மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கரும்பு கேட்கும் யானைகள் !

கா.பாலமுருகன், படம்: தி.விஜய்

முதல் நாள் பயணத்தில், அன்னூரில் இருந்து புறப்பட்டு சத்தியமங்கலம், திம்பம் வழியாக ஹாசனூர் அடைந்தோம். சேல்ஸ் டாக்ஸில் ஆன்லைன் பாஸ் போடுவதற்காக லாரியை நிறுத்தி, ‘இன்டர்நெட் வேலை செய்கிறதா?’ என்று கேட்டார் சேதுராமன். கம்ப்யூட்டரை ஆன் செய்து சில நிமிடங்கள் காத்திருப்புக்குப் பின்பு, ‘வேலை செய்கிறது’ என்று சொன்ன பிறகுதான், எங்கள் அனைவருக்குமே நிம்மதி. கையில் இருந்த பில்களை அவரிடம் கொடுக்கவும் 15 நிமிடங்களில் பாஸ் போட்டு பிரின்ட் எடுத்துக் கொடுத்தார். நேரம் மாலை 4 மணி ஆகியிருந்தது. அங்கிருந்த ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு லாரியில் ஏறினோம்.

சேதுராமன் - சிங்கிள் டிரைவர் என்பதால், சமையல் கிடையாது. ஹோட்டலில்தான் சாப்பிடுகிறார். ஒருவரே லாரியை ஓட்டிக்கொண்டும் சமைப்பதும் சிரமம்; காலதாமதம் ஆகும் என்பதால் இந்த முடிவு. ஹாசனூர் தாண்டி மலைப் பாதையில் ஊர்ந்து சென்றபடி இருக்க... சில கிலோ மீட்டரிலேயே கர்நாடகா எல்லை செக்போஸ்ட் தாண்டி எல்லையில் நுழையவும் சாலைகளும் சீரானது. இருவழிச் சாலையான இதில் லாரிகள் போக்குவரத்துதான் அதிகம். ஹரிதனஹள்ளி என்ற ஊரின் முன்பாக இருந்த தாபாவில் ஏராளமான லாரிகள் நின்றிருக்க... அங்கே லாரியை ஓரங்கட்டினார் சேதுராமன். ‘‘எப்படியும் சாம்ராஜ் நகருக்குள் இரவுதான் அனுமதிப்பார்கள். அதுவரை எங்காவது காத்திருந்துதான் ஆக வேண்டும்” என்றவரிடம், ‘‘வேறு பாதை இல்லையா?’’ என்று கேட்டபோது, ‘‘வேற வழியே இல்லை; லாரிக்கு மட்டும்தான் இப்படிக் கட்டுப்பாடுகளை இந்தியா முழுக்க விதிக்கிறார்கள்’’ என்று அலுத்துக்கொண்டார். அங்கிருந்து சாம்ராஜ் நகர் 10 கி.மீ தூரம்தான் இருக்கும். எல்லா லாரிகளும் இரவுக்காகத்தான் காத்திருக்கின்றன. டிரைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து நலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

கரும்பு கேட்கும் யானைகள் !

லாரி பாடிக்கு மேல் லோடு ஏற்றிக்கொண்டு, திம்பம் மலைப் பாதையில் தான் பட்ட சிரமங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார் சிவகுமார் என்ற டிரைவர். ‘’திருப்பூர்ல பனியன் வேஸ்ட் ஏத்துனேனுங்க... எடை குறைவுதான். ஆனா, பாடிக்கு மேல அம்பாரம் குமிச்சது மாதிரி ஏத்திட்டாங்க... அப்பவே நான் கேட்டேன். ‘ஏங்க இவ்வளவு ஒசரத்துக்கு ஏத்தி மலையில இருக்கிற கொண்டை ஊசி வளைவுல திருப்புனா, லோடு சாஞ்சிரும்’னு சொன்னேன். ‘நாங்க எவ்வளவு லோடு ஏத்தி அனுப்பியிருக்கோம். எங்களுக்குத் தெரியாதா? ஒண்ணும் ஆகாது. ஏதாவது ஆச்சுன்னா, நாங்க பாத்துக்குறோம்’னு சொல்லிட்டாங்க. இருபது வருஷமா லாரி ஓட்டுறேன். எந்த லோடு எப்படி ஏத்துனா, என்னென்ன ஆகும்னு எனக்கும் அனுபவம் இருக்கு. பயந்துக்கிட்டேதான் மலையேறுனேன். 18-வது வளைவு ஏறும்போது, லோடு ஒரு பக்கமா சாய... அப்படியே லாரி சரக்கோட மலை மேல சாஞ்சிருச்சு. இந்தப் பக்கம் சாஞ்சிருந்தா, பள்ளத்துல விழுந்து எப்பவோ மேல போய்ச் சேந்திருப்பேன்.

ஏற்கெனவே இந்த ரூட்டுல வண்டி போக்குவரத்து ஜாஸ்தி. பாடிக்குச் சேதமில்லாம பொத்துனாப்புல லோடு மலையில முட்டிக்கிட்டு நிக்குது. என்ன பண்ணலாம்னு பார்த்தேன். இந்த லோடை நாம திருப்பி எடுத்துக்கிட்டுப் போக முடியாது. நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை. இதோட இதை தலைமுழுகிடுவோம்னு, சரக்கு லோடு ஓனருக்கு போன் போட்டு, ‘லோடு சாய்ஞ்சிருச்சு. வேற லாரியில வந்து ஏத்திக்கங்க... என்னால இனிமே கொண்டுபோக முடியாது’னு தகவல் சொல்லிட்டு, கத்தி எடுத்து லோடு கட்டுன கயிறுகளைப் பூரா வெட்டிவிட்டேன். அங்க இருந்த டிரைவருங்க ஒத்தாசையோட லாரியை மீட்டுக்கிட்டுப் போனேன். கயிறுக்கு மட்டும் 9,000 ரூபா நஷ்டம். இனிமே அந்த மாதிரி லோடு வாழ்க்கையில ஏத்துவேனா... எவ்வளவு பெரிய பாடம் படிச்சிருக்கேன்!’’ என, தான் நஷ்டப்பட்ட கதையைப் பாடமாக மாற்றிக்கொண்டு பேசினார். இதுதான் இவர்களின் பலம். ஒவ்வொரு துயரத்தையும் அனுபவமாக்கி, அதை மற்றவர்களுக்குப் பாடமாக்குவதுதான் இந்தத் தொழிலின் வலிமை.

விபத்து, வழக்கு, போலீஸ், கொலை, கொள்ளை, நோய் என அனைத்தையும் தாண்டி, இந்தத் தொழிலை இவர்கள் நேசிக்கிறார்கள். 40 ஆண்டு கால அனுபவம் கொண்ட சேதுராமன், 20-வது வயதில் டிராக்டர் ஓட்டப் பழகி, போர்வெல் லாரி, லோக்கல் லாரி, நேஷனல் பெர்மிட் எனப் படிப்படியாக வளர்ந்தவர். இரண்டு மகள்கள்; திருமணம் செய்துகொடுத்துவிட்டார். சொந்த ஊரில் சமீபத்தில்தான் வீடு கட்டி முடித்திருக்கிறார். ‘40 ஆண்டு கால உழைப்பில் உருவான வீடு அது’ எனப் பெருமைகொள்ளும் சேதுராமனுக்கு, ஓய்வெடுக்க மனம் வரவில்லை. உடல் நன்றாக இருக்கும் வரை உழைக்கலாம் என்பது அவரது கொள்கை.

7 மணிக்கு மேல் லாரியை ஸ்டார்ட் செய்த சேதுராமன், ‘‘திம்பம் மலைச் சாலையில் வேடிக்கையும் இருக்கும்; வேதனையும் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சாலையில் கரும்பு லோடு ஏற்றி வருபவர்கள் மிகவும் சிரமப்பட்டுப் போவார்கள். ஹாசனூரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தாண்டி யானைக் காடு இருக்கிறது. பலமுறை அந்த இடத்தில் யானைகளைப் பார்த்திருக்கிறேன். பல சமயம், அவை சாலை மறியல் செய்வதுபோல நின்றுவிட்டால், இருபக்கமும் வாகனங்கள் நின்றுவிடும். சில சமயம் சாலையோரம் சாவகாசமாக நின்றுகொண்டு, வாகனங்களைக் கண்டுகொள்ளாமல் நிற்கும்.

கரும்பு லோடு ஏற்றிவரும் லாரியில் இருந்து கரும்புகள் கீழே விழுவது வழக்கம்தான். அதைத் தின்று ருசி பார்த்துவிட்ட யானைகள், கரும்புக்காகக் காத்திருக்க ஆரம்பித்துவிட்டன. லாரியில் வரும் லோடுமேன்கள் யானைகளைப் பார்த்ததும் கரும்புகளை அள்ளிப் போட்டுவிட்டுப் போக... அது யானைகளுக்குப் பழக்கமாகிவிட்டது. யானைகள் கரும்பின் ருசிக்கு அடிமையாகிவிட்டன. சாலையை மறித்து நின்றுகொண்டு கரும்பு லாரிகளை அடையாளம் கண்டு, அடாவடியாகப் பிடுங்க ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் கரும்பு லோடு கொண்டுபோக முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. பிறகு, வனத்துறையினர் வந்து அந்த யானைக் கூட்டத்தைக் காட்டுக்குள் விரட்டினார்கள். கரும்புகள் கீழே விழாதவாறு கொண்டுசெல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதித்த பிறகு, இப்போது பிரச்னை இல்லாமல் இருக்கிறது. ஆனால், கரும்பு ருசி பார்த்த யானைக் கூட்டம் இந்தப் பக்கம் வந்தால், கரும்பு கிடைக்குமா என பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கும். லாரியின் பின்னாலேயே ஓடி வரும்!’’ என்றார் சேதுராமன்.

கரும்பு கேட்கும் யானைகள் !

லாரி மிக மெதுவாக சோமவார்பேட்டைக் கடந்து, சாம்ராஜ் நகரில் நுழைந்து சட்டென வலதுபுறம் பிரிந்த சாலையில் திரும்பியது. இருட்டில் சாலையைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அது கிராமச் சாலை என்பது மட்டுமே புரிந்தது. எப்படியும் கபினி - காவிரி நதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். ஆறு வரும்போது நிலப்பரப்பைப் புரிந்துகொள்ளலாம் என அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன். சிறுசிறு கிராமங்களுக்குள் புகுந்து நரசிபுரா என்ற ஊரை அடைந்தோம். ‘‘இன்னும் கொஞ்சம் தூரம்தான்; ரங்கப்பட்டனம் வந்துவிடும்’’ என்றார். ‘‘நாம் இன்னும் கபினியைத் தாண்டவில்லையே’’ என்றேன். ‘‘கபினியையும் காவிரியையும் இங்கேதான் கடக்கப்போகிறோம்’’ என்றார் சிரித்தவாறு. சரியாக இரு நதிகளும் இணையும் இடம் இந்த நரசிபுரா. ‘ட’ எழுத்தை தலைகீழாக திருப்பிப் போட்ட வடிவில் இரு பாலங்கள், நதிகளின் குறுக்கே இருந்தன. ஆறுகளைக் கடந்ததும் காவிரியின் வலது கரையோரமாகவே லாரி செல்ல ஆரம்பித்தது.

தஞ்சை டெல்டா மாவட்டத்தைப் போன்ற பகுதி இது. சமமற்ற சாலைகள், அடிக்கடி குறுக்கிடும் கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் என சாலையின் இரு பக்கமும் தண்ணீர் தளும்புவதை உணர முடிந்தது. இரவு 12 மணிக்கு அந்தப் பகுதியின் கிராமம் ஒன்றில் லாரிகளுக்காக டீக்கடை மட்டும் திறந்திருக்கிறது. ரங்கப்பட்டனம் அடைந்ததும் பெங்களூரு - மைசூரு நால்வழிச் சாலையில் ஏறி, மறுபக்கம் பிரிந்த கிளைச் சாலையில் திரும்பியது லாரி.
பாண்டவபுரா, நாகமங்கலா என இருவழிச் சாலையில் அதிர்வுகளுடன் ஊர்ந்துகொண்டிருந்தது எங்களது லாரி. அந்தச் சமயத்தில் பெரும்பாலும் லாரிகள் மட்டுமே போய்வந்துகொண்டிருந்தன. எல்லா லாரிகளும் ஏதோ விதத்தில் காசை மிச்சம் செய்ய வேண்டும் என, இப்படி கிராமச் சாலைகளைத் தேடிப் பிடித்துச் செல்கின்றன. ஆனால் அரசுகளோ, நால்வழிச் சாலைதான் நம் நாட்டை முன்னேற்றிவிட்டன எனச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

(நெடுஞ்சாலை நீளும்)