ஆள் தேவையில்லாத அறுப்பு மிஷின்!
##~## |
''இருபது முப்பது அறுப்பு ஆட்கள் செய்ற வேலையை ஒரு மெசினு செஞ்சிடுது'' என விவசாயிகள் பெருமை பேசும் வகையில், ஆள் பற்றாக்குறைக்குத் தீர்வாக இருக்கிறது ஹார்வெஸ்டர் எனப்படும் நெல் அறுவடை இயந்திரம்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தால், விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்குக் கை கொடுத்து வருவது இயந்திரங்கள்தான். அந்த வகையில், பெரும்பான்மையான விவசாயிகளின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறது ஹார்வெஸ்டர்.

ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல்லை அறுவடை செய்ய 20 ஆட்கள் தேவைப்படுவார்கள். ஆனால், ஹார்வெஸ்டர் மூலமாக அறுவடை செய்யும் போது, 1,500 ரூபாயில் அறுவடை முடிந்து விடுகிறது. இதனால், இயந்திர அறுவடைக்கு ஏற்ப நடவு செய்ய ஆரம்பித்துவிட்டனர் விவசாயிகள். இரண்டு அறுவடை இயந்திரங்களை வைத்து வாடகைக்கு அறுவடை செய்து வரும் பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியைச் சேர்ந்த செந்தில், ''இன்னிக்கு இந்த மிஷின் இல்லாம விவசாயமே இல்லைனு சொல்ற அளவுக்கு இதோட தேவை முக்கியமா இருக்கு. டிராக்டர் கம்பைன் ஹார்வெஸ்டர்னு சொல்ற இந்த இயந்திரங்கள், பஞ்சாப் மாநிலத்துலதான் அதிக அளவு தயாராகுது. இதுல பல கம்பெனிங்க இருந்தாலும் கத்தார், ஸ்டாண்டர்டு கம்பெனி மிஷின்கள்தான் அதிகளவு புழக்கத்துல இருக்கு. ஈரமான வயல்கள்ல அறுவடை செய்ய கத்தாரும், காய்ஞ்ச வயல்கள்ல ஸ்டாண்டர்டு மிஷினும் பயன்படுத்துறோம். இந்த மிஷின்கள்ல 55 ஹெச்பி டிராக்டரைத்தான் பயன்படுத்துறோம். குறிப்பா, ஜான்டீர் 5310 மாடல் டிராக்டர்தான் ஹார்வெஸ்டருக்குப் பொருத்தமா இருக்கு.

ஈரமில்லாத வயல்ல ஸ்டாண்டர்டு கம்பெனி மிஷினை ஓட்டுவோம். அது லேசான ஈரத்திலும் நல்லா அறுக்கும். ஒரு ஏக்கர் நிலத்துல 45 நிமிஷத்துல அறுத்துடுவோம். ஒரு மணி நேரத்துக்கு 1,500 ரூபாய் வாடகை. ஒரே நேரத்துல அறுத்து, நெல்லை மூட்டை பிடிச்சிடுறதால விவசாயிகளுக்கும் வேலை சுலபமாயிடும்.
நாங்க தமிழ்நாட்டுல வேலை இல்லாதப்ப, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு வேலைக்குப் போயிடுவோம். வருஷத்துல ஏழு, எட்டு மாசம் வேலையிருக்கும். டிரைவருக்கு 10 ஆயிரம் சம்பளம் கொடுக்கணும். சீஸன் நேரத்துல தினமும் 14 மணி நேரத்துக்கு மேல வேலையிருக்கும். ஒரு லிட்டர் டீசலுக்கு 5-7 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். ஹார்வெஸ்டர் வாங்க வங்கியில கடன் கொடுக்குறாங்க. அதுக்கு நம்மகிட்ட ஏழு ஏக்கர் நிலமும், அதுக்கான பட்டா, சிட்டா அடங்கல் கொடுத்தா 10-12 லட்சம் கடன் கொடுப்பாங்க... மீதி 5-6 லட்சத்தை நாமதான் போட்டுக்கணும்!'' என்றார்.

சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அம்மன் மில்ஸ் ஸ்டோர்ஸ் நிறுவனம், கத்தார் இயந்திரத்திற்கான தமிழ்நாடு, கேரளா டீலராக இருக்கிறது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அண்ணாமலை, ''கத்தார் மிஷின் ஈரமான நிலங்கள்ல அறுவடை செய்ய ஏற்றது. குறிப்பா, கத்தார் மிசின்ல 3500 G னு ஒரு மாடல் இருக்கு. அதுதான் அதிகமா வாங்குறாங்க. இந்த மிஷின்ல அசோக் லேலாண்ட் இன்ஜின் இருக்கு. மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்துல போகும். டிராக்டர் கம்பைண்ட் ஹார்வெஸ்டரான இதோட விலை 20 லட்ச ரூபாய் வரும்!'' என்றார்.
ஸ்டாண்டர்டு டீலரான வரீந்தர்சிங், ''காய்ந்த நிலங்களில் அறுவடை செய்ய ஸ்டாண்டர்டு இயந்திரத்தை அதிகம் பயன்படுத்துறாங்க. ஸ்டாண்டர்டு ஷி390 மாடல் அதிகமா பயன்பாட்டுல இருக்கு. நாங்க டிராக்டர் கம்பைன் ஹார்வெஸ்டர் விற்கிறது இல்லை. வெறும் ஹார்வெஸ்டர் மட்டும் எங்ககிட்ட கிடைக்கும். இந்த மாடலோட விலை 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகுது. விவசாயிக விரும்புற டிராக்டரை வாங்கிப் பொருத்திக்குவாங்க... அதோட விலை தனி!'' என்றார்.
