மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பேய் முழிப்பு !

நெடுஞ்சாலை வாழ்க்கை கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

ள்ளிரவு தாண்டி கர்நாடக மாநிலத்தின் கிராமங்கள் வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தோம். சேதுராமனுக்கு வாயில் அல்லது கையில் பீடி புகைந்துகொண்டே இருக்க வேண்டும். பல சமயம் பீடியை உறிஞ்சுவதே இல்லை. கேபினுக்குள் புகும் காற்று பீடியை சீக்கிரமே கரைத்துவிட, அநாயாசமாக அடுத்த பீடியைப் பற்ற வைக்கிறார். ‘‘பேசிக்கொண்டே பயணிக்கும்போது நேரம் போவதே தெரியவில்லை. ஆனால், தனியாகச் செல்லும்போது போரடிக்காதா?’’ - சேதுராமனிடம் கேட்டேன்.

‘‘நிச்சயமாகப் போரடிக்கும். இரண்டு டிரைவர்கள் இருந்தாலும், ஒருவர் ஓட்டும்போது இன்னொருவர் தூங்கிவிடுவார். இருட்டில் தனியாகப் பயணிக்கும்போதுதான், எல்லா குழப்பங்களும் தலைக்குள் வந்து உட்காரும். முதலில் மனசுக்குள் பேச்சுத் துவங்கும். குடும்பப் பிரச்னை, தொழில் பிரச்னை, கோபம், துரோகம் என உள்ளுக்குள் சம்பவங்களை அசை போட அசை போட, சிந்தனை முழுக்க வேறு ஓர் இடத்தில் இருக்கும். இது, ஒரு கட்டத்தில் தீவிரமாகி கோபமோ மகிழ்ச்சியோ உச்சமாகும்போது, சில சமயம் தடுமாறிவிடுவார்கள். தனக்குத் தானே பேசிக் கொள்பவர்களும் உண்டு. ஆனால், தூக்கம்தான் உச்சபட்சப் பிரச்னைகளுக்குக் காரணம். சில சமயம், தன்னையறியாமல் தூங்கிவிடும்போதுதான் அதிகமாக விபத்துகள் நடக்கின்றன.

பேய் முழிப்பு !

சிலருக்குப் பாட்டுக் கேட்கப் பிடிக்கும்; சிலர் என்னைப் போல புகைப் பிடிப்பார்கள்; சிலர் பாக்கு, புகையிலை போடப் பழகியிருப்பார்கள். சிலருக்கு இதுபோன்ற பழக்கம் எதுவும் இருக்காது. பட்டாணி, பொறிகடலை என ஏதாவது கொறித்துக்கொண்டே இருப்பார்கள். இது எல்லாமே தனிமையை விரட்டுவதற்குத்தான்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை, லாரி ஓட்ட சிறந்த நேரம். வெப்பக் காலமாக இருந்தால்கூட அந்தச் சமயத்தில் குளிர்ச்சியாக இருக்கும்; அதிகம் போக்குவரத்து இருக்காது. ஆனால், இந்த நேரம்தான் ஆபத்தான நேரமும்கூட. கண்கள் திறந்துதான் இருக்கும். ஆனால், டிரைவர் அசந்துவிடுவார். இதை பேய் முழிப்பு அல்லது கண்ணு பூத்திருச்சு என்பார்கள். எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருப்பதுபோலத்தான் தோன்றும். ஆனால், எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இருக்காது. அந்த மாதிரி பேய்முழிப்பு வருவதாக டிரைவர் உணர்ந்துவிட்டால், அந்த இடத்திலேயே லாரியை ஓரங்கட்டி தூங்கிவிடுவது நல்லது. சில விநாடிகள் அசந்தால்கூட, விபத்தில் மொத்த சொத்தும் நாசமாகிவிடும். இரவு நேரத்தில் சாலையில் செல்லும் லாரிகளில் ஏதாவது சுணக்கம் தெரிந்தால், அது மற்ற டிரைவர்களுக்குப் புரிந்துவிடும். உடனே ஹாரன் அடித்து டிரைவரை எச்சரிக்கை செய்வார்கள். நள்ளிரவில் ஹாரன் சத்தம் எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும் உங்களைத் திடுக்கிட வைத்துவிடும். எல்லா டிரைவர்களுக்கும் இது நேர்வது இல்லை என்றாலும், சில சமயம் வேலைப் பளு, தாமதம் போன்ற காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளாகும்போது, இது போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் டிரைவர்களில் பெரும்பாலோனோர் பாக்கு, புகையிலை என உடலுக்குக் கேடு தரும் பழக்கத்துக்கு ஆட்படுகிறார்கள்.

பேய் முழிப்பு !

ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். குடித்துவிட்டு ஸ்டீயரிங் பிடிப்பவனைத்தான் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது தெரிந்தே பாதாளத்தில் விழுவதற்குச் சமம். எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், குடி என்று வந்துவிட்டால் அதன் முன்னாடி நோஞ்சான் தான். இந்தத் தொழிலில் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இருப்பது, உடல் வலி, சோர்வு, தனிமை எனப் பல விஷயங்கள் குடிக்கு அடிமையாக்கக் காத்திருக்கின்றன. குடும்பத்துக்காகத்தான் கஷ்டப்பட்டு இந்தத் தொழிலைச் செய்கிறோம். இந்தக் குடியால் ஒரு நொடியில் அந்தக் குடும்பத்தை நிராதரவாக விட்டு விடுவோம் என்பதையும் அறிந்தே குடிப்பவர்களை, மன்னிக்கவே முடியாது.
இன்று, லாரி டிரைவர்கள் குடித்திருக்கிறார்களா என்பதைச் சோதனை செய்யும் கருவியை வைத்து ஆங்காங்கே சோதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலான லாரி டிரைவர்கள், ஓட்டும்போது குடிப்பது இல்லை.

லாரி கேபினின் பக்கவாட்டுப் பலகையில் சாய்ந்தவாறு கேட்டுக் கொண்டே இருந்த நான், எப்போது தூங்கினேன் என்பது தெரியவில்லை. கண் விழித்தபோது நன்றாக விடிந்திருந்தது. லாரி நால் வழிச்சாலையில் டோல்கேட் அருகே நின்றுகொண்டிருந்தது. கேபினில் நான் மட்டுமே இருந்தேன். இருவரையும் எழுந்து தேடினேன். விஜய், லாரியின் டாப்பில் ஏறி படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். சாலையோரம் சேதுராமன் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். நம்மையறியாமல் தூங்கிவிட்டோமே எனக் கூச்சமாக இருந்தது.

பேய் முழிப்பு !

‘‘நல்ல தூக்கமா?’’ எனச் சிரித்துக்கொண்டே கேட்டார் சேதுராமன். ‘‘எப்படித் தூங்கினேன்னு எனக்கே தெரியலை’’ என்றேன் அசடு வழிந்தபடி. ‘‘என்னைக்காவது முழிக்கிறவங்களுக்கு இப்படித்தான் இருக்கும். நாம இப்போ நால் ரோட்டுல ஏறி, சிராங்கிற ஊரைத் தாண்டிட்டோம். இங்க வந்து ரெண்டு மணி நேரம் ஆச்சு. நானும் கொஞ்சநேரம் தூங்கினேன். அடுத்து ஒரு மோட்டல் இருக்கு, அங்க போய் டிபன் சாப்பிடலாம்!’’ என்றவாறு டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தார் சேதுராமன்.

நால்வழிச் சாலையின் சொகுசை அனுபவிக்கும்போதுதான், இரு வழிச்சாலையின் சிரமம் புரியும். மேடு பள்ளம் பார்த்து வளைத்துத் திருப்பி, கிளட்ச் மிதித்து கியர் மாற்றி, எதிரே வரும் வாகனத்துக்குக் காத்திருந்து, சைடு வாங்கி, ஆக்ஸிலரேட்டர் ஏற்றிச் செல்வதற்கும்; டாப் கியரில் ஆக்ஸிலரேட்டரில் வைத்த காலை எடுக்காமல், லேசாக ஸ்டீயரிங்கைச் சுழற்றியபடி செல்வதற்கும் இருக்கும் வித்தியாசம், ரொம்பப் பெரிது. ஆனால், பணம் என்ற விஷயம் இவர்களுக்கு இருவழிச் சாலையில் சென்றால்தான் கிடைக்கிறது!

(நெடுஞ்சாலை நீளும்)