கார்ஸ்
Published:Updated:

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i
 ##~##

பைக்குகளின் விற்பனை குறைந்து கொண்டே போக... ஸ்கூட்டர்களின் விற்பனை உயர்ந்துகொண்டே போகிறது. நகரின் டிராஃபிக் நெருக்கடிகளில் சட்டெனப் பறக்க ஸ்கூட்டர்கள் சிறந்ததாக இருக்கின்றன. கார் வைத்து இருந்தாலும்கூட, வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும்  ஸ்கூல் மற்றும் கடைகளுக்குச் சென்று வர ஸ்கூட்டர்கள் வசதியாக இருப்பதுதான் இந்த விற்பனை உயர்வுக்குக் காரணம். 

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நம்பர் ஒன், ஹோண்டா ஆக்டிவா. இப்போது இதில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து 'ஆக்டிவா-ஐ’ எனும் மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஹோண்டா.

நீண்ட காலமாக, இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையே செய்யாத ஹோண்டாவின் நேரடிப் போட்டியாளர் யமஹா, 'ரே’ எனும் ஸ்கூட்டரை, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு வந்த வேகத்திலேயே 'ரே’ முன்னணி ஸ்கூட்டராக மாறியது. இதற்கிடையே சின்னச் சின்ன மாற்றங்களுடன் ஆண்களும் விரும்பும் ஸ்கூட் டராக 'ரே-ஸீ’ எனும் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது யமஹா. இப்போது வாடிக்கையாளர்களின் குழப்பமே... 'ஆக்டிவா-ஐ வாங்குவதா அல்லது ரே-ஸீ வாங்குவதா?’ என்பதுதான். மோட்டார் விகடனின் தீர்ப்பு என்ன?

டிசைன்

இரண்டு ஜப்பான் ஸ்கூட்டர்களுக்கும் இடையே, தோற்றத்தில் பல மாற்றங்கள் இருக்கின்றன. இரண்டு ஸ்கூட்டர் களுமே இளம் பெண்களைத் தாண்டி மத்திய வயதுப் பெண்கள் மற்றும் ஆண்களை டார்கெட் செய்து விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, விற்பனையில் இருக்கும் ஆக்டிவாவின் தோற்றத்தில், பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை ஹோண்டா. இதனால், பார்ப்பதற்கு ஃப்ரெஷ் ஆகவும், பளபள கிராஃபிக்ஸோடு ஈர்க்கிறது யமஹா ரே-ஸீ.

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i

ஹோண்டா ஆக்டிவாவில், கைப்பிடிகள் அடங்கிய மேற்பக்க ஃபேரிங்கில் ஹெட்லைட் அடங்கி விடுகிறது. யமஹாவில், கைப்பிடி யூனிட்டுக்குக் கீழே உள்ள ஃபேரிங்கில் ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவாவின் முன் பக்க கீழ் ஃபேரிங்கில் இண்டிகேட்டர் விளக்குகளும் பைலட் விளக்குகளும் இடம் பிடித்துள்ளன.

இரண்டு ஸ்கூட்டர்களிலுமே பேஸிக்கான ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர் மற்றும் ஃப்யூல் இண்டிகேட்டர் டயல்கள் இடம் பிடித்துள்ளன. இரண்டில், யமஹாவின் டயல்களே கூடுதல் கவர்ச்சியுடன் அழகாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. ஹோண்டா ஆக்டிவாவில் கைப்பிடி, லீவர், சுவிட்ச்சுகள் மற்றும் கண்ணாடிகள் தரமாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாக இருந்தாலும், இந்த விஷயங்களில் 'யமஹா ரே-ஸீ’ இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. பாதுகாப்புக்காக ஆக்டிவாவில் பிரேக் லாக் கிளாம்ப் இருக்கிறது. ஆனால், யமஹாவில் இந்த முக்கியப் பாதுகாப்பு அம்சம் மிஸ்ஸிங். யமஹாவுடன் ஒப்பிடும்போது, ஆக்டிவாவின் சீட்டுக்கு அடியில் பொருட்கள் வைக்க அதிக இடம் உள்ளது.

ஆக்டிவா-ஐ-ல், முன் பக்கம் பைகளை மாட்டிக் கொள்ள சீட்டுக்குக் கீழே ஹூக் பொருத்தப்பட்டு இருக்க... ரே-ஸீயில் இன்னும் வசதியாக ஹேண்டில் பாருக்குக் கீழே ஹூக் கொடுக்கப்பட்டுள்ளது. பின் பக்க வடிவமைப்பிலும் ஆக்டிவா-ஐ ஸ்கூட்டரைவிட, யமஹா ரே-ஸீ-யின் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது.

இன்ஜின்

இரண்டு ஸ்கூட்டர்களுமே ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக் இன்ஜினைக் கொண்டிருக்கின்றன. பழைய ஆக்டிவாவில் இருந்த அதே 109.2 சிசி இன்ஜினுடன், ஹோண்டாவின் 'ஈக்கோ’ தொழில்நுட்பத்துடன் இருக்கிறது ஆக்டிவா-ஐ இன்ஜின். ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பம் என்பது எடைக் குறைப்பு மற்றும் தேவையற்ற உராய்வினைக் குறைப்பதன் மூலம் மைலேஜை அதிகரிக்கும் தொழில்நுட்பமாகும். ஆக்டிவா-ஐ அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 5,500 ஆர்பிஎம்-ல் 0.9 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

4 சிசி அதிகமாக இருந்தும், பவரில் 1 bhp குறைவாக இருக்கிறது யமஹா ரே-ஸீ. 113 சிசி திறன்கொண்ட யமஹா ரே-ஸீ, அதிகபட்சமாக 7 bhp சக்தியை 7,500 ஆர்பிஎம்-ல் வெளிப்படுத்துகிறது. இரண்டுமே நகரப் பயன்பாட்டை அடிப்படையாகக்கொண்டு ட்யூன் செய்யப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கூட்டர்கள். இதனால், பவர்ஃபுல் பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்க முடியாது. வேகப் போட்டியில் ஆக்டிவா-ஐ 0 - 60 கி.மீ வேகத்தை 8.09 விநாடிகளில் தொடுகிறது. இதே வேகத்தைத் தொட ரே-ஸீ கொஞ்சம் திணறுகிறது. 60 கி.மீ வேகத்தைத் தொட 11.35 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது யமஹா ரே-ஸீ. ஆக்டிவாவின் டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. ரே-ஸீ-யின் டாப் ஸ்பீடு ஆக்டிவாவைவிட 5 கி.மீ குறைவு.

இரண்டு ஸ்கூட்டர்களுமே, அதிர்வுகளற்ற ஸ்கூட்டர்களாக இருப்பதில் இருந்தே இன்ஜின் தரத்தை உணர முடிகிறது.

கையாளுமை

இரண்டு ஸ்கூட்டர்களுமே எடை குறைவான ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. ஆக்டிவா-ஐ 103 கிலோ எடை கொண்ட ஸ்கூட்டராக இருக்க, ரே ஸீயின் எடை 104 கிலோ. சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை, முன் பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனுடன் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது ரே-ஸீ. வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும் ரே-ஸீ சிறந்த ஸ்கூட்டராக இருக்கிறது. குண்டு குழிகளில் பயணிக்கும்போது, ரே-ஸீயின் சஸ்பென்ஷன் நன்றாக வேலை செய்கிறது.

60 கி.மீ வேகத்தில் சென்று சடன் பிரேக் அடித்தால், 21.62 மீட்டர் தூரம் சென்று நிற்கிறது ஆக்டிவா-ஐ. ஆனால், இதே வேகத்தில் சென்று பிரேக் அடிக்கும்போது ரே-ஸீ 20.64 மீட்டர் தூரத்தில் முழுவதுமாக நின்றுவிட்டது.

மைலேஜ்

மைலேஜைப் பொறுத்தவரை ஆக்டிவா-ஐ, நகருக்குள் லிட்டருக்கு 47 கி.மீ, நெடுஞ்சாலையில் 49.5 கி.மீ மைலேஜ் தருகிறது. ரே-ஸீ, நகருக்குள் 44 கி.மீ, நெடுஞ்சாலையில் 45.6 கி.மீ மைலேஜ் அளிக்கிறது.

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i

 ஆக்டிவாவின் பலம் என்பது இதன் நம்பகத்தன்மையும், பில்டு குவாலிட்டியும்தான். புதிய ஆக்டிவா-ஐ தோற்றத்தில் சின்னச் சின்ன மாற்றங்களோடு இருந்தாலும், சஸ்பென்ஷனில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது ஏமாற்றமே! டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் தோற்றத்திலும் அசத்தலாக இருக்கிறது யமஹா ரே-ஸீ. ஆனால், பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜில் ஆக்டிவாவின் கையே ஓங்கியிருக்கிறது. மேலும், விலையும் குறைவு!

யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i
யமஹா ரே Z Vs ஹோண்டா ஆக்டிவா-i