
விமல்நாத், ஓவியங்கள்: ராஜன்
என்னைப் பொறுத்தவரை கூக்குரல்களுக்குப் பஞ்சமே இல்லாத இடம் - சர்வீஸ் சென்டர்களாகத்தான் இருக்கும். இன்னோர் இடம் ஒன்று இருக்கிறது - அது என் கனவு ஏரியா. ‘‘இன்ஜின் நாய்ஸ் சரி பண்ணவே இல்லை... ஆடியோ சிஸ்டம் அப்படியேதான் இருக்கு... கிளட்ச் ப்ளே மாத்துனேன்னு சொன்னீங்க... என்னதான் சர்வீஸ் பண்றீங்களோ?’’ - இப்படி என் கனவில்கூட சத்தங்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும் என்றால் நம்புவீர்களா?
அன்றைக்கும் அப்படித்தான். ‘‘பேட்டரி செக் பண்ணியாச்சுனுதான் ஒவ்வொரு தடவையும் சொல்றீங்க... பத்தே நாளுக்குள்ள எப்படிங்க சார்ஜ் டிரெய்ன் ஆகும்?’’ - இப்படி ஒரு சத்தம் கேட்டது. ஆனால் இது கனவில் இல்லை; நிஜமாகவே சர்வீஸ் சென்டரில் இப்படி ஒரு புகாரோடு வந்திருந்தார் அந்தப் பெரியவர்.
புகார் இதுதான். அதாவது அவர் பேட்டரி சரியில்லை என்பதால், புதிதாக ஒரு கார் பேட்டரியை ஃபிக்ஸ் செய்யச் சொன்னார். மாட்டிய ஒரு வாரத்திலேயே பேட்டரி சார்ஜ் காலியாகிவிட்டது என்று வந்தார். ஒரு பேட்டரியின் ஆயுள், குறைந்தது இரண்டரை ஆண்டுகள். ஒரே வாரத்தில் எப்படி பேட்டரியின் சார்ஜ் காலியாகி இருக்கும்? மண்டை குழம்பிவிட்டது.

சார்ஜ் போடும்போது டிஸ்சார்ஜ் ஆகவில்லை; ஆசிட் லெவல் குறையவில்லை; செல்கள் எங்கேயும் லீக் ஆகவில்லை. எல்லாமே பக்கா! மறுபடியும் அவருக்கு பேட்டரியை ஃபிட் செய்து கொடுத்தால், திரும்பவும் ஒரே வாரத்தில் வந்தார். ‘‘உங்களுக்கு வேலை தெரியுமா தெரியாதா?’’ என்று சத்தம் போட்டார். இது எனக்கு மிகப் பெரிய சவாலாகி விட்டது. பொதுவாக கார்களைப் பொறுத்தவரை, டயருக்கும் பேட்டரிக்கும் மட்டும் வெண்டார்கள்தான், சப்ளை மற்றும் வாரன்ட்டியைக் கவனித்துக் கொள்வார்கள்.
‘இது என்ன வம்பா போச்சு’ என்று அந்த பேட்டரி நிறுவனத்துக்கே அதை அனுப்பி வைத்தோம். நிறுவனத்தில் ஃபுல் சார்ஜ் செய்து, பக்காவாக செக்லிஸ்ட் போட்டு ‘ஓகே’ என்று அனுப்பிவிட்டார்கள். இதன் பிறகும் இவர் இந்தப் பிரச்னை சம்பந்தமாக வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். வேண்டியது நிறைவேறவில்லை. மீண்டும் 10 நாள்களில் சார்ஜ் காலியான பேட்டரியோடும் கோபத்தோடும் வந்தார்.
‘‘என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேட்டரியைக் கொடுத்து ஏமாத்துறீங்க? ஒழுங்கா வேற பேட்டரி மாத்திடுங்க!’’ என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த முறை எங்கள் நிறுவனத்தின் ‘ஸ்டாண்ட் பை’ பேட்டரியை அவர் காரில் மாட்டிவிட்டு அனுப்பச் சொன்னேன். நினைத்ததுபோலவே அடுத்த 4 நாட்களில் ‘பேட்டரி டவுன்’ என்று வந்துவிட்டார். அப்படியென்றால், நிச்சயம் இது பேட்டரியின் தவறில்லை என்பது மட்டும் புரிந்தது.
காரை பானெட்டிலிருந்து டிக்கி வரை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து விட்டோம். எல்லாமே பக்கா! ‘‘ஹெட்லைட் எதுனா மறந்து போய் போட்டீங்களா? பார்க்கிங் லைட் போட்டுத் தூங்கிட்டீங்களா? கேபின் லைட் எதுவும் ஆன் பண்ணிட்டு விட்டுட்டீங்களா?’’ என்கிற ரீதியில் அவரிடம் விசாரணையை ஆரம்பித்தேன். மனிதர் கடுப்பாகிவிட்டார்.
‘‘வண்டி ஓட்டத் தெரியாதவன்ட்ட பேசுற மாதிரி பேசுறீங்க? நான் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கும்போது நீங்க பிறந்திருக்கவே மாட்டீங்க?’’ என்று கொதித்துவிட்டார். உண்மைதான். அவரின் டிரைவிங் லைசென்ஸ் தேதி என் வயதைவிட அதிகம். மண்டை குழம்பிவிட்டது.
பிறகு மெதுவாக அவரின் வேலை பற்றியும், வேறு யார் அந்த காரைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் ஓய்வு பெற்ற ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவர் எங்கள் சர்வீஸ் சென்டருக்கு வரும் போது செல்ஃப் டிரைவிங் செய்து கொண்டு தான் வருவார். ஆனால் பொதுவாக, அவர் ஆக்டிங் டிரைவர் வைத்து ஓட்டக் கூடியவர்.
வாரத்தில் 5 நாள்கள் கல்லூரிக்குச் சென்று, 5 முதல் 6 மணி நேரம் வரை கெஸ்ட் லெக்ச்சர் கொடுக்கிறார். அப்போதும் ஆக்டிங் டிரைவர் வைத்துத்தான் பயணிக்கிறார். விசாரித்ததில் அவரும் அனுபவம் வாய்ந்த டிரைவர் என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால், எங்கே தவறு நடக்கிறது என்று களத்தில் இறங்கினால்தான் கண்டுபிடிக்க முடியும். அவரிடம் ஒரு டீல்: ‘‘உங்க காரை இந்த வாரம் நான் மானிட்டர் பண்றேன். எந்த நேரம் வேணாலும் செக் பண்றதுக்கு எனக்கு அனுமதி கொடுக்கணும்’’ என்று கேட்டுக் கொண்டு, என் பேட்டரியையே மீண்டும் ஃபிக்ஸ் செய்து அனுப்பிவிட்டேன்.

இரண்டு நாள்கள் கழித்து போன் செய்தேன். கல்லூரியில் இருப்பதாகச் சொன்னார். என் டீமை அவர் கல்லூரிக்கு அனுப்பினேன். அவரது டிரைவர் அங்கே காரில் அமர்ந்து பென் டிரைவ் சொருகி, பாட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். பிறகு அந்தப் பெரியவரிடம் டிரைவர் பற்றிக் கேட்டேன். ‘‘சார், அவர் பாட்டுக் கேட்டுக்கிட்டிருக்கார். அவர் எவ்வளவு நேரம் பாட்டுக் கேட்கிறார்னு கேட்டுச் சொல்லுங்க’’ என்று சொன்ன போதுதான், விஷயம் புலப்பட ஆரம்பித்து விட்டது.
அதாவது காரை ஆஃப் செய்துவிட்டு, பென் டிரைவில் தினமும் 4 முதல் 5 மணி நேரம் வரை பாட்டுக் கேட்டுக் கொண்டிருந் திருக்கிறார் அவர். காரை ஐடிலிங்கில் விட்டு பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தால் பிரச்னை இல்லை; சார்ஜ் இறங்காது. அல்லது 100 கி.மீ வரை கார் ஓடியிருந்தாலும்கூடப் பரவாயில்லை. பேட்டரி சார்ஜ் ஆகிக் கொள்ளும். இந்தப் பேராசிரியர் வீட்டிலிருந்து கல்லூரி 15 கி.மீதான். தினமும் பயணிப்பது மொத்தம் 30 கி.மீ.தான். அதனால் சார்ஜிங் முழுமையாக ஆகாது. தினமும் இப்படிச் செய்வதால், ஒரே வாரத்தில் பேட்டரி சார்ஜ் முழுவதுமாக காலியாகி விட்டிருக்கிறது.
இந்த விஷயத்தை அந்த ஆக்டிங் டிரைவரிடம் தெரிவிக்கவில்லை. ஆடியோ சிஸ்டம் ஒயரை மட்டும் கட் செய்துவிட்டு, எங்கள் பேட்டரியையும் அவரது பேட்டரியையும் மாற்றி மாற்றி ஃபிக்ஸ் செய்து, 15 நாள்கள் என் டீமைக் கவனிக்க சொன்னேன். நினைத்தபடியே எந்தப் பிரச்னையும் இல்லை. ஆல் இஸ் வெல்! ‘‘அந்த டிரைவரை இப்போ நான் கூப்பிடறதில்லை. உங்களைத் தப்பா பேசிட்டேன். மன்னிச்சுடுங்க!’’ என்று ‘மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன்’ என்கிற ரீதியில், என்னைப் பார்க்க ஸ்வீட் பாக்ஸோடு வந்தார்.
(சர்வீஸ் சுவாரஸ்யம் தொடரும்)
தொகுப்பு: தமிழ்

இதைக் கவனிங்க!
காரை நீண்ட நாள் சும்மாவே நிறுத்தி வைத்தால், பேட்டரி ஆசிட் சீக்கிரம் காலியாக வாய்ப்புண்டு. குறைந்தபட்சம் காரை ஸ்டார்ட் செய்து, ஐடிலிங்கிலாவது ஒரு கால்மணி நேரம் வைத்திருக்கலாம்... தப்பில்லை.
டூர் அடிக்கும்போதோ, எப்போதாவது ஒன்றிரண்டு தடவையோ காரை ஆஃப் செய்துவிட்டு, பென் டிரைவில் பாட்டுக் கேட்பதில் தவறில்லை. டூர் நேரங்களில் கார் நூற்றுக்கணக்கான கி.மீ ஓட ஆரம்பிக்கும் என்பதால், தானாக சார்ஜ் ஏறிக் கொள்ளும். ஆனால், தினமும் இதை வாடிக்கையாக்குவது தவறு.
‘சிலர் பார்க்கிங் லைட்தானே; பெருசா பேட்டரி கன்ஸ்யூம் பண்ணாது’ என்று நினைப்பார்கள். பார்க்கிங் லைட் மணிக்கணக்கில் எரிந்தால், பேட்டரி காலியாகும் என்பதுதான் நிஜம். பிறகு வேறு ஒரு பேட்டரி வைத்து ஜம்ப் ஸ்டார்ட் செய்துதான் காரை ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
இன்ஜின் ஆஃப் ஆகி கார் சும்மா நிற்கும்போது கேபின் லைட், டோர் லைட், ஹெட்லைட் என்று எந்த லைட் எரிந்தாலும் பேட்டரிக்கு ஆபத்துதான்.
தெரியாமல் கேபின் லைட்டை ஆன் செய்துவிட்டு, ஒரு படம் பார்த்துவிட்டு வருவதற்குள் கார் ஸ்டார்ட் ஆகாமல் என்னிடம் வந்தவர்கள் நிறைய பேர் உண்டு.
அதனால்தான், 'தினமும் என்னைக் கவனி’ என்று கொட்டை எழுத்தில் பேட்டரியில் எழுதி வைக்கிறார்கள்.