையும் உடைச்சுட்டுப் போயிட்டானுங்க. எங்களுக்கு அடி வாங்கி சட்டை கிழிஞ்சு என்ன செய்றதுன்னு தெரியாம மலைச்சு நிக்கிறோம். அங்க இருந்தவங்க தைரியம் சொல்லி கிளம்பிப் போங்கன்னு சொன்னாங்க. ஆனா, என்னால ஸ்டீயரிங்கைப் பிடிக்க முடியுமானுகூடத் தெரியலை. ஏன்னா கை காலெல்லாம் நடுங்கிட்டு இருக்கு. மூர்த்தி அண்ணனுக்கு இடுப்புல சரியான அடி. அவராலயும் முடியலை.
திரும்பவும் அவனுங்க வந்தாலும் வருவானுங்க. இங்க ஆறு கிலோ மீட்டர் தூரத்துலதான் நாங்க ஹால்ட் போடுற ஹோட்டல் இருக்கு. அதுவரைக்கும் உங்கள்ல கொஞ்ச பேரு ஆட்டோவுலகூட வந்தீங்கன்னா உதவியா இருக்கும்னு கேட்டுக்கிட்டோம். அஞ்சு பேரு ஒரு ஆட்டோ பிடிச்சு லாரிக்குப் பின்னாலயே ஹோட்டல் வரைக்கும் வந்து விட்டுட்டு, தைரியம் சொல்லிட்டுப் போனாங்க. பிரச்னையைக் கேள்விப்பட்டதும் ஹோட்டல்ல இருந்த லாரிக்காரங்க எல்லாம் அதிர்ச்சியாகிட்டாங்க. ஏன்னா, தீம்பூர்னி அஹமதுநகர் ரூட்லதான் இந்த மாதிரி வேலையெல்லாம். நடக்கும். ஆனா, ஹைவே மெயின் ரோட்ல ராத்திரி எட்டு மணிக்கு இப்படி ஒரு சம்பவம் அவங்க யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

அடுத்த நாள் காலையில வண்டி எடுத்துக்கிட்டு மகாராஷ்ட்ரா தாண்டி கர்நாடகா நுழையுற வரைக்கும் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டுப் போனோம். சைடுல எந்த பைக் வந்தாலும் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்கும். அவ்வளவு பயம். கையில எங்ககிட்ட அம்பதாயிரம் ரூபாய்க்கு மேல இருந்தது. ஆனா, அது பத்திரமா எங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச லாக்கர்ல இருந்ததால, பணம் தப்பிச்சது. தாராபுரத்துல லோடு இறக்கிட்டு லாரியைவிட்டு இறங்கினவன்தான், லயன் வண்டியே வேணாம்னு, இப்போ திருப்பூருக்கு விறகு லாரி ஓட்டிக்கிட்டு இருக்கேன்'' என தனது மோசமான அனுபவத்தைச் சொல்லி முடித்தார் மயில்சாமி.
இதுபோல, பல நூறு சம்பவங்கள் லாரி டிரைவர்களுக்கு நிகழ்கின்றன. அதற்கான தீர்வாகத்தான் நெடுஞ்சாலைக்கு என பிரத்யேகப் பாதுகாப்பு வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை.
படங்கள்: ரமேஷ் கந்தசாமி, அ.நவின்ராஜ்
(நெடுஞ்சாலை நீளும்)