''வழிகாட்டிய மோட்டார் விகடன்!''
##~## |
''அயன் பட் சாதனை செய்ய வேண்டும். அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டு, நம்மைத் தொலைபேசியில் அழைத்தவர் கோவையைச் சேர்ந்த சஞ்சய். இப்போது சஞ்சய், 1,600 கி.மீ சேடில்ஸோர் பிரிவில், 'அயன் பட்’ சாதனையாளர்.
''கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே கார், பைக் ஆர்வம் அதிகம். காரணம், எங்க அப்பா ராமமூர்த்தி, ஒரு காலத்தில பைக் ரேஸர். அதனால், பைக் ஆர்வம் சின்ன வயசில் இருந்தே எனக்கும் இருக்கு. யமஹா ஃபேஸர், ஆர்-15, ஹோண்டா சிபிஆர் 250 - இப்படி மூணு பைக், மூணு வருஷத்துல மாத்திட்டேன். 'அயன் பட்’னு ஒரு சாதனை இருக்கிறதையே 'மோட்டார் விகடன்’ பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே, இதை நாம பண்ணணும்னு ஆர்வம் வந்தது.

நான் இதுக்கு முன்னாடி லாங் டிரைவ் போனதே இல்லை. அதிகபட்சமா நான் போன லாங் டிரைவ், 60 கி.மீ தூரம்தான். ஒரு ஆர்வத்துல இதைச் சவாலா எடுத்துக்கிட்டேன். இதற்கான சட்ட திட்டங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது. மோட்டார் விகடன்ல கேட்டேன். அவங்க கைட் பண்ணுனாங்க. சமீபத்துல அயன் பட் சாதனை செஞ்ச சபரீஷ் அண்ணாகூட பேசச் சொன்னாங்க. எனக்குத் தெரியாம இருந்த பல விஷயங்களை அவர்தான் புரியவெச்சார்.

பயணத்துக்கு பிளான் பண்ணும்போது, 'ஒரு ட்ரையல் பார்க்கணும்; பிரிப்பேர் பண்ணனும்’னு நண்பர்கள் சொன்னாங்க. ஆனால், நான் எதுவுமே பண்ணலை. ஆனாலும் நான் கொஞ்சம் கத்துக்குட்டித் தனமாத்தான் இருந்தேன்.
வாங்கி 10 நாள் மட்டுமே ஆன என் ஹோண்டா சிபிஆர்-250 பைக்கை எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டேன். பைக்குக்கு எந்த ஸ்பெஷல் சர்வீஸும் பண்ணலை. எங்க குடும்பத்துல எல்லோருமே என்னை உற்சாகமா அனுப்பி வெச்சாங்க. மே 24 அன்னைக்கு சாயங்காலம் சரியா 6 மணிக்கு, மேட்டுப்பாளையத்துல புறப்பட்டேன். ஆரம்பிக்கும்போதே பல பிரச்னைகள்.
மேட்டுப்பாளையத்துல ஆரம்பிச்சு, சத்தியமங்கலம், அம்மாபேட்டை வழியா நால்வழிச் சாலையில் ஏறி, ஓசூர் வழியா பெங்களூர். அங்கிருந்து ஆந்திராவுல இருக்கிற அனந்தபூர் ரூட் பிடிச்சு ஹைதராபாத்துக்கு முன்னாடி இருக்கிற ஜட்சேர்லா அப்படிங்கிற ஊர்ல 'யு டர்ன்’ அடிச்சு, வந்த ரூட்லயே ரிட்டர்ன் வர்றதுதான் பிளான்.
நிறையப் பிரச்னை வரும்னு எதிர்பார்த்துதான் போனேன். அதே மாதிரி, பெங்களூரு தாண்டிப் போயிட்டு இருக்கும்போது, நல்ல இருட்டுல பைக் ஹெட்லைட் ஆஃப் ஆயிடுச்சு. கொஞ்ச நேரத்துல அதுவா சரியானதால் தப்பிச்சேன். அதேமாதிரி, ஸ்கெலிட்டன் டைப் ஹெல்மெட் போட்டுருந்தேன். இது, வெயிட் ரொம்பக் குறைவு. அதனால், எதிர்க் காற்றில் ஹெல்மெட் மேல தூக்கிக்கும். அதனால, காற்று கண்ணுல மோதி கண் முழுக்க சிவந்து, பைக் ஓட்ட ரொம்ப சிரமப்பட்டேன்.
பெங்களூருவில் லாரிகளால் பயங்கர டிராஃபிக். நேவிகேஷன், ஜிபிஎஸ் எதுவும் கொண்டுபோகலை. அதுதான் பெரிய பிரச்னை. வேற எந்த ரூட்டும் தெரியாததால், டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். லாரியைத் தவிர வேற எதுவும் போகாத ஆந்திரா ரோட்டுல, கும்மிருட்டில் தனியாப் போனேன். நக்ஸலைட் பிரச்னை இருக்கிற அந்த ஏரியாவை பயத்தோடயே கடந்தேன். செம த்ரில்லிங் அனுபவம். ஒரு வழியா ஜட்சேர்லா சேர்ந்தேன். அங்கே 'யு டர்ன்’ எடுக்கும்போது, ப்ரூஃப் காட்டணும். அங்கிருந்த பெட்ரோல் பங்க்ல ஸ்வைப்பிங் வசதி இல்லை. ஆனா, கண்டிப்பா ஐ.பி.ஏ.க்கு எலெக்ட்ரானிக் பில் அனுப்பணும். அது ரொம்ப முக்கியமான ரூல். அந்த நேரத்தில் என்ன செய்றதுனு புரியலை. ஸ்வைப்பிங் வசதி இருக்கிற பெட்ரோல் பங்க் தேடி அலைஞ்சேன். அப்போ, ஏடிஎம் சென்டர்ல பணம் எடுத்து, அதை போட்டோ எடுத்து அனுப்பலாம்னு சபரீஷ் அண்ணா ஐடியா கொடுத்தார். இந்த பெட்ரோல் பங்க், லாரி டிராஃபிக்காலயே மூணு மணி நேரம் வேஸ்ட் ஆயிடுச்சு. டயத்துக்குள்ள முடிப்போமானு பயமே வந்துடுச்சு!'' என்று சிரித்தார் சஞ்சய்.

''இவன் திரும்பி வரும்போது இருந்த கோலத்தைப் பார்த்து எல்லாரும் பயந்தே போனோம்'' என்ற சஞ்சயின் நண்பர் யஸ்வந்த், 'கிளம்பும்போது எதுவும் சாப்பிடாம வெறும் வயிறோடதான் கிளம்பினான். இவன் கொண்டுபோனதுல, தண்ணியைத் தவிர எல்லாமே அப்படியே கொண்டு வந்துட்டான். 22 மணி நேரம் முழுக்கவும் எதுவும் சாப்பிடலை. திரும்பி வர்றப்போ கண் முழுக்க சிவந்து வீங்கி ரொம்ப டயர்டா இருந்தான். ஆனா, தூங்கி எந்திருச்ச அடுத்த நாளே ஓகே ஆயிட்டான்' என்றார்.
''இடையில கொஞ்சம் தண்ணி, கொஞ்சம் எனர்ஜி ட்ரிங்க் மட்டும்தான் குடிச்சேன். வழியில் பெட்ரோல் பங்க் பார்த்தா உடனே டேங்க் ஃபுல் பண்ணிடுவேன். எங்கேயும் எதுக்காகவும் நிக்கலை. தொடர்ந்து ஓட்டிக்கிட்டே இருந்ததில் கை முழுக்க மரத்துப்போய் ரொம்பக் கஷ்டம் ஆயிடுச்சு. ஈரோடு மாவட்டம் அந்தியூர்ல பயணத்த முடிச்சப்போ, மாலை 4 மணி. இதுக்கு எனக்கு ஆன நேரம் 22 மணி நேரம். மொத்த தூரம் 1,620 கி.மீ.
இந்தப் பயணத்துக்கு மொத்த செலவு 8,000 ருபாய். அதுவும் முழுக்க பெட்ரோலுக்கு மட்டும் தான். பைக் வேற எந்த செலவும் வைக்கலை. மைலேஜ் லிட்டருக்கு 25 கி.மீ வரை தந்தது. அதிகபட்சமா 160 கி.மீ வேகம் வரைக்கும் போனேன்.
லிம்கா ரெக்கார்டு ப்ளஸ் அயன் பட் அப்படின்னுதான் இந்த ட்ரிப் பிளான் பண்ணினேன். 24 மணி நேரத்துக்குள் அதிகத் தூரம் பயணம் செஞ்சுடலாம்னு நெனைச்சேன். ஆனா, பெங்களூர்ல டிராஃபிக் சொதப்பினதால் ரீச் பண்ண முடியலை. அடுத்த தடவை பக்கா பிளானோட லிம்கா ரெகார்டு செய்வேன்.
இந்த ட்ரிப் என்னைவிட அதிகமா மெனக்கெட்டது என் குடும்பம்தான். பயணம் முழுக்க என் தொடர்பிலேயே இருந்தாங்க. அர்ஜுன் கௌரவ், விஷ்ணு வரதன், மோகன் ராஜ், யஷ்வந்த், சபரீஷ் அண்ணா. பிறகு, மோட்டார் விகடன் டீம்... இவங்க இல்லாட்டி அயன் பட் சாதனை சத்தியமா சாத்தியமாகி இருக்காது!'' என்கிறார் சஞ்சய் உற்சாகமாக!
