மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விசில் அதிகாரிகள் !

நெடுஞ்சாலை வாழ்க்கைகா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

கோவை டு கோலாப்பூர் பயணத்தில், கர்நாடகா மாநிலத்தில் இருந்தோம். அது, மும்பை - சென்னை நால்வழிச் சாலை. தும்கூர் என்ற ஊரைத் தாண்டி சிரா என்ற இடத்தின் டோல்கேட். டோல்கேட் தாண்டும் இடங்களில் சிறு கடைகள், வியாபாரங்கள் நடப்பது நாடு முழுக்கவே உண்டு. ஆனால், அந்தப் பகுதியைக் கழிவறையாகப் பயன்படுத்துவோர்தான் அதிகம். டோல்கேட் தாண்டும் இடங்களில் மூக்கை மூடாமல் கடக்க முடியாது. பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளமாகக் கிடக்கின்றன. பொதுவாக, டோல்கேட் அருகே விசாலமாக இடம் இருக்கும். பாதுகாப்பான இடம் என்பதால், அங்கே வாகனங்களை ஓரங்கட்டி ஓய்வெடுப்பது சகஜம். மனிதர்களின் இயற்கை உபாதைக்கு ஒதுங்குவதற்கு வசதிகள் செய்யப்படாததால், டோல்கேட்டுகள் நாற்றம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்படியே போனால், இனி டோல்கேட் அருகே நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்படும்.

சிரா தாண்டி சில கிலோமீட்டரிலேயே ஒரு மோட்டலில் நிறுத்தினார் சேதுராமன். அங்கு அதிசயமாக கழிவறைகளும், குளியலறைகளும் வரிசை கட்டி இருந் தன. கேரளாவைச் சேர்ந்தவர் அங்கே உணவகம் நடத்துகிறார். காலை சிற்றுண்டி முடித்து விட்டுப் புறப்படும் முன்பு, டயர்களைச் சோதித்தார் சேதுராமன். பட்டன் இடுக்குகளில் சிக்கிய சிறு கற்களை கம்பி மூலம் அகற்றினார். லாரியை நிறுத்தும் போதெல்லாம் இதை அனிச்சை செயல்போல செய்துகொண்டிருந்தார்.

விசில் அதிகாரிகள் !

ஹிரியூர், சித்ரதுர்கா கடந்து தாவணகெரே தாண்டியபோது விசில் ஊதும் சத்தம் கேட்கவும், வண்டியை ஓரங்கட்டினார் சேதுராமன். இறங்கிச் சென்று 200 ரூபாய் கொடுத்துவிட்டு வந்தார். ‘‘கர்நாடகாவைக் கடப்பதற்குள் இன்னும் இரண்டு மூன்று இடங்களில் கொடுக்க வேண்டியது இருக்கும்!’’ என்றார்.

போக்குவரத்து ஆய்வாளரின் ஜீப், சாலையில் வித்தியாசமான முறையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜீப்பின் ஒருபுறம் அவர் வெளியே நிற்க, பணம் கொடுப்பவர் ஆவணங்களுக்குள் பணத்தை வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். அவர் நிற்பதற்கு எதிர்ப்பக்கம் சென்று ஜீப்புக்குள்ளே பணத்தை மட்டும் போட்டு விட்டுச் செல்கிறார்கள். ஏனென்றால், இப்போது மொபைலில் படம், வீடியோ எடுப்பது சாதாரணமாகிவிட்டது என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. அதனால் எப்படி லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் டிரைவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளித்திருப்பார்கள் போல் இருக்கிறது. சொல்லி வைத்ததைப் போல எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், எல்லா டிரைவர்களும் இந்த வழிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

விசில் அதிகாரிகள் !

ஹூப்ளிக்கு முன்பாக ஹவேரி என்ற இடத்தில், ஒரு சுவாரஸ்ய சம்பவம். அப்போதுதான் வந்த போக்குவரத்துத் துறை ஜீப், சாலையோரம் வழக்கமான பாணியில் நின்றது. லாரிகள் விசில் ஊதி நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. ஜீப் நிறுத்திய இடத்தில் ஒரு சங்கடம். 15 வயது சிறுவன் ஒருவன் சாலையோர மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவனை அந்த ஜீப் டிரைவர் மிரட்டும் தொனியில் எழுந்து செல்லுமாறு அதட்ட, ஏன் எனக் கேள்வி கேட்டான். ‘இது உன்னோட இடமா?’ என வாதாடினான். அதிகாரியைச் சுட்டிக் காட்டி டிரைவர் மிரட்டியதும், ‘நான் தப்பு செஞ்சாதான பயப்படணும். அவர் அதிகாரியா இருந்தா எனக்கென்ன’ என்று சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்துவிட்டான். அவனை எழுப்பி அனுப்பும் முயற்சியில் டிரைவர் கீழே கிடந்த மரக் குச்சியைக் கையில் எடுக்க... அவன் எழுந்து தரையில் கல்லைத் தேடினான். அந்தச் சிறுவனின் முகம் கோபத்தில் கொந்தளிப்பது நன்றாகத் தெரிந்தது. இந்த எதிர்வினையை எதிர்பார்க்காத ஜீப் டிரைவர், சட்டென குச்சியைக் கீழே போட்டுவிட்டு அவனிடம் கெஞ்சும் தொனியில் பேச ஆரம்பித்தார். அவன் மசிவதாக இல்லை. வீம்பாக சற்றுத் தள்ளி, சாலையில் ஓரம் இருந்த தடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டான்.

விசில் அதிகாரிகள் !

இந்தக் களேபரத்தை கையில் ஆவணங் களுடன் காத்திருந்த டிரைவர்கள் ரசித்துக்கொண்டிருந்தனர். அதிகாரிக்கு இப்போது வசூல் செய்யலாமா, வேண்டாமா என் குழப்பம். காரணம், அந்தச் சிறுவனது முகம் ஜீப்பை நோக்கி மட்டுமே இருந்தது. கர்நாடக மாநில நெடுஞ்சாலை ஒன்றில், 15 வயது சிறுவன் அரசாங்க அதிகாரியை ஆட்டுவிக்கும் காட்சி, அங்கிருந்த அனைவருக்குமே ஆனந்தமாக இருந்தது. டிரைவர்கள் முகத்தில் மென்முறுவல்கள் ஜொலித்தன. ஒரு கட்டத்தில் ஜீப் டிரைவர், அருகே விவசாய வேலை செய்து கொண்டிருந்தவர்களை அழைத்து, அந்தச் சிறுவனைப் பற்றி புகார் கூறினார். அவர்கள் அவனைப் பார்த்துவிட்டு தெரியாது என கைவிரித்துத் திரும்பி விட்டனர். ஒரு கட்டத்தில் அதி காரி, அனைத்து லாரிகளையும் கிளப்பச் சொல்லி சைகை காட்டவும், டிரைவர்கள் உற்சாகமாகப் பாய்ந் தோடி லாரியில் ஏறினார்கள்.

சேதுராமனுக்கு சிரிப்பு தாளவில்லை. ‘‘அந்தப் பையன் ரொம்பவும் கோபமா-யிட்டான். அந்த வயசுக்கு பயம் தெரியாது; கோவத்துல என்ன செய்றோம்னு தெரியாது. அதனால தான் அந்த ஜீப் டிரைவரும் பயந்துட்டான். இது அவன் ஊரா இருக்கணும்; இல்ல அவன் தோட்டமா இருக்கணும். நம்ம இடத்துல சம்பந்தமே இல்லாத ஒருத்தன் வந்து அதிகாரம் செய்றதும், அடிக்க வர்றதுமா இருந்தா... நாம சும்மா இருப்போமா? பராவாயில்லை. அந்தப் பையனால 200 ரூபா மிச்சம்!’’ என்றார். 

விசில் அதிகாரிகள் !

இன்னொரு இடத்தில் இதற்கு நேர் எதிர்மாறான விஷயம் நடந்தது. விசில் ஊதப்பட்டு லாரியை நிறுத்தியதும், இறங்கினார் சேதுராமன். எதிர்பக்கச் சாலையில் நின்றிருந்த அதிகாரி இவரைப் பார்த்ததும் போகச் சொல்லி சைகை செய்தார். ஆனால், மற்ற லாரி டிரைவர்கள் வழக்கமான முறையில் முறைப்பாடு செய்துகொண்டுதான் இருந்தார்கள். புன்னகைத்தவாறே லாரியை எடுத்தார் சேதுராமன். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. ‘‘நான் வயசான ஆள் என்பதால், இந்தச் சலுகை. சில சமயங்களில், சில இடங்களில் என் வயதுக்கு இந்தச் சலுகை கிடைக்கும்!’’ என்றார்.

(நெடுஞ்சாலை நீளும்)