
போட்டி: ஹார்னெட் Vs அப்பாச்சி 200 Vs NS200



ஹோண்டா ஹார்னெட் 2.0 விலை: `1.54 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
பஜாஜ் பல்ஸர் NS200 விலை: `1.57 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 விலை: `1.54 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
இந்தியாவின் ஃபேவரைட் பைக் செக்மென்ட்டான 160 சிசி செக்மென்ட்டில் கில்லி யார் என்று கடந்த மாதம் பார்த்திருந்தோம். இது 200 சிசி செக்மென்ட்டில் கில்லி யார் எனத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். (தீர்ப்பில் ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது!) இதற்காக, நாம் எடுத்துக் கொண்டது ஹோண்டா ஹார்னெட் 2.0, பஜாஜ் பல்ஸர் NS 200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V ஆகிய பைக்குகள் தான். `ஹார்னெட் 180 சிசி பைக்தானே, அதை ஏன் 200 சிசி செக்மென்ட்டில் ஒப்பிட வேண்டும்' என நீங்கள் கேட்பது கேட்கிறது. அதற்குக் காரணம், ஹார்னெட்டின் விலைதான். பல்ஸர் மற்றும் அப்பாச்சியின் விலை அளவிலேயே ஹார்னெட்டும் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு ஒர்த்தாக பெர்ஃபாமன்ஸிலும் இதர விஷயங்களிலும் நியாயம் சேர்த்திருக்கிறதா ஹோண்டா? பார்க்கலாம்!
ஸ்டைலிங்
முன்பக்கம் இருந்து பார்க்கும்போது ‘வாவ்’ சொல்ல வைக்கிறது ஹார்னெட். பழைய ஹார்னெட்டைவிட கொஞ்சம் பல்க்கியான பாடிவொர்க்கைப் பெற்றிருக்கிறது புதிய ஹார்னெட். செக்மென்ட்டிலேயே முதல் முறையாக இதில் பொருத்தப்பட்டிருக்கும் USD ஃபோர்க், ஹார்னெட்டின் முன்பக்க டிசைனைத் தூக்கிப் பிடிக்கிறது. இன்ஜின் கீழே பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜின் கவுல், ஸ்போர்ட்டி டிசைனைக் கொடுக்கிறது. பக்கவாட்டில் இருந்தும் பின்பக்கம் இருந்தும் பார்க்கும்போது பழைய ஹார்னெட்டின் தோற்றத்தைத்தான் கொண்டிருக்கிறது புதிய ஹார்னெட். பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. நாம் தேர்ந்தெடுத்திருக்கும் மூன்று பைக்குகளிலும் 12 லிட்டர் ஃப்யூல் டேங்க்தான். எல்சிடி திரையுடன் கூடிய சிம்பிளான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரைப் பெற்றிருக்கிறது ஹார்னெட். இக்னிஷன் லாக் - வழக்கமான இடத்தில் இல்லாமல், ஃப்யூல் டேங்க்கில் இருந்து கொஞ்சம் மேலே பொருத்தப்பட்டிருக்கிறது.
ஹார்னெட் புது டிசைன் என்றால், பழைய டிசைனையே கொண்டிருக்கிறது NS200. இந்த மாடல் வெளியான ஒன்பது ஆண்டுகளில் இதன் தோற்றத்தில் பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை பஜாஜ். கொஞ்சம் பழைய டிசைனைக் கொண்டே மற்ற பைக்குகளுடன் சரிசமமாகப் போட்டியில் நிற்கிறது NS200.
2021-ல் NS-ன் கலர் ஸ்கீம்களை மட்டும் மாற்றியிருக்கிறது பஜாஜ். NS-யை மிகவும் பழையதாக உணர வைப்பது அதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்தான். ஆனால், நாம் எடுத்துக் கொண்ட மூன்று பைக்குகளில் அதிக இடவசதியுடைய பைக் NS 200தான் என்பதை மறந்துவிடமுடியாது.
அரசின் விதிகளுக்கு ஏற்ப மட்டுமே NS-ல் பஜாஜ் மாற்றங்கள் செய்து வர, மறுபுறம் டிவிஎஸ்ஸோ அப்பாச்சியை ரெகுலராக அப்டேட் செய்து கொண்டே இருக்கிறது. நாம் எடுத்துக்கொண்ட மூன்று பைக்குகளில் ஆண்தன்மை கொண்ட மேன்லியான பைக் என்றால், அது அப்பாச்சிதான். ஆனால், உயரமானவர்கள் அப்பாச்சியை ஓட்டும்போது அது குறுகலான ஓர் உணர்வைத் தருகிறது. உயர்த்தி வைக்கப்பட்ட புட் பெக்ஸும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். உயரமான ஃபுட் பெக்ஸ் பைக்கை கார்னரிங் செய்வதற்குச் சிறப்பாகக் கைகொடுத்தாலும், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதில்லையோ என நினைக்க வைக்கிறது. எல்சிடி டிஸ்ப்ளே, ஸ்விட்ச் கியர் மற்றும் லீவர் என அனைத்து அம்சங்களிலும் நம்மைக் கவரும் அப்பாச்சியே, நாம் எடுத்துக் கொண்ட மூன்று பைக்குகளில் சிறந்த ஸ்டைலிங் கொண்ட பைக்காகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது.




இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
ஸ்டைலிங்கில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் முடிந்த நிலையில், பைக்கின் இன்ஜினைப் பொறுத்தவரை வெவ்வேறுவிதமான முறையைக் கையாள்கின்றன மூன்று பைக்குகளும். குறைவான திறனுடன் சிம்பிளான இரண்டு வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கும் ஹோண்டா, 17 bhp பவரை வெளிப்படுத்துகிறது. அப்பாச்சியோ 21 bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது. இறுதியாக, நாம் எடுத்துக் கொண்ட மூன்று பைக்குகளில் 24.5 bhp என அதிகமான பவரை வெளிப்படுத்தும், நான்கு வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது NS. இந்த மூன்று பைக்குகளில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸோடு வெளியாகியிருப்பது NS200தான்.
இன்ஜின் ஸ்பெக்ஸைப் பார்க்கும்போது, நாம் எடுத்துக் கொண்ட மூன்று பைக்குகளில் வேகமான பைக்காக NS200-ம், ஸ்லோவான பைக்காக ஹார்னெட்டையும் நம்மால் பார்த்த உடனே சொல்லிவிட முடியும். வேகத்தைப் பொருத்தவரை இரண்டுக்குமான வித்தியாசங்கள் இருக்கிறதுதான் என்றாலும், நாம் நினைக்கும் தூரத்தில் அது இல்லை. குறைவான சிசி கொண்ட பைக் என்றாலும், குறைவான எடையுடன் இருப்பதால், வேகத்தில் மற்ற இரண்டையும் எட்டிப் பிடிக்கிறது ஹார்னெட். NS-யை விட 10 கிலோ எடை குறைவாகவும், அப்பாச்சியை விட 14 கிலோ எடை குறைவாகவும் இருப்பதால், பவர் டு வெயிட் ரேஷியோவில் நெருங்கி விடுகிறது ஹார்னெட். குறைவான கியர் செட்அப் ரேஷியோ கொண்ட பைக்காக ஹார்னெட் இருப்பதும், மற்ற இரண்டுடன் அது போட்டி போடுவதற்கு வசதியாக இருக்கிறது.
6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் NS-ம் குறைவான கியர் ரேஷியோ வைத்திருந்தாலும், த்ராட்டிலை அதிகமாக முறுக்கும்போது தான் அதன் முழுமையான பவரை நம்மால் உணர முடிகிறது. சிட்டி லிமிட்டில் டாப் கியரில் பயணிக்கும்போது டல் ஆகி விடுகிறது NS200. இதனால் ஹைவேஸில் NS உடன் மற்ற பைக்குகள் போட்டியிடுவது கொஞ்சம் கடினம்தான். அதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் NS200-ன் டாப் ஸ்பீடும் இருக்கிறது. 130 கிமீ வேகத்தை அசால்ட்டாக எட்டுகிறது NS. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என 120 கிமீ வேகத்துடன் NS-யை எட்டிப் பிடிக்க முயல்கிறது அப்பாச்சி. 180 சிசிக்கும், 200 சிசிக்குமான வேறுபாட்டை இந்த இடத்தில் ஹார்னெட்டில் பார்க்காமல் இருக்க முடியவில்லை. 110 கிமீ வேகத்தையே எட்டிப் பிடிக்கத் திணறுகிறது ஹார்னெட்.






டாப் மற்றும் ஸ்லோ ஸ்பீடு எது என ஹார்னெட்டும் NS-ம் போட்டி போட்டுக் கொண்டிருக்க, இரண்டுக்கும் இடையில் ஜம்மென்று அமர்கிறது அப்பாச்சி. சிட்டிக்குள் ஹார்னெட் அளவுக்கு ரெஸ்பான்ஸிவ்வாக இல்லை என்றாலும், NS அளவுக்கு டல்லாக இல்லை. மேலும், அப்பாச்சியில் இருக்கும் `கிளைடு த்ரூ’ (Glide Through) தொழில்நுட்பம், சிட்டிக்குள் அப்பாச்சி ஸ்கோர் செய்ய உதவுகிறது. இதோடு ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெய்ன் என மூன்று ரைடிங் மோடுகளையும் வைத்திருக்கிறது அப்பாச்சி. அர்பன் மற்றும் ரெய்ன் மோடுகளில் பவரை 17.3 bhp-க்குள் இன்ஜின் கட்டுப்படுத்துவதால் 2 கிமீ மைலேஜும் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கிறது. ஸ்மூத்னெஸ் என்று வரும்போது அப்பாச்சி தான் பெஸ்ட். அப்பாச்சியின் எக்ஸாஸ்ட் பீட்டும் ‘ஆஹா’ சொல்ல வைக்கிறது. ஹைவேஸில் பறக்கும்போது NS-ன் சத்தம் இனமையாகிவிடுகிறது. ஹார்னெட்டைப் பொருத்தவரை, கம்யூட்டர் பைக்கைத்தான் ஓட்டுகிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது அதன் சத்தம்.
ரைடிங் மற்றும் மைலேஜ்
மற்ற இரண்டு பைக்குகளைவிட குறைந்த சிசி என்பதால், மைலேஜ் செக்மென்ட்டில் முதல் பரிசு ஹார்னெட்டுக்கே! இரண்டாவது இடத்தை அப்பாச்சியும், ஹைவேஸாக இருந்தாலும் சரி; சிட்டியாக இருந்தாலும் சரி - 40 கிமீதான் எனக் `கறார்’ காட்டும் NS200 மூன்றாவது இடத்தையும் பிடிக்கிறது.
இந்த செக்மென்ட் வாடிக்கையாளர்களுக்கு மைலேஜ், ஸ்போர்ட்டி லுக், ப்ராக்டிக்காலிட்டி என மூன்று அம்சங்களும் முக்கியம். ரைடிங் பொசிஷனைப் பற்றி முன்பு பார்த்திருந்தோம். பில்லியன் சீட் எப்படி? RTR மற்றும் NS-ல் பில்லியன் சீட் கம்ஃபர்ட்டபிளாக இருக்கிறது, ஹார்னெட்டும் ஓகேதான். ஆனால் மற்ற இரண்டின் அளவு இடவசதியுடன் இல்லை.
சஸ்பென்ஷனைப் பொருத்தவரை, அப்பாச்சியின் சஸ்பென்ஷன் மற்ற இரண்டையும் விட ஒருபடி மேலேதான். மிகவும் சொகுசான சஸ்பென்ஷன் சிஸ்டத்தைப் பெற்றிருக்கிறது அப்பாச்சி. அதோடு முன்பக்கமும் ப்ரீலோடு அட்ஜஸ்டபிலிட்டி கொடுத்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் ரைடரின் எடைக்கு ஏற்றவாறு சஸ்பென்ஷனை செட் செய்து கொள்ளலாம். NS-ன் சஸ்பென்ஷன் இலகுவாக இல்லாமல், மிகவும் உறுதியாக இருக்கிறது. ஆனால், இதுதான் ஹைவேஸில் பறக்க ஜிவ்வென இருக்கிறது. ஹார்னெட்டின் சஸ்பென்ஷனோ, NS-ஐவிட இன்னும் உறுதியாக இருக்கிறது. சஸ்பென்ஷனிலும் RTR தான் பெஸ்ட்.
ஹேண்ட்லிங்
நாம் எடுத்துக் கொண்ட மூன்று பைக்குகளும் ஓட்டுவதற்குச் சிறப்பாகவே இருக்கின்றன என்றாலும், ஹேண்ட்லிங் என்று வரும்போது அப்பாச்சி ஒரு படி மேலே நிற்கிறது. க்விக் ரெஸ்பான்ஸ் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றைச் சிறப்பாக பேலன்ஸ் செய்கிறது அப்பாச்சி. பவர் மற்றும் பிரேக்கிங் தன்மையும் அப்பாச்சிக்கு கூடுதல் சிறப்பை அளிக்கின்றன.
ஹார்னெட்டும் குறை சொல்ல முடியாத அளவு நெருங்கி வரப் பார்க்கிறது, ஆனால் அதன் குறைவான 180 சிசி இன்ஜின், அதற்கு ஈடுகொடுக்க மறுக்கிறது என்பதுதான் உண்மை.
NS-க்கு மற்ற இரண்டையும்விட சிறப்பான ஹேண்ட்லிங்கை அளிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், பைக்கைக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகச் சாய்த்தாலே தரையில் இடிக்கும் மெயின் ஸ்டாண்டும், மோனோஷாக்கின் குறைவான ட்ராவலும் முழுவதுமாக ஓட்டுபவரின் கவனத்தைச் சிதறடிக்கிறது.
சிறப்பம்சங்கள்
இன்ஜினில் இருந்து ஸ்டைலிங் வரை மற்ற பைக்குகளோடு தாக்குப்பிடித்தாலும், சிறப்பம்சங்கள் என்று வரும்போது ரொம்பவே சறுக்குகிறது NS200. அப்டேட் செய்யப்படாத ஹாலோஜன் முகப்பு விளக்குகள், முன்பக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் ஏபிஎஸ், அனலாக் ரெவ் மீட்டர் எனச் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தில் ஸ்கோர் செய்கிறது இது.சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கில் வசதி NS200-ல் மட்டுமே இருக்கிறது.
எல்இடி லைட், ஹஸார்டு லைட் மற்றும் யுஎஸ்டி ஃபோர்க் ஆகியவை ஹோண்டாவில் புதிதாக இடம்பெற்றிருக்கின்றன. இதனைத் தவிர ஹோண்டாவும் தனிப்பட்ட முறையில் சோபிக்கவில்லை.
நிறைய இடங்களில் மற்ற இரண்டு பைக்குகளுக்கு இடையே நின்றிருந்தாலும், நுணுக்கமான விஷயங்களைக் கொடுப்பதன் மூலமும், புதிய வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் தனித்தே தெரிகிறது அப்பாச்சி. சிறப்பம்சங்களிலும் கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுத்திருக்கிறது டிவிஎஸ்.
மூன்றுவிதமான ரைடிங் மோடுகள், ஆப்ஷனல் டூயல் சேனல் ஏபிஎஸ், ஏபிஎஸ்ஸின் சென்ஸிட்டிவிட்டியை மாற்றிக் கொள்ளும் வசதி, புளூடூத் கனெக்டிவிட்டி, ப்ரீலோட் அட்ஜஸ்டபிள் ஃபோர்க், அட்ஜஸ்டபிள் லீவர் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், கிளைடு த்ரூ டிராஃபிக் வசதி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு அப்டேட்டான பைக்காக அப்பாச்சியை வைத்திருக்கிறது டிவிஎஸ். இந்த அனைத்து வசதிகளையும், சிங்கள் சேனல் ஏபிஎஸோடு வாங்கும் போது 5,000 ரூபாய் குறைவாகவும் கிடைக்கிறது அப்பாச்சி. இதற்கு மேலும், யார் லீடிங் எனச் சொல்ல வேண்டுமா!

தீர்ப்பு:
1.33 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும் NS200-யை சிட்டிக்குள் மட்டும்தான் ஓட்டப் போகிறோம் என்பவர்கள், கண்ணை மூடிக் கொண்டு ஓரம் கட்டிவிடலாம். நீண்ட தூரப் பயணங்கள் செல்வோம்; ஸ்போர்ட்டி இன்ஜினும், பெர்ஃபாமன்ஸும்தான் முக்கியம் என்பவர்கள் NS-யை முயற்சி செய்யலாம்.
மற்ற இரண்டு பைக்குகளுடன் போட்டிக்கு நின்றாலும், பெர்ஃபாமன்ஸில் கண்டிப்பாக ஹார்னெட்டால் போட்டி போட முடியாது. அதற்காக இதை மொத்தமாகப் புறம்தள்ளி விடவும் முடியாது. சிறப்பான பைக்தான்; ஆனால் இந்த விலைப்பட்டியலுடன் வாங்குவது சிறந்த முடிவாக இருக்காது. 1.28 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் இருக்கும் ஹார்னெட்டுக்குப் பதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்ட அப்பாச்சியைத் தான் நாம் பரிந்துரை செய்வோம்.
டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் 1.34 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும் ஓவர்ஆல் பேக்கேஜாக ஒப்பிடும்போது, அப்பாச்சியுடன் மற்ற இரண்டு பைக்குகளைத் தள்ளி நின்றுதான் பார்க்க வேண்டும். பைக்கைப் பயன்படுத்தியும், தரவுகளை அலசியும் பார்த்தபிறகு கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்; 200 சிசி செக்மென்ட்டின் சிறந்த பைக் டிவிஎஸ்ஸின் அப்பாச்சிதான் என்று.