திருப்ப முடியாத திம்பம் மலைச் சாலை !கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்
நெடுஞ்சாலைப் பயணத்தில், கிழக்குப் பகுதியில் அமைந் துள்ள கொல்கத்தா; பின்பு, தலைநகர் டெல்லி; நாட்டின் மத்தியில் அமைந்திருக்கும் நாக்பூர் என மூன்று நெடுஞ்சாலைகளில் பயணம் செய்துவிட்டோம். இனி, மேற்குப் பகுதியில் பயணம் செய்யலாம் எனத் திட்டமிட்டோம்.
கோவை அருகே உள்ள அன்னூர், லாரித் தொழிலுக்குப் பெயர்பெற்றது. அன்னூர் லாரி உரிமையாளர் சங்கத்தில் பயணம் குறித்துப் பேசினோம். கோவையில் இருந்து மஹாராஷ்ட்ரா மாநிலம் கோலாப்பூர் வரை, ஒரே ஒரு டிரைவருடன் செல்லும் லாரியைத் தேர்வுசெய்து தகவல் சொல்லியிருந்தனர். பயண நாள் அன்று காலை 10 மணிக்கு அன்னூருக்கு வரச் சொல்லியிருந்ததால், முதல்நாளே சென்னையில் இருந்து கோவைக்கு பஸ்சில் சென்று பயணத்துக்கு ஆயத்தமாகி, போட்டோகிராபர் விஜய் உடன் அன்னூருக்குப் பயணமானோம்.
அன்னூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் லாரி நிற்பதாகத் தகவல் வர, அங்கே சென்றோம். லோடு ஏற்றி தயாராக நின்றிருந்தது லாரி. டிரைவருக்கு போன் செய்தபோது, ‘‘சரக்கின் பில்லுக்கு ஆன் லைனில் பாஸ் போட வேண்டும். அன்னூரில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை. பாஸ் போடாமல் தமிழக பார்டரைத் தாண்ட முடியாது. கொஞ்சம் காத்திருங்கள்’’ என்றார் டிரைவர் சேதுராமன். அவருக்காகக் காத்திருந்தோம்.
அலைந்து திரிந்து மதியம் 2 மணிக்கு மேல் வந்தார் சேதுராமன். ‘‘எங்குமே இன்டர்நெட் கனெக்ஷன் வேலை செய்யவில்லை; மாலை 6 மணிக்கு முன்பாக பண்ணாரியம்மன் கோயில் செக்போஸ்ட் கடக்க வேண்டும். 6 மணிக்கு மேல் மலைப் பாதையில் லாரிகள் செல்ல அனுமதி இல்லை. இன்றைய தேதியில் சேல்ஸ் டாக்ஸ் பாஸ் போட்டுக்கொண்டுதான் மாநில எல்லையைக் கடக்க வேண்டும். என்ன செய்வது என்று தெரியவில்லை!’’ எனக் குழப்பத்தில் இருந்தார் சேதுராமன்.

‘‘சத்தியமங்கலம் பெரிய ஊர்தானே... அங்கு இன்டர்நெட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதே...’’ என்று சொன்னபோது, “போன்செய்து விசாரித்துவிட்டேன். அங்கேயும் வேலை செய்யவில்லையாம். இந்தப் பகுதியில் ஏதோ பழுது ஏற்பட்டிருக்கிறது. தனியார், BSNL என எதுவுமே வேலை செய்யவில்லை. 6 மணிக்கு முன்பாக மலையேறிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒருநாள் பயணம் தாமதமாகி விடும். மேலும், சரக்குக்கான பில் இன்றைய தேதியில் இருக்கிறது. நாளைய தேதிக்கு பாஸ் எடுக்க முடியாது’’ என்று இக்கட்டான சூழ்நிலையை விவரித்தார். இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு சொல்வது எனத் தெரியாமல் ‘ஙே’ என விழித்தோம்.
லாரி உரிமையாளருக்கு போன் செய்த சேதுராமன், சூழ்நிலையை விளக்கினார். ‘‘சரக்கு பில்லின் ஜெராக்ஸை பெட்ரோல் பங்க்கில் கொடுத்து விட்டுச் செல்கிறேன். ஹாசனூரில் இன்டர் நெட் வேலை செய்தால், பாஸ் போட்டுக்கொண்டு பார்டரைத் தாண்டி விடுகிறேன். அங்கு இல்லை என்றால், உங்களுக்குத் தகவல் சொல்கிறேன். நீங்கள் எங்காவது பாஸ்போட்டு வேறு வண்டியில் கொடுத்து விடுங்கள்’’ எனத் தீர்வு சொல்லிவிட்டு, லாரியில் ஏறினார் சேதுராமன்.
எங்களது 3 மணி நேரக் காத்திருப்பு சட்டென முடிவுக்கு வந்தது. லாரியில் ஏறி செட்டில் ஆனோம். இந்தப் பயணத்தில் ஒரே ஒரு டிரைவர்தான். எனவே, இடநெருக்கடி இல்லை. அன்னூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சென்றோம். லாரியில் கோவையில் ஏற்றிய பிளாஸ்டிக் வேஸ்ட்டும் கொஞ்சம் டீத்தூளும் இருந்தன. வாடகை 36,000 ரூபாய். கட்டுப்படியாகுமா என்று கேட்டபோது, ரிட்டனில்தான் மிச்சம் பிடிக்க முடியும் என்ற பழைய கதையைத்தான் சொன்னார்.

இம்முறை பயணப் பாதை கொஞ்சம் வித்தியாசமானது. கோவையில் இருந்து சத்திய மங்கலம், திம்பம், ஹாசனூர், சாம்ராஜ்நகர், ரங்கப் பட்டணம், மேல்கோட்டை தாண்டி, சிரா அருகே நால்வழிச் சாலையில் ஏறி, மும்பை சாலையில் கோலாப்பூர் நோக்கிப் பயணம். மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களின் நால்வழிச் சாலைகளில் செல்லாமல், சிறு நகரங்கள், கிராமச் சாலைகள் வழியே பயணிக்கும்போது, டோல்கேட்டுகளுக்குத் தரும் பணம் சுமார் 3,500 ரூபாய் மிச்சமாகிறது என்கிறார் சேதுராமன். “டீசல் செலவு, வாகனத் தேய்மானம் கணக்கில் எடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டபோது, ‘‘இந்தப் பாதையில் 100 கி.மீ தூரம் குறைவு; அது டீசல் செலவில் ஈடுகட்டிவிடும். தேய்மானம் பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி இருந்தாலும் இந்தப் பாதையில் செல்வதால், கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த முடிகிறது!’’ என்றார்.
சத்தியமங்கலத்தில் லாரியை எடை போட்டு ரசீது வாங்கிக்கொண்டு, அங்கே சில இன்டர்நெட் மையங்களில் விசாரித்துப் பார்த்தபோது, இணையதள சேவை இயங்கவில்லை என்ற பதிலே கிடைத்தது. சத்தியமங்கலம் தாண்டி காட்டு வழியே ஊர்ந்து பண்ணாரி கோயிலைத் தாண்டினோம். செக்போஸ்டில் லாரியை நிறுத்தி, ஆவணங்கள் அடங்கிய ஃபைலை எடுத்துக்கொண்டு செக்போஸ்டில் காட்டி முத்திரை பெற்றுக்கொண்டு திரும்பினார். மலைச் சாலையில் ஏறுவதற்கு முன்பு, இருந்த சாலையோரக் கோயில் அருகே லாரியை ஓரங்கட்டினார் சேதுராமன். ஏற்கெனவே அங்கு சில லாரிகள் நின்றுகொண்டிருக்க... லாரிக்கு பூஜை போடும் படலம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. கோயில் அர்ச்சகர்கள் இருவர் நமது லாரிக்கும் மாலை கட்டி, சந்தனம் குங்குமம் வைத்து தீபாராதனை காட்டி முடித்ததும் மலையேறத் துவங்கினோம்.
மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள இந்தச் சாலை, லாரிகளுக்குச் சிம்ம சொப்பனம். அனைத்துமே அபாயகரமான ஏற்றம்கொண்ட வளைவுகள். இலகு ரக வாகனங்களுக்கு இது பிரச்னை யாகத் தெரியாது. ஆனால், கனரக வாகனங்களை வளைத்துத் திருப்பி ஏற்றுவதற்குள் திக்கித் திணறி, முக்கி முணங்கிக்கொண்டுதான் ஏற வேண்டும். ஏதாவது ஒரு கனரக வாகனம் இந்த வளைவில் ஏற முடியாமலோ அல்லது பழுதாகி நின்றுவிட்டால், வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாது. போக்குவரத்தே நின்று போய்விடும். ‘‘திம்பம் மலைச் சாலையில் லாரிகள் சிக்கிக்கொள்வது சர்வ சாதாரணம். ஒருநாள், இரு நாளெல்லாம் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. அதனால்தான் லாரிகளை மாலை 6 மணிக்கு மேல் அனுமதிப்பது இல்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாலை ஓரளவுக்கு அகலமாக இருக்கிறது. ஆனால், முன்பெல்லாம் இதைவிட குறுகலான சாலையாக இருந்தது. ஒரு வாரம்கூட போக்குவரத்து நின்றிருக்கிறது. திருப்பங்களில் இருக்கும் மேடுகளைக் கரைத்தால், இன்னும் கொஞ்சம் சுலபமாகப் போக முடியும்’’ என்று தனது எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டார் சேதுராமன்.
வளைவில் எக்ஸ்ட்ரா கியர் எனப்படும் லோடு கியரில், ஆரவாரமான சத்தத்துடன் மெதுவாக ஊர்ந்து ஏற ஏற, சத்தியமங்கலம் காட்டின் பிரமாண்டம் வியக்கவைத்தது. தமிழகத்தில் அதிக புலிகள் வாழும் இந்தக் காடு, தனித்தன்மை கொண்டது. கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதி, சூழியல் வளம்கொண்டது என்கிறார்கள்.
தூரத்தில் தெரிந்த பவானி சாகர் அணை கண்களை விட்டு மறைய, தலமலை வனத்துறை சோதனைச் சாவடி தாண்டினோம். இங்கேதான் சிறிதுகாலம் முன்பு சிறுத்தை வனத்துறை ஊழியரைத் தாக்கிக் கொன்றது. ‘‘இந்த ஏரியாவில் புலி, சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்கிறார்களே... நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’’ என்று கேட்டோம். ‘‘யானைகளை அதிகம் பார்த்திருக்கிறேன். அதுவும் ஏதாவது சீஸனில்தான் தென்படும். மற்றபடி வேறு விலங்குகளைப் பார்த்தது இல்லை.
காட்டுப் பகுதியில் இரவில் வாகனத்தை நிறுத்துவது தவறு. வாகனத்தை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி நடமாடினால், விலங்குகள் தாக்கத்தானே செய்யும். சில சமயம், விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்களில் பொருட்களைத் திருடுவதற்காக, இரவு நேரத்தில் பள்ளத்தாக்கில் இறங்குபவர்கள் உண்டு. அப்படிச் செல்லும்போது, விலங்குகள் இருந்தால், தாக்கத் தானே செய்யும்!’’ என நியாயம் கற்பித்தார் சேதுராமன்.
ஹாசனூரில் லாரியை ஓரங் கட்டினார். இந்த ஊரைத் தாண்டினால் கர்நாடகா மாநிலம். பாஸ் போடாமல் இந்த எல்லையைக் கடக்க முடியாது. தீவிர யோசனையோடு, சாலையோரம் இருந்த தகர பூத்தில் கம்ப்யூட்டர், பிரின்டர் சகிதம் அமர்ந்திருந்தவரிடம், ‘இன்டர்நெட் வேலை செய்கிறதா?’ என்று கேட்கவும், ‘‘காலையில் இருந்து வேலை செய்யவில்லை. இப்போது செய்கிறதா என்று பார்க்கிறேன்’’ என்றார் அவர்.
(நெடுஞ்சாலை நீளும்)