கார்ஸ்
Published:Updated:

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

மஹிந்திரா அட்வெஞ்சர் ராலி!

 ##~##

னது வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் நோக்கத்தோடு துவங்கப்பட்டதுதான் இந்த மஹிந்திரா அட்வெஞ்சர்! ஆண்டுக்கு 7 முதல் 8 ராலி போட்டிகளை நடத்தும் மஹிந்திராவின் இந்த ஆண்டு மான்ஸ¨ன் அட்வெஞ்சர் ராலியில், மோட்டார் விகடனும் கலந்து‑கொண்டது. 

பெங்களூரு டு கோவா என்பதுதான் ராலி ரூட். முதல் நாள் பெங்களூரு டூ மங்களூர்; இரண்டாவது நாள் மங்களூர் டு ஷிமோகா; மூன்றாவது நாள் ஷிமோகா டு கோவா என்பதுதான் திட்டம். ராலி - நேரம், வேகம், தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டது. அதாவது, குறிக்கப்பட்ட நேரத்தில், குறிப்பிடப்பட்ட இடத்துக்கு, குறிப்பிட்ட வேகத்தில் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை ராலி துவங்கும் முன்பு, கையில் 'டியூலிப்’ எனப்படும் ரூட் மேப்பைக் கொடுப்பார்கள். அதில், எந்த வழியாக, எப்படிச் செல்ல வேண்டும் என்பது குறிக்கப்பட்டு இருக்கும். அடுத்ததாக, டைம் ஷீட்டில் எவ்வளவு வேகத்தில் போக வேண்டும் என்று இருக்கும்.இதன்படிதான் போக வேண்டும்.  இல்லை என்றால், பெனால்ட்டி உண்டு.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

முதல் நாள் மழையில் குளித்துக்கொண்டிருந்த பெங்களூருவின் யஷ்வந்த்பூர் தாஜ் ஓட்டல் வாசலில் இருந்து, அதிகாலை ஆறு மணிக்கு ராலி துவங்கியது.

போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே மிகவும் சீரியஸாக பெரிய பரீட்சை அட்டை எல்லாம் வைத்துக் கொண்டு, பெரிய பெரிய கால்குலேட்டர்களில் ஏதேதோ கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

மஹிந்திரா தார், எக்ஸ்யூவி 500, வெரிட்டோ, ஸ்கார்ப்பியோ, குவான்ட்டோ என மொத்தம் 39 கார்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், மோட்டார் விகடன்தான் கடைசிப் போட்டியாளர். பெங்களூருவின் டிராஃபிக் நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக, முதல் '110 கி.மீ ஃப்ரீ ரன்’ என அறிவிக்கப்பட்டது. அதாவது, 120 நிமிடங்களில் இந்த 110 கி.மீ தூரத்தைக் கடந்துவிட வேண்டும். ஆரம்பத்தில் ஜாலியாகத் துவங்கிய பயணம், கொஞ்சம் கொஞ்சமாக சீரியஸானது. காரணம், டியூலிப் சார்ட்டில் '2.8 கி.மீ தூரத்தில் நீங்கள் இடது பக்கம் திரும்ப வேண்டும். அங்கே ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும்’ என்று இருந்தால், நம்முடைய குவான்ட்டோவின் ட்ரிப் மீட்டர் கணக்கின்படி 3.3-வது கி.மீ தூரத்தில்தான் அந்த பெட்ரோல் பங்க் வந்தது. அப்போது தான் குவான்ட்டோவில் இருக்கும் ஓடோ மீட்டருக்கும், டியூலிப் சார்ட் ஓடோ மீட்டர் ரீடிங்குக்கும் 'எரர்’ இருப்பது புரிந்தது. உடனடியாக, எவ்வளவு கி.மீ தூரம் எரர் வருகிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்றபடி வழியைக் கணக்கிட ஆரம்பித்தோம்.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

110-வது கி.மீ-யில் இருந்து, ஸ்பீடு ஷீட்டின் வேகக் கணக்கின்படி காரை ஓட்ட வேண்டும். முதல் நான்கு கி.மீ-க்கு, 40 கி.மீ வேகத்தில் ஓட்ட வேண்டும். அடுத்த 0.8 கி.மீ 22 கி.மீ வேகத்தில் என ஸ்பீடு சார்ட்டின்படி ஓட்ட வேண்டியிருந்தது. இப்போதுதான் நமக்கு, 'இந்த ராலியில் வெல்ல கார் ஓட்ட மட்டும் தெரிந்திருந்தால் போதாது; கணக்கும் தெரிய வேண்டும்’ என்பது புரிந்தது. சீரியஸ் முகங்களும், எக்ஸ்ட்ரா டயல்களும், கால்குலேட்டர்களும் காமெடி அல்ல என்பது மெள்ள விளங்கியது.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

வழி நெடுக தேயிலைத் தோட்டங்கள், மழைச் சாரல், சில் கிளைமேட் என கர்நாடகா முழுக்க பச்சைப் பசேல் லொக்கேஷன். ஆனால், என்ன செய்வது? எதையும் ரசிக்க முடியாமல் கணக்குப் போட்டுக்கொண்டே பயணித்தோம். வழியில், 'மஹிந்திரா ஸ்டாப்’ போர்டுடன் மார்ஷல்கள் திடீரென முளைப்பார்கள். இந்த இடத்துக்கு எவ்வளவு நேரத்தில் வர வேண்டும் என்று அவர்கள்  எஸ்டிமேட்டட் டைம் ஒன்றைக் கணக்கெடுத்து வைத்திருப்பார்கள். அதன்படி, மார்ஷல்கள் நிற்கும் இடத்துக்கு நாம் சரியான நேரத்தில் வந்துவிட்டால், பெனால்ட்டி கிடையாது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக வந்தால்... எவ்வளவு விநாடிகள் முன்பாக வருகிறோமோ, அதை மூன்றால் பெருக்கி பெனால்ட்டி கொடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி லேட்டாக வந்தால், எவ்வளவு விநாடிகள் தாமதமாக வருகிறோமோ, அது பெனால்ட்டியாக வழங்கப்படும்.

சரியாக 2.30 மணிவாக்கில் கிட்டத்தட்ட 250 கி.மீ பயணத்துக்குப் பின்பு, 10-வது மார்ஷலிடம் டைம் ஷீட்டைக் காட்டினோம். ''இந்த செக் பாயின்ட்டுடன் உங்களுக்கு இன்றைக்கான ராலி முடிந்துவிட்டது. நீங்கள் டியூலிப் சார்ட்டின்படி வழி பார்த்து மங்களூர் வந்து சேர்ந்துவிடுங்கள்'' என்றார். ''இல்லையே... இன்னும் பல செக் பாயின்ட்டுகள் இருக்கிறதே?'' எனக் கேட்டபோது, ''மீடியாவுக்கு இவ்வளவுதான் பாஸ்'' என நெஞ்சில் பால் வார்த்தார். அடித்துப் பிடித்து மங்களூர் ஹோட்டலுக்குள் நுழைந்த போது இரவு எட்டு மணி.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

அடுத்த நாள் காலை மீண்டும் ராலி துவங்கியது. மங்களூர் டு ஷிமோகா ரூட். முழுக்க காடுகளுக்குள் பயணம். 40 கி.மீ வேகம்; உடனே 15 கி.மீ வேகம் என வேகங்கள் மாறிக் கொண்டே இருந்ததால், ராலி செம டஃப். கிட்டதட்ட 10 மார்ஷல்களைக் கடந்துவிட்டோம். நேரமும் 3 மணியைத் தொட்டுவிட்டது. பசியில் சிறுகுடலை பெருங்குடல் சாப்பிட்டு கொண்டிருந்தது. எந்த மார்ஷல் 'உங்கள் ராலி இங்கே முடிந்துவிட்டது’ என்று சொல்வார் என முகத்தை வைத்து ஜோசியம் பார்க்க ஆரம்பித்தோம். நோ சான்ஸ்... மணி நான்கைத் தொட்ட போது 14-வது மார்ஷல், ''உங்கள் ராலி முடிந்தது'' என அறிவித்தார். கொலைப் பசியில் ஓட்டலைத் தேடி ஓடினோம். கர்நாடகா என்பதால், மொழிப் பற்று அதிகமாக இருந்தது. எந்த இடத்திலும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் இல்லை. ஓட்டலை நாங்கள் கண்டுபிடிக்க ஒரு சின்ன க்ளூ உதவியது. எங்கெல்லாம் ஒயின் ஷாப்புகள் இருக்கிறதோ, அதற்கு அருகிலேயே ஓட்டல்கள் இருந்தன. அடித்துப் பிடித்து ஓட்டலுக்குள் போய் உட்கார்ந்து வேட்டையை ஆரம்பிக்கலாம் என்று பார்த்தால், கொழு கொழுவென விளைந்த குண்டு குண்டான சோறைக் காட்டி கிலியைக் கிளப்பினார்கள். சில பல ஆம்லெட்டுகளோடு வேட்டையை ஆரம்பிக்காமலேயே குவான்ட்டோவைக் கிளப்பினோம்.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், வேகமாகச் செல்ல முடியவில்லை. மேலும், காட்டுப் பாதை என்பதால், ஏகப்பட்ட வளைவுகளும், சாலைகள் குண்டும் குழியுமாகவும் இருந்தது. இதனால், மணிக்கு 30 கி.மீ வேகம் என்பதே சவாலாக இருந்தது. ஒரு வழியாக, பொறுமையாகப் பயணம் செய்து ஷிமோகாவில் உள்ள ஓட்டலை அடைந்தோம்.

இரண்டு நாட்களின் முடிவில், 'மீடியா பிரிவில் இரண்டாம் இடம் பிடித்துவிட்டோம்’ என்பதை ரிசல்ட் சார்ட்டைப் பார்த்துத் தெரிந்துகொண்டோம். ஆனால், எங்களுக்கும் முதல் இடத்தில் இருந்த இன்னொரு பத்திரிகைக்கும் நேர இடைவெளி 38 நிமிடங்கள் மட்டுமே! அவர்களைத் தோற்கடிப்பது கடினம் தான் என்றாலும், முயற்சி திருவினையாக்கும் என மூன்றாவது நாளைத் துவக்கினோம்.

காலை நான்கு மணிக்கு எழுந்து, ஐந்து மணிக்குக் காலை உணவை முடிப்பது என்பது கடுப்பாகவே இருந்தது. சட்டென காலை உணவை முடித்துவிட்டு காருக்குள் ஏறினோம். இறுதி நாள் பஞ்சர் நாளாகவே இருந்தது. காரை எடுக்கச் சென்றபோது, மீடியா பிரிவில் முதல் இடத்தில் இருந்த கார் பஞ்சராகிவிட்டது என்றனர். டயரை மாற்ற டூல்ஸ் எதுவுமே இல்லை என எங்களிடம் உதவி கேட்டனர். என்னதான் போட்டியாளர் என்றாலும், உதவி செய்வது நமது கடமையல்லவா? உதவினோம்.

இறுதி நாள் ராலி என்பது சோதனையின் உச்சகட்டமாக இருந்தது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில், 12 கி.மீ தூரமெல்லாம் பயணிக்க வேண்டும் என்று விஷப் பரீட்சை வைத்திருந்தார்கள். அதுவும் முதல் இரண்டு நாட்கள் போல மார்ஷல்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. அவ்வளவுதான் ராலி முடிந்துவிட்டது போல என மனசு வேகம் எடுக்கச் சொல்லும் இடத்தில், சரியாக மார்ஷல்கள் நின்று வெறுப்பேற்றினார்கள். ஒரு கட்டத்தில் 100 கி.மீ தூரம் பயணித்துவிட்டோம். ஒரு மார்ஷலும் வரவில்லை. ஆனால், மார்ஷலின் கார் ஒன்று நடுக் காட்டுக்குள் தனியாக நின்றுகொண்டிருந்தது. காருக்குள் யாரும் இல்லை. இங்கேதான் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்று 8 கி.மீ வேகம்; அடுத்தது 11 கி.மீ வேகம் என்று கொஞ்சமும் வேகத்தை மீறாமல் பயணித்தால், 40 கி.மீ தாண்டிதான் ஒரு மார்ஷல் இருந்தார். நாங்கள் நல்லவர்கள் போல, ''வழியில் மார்ஷல் கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் யாரும் இல்லை. எதாவது பிரச்னையா என்று பாருங்கள்'' என்று சொன்னபோது, ''நாங்கள் அப்படித்தான் குழப்புவோம். நீங்கள் மஹிந்திராவின் ஸ்டாப் போர்டு இல்லாமல் காரை நிறுத்தக் கூடாது'' எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

மூன்று மணிவாக்கில், ''உங்கள் ராலி முடிந்து விட்டது. நீங்கள் நேராக கோவா ராடிஸன் ப்ளூ ஹோட்டலுக்கு வந்துவிடுங்கள்'' என்று சொல்லி மனதைக் குளிரவைத்தார் ஒரு மார்ஷல். கடைசி நாள் என்பதால் என்ன அவசரத்தில் இருந்தார்களோ, எங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த மஹிந்திராவின் 'ஸ்வீப்’ காரும் பறந்து விட்டது.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

வெளிச்சம் மங்கிக்கொண்டே இருக்க, இன்னும் 250 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதால், டென்ஷன் கூடியது. ஒரு கட்டத்தில் டியூலிப் வழியை கால்குலேஷனில் மிஸ் செய்து விட்டு காட்டுக்குள் வழி தெரியாமல் குழம்ப ஆரம்பிதோம். 'கோவா’ பட ஜீவா பாணியில், பாதி ஆங்கிலத்தில் பேசி 'கோவா’வுக்கு வழி கேட்டுக்கொண்டே போனோம். 'புலிகள் ஜாக்கிரதை’ என ஆங்காங்கே போர்டு வேறு மிரட்டியது. எங்களுக்கு முன்னே ராலியில் கலந்து கொண்ட குவான்ட்டோ கார் ஒன்று வழியில் நின்றுகொண்டிருந்தது. காரில் இருந்த இரண்டு பெண்களும் பரிதாபமாக எங்களைப் பார்த்தார்கள். அவர்கள் காரில் இரண்டு வீலும் பஞ்சர். ஸ்பேர் வீலைக் கழற்றி, ஒரு டயரை மாற்றி விட்டார்கள். இன்னொரு டயருக்குக் காத்துக்கொண்டிருக்க, நாங்கள் சிக்கினோம். எங்கள் காரின் ஸ்பேர் வீலைக் கழற்றிய பிறகுதான் அது ஏற்கெனவே பஞ்சர் என்று தெரிந்தது. நல்லவேளையாக எங்களுக்குப் பின்னால் மற்றொரு மீடியா கார் வந்தது. அதில் இருந்த ஸ்பேர் வீலைக் கழற்றி, ஜாக் போட்டு காரைத் தூக்கி, டயரை மாற்றுவது என எல்லா வேலையையும் அந்த பஞ்சாப் ஆன்ட்டியே செய்தார். வீலை மாற்றிய பிறகு, வழி கேட்டு ஆன்ட்டியிடமே சரணடைந்தோம்.

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?

கோவா செல்ல நாங்களும், எங்களுக்கு அடுத்து வந்தவர்களும் அந்த ஆன்ட்டியின் காரைப் பின்தொடர்ந்தோம். வேகத்தில் எங்களை மிரளவைத்தார்கள். சிங்கிள் ரோடில் லாரிகளுக்கெல்லாம் கட் கொடுக்க, அவர்கள் கொடுத்த டார்ச்சரில் அடுத்து வந்த எங்களைத் திட்டிக் கொண்டு போனார்கள் லாரி டிரைவர்கள். எப்படியோ 8 மணிக்கு ஓட்டல் ராடிஸனில் வந்து இறங்கினோம். அங்கே பொதுப் பிரிவில் வெற்றி பெற்ற நாகராஜனும், கணேஷ் மூர்த்தியும் ஷாம்பெயின் பாட்டிலைக் குலுக்கிக் கொண்டு இருந்தார்கள். .

மூன்று நாட்கள் தொடர்ந்து 10-12 மணி நேரம் கார் ஓட்டியதால், ராலி மேல் கொஞ்சம் கடுப்பாகவே இருந்தது. மீடியா பிரிவில் இரண்டாம் இடம் பிடித்ததாக மோட்டார் விகடனின் பெயர் அறிவிக்கப்பட்டது. கையில் கோப்பையை வாங்கியதும் உற்சாகம் பீறிட... ''அடுத்து ஹிமாலயன் ராலிக்குப் போறோம். முதல் பரிசைத் தூக்குறோம்'' என்றேன் சுரேந்தரிடம்.

ஜெயிச்சாலே இதான் பாஸ் பிரச்னை; நிறுத்தவே முடியாது!

கோவாவுக்குப் போனோம்... ஆனா எப்படி?