நெடுஞ்சாலை வாழ்க்கை!

லாரியை சர்வீஸ் சாலையின் ஓரத்தில் நிறுத்தி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நம்மை எழுப்பி, 'எல்லாப் பேப்பர்களையும் கொடு!’ என்று அதட்டினர் காவல் துறையினர். அப்போது அங்கே ஒரு டூ-வீலர் வந்து போலீஸ் அதிகாரியிடம் ஏதோ கூற... காவல் அதிகாரிகள் உடனே ஜீப்பில் ஏறி வேகமாகச் சென்றுவிட்டனர். பேட்ரோல் ஜீப் புறப்பட்டுச் சென்றதும், அடுத்து என்ன செய்வது எனத் திகைத்து அமர்ந்திருந்தோம். எங்களுக்கு எல்லாமே கனவில் நடப்பது போலத்தான் இருந்தது. லாரியின் டாப்பில் உறங்கிக்கொண்டு இருந்த ஜலேந்திரன் கீழே இறங்கிவந்தார்.
##~## |
''ஏதோ அவசரம்னு கிளம்பிட்டாங்க. நாம இங்கே இருந்தா, திரும்பவும் வருவாங்க. வேறு எங்கேயாவது கண்ணுல படாம லாரியை நிறுத்துவோம்'' என்றார். அந்த இடத்தில் இருந்து கிளம்பி, இரண்டு கிலோ மீட்டர் தாண்டி நின்றுகொண்டிருந்த பல லாரிகளுக்கு மத்தியில் நமது லாரியைச் சொருகினார் சிவக்குமார்.
பிறகு விசாரித்ததில், தமிழகப் பதிவு எண் கொண்ட லாரி என்பதால்தான் காக்கிசான்கள் நமது லாரியை மட்டும் குறிவைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேற்று மாநில ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட லாரிகள் என்றால் இளப்பம்தான். யார் வேண்டுமானாலும் மிரட்டுவார்கள்.
அதன் பிறகு யாருக்கும் உறக்கம் பிடிக்கவில்லை. சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு, மற்ற லாரிகளுக்குத் தகவல் கொடுத்துப் புறப்பட்டு வரச் சொல்லி, பயணத்தைத் தொடர்ந்தோம்.
ஜலேந்திரன், முருகனின் லாரியை எடுக்க... முருகன் நம்முடன் இணைந்துகொண்டார். போலீஸ் அதிகாரிகளின் மிரட்டலில் கொஞ்சம் அதிர்ந்திருந்த நம்மைத் தேற்றும்விதமாகப் பேசினார் முருகன். ''இதெல்லாம் சர்வ சாதாரணம் சார். என்ன, இன்னைக்கு அடி வாங்கலை. மத்தபடி இது புது விஷயம் இல்லை. வெறும் நூறு ரூபாய்க்குத்தான் இவ்வளவு அதிகாரமும். இதுகூடப் பரவாயில்லை. விஜயவாடா அவுட்டர்ல ஏகப்பட்ட காலேஜ் இருக்கு. பசங்களுக்கு செலவுக்கு காசு இல்லைன்னா, மூணு நாலு பேரா சேர்ந்து வேட்டைக்குக் கிளம்பி வர்றது மாதிரி வருவாங்க. கேபினோட ரெண்டு பக்கமும் ஏறி, தூங்கிக்கிட்டு இருக்கிற டிரைவரை எழுப்பி பேனாக் கத்தியைக் காட்டி காசு கேட்பாங்க. நமக்கு அந்தப் பசங்களைப் பார்த்தா ரொம்ப சின்னப்புள்ளத்தனமாத்தான் தெரியும். ஆனா, காசை கொடுக்கலைன்னா, அந்தக் கத்தியில குத்துப்படுவோம். எனக்குத் தெரிஞ்ச எங்க ஏரியாக்காரர் தோள்பட்டையில இந்தப் பசங்ககிட்ட குத்து வாங்கிருக்கார். ஏன், நானே ஒரு தடவை காசு கேட்டப்ப, என்ன செய்றதுனு தெரியாம, கையில இருந்த 300 ரூபாயைக் கொடுத்தேன்'' என்றபோது அதிர்ச்சியாக இருந்தது.

கிருஷ்ணா நதி கடந்து விஜயவாடா தாண்டி விசாகப்பட்டினத்தை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தோம். சூரியன் உதிக்கத் துவங்கியபோது, சிவந்து கிடந்த வானத்தில் லேசாக வெளிர்மஞ்சள் வண்ணம் பரவ ஆரம்பித்திருந்தது. இரவின் புழுக்கம் குறைந்து லேசாக ஜில்லிப்பு காற்றில் பரவி தேகத்தை வருட... ஈரக்காற்றை ஆழமாகச் சுவாசித்து வியர்வையை விரட்ட முயற்சி செய்தபோது, முருகன் நீர் நிலையைத் தேடினார். சாலையோரம் இருந்த கை பம்பைக் கண்டதும் லாரியை ஓரங்கட்டினோம். லாரிகளில் இருந்த தண்ணீர் கேன்களில் நீர் நிரப்பி, கேனில் ஈரச் சாக்கைச் சுற்றிக் கட்டினார்கள். வெப்பம், கேனில் இருக்கும் நீரையும் சூடாக்கிவிடுகிறது. இந்த ஈரச் சாக்கு ஓரளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது. சாக்கு காயும்போது, தண்ணீர் விட்டு நனைக்க வேண்டும். இதுதான் லாரிகளுக்கான ஏர்-கூலர் எனலாம்.
அதிக வெப்பம் எப்படி இன்ஜினுக்கு ஆகாதோ, அதேபோல மனித உடலுக்கும் ஆகாதுதான். ஆனால், அதை அனுபவசாலிகள் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப் பழகி இருக்கிறார்கள். ஆனால், நமக்கு இது புதிது. இரு தினங்களாக அதீத வெப்பத்தில் உடல் உலர்ந்து, நா வறண்டு, தோல் சுருங்கி, கண்கள் இடுங்கி மஞ்சளென வெப்பத்தின் வண்ணத்தில் உடல் உருகிச் சொட்டும்போது... ஒரு நோயாளி ஆவதற்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட்டது. நம் உடல் உபாதைகளை உணர்ந்த முருகன், ''பதநீர் சாப்பிட்டால் சரியாகிவிடும். இந்த ஒருநாள் தாக்குப் பிடித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் உடலுக்கு இந்த வெப்பம் செட் ஆகிவிடும்'' என்று ஆறுதல் சொன்னார்.

பயணம் செய்துவந்த பாதையில் முழுக்க முழுக்க நெல் வயல்கள்தான். ஆங்காங்கே கரையோரம் நிற்கும் பனை மரங்கள், அதில் ஆட்கள் நடமாட்டம் என்று காட்சிகள் மாறவில்லை. சாலையை ஒட்டி இருக்கும் பனை மரங்களின் கீழ் அமர்ந்திருக்கும் சிறு சிறு கும்பல், கள் வியாபாரம் நடக்கிறது என்பதை உணர்த்தியது. ஊன்றிக் கவனித்ததில், கள் வியாபாரம் செய்யும் இடத்தில் பெரும்பாலும் பெண்களே இருந்தது ஆச்சரியம்.
அந்தப் பெண்கள், சாலையில் செல்லும் லாரிகளை, யானை தும்பிக்கையை உயர்த்திக் கீழிறக்குவதுபோல போல கை உயர்த்தி அழைக்கும் சைகை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. லாரியை மெதுவாக உருட்டியவாறே, 'பதநீர் இருக்கிறதா?’ என்று கேட்டுக்கொண்டே வந்தார் முருகன். பெரும்பாலான இடங்களில், 'இல்லை’ என்றே கைவிரித்தனர். ஒருவழியாக, 'இருக்கிறது’ என்று சொன்ன இடத்தில் லாரியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, பதநீர் குடிக்க சாலையைவிட்டு நிலத்தில் இறங்கினோம்.
மூன்று ஆண்கள், ஒரு பெண் அந்தப் பனை மரத்தடியில் இருந்தனர். இரு ஆண்கள் பனை மட்டையை சீவிக் கொண்டு இருக்க... ஒரு முதியவர் கள் பானையின் அருகில் அமர்ந்திருந்தார். 'கள் வேண்டாமா? என்று கேட்ட அந்தப் பெண், வேறு பாத்திரத்தில் இருந்து பதநீரை எடுத்துவந்தார். அந்தக் காலை நேரத்தில், பதநீர் குடிப்பதற்குத் தேவாமிர்தம் போல இனித்தது. ஒரு சொம்பு 10 ரூபாய். கள்ளும் பதநீரும் ஒரே விலை!
ஆந்திராவில் கள் வியாபாரம், பனை மரம் இருக்கும் இடங்களில் எல்லாம் இருக்கிறது. கள் இறக்குவதற்கான லைசென்ஸ் மட்டுமே வாங்க வேண்டுமாம். மரங்களைக் குத்தகை எடுத்து கள் இறக்கி அங்கேயே வியாபாரம் செய்து கொள்ளலாம். நெடுஞ்சாலையெங்கும் பனை மரங்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் கள் வியாபாரம் நடப்பதைப் பார்க்க முடிகிறது. போலீஸ் வருவதோ, சோதனை யிடுவதையோ பார்க்க முடியவில்லை.

கள் குடித்த டிரைவர்கள் மர நிழலில் படுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. வெயிலின் தாக்கத்தால், பகலில் லாரியை ஓட்ட முடியாமல் ஓய்வெடுப்பவர்கள், கள் குடித்து இளைப்பாறுகிறார்கள்.
பதநீருக்கான பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்பிய பாது, பனை மட்டையை வெட்டிக்கொண்டு இருந்த நடுத்தர வயது ஆண், நம்மிடம் அந்தப் பெண்ணைக் காட்டி சைகை செய்தார். ஒரு கணம் துணுக்குற்று வேண்டாம் எனத் தலையாட்டி விட்டு லாரியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அப்போது அங்கிருந்த மற்றொரு ஆண் நம்மைப் பின்தொடர்ந்தார்!
- (நெடுஞ்சாலை நீளும்)
வாழ்க்கைச் சக்கரம்!
சிவக்குமாரின் லாரியில் இருந்து திடீரென டயர் வெடிக்கும் சத்தம். பின் பக்க டயர் ஒன்று வெடித்துவிட்டது. இது அவர் எதிர்பாராதது. லாரித் தொழிலில் டயர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. ''ஒரு புதிய ரேடியல் டயரின் விலை, சுமார் 23,500 ரூபாய். மொத்தம் 10 டயர்கள் வாங்க வேண்டும் என்றால், 2.5 லட்சம் ஆகும். புதிய டயரை சிறப்பாகப் பராமரித்து ஓட்டினால், சுமார் 1,10,000 கி.மீ வரை ஓடும். அதன் பிறகு, அதை ரீ-கண்டிஷனும் செய்ய முடியும். அதற்கு, டயர் ஒன்றுக்கு 10,000 ரூபாய் ஆகும். ரீ-கண்டிஷன் செய்யப்பட்ட டயர் சுமார் 50,000 கி.மீ வரைதான் ஓடும். இதில், டயரில் ஏதாவது ஓட்டை, கிழிசல், கல் சிக்கியதால் ஏற்படும் பலவீனம் போன்றவை ரீ-கண்டிஷன் செய்வற்கு எதிரிகள். புதிதாக ஒரு செட் டயர் இருந்தால், ஒரே ஆண்டில் அந்தப் பணத்தை சம்பாதித்து விடலாம்'' என்கிறார் சிவக்குமார். ஆனால், எதார்த்தத்தில் அவ்வளவு பெரிய முதலீடு இவர்களுக்குச் சாத்தியம் இல்லை என்பது தான் சோகம்!