கார்ஸ்
Published:Updated:

மெக்கானிக் கார்னர் - யமஹா பாஸ்கர்!

யமஹாவை நல்லபடியா கவனிச்சுக்கணும்!

 ##~##

த்தனை வருஷம் ஆனாலும் இளையராஜாவின் இசையில் இருக்கும் ஒரு கிறக்கம், மயக்கம் மாறாது. புதுப் புது மியூசிக் டைரக்டர்கள் வந்து கலக்கினாலும், என்றுமே ராஜா ராஜாதான். அவரது மியூசிக் எப்படியோ, அப்படித்தான் எனக்கு யமஹா பைக்கும்'' என்று முன்னுரை, தன்னுரை தந்தார் தேனியைச் சேர்ந்த குமார். 

பிடித்த வண்டியை வாங்குவது, பயன்படுத்துவது பெரிய விஷயமல்ல. அதைப் பராமரிப்பதுதான் சவாலான விஷயம். மதுரை, சென்னை, கோயமுத்தூர், திருச்சி போன்ற பெரு நகரங்களில் பிரத்யேக மெக்கானிக் கிடைப்பது சுலபம். ஆனால், தேனி போன்ற வளரும் நகரங்களில் ஒரு நல்ல மெக்கானிக் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆனால், எங்களுக்கு அப்படி ஒருவர் சிக்கினார். அவருதான் இவரு'' என பாஸ்கரை அறிமுகப்படுத்தினார் குமார்.

மெக்கானிக் கார்னர் - யமஹா பாஸ்கர்!

''தேனி, மதுரைப் பக்க யமஹா பைக்குகளுக்கு பாஸ்கர்தான் மெக்கானிக். உடம்பு சரியில்லைனா குடும்ப டாக்டரைப் பார்க்கப் போறது மாதிரி,  இவர் 'குடும்ப மெக்கானிக்.’ ஒன்லி யமஹா மட்டுதாம் பார்ப்பார். வேறு எதுவும் சர்வீஸ் செய்ய மாட்டார்'' என்கிறார்கள் பாஸ்கரின் வாடிக்கையாளர்கள். தேனி

மெக்கானிக் கார்னர் - யமஹா பாஸ்கர்!

- பெரியகுளம் சாலையின் குறுக்கே ஓடும் வீதியில் வொர்க்ஷாப் வைத்திருக்கிறார் பாஸ்கர். ''என் அப்பா ராணுவத்தில் பைக் மெக்கானிக். அவர் ராணுவ புல்லட்களை எடுத்து வைத்தியம் பார்ப்பதில் கில்லாடி. வெள்ளைக் காரர்களின் புல்லட் பைக்குகளை அவர்தான் சர்வீஸ் பண்ணுவார். ராணுவத்தில் சீஃப் மெக்கானிக்காக இருந்து ஓய்வு பெற்றதும், திருச்சியில் மெக்கானிக் ஷாப் வைத்திருந்தார். கடைக்கு வந்து போற சமயத்துல, மெள்ள மெள்ள நானும் அவரிடம் இருந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன். பிறகு, சொந்த ஊரான தேனிக்கு வந்துவிட்டோம். தேனியில் இருந்தபடி வேலை செய்ய ஆரம்பித்த நேரத்தில், மதுரையில் இருக்கும் அழகேந்திரன் யமஹா மூலமாக, ஃபரிதாபாத்தில் உள்ள யமஹா தயாரிப்பு நிறுவனமான 'எஸ்கார்டில்’ எனக்கு ஒரு மாதம் சிறப்புப் பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு, ஒரு முழு பைக்கைத் தனித் தனியாக பிரித்து, அதை யார் முதலில் அசெம்ப்ளி செய்வது என்று போட்டி நடக்கும். அதில் நான்தான் வெற்றி பெற்றேன். கூடுதலாகப் பல விஷயங்கள் அங்கு கற்றுக்கொண்டு வந்து, மதுரை ஷோரூமில் மெக்கானிக்காகப் பணியாற்றினேன்.

1995-ல் ஆர்எக்ஸ்-100 தயாரிப்பு நின்றுவிட்டது. நவீன டெக்னாலஜியுடன் பல பைக்குகள் வந்தாலும் யமஹா ஆர்எக்ஸ்-100, ஆர்எக்ஸ்-135 பைக்குகளுக்கு அன்று இருந்த ரசிகர்கள் இன்றும் தொடர்கிறார்கள். டாக்டர், பிசினஸ்மேன், அட்வகேட்ஸ், இன்ஜினீயர்ஸ், காலேஜ் ஸ்டூடன்ஸ் என நிறைய பேர் யமஹாவை என்னிடம் சர்வீஸுக்குக் கொண்டு வர ஆரம்பித்தார்கள். பிறகு, தனியாக வொர்க்ஷாப் வைத்து, யமஹா மட்டும் சர்வீஸ் செய்ய ஆரம்பித்தேன்'' என்றவரின் செல்போனில் கஸ்டமர்களின் பெயருக்குப் பதிலாக, அவர்களின் பைக்கின் பதிவு எண்ணைச் சேமித்து வைத்து இருக்கிறார் பாஸ்கர். இந்த நம்பரை வைத்து அடுத்த சர்வீஸ் எப்போது செய்ய வேண்டும் என்பதை, தன் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே நினைவுபடுத்துவாராம்.

இவருக்கு மதுரை, திண்டுக்கல், கம்பம், குமுளி ஆகிய பகுதிகளில் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ''யமஹாவில் சத்தமே ஒரு சங்கீதம் மாதிரி. அது நன்றாக வர வேண்டும் என்றால் 'இன்ஜின் கம்பரஷன்’ சரியாக இருக்க வேண்டும்,. அதேபோல, ஏர் ஃபில்டரைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். ஸ்பார்க் பிளக், 2ஜி ஆயில், சைலன்ஸர் போன்றவற்றை அடிக்கடி செக் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஆயில் பம்ப் சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சிலர் பெட்ரோலுடன் ஆயிலையும் கலந்து பைக்கை ஓட்டுவார்கள். இன்ஜினுக்கு அது நல்லது அல்ல, 60 கி.மீ மேல் வேகமாகச் செல்லும் போது, இன்ஜின் ஆயில் சரியாக மிக்ஸ் ஆகாமல் புகை கக்கும். 25,000 கி.மீ ஓட்டியதும் ஸ்பார்க் பிளக், ஏர் ஃபில்டர் ஸ்பான்ச் மாற்றினால், பைக்  சூப்பராக இருக்கும். 2 ஸ்ட்ரோக் பைக் என்பதால் வேகம் குறையாது. மற்ற பைக்குகளைப் போல் வேகமாக பிரேக் போட்டதும் ஆளைத் தூக்கி முன்னே எறிவதும், பிரேக் நிற்காமல் வாரிவிடும் பழக்கமும் யமஹாவுக்கு இல்லை. எவ்வளவு வேகத்தில் போனாலும் சரியாக பிரேக்கைப் பயன்படுத்தினால், அப்படியே நிற்கும். ஆளைக் கவிழ்க்காது; அதுதான் யமஹா!'' என்று சிரிக்கிறார் பாஸ்கர்.

மெக்கானிக் கார்னர் - யமஹா பாஸ்கர்!