கார்ஸ்
Published:Updated:

ஹாட்ரிக் சாம்பியன்

ஹாட்ரிக் சாம்பியன்

 ##~##

ஹாட்ரிக் வெற்றிக்குத் தயாராகிவிட்டார் செபாஸ்ட்டியன் வெட்டல். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஃபார்முலா -1 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரும் செபாஸ்ட்டியன், இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன. சாம்பியன்ஷிப் பட்டியலில் 38 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் வெட்டல், சாம்பியன் பட்டத்தை வெல்ல, இன்னும் ஒன்றிரண்டு வெற்றிகளே போதும். 

ஹங்கேரி

ஹங்கேரியின் தலைநகர் புத்தபெஸ்ட் நகரில் உள்ள மாக்யர் ரேஸ் டிராக்கில், இந்த ஆண்டின் 10-வது ரேஸ் போட்டி ஜூலை 28-ம் தேதி நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் லூயிஸ் ஹாமில்ட்டன் முதல் இடம் பிடிக்க, செபாஸ்ட்டியன் வெட்டல் இரண்டாம் இடமும், ரெனோ அணியின் ரொமெய்ன் கிராஸின் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஹாட்ரிக் சாம்பியன்

ரேஸ் துவங்கிய சில விநாடிகளிலேயே யாரும் எட்டிப் பிடிக்க முடியாதபடி, 'விர்ர்ர்’ரென வீறுகொண்டு பறந்தார் லூயிஸ் ஹாமில்ட்டன். அவரைத் தொடர்ந்து வெட்டல், க்ராஸின், அலான்சோ, மாஸா என அடுத்தடுத்து கார்கள் பறந்துகொண்டு இருந்தன. டிராக்கில் வெப்பம் அதிகமாக இருந்ததால், ஒன்பதாவது லேப்பிலேயே சாஃப்ட் காம்பவுண்ட் டயரை மாற்றிவிட்டு, மீடியம் டயருக்கு மாறினார் ஹாமில்ட்டன். நான்கு வீல்களிலும் இந்த டயர் மாற்றம் மூன்றே விநாடிகளில் நடந்து முடிந்தது. அடுத்தபடியாக, வெட்டலும் டயரை மாற்றிக் கொண்டு சீற ஆரம்பித்தார். ரேஸ் 30 லேப்புகளைக் கடந்தபோது ஹாமில்ட்டனின் வேகம் குறைந்தது. இதனால், மீண்டும் டயரை மாற்றினார் ஹாமில்ட்டன். ஆனால், வெட்டலின் சீற்றம் குறைந்தபாடில்லை. 50-வது லேப்பைத் தாண்டியபோது, முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடைசி வாய்ப்பாக மீண்டும் டயரை மாற்றினார்

ஹாட்ரிக் சாம்பியன்

ஹாமில்ட்டன். இப்போது இரண்டாம் இடத்தில் இருந்த வெட்டல் மூன்றாவது இடத்துக்கு முன்னேற, ராய்க்கோனன் இரண்டாம் இடத்துக்கு வந்தார்.

மொத்தம் 70 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், 62-வது லேப்புக்குப் பிறகு காட்சிகள் மாறத் துவங்கியது. போட்டி முடிய எட்டு லேப்புகளே இருந்த நிலையில், 1.41 விநாடிகள் வித்தியாசத்தில் ஹாமில்ட்டனை ராய்கோனன் துரத்திக்கொண்டு இருக்க, ராய்க்கோனனை 1 விநாடிக்கும் குறைவான வித்தியாசத்தில் துரத்திக் கொண்டிருந்தார் வெட்டல். முதல் இடம் யாருக்கு என்று த்ரில் எகிற ஆரம்பித்தது. ஹாமில்ட்டன் தனது வேகத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தார். இறுதியில், ஹாமில்ட்டன் 10 விநாடிகள் வித்தியாசத்தில் ராய்கோனனை முந்தி முதல் இடம் பிடித்தார். வெட்டல் மூன்றாவது இடம் பிடித்தார்.

இந்த ஆண்டு நடைபெற்ற 10 ரேஸ்களில், எட்டில் முதல் மூன்று இடங்களில் இருந்து ரேஸைத் துவக்கி இருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன். ஆனால், இந்த ரேஸைத் தவிர இவர் மற்ற எதிலும் வெற்றி பெறவில்லை. இந்த ஆண்டின், அதுவும் புதிய அணியான மெர்சிடீஸ் அணியின் சார்பில் முதல் வெற்றி என்பதால், உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார் ஹாமில்ட்டன்.  ஆனால் இந்த வெற்றி, வெட்டலை வெல்லப் போதாது என்பது ஹாமில்ட்டனுக்குத் தெரியும்.

இன்னும் ஒன்பது சுற்றுகள் மீதம் இருக்கும் நிலையில், ஒரு போட்டியில்கூட வெட்டலுக்கு இடம் தராமல் ஹாமில்ட்டன் வெற்றி பெற்றால்தான் சாம்பியன் கனவு காண முடியும். இல்லை என்றால், வெட்டலுக்கு ஹாட்ரிக் மகுடம் உறுதி!

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன்பு, அடுத்த ரேஸ் பெல்ஜியத்தில் ஆகஸ்ட் 25-ம் தேதி  நடந்து முடிந்திருக்கும்!

 இந்தியாவில் ஃபார்முலா-1 இல்லை!

 2014-ம் ஆண்டுக்கான ஃபார்முலா-1 ரேஸ் காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய ரேஸை அதிரடியாக நீக்கியிருக்கிறார் ஃபார்முலா-1 ரேஸின் தலைவர் பெர்னி எக்கோலஸ்ட்டன். 'வரி விலக்கு அளிக்கப்படாததால்தான் இந்திய ரேஸை நீக்கியிருக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார் பெர்னி. இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதியில் டெல்லி ரேஸ் டிராக்கில் நடைபெறுவதாக இருந்த வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வரி விலக்கு மற்றும் கஸ்டம்ஸ் விதிமுறைகளில் விலக்கு அளிக்கப் படவில்லை என்பதால், சூப்பர் பைக் ரேஸ் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது!

ஹாட்ரிக் சாம்பியன்