கார்ஸ்
Published:Updated:

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

கனவா... காதலா?!

 ##~##

ந்தியாவில் சிறப்பான பார்ட்னர்ஷிப்புக்குப் புகழ்பெற்றது கேடிஎம் - பஜாஜ் கூட்டணி. பஜாஜ் நிறுவனத்தின் ஒரு அங்கமாக மாறிய பிறகே, கேடிஎம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. கேடிஎம் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் அதே நேரத்தில், கேடிஎம் இன்ஜின் தொழில்நுட்பத்துடன் தனது பல்ஸர் பைக்குகளையும் விற்பனைக்குக் கொண்டுவருகிறது பஜாஜ்.   

கேடிஎம் பைக்குகள் பெர்ஃபார்மென்ஸுக்காக உலக அளவில் பெயர் பெற்றவை. அதற்கேற்ப, கேடிஎம்-200 நம் நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அவர்களுடைய அடுத்த ரிலீஸ், கேடிஎம்-390. ஐரோப்பிய மார்க்கெட்டில் நல்ல பெயர் வாங்கியிருக்கும் கேடிஎம் 390, இந்தியாவில் வெற்றி பெறுமா?

ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பம்

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

டியூக் 390, பார்ப்பதற்கு டியூக்-200 போலவே இருந்தாலும், கொஞ்சம் பெரிதாக ஆரஞ்சு கலர் ரிம்களுடன் ஒரு நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் போல கம்பீரமாக இருக்கிறது. இருந்தாலும் கேடிஎம் 390, கேடிஎம் 200-ஐவிட வெறும் 14 கிலோதான் அதிகம். கேடிஎம் 390 பவர்ஃபுல்லான ஹெட் லைட்டுடன் பளிச்சென இருப்பதோடு, சுவிட்சுகளுக்கும் பேக்லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிக வேகத்தில் 390-ன் ஸ்பீடோ மீட்டர் பார்ப்பதற்குத் தெளிவாக இல்லாவிட்டாலும், ஏராளமான சிறப்பம்சங்களோடு இருக்கிறது. இரண்டு ட்ரிப் மீட்டர்கள், ஆவரேஜ் ஸ்பீடு இண்டிகேட்டர்கள், மைலேஜ் கால்குலேட்டர் போன்ற பல வசதிகள் இதில் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் வசதியை ஆன் மற்றும் ஆஃப் செய்து கொள்ள உதவும் பட்டன், கேடிஎம்-ன் மற்றொரு சிறப்பம்சம்.

ஹேண்டில்பாரில் கொடுக்கப்பட்டுள்ள கிரிப்புகள் அவ்வளவு சௌகரியமாக இல்லை. ஆனால், பைக்கின் கியர் மற்றும் கிளட்ச் லீவர்கள் பயன்படுத்த மிகவும் ஈஸியாக உள்ளன. அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடிய பிரேக் மற்றும் கியர் லீவர்கள், ஓட்டுநரின் வசதிக்கேற்ப இருப்பது சூப்பர் ஸ்பெஷல். 'நீங்கள் எவ்வாறு பிரேக்கை உபயோகிக்கிறீர்கள்?’ என்பதைக் காட்டும் வார்னிங் லைட், உங்கள் பிரேக்கிங் திறமையை வளர்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பில்டு குவாலிட்டு மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ்-ல் குறைகள் ஏதும் இல்லை.

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் பெர்ஃபாமென்ஸ்

டியூக் 390 பைக்கை ஸ்டார்ட் செய்வதே ஒரு சாமர்த்தியமான வேலை. தினமும் காலையில் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, முதலில் ஆக்ஸிலரேட்டரை உபயோகிக்காமல், ஸ்டார்ட்டர் பட்டனை மட்டும் உபயோகப்படுத்தி இன்ஜினைச் சூடேற்ற வேண்டும். அதன் பிறகு, ஆக்ஸிலேட்டரையும் ஸ்டார்ட்டர் பட்டனையும் ஒன்றாகப் பயன்படுத்தினால், டியூக் 390 இன்ஜின் உயிர் பெறுகிறது.

டியூக் 390, 373.3 சிசி 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வால்வுகளின் உபயோகத்துக்கு இரட்டை கேம் ஷாஃப்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கென்றே பைக்கின் கூலன்ட் சிஸ்டம் சற்று மேம்படுத்தப்பட்டு உள்ளதால், நாம் டெஸ்ட் டிரைவ் செய்த பைக் அதிகம் சூடாகவில்லை.

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்
கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் சக்தி 43.5 bhp. இதன் அதிகபட்ச டார்க் 7,000 ஆர்பிஎம்-ல் 3.57 kgm. டியூக் 200-ல் இருந்த ஷார்ட் கியர் பிரச்னை, டியூக் 390-ல் சரி செய்யப்பட்டு, கியர்களுக்குள் நல்ல இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் கியரிலேயே 55 கி.மீ வேகம் வரை செல்வதால், டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு எளிதாகவும், போதுமானதாகவும் உள்ளது. கிட்டத்தட்ட நம் சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களையும் எளிதாக முந்திச் செல்லும் அளவுக்கு இதன் வேகம் உள்ளது.

கிளட்ச், ஆரம்பத்தில் உபயோகப்படுத்த கடினமாக இருந்தாலும், போகப் போக எளிதாகிவிடுகிறது. கியர்கள் 1-டவுன் 5-அப் என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. பின் பக்க வீலுக்கு X-ரிங் டிரைவ் செயின் மூலம் பவர் கொண்டு செல்லப்படுகிறது. லோ மற்றும் மிட் - ரேஞ்சில் பெர்ஃபாமென்ஸ் பின்னி எடுக்கிறது. அதேபோல், ஐந்தாவது மற்றும் ஆறாவது கியரில் ஓட்டும்போது குறைந்தது 45 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும்.

நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது, 0-60 கி.மீ வேகத்தை 2.47 விநாடிகளிலும், 100 கி.மீ வேகத்தை 5.70 விநாடிகளிலும், 150 கி.மீ வேகத்தை 16.14 விநாடிகளிலும் கடந்துவிட்டது.

ஓட்டுதல், கையாளுமை மற்றும் பிரேக்கிங்

ரைடிங் பொசிஷன் டியூக் 200-ல் இருப்பது போலவே கொடுக்கப்பட்டு இருந்தாலும், கியர் மற்றும் பிரேக், நம் கால் முட்டியில் இருந்து சற்று பின்னோக்கிக் கொடுக்கப்பட்டு இருப்பது ஸ்போர்ட்டியாக உள்ளது.

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

டியூக் 390-ன் ஸ்பிளிட் சீட் பெரிதாக உள்ளதால், உயரமானவர்கள்கூட எளிதாக உட்காரலாம். ஆனால், நீண்ட தூரம் ஓட்டும்போது இறுக்கமான சீட்டுகள் வலியை ஏற்படுத்துகின்றன. பைக்கின் முன் பக்கம் அப்சைடு-டவுன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுதல் தரம் ஸ்போர்ட்டியாக இருந்தாலும், அதிக தூரம் செல்வதற்கு ஏற்றதாக இல்லை.

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்

டியூக் 390, டியூக் 200-ஐவிட வெறும் 18 கிலோதான் எடை அதிகம். இதனால், வளைந்து நெளிந்து ஓட்டுவதற்கும், கூர்மையான வளைவுகளில் திருப்புவதற்கும் எளிதாக உள்ளது. டர்னிங் ரேடியஸ் சற்று அதிகமாக உள்ளதால், சிறிது நேரம் ஓட்டிப் பழகுவது நல்லது.

டியூக் 390-ல் ரேடியல் மெட்ஸெலரின் ட்யூப்லெஸ் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஈரமான சாலைகளில்கூட டயர்கள் நல்ல கிரிப்புடன் செயல்படுகின்றன. மேலும், ஏபிஎஸ் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது, 100 கி.மீ வேகத்தில் சென்று சடன் பிரேக் அடித்தால், 47.59 மீட்டரிலும், 60 கி.மீ வேகத்தில் சென்று பிரேக் அடித்தால், 16.56 மீட்டரிலும் பைக் முழுமையாக நின்றுவிடுகிறது.

மைலேஜ்

எவ்வளவு பவர்ஃபுல்லான பைக்காக இருந்தாலும், கணிசமான மைலேஜ் எதிர்ப்பார்கள் நம் மக்கள். நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு டியூக் 390, நகருக்குள் லிட்டருக்கு 26.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 29.2 கி.மீ மைலேஜ் தருகிறது. 373.3 சிசி கொண்ட பைக்குக்கு இது போதுமான மைலேஜ்தான்.  டியூக் 390 போல, கொடுக்கும் காசுக்கு அதிக பவர், பெர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமை உள்ள பைக்குகள் மிகவும் அரிது.

உங்களுக்கு எடை குறைவான, பவர்ஃபுல்லான, அதே நேரம் குறைந்த விலையில் ஒரு நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக் வேண்டுமென்றால், கண்ணை மூடிக்கொண்டு டியூக் 390 வாங்கலாம்.

கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்
கேடிஎம் 390 டியூக் - டெஸ்ட் ரிப்போர்ட்