மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மஹாராஷ்ட்ரா களவாடும் காவலர்கள் !

நெடுஞ்சாலை வாழ்க்கைகா.பாலமுருகன்

நாக்பூர் நோக்கிய இரண்டாம் நாள் பயணத்தில், ஹைதராபாத் - அடிலாபாத் தாண்டி ஆந்திர மாநில எல்லையான பென்கங்கா ஆற்றைக் கடந்து, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நுழைந்தோம். கரஞ்சி என்ற இடத்தில் வழிமறித்த காக்கி உடுப்பு அணிந்து மிரட்டியவர்களிடம் காசு கொடுத்துவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். நன்றாக விடிந்திருந்தது. மஹாராஷ்ட்ரா மாநிலம் என்றாலே, லாரி டிரைவர்களுக்குச் சிம்ம சொப்பனம்தான். தொட்டதுக்கு எல்லாம் காசு என்று சொல்வதைப் போல, எதற்குக் காசு கொடுக்கிறோம் என்பதே பல இடங்களில் லாரி டிரைவர்களுக்குத் தெரியவில்லை.

மாமூல், நாக்கா, உள்ளூர் வரி, அபராதம் என இவர்கள் கொடுக்கும் பணம் முழுவதும் அதிகாரப்பூர்வமானது அல்ல. இந்தப் பணம் முழுவதும் இவர்களுக்கு லாபமாகச் சேர வேண்டியது. யார் யாரோ இவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள். ‘‘மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புறநகர் பகுதிகளில் இதைவிட மோசம். சரக்கு இறக்கும் இடத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் தனி செக்போஸ்ட் அமைத்தே உட்கார்ந்திருப்பார்கள்” என்கிறார் சேகர். அவர்கள் யார் என்றால், ‘‘உள்ளூர் ரெளடிகள். கேட்டால் பஞ்சாயத்து சார்பாக வரி வசூலிக்கிறோம் என்பார்கள். நூறு இருநூறு என்றால், கொடுத்துவிடலாம். பில் வாங்கிப் பார்த்து சரக்கின் மதிப்போடு ஒப்பிட்டு ஆயிரம் இரண்டாயிரம் வேண்டும் என்று கேட்பார்கள். கேட்கும் பணத்தைக் கொடுக்காமல், அந்த இடத்தைத் தாண்ட முடியாது. நாம் சரக்கு கொண்டுபோகும் ஆட்களுக்குத் தகவல் சொன்னால், ‘எங்களுக்குத் தெரியாது; நீங்களே சமாளித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுவார்கள். இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. நாக்கா என்ற பெயரில் 50 ரூபாய் ரசீதுக்கு 500 ரூபாய் வரை கொடுத்துள்ளோம். சமீபத்தில்தான் நாக்கா என்ற உள்ளூர் வரி வசூலை நீக்கியிருக்கிறார்கள். ஆனால், போலீஸ்காரர்களைத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை!’’ என்றார் சேகர்.

மஹாராஷ்ட்ரா களவாடும் காவலர்கள் !

வாட்கி என்ற ஊரில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மாலைக்குள் நாக்பூர் சென்று விடுவோம் என்ற சேகர், மஹாராஷ்ட் ராவில் தமிழக லாரிகளைக் குறிவைத்து நடத்தப்படும் கொள்ளைகளை விவரித்தார். ‘‘டிரைவராக பஞ்சாப் மாநிலம் வரை சென்று வந்துள்ளேன். ஆனால், மஹாராஷ்ட்ராவைப் போல லாரி டிரைவர்களுக்கு எதிரான மாநிலத்தை இதுவரை பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக, தமிழக லாரிகள் என்றால், அவர்களுக்கு இளப்பம்.

ஆந்திரா எல்லையைத் தாண்டியதும் நாக்பூர் வரை சுமார் 15 இடங்களிலாவது போலீஸ் நிற்கிறது. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 200 ரூபாயாவது கொடுத்தால்தான், அந்த இடத்தைக் கடக்க முடியும். கொடுக்க மறுத்தால், ஆபாச வார்த்தைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், கையில் வைத்திருக்கும் தடியால் அடியும் வாங்க வேண்டும்.

ஒருமுறை நாக்பூரில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். ஹிங்கன்காட் என்ற காட்டுப் பகுதி. இரவு 11 மணி இருக்கும். சுமார் 10 பேர் கையில் தடியுடன் நின்றிருந்தனர். டார்ச் அடித்து லாரியை நிறுத்த சைகை செய்த-போது, இந்த இடத்தில் நிறுத்துவதா, இவர்கள் போலீஸ்தானா அல்லது ரெளடிகளா என சந்தேகத்தோடு தாண்ட முற்பட்டபோது, லாரியின் குறுக்கே பாய்ந்தனர். வேறு வழி இல்லாமல் நிறுத்தியதும், வசைச் சொற்களை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. ‘போலீஸை மதிக்கத் தெரியாதா... உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கத்தானே இரவும் பகலுமாக நிற்கிறோம். கொடு காசை’ என்றனர். நேஷனல் பர்மிட் வாங்கிய வாகனத்தை முறையான செக்போஸ்ட்டில் மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும். மற்ற இடங்களில் நிறுத்தக் கூடாது என்பது இந்தியாவில் உள்ள எந்த போலீஸுக்கும் தெரியவில்லை. 50 ரூபாய் கொடுத்தபோது, தடியால் அடிக்க வந்தனர். நள்ளிரவு 11 மணிக்கு, தனியாக காட்டுப் பகுதியில், போலீஸுடன் எங்களால் மல்லுக்கட்ட முடியுமா? 500 கொடுத்த பிறகுதான், அந்த இடத்தைவிட்டு நகர அனுமதித்தார்கள்.

அதேபோல், இதே பகுதியில் இருக்கும் ரயில்வே கேட்டில் இரவில் கிராஸிங் இருக்கும்போது தனியாக நின்றிருந்தால், அவ்வளவுதான். எங்கிருந்துதான் வருகிறார்கள் என்பது தெரியாது. கையில் கத்தியுடன் தபதபவென லாரியில் ஏறி பணம் கேட்டால், நம்மால் என்ன செய்ய முடியும்? அந்த இடத்தில் தமிழக டிரைவர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரெளடிகளுடன் சண்டை போட்டு கத்திக்குத்து வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. நால்வழிச் சாலை வந்துவிட்டாலும் இன்னும் அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி முடியவில்லை. அது முடிந்தால்தான் ஓரளவு நிம்மதியாகப் பயணிக்க முடியும்.

மஹாராஷ்ட்ரா களவாடும் காவலர்கள் !

இப்படி கணக்கே இல்லாமல் கொடுக்கும் பணம் அதிகமானால், கணக்குக் கொடுக்கும்போது, லாரி உரிமையாளர்கள் நம்ப மாட்டார்கள். டிரைவர் திருடிவிட்டு பொய்க்கணக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நினைப்பார்கள். இந்தப் பிரச்னைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முதல் லாரி டிரைவர் சங்கங்கள் வரை பலமுறை புகார் செய்தும், பேசியும் பார்த்துவிட்டார்கள். ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் பிரச்னையை நம்மால் எப்படித் தீர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் உள்ள சங்கங்கள் இதை ஒரு பிரச்னையாகப் பார்ப்பதே இல்லை. ஏனென்றால், இது தமிழக லாரிகளுக்கு மட்டுமே நடக்கும் பிரச்னை என்பதால், யாரும் கண்டுகொள்வது இல்லை. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால், இந்தத் தொழில் செழிக்கும். இல்லாவிட்டால், தமிழகத்தில் லாரியை நம்பிப் பிழைக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள், வேறு பிழைப்பைத் தேடி போக வேண்டியது வரும்” என்றார் ஆதங்கத்துடன்.

நாக்பூருக்கு 60 கி.மீ முன்பாக இருந்த சேட்கோன்படி கிராமத்தில் இருந்து வார்தாவுக்கு இடது பக்கம் சாலை பிரிகிறது. நால்வழிச் சாலை மாறி, சட்டெனெ கிராமச் சாலையில் புகுந்தது லாரி. வார்தா நகரை எட்டும்போது மாலை 5 மணி. அங்கிருந்து நாம் திரும்ப வேண்டும் என்றால், நாக்பூர்தான் செல்ல வேண்டும். ‘‘லாரியில் இருக்கும் லோடு இன்று இரவு இறக்க மாட்டார்கள். நாளை காலைதான் லோடு இறக்க முடியும். நாளை மறுநாள்தான் புரோக்கர் ஆபீஸுக்கு வந்து லோடு கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்” என்றார் சேகர். எனவே, நாங்கள் பஸ் மூலம் நாக்பூர் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் ஊர் திரும்பலாம் என முடிவு செய்தோம். வார்தாவின் புறநகர்ச் சாலையில் இருந்த பஸ் நிறுத்தத்தில் சேகரும் சிவாவும் எங்களை நாக்பூருக்கு பஸ் ஏற்றிவிட்டனர்.

சேலம் டு நாக்பூர் மார்க்கமாக நாங்கள் சென்ற மூன்று நாள் பயணத்தில், சந்தித்த டிரைவர்கள் எல்லாம் சொல்லும் ஒரே விஷயம், மஹாராஷ்ட்ரா மாநிலம் பற்றியதுதான். அதிலும் குறிப்பாக, ஹைவே பேட்ரோல் போலீஸின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதாகப் புலம்பினார்கள். இதற்கான தீர்வு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கிடைக்குமா?

(நெடுஞ்சாலை நீளும்)