ரீடர்ஸ் ரிவியூ - அமேஸிங் அமேஸ்!
##~## |
''நான் ஒரு பிரபல இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு - கேரளா பகுதி விற்பனை அதிகாரியாக இருக்கிறேன். அதனால், அடிக்கடி பயணம் போக வேண்டியிருக்கும். 2007 முதல் 2008 வரை மாருதி ஸ்விஃப்ட் டீசல் கார் வைத்து இருந்தேன். அதைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஸ்விஃப்ட் காரையே வாங்கினேன். இப்போது இதை வாங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, புதிய கார் வாங்கத் திட்டமிட்டேன்.
ஏன் அமேஸ்?
அப்பா, பெரியப்பா, நண்பர்கள் என பெரும்பாலோனோர் ஆட்டோமொபைல் துறையில் இருப்பதால், எனக்கு இந்தத் துறை புதியது அல்ல. புதுப் புது விஷயங்களை பல்வேறு ஊடகங்கள் வழியாக தினமும் அப்டேட் செய்துகொள்வது என் வழக்கம். எனவே, இந்தியாவில் ஹோண்டாவின் முதல் டீசல் காரான அமேஸை நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தேன்.


அறிமுகமான மூன்றாவது நாளே, கோவையில் உள்ள சுந்தரம் ஹோண்டா ஷோ-ரூம் சென்று புக் செய்துவிட்டேன். புக் செய்யும்போது, அமேஸை நான் ஓட்டிப் பார்க்கவில்லை. ஏனென்றால், எனக்கு ஹோண்டாவின் மீது முழு நம்பிக்கை இருந்தது. மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என ஷோ-ரூமில் சொன்னார்கள்.
ஷோ-ரூம் அனுபவம்!
ஏப்ரல் 24-ம் தேதி அட்வான்ஸ் செலுத்திவிட்டு டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். ஷோ ரூமில் வரவேற்பு மிகச் சிறப்பாக இருந்தது. கார்த்திக் என்ற சேல்ஸ் எக்ஸிட்டியூவ்தான் எங்களைக் கவனித்தார். இப்போதுகூட எந்தச் சந்தேகம் ஏற்பட்டாலும், அவருக்கு போன் செய்து தெளிவுபடுத்திக் கொள்வேன். நான் புக் செய்தது எஸ்எம்டி வேரியன்ட். ஓரளவு குறைவாக புக்கிங் ஆன வேரியன்ட் இது. எனவே, ஒரே மாதத்தில், அதாவது மே 29-ம் தேதியே டெலிவரி கிடைத்துவிட்டது. இதன் விலை 7.93 லட்சம். அதே மாதத்தில் எங்கள் வீட்டில் இன்னொரு டெலிவரி... அதாவது, எனக்குக் குழந்தை பிறந்தது. எனவே, எனக்கு இரட்டைச் சந்தோஷம்!
முதல் நாள் எனது குழந்தை மற்றும் மனைவியுடன் அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வந்தோம். எனது வேலை நிமித்தம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் என்றும், தெற்கே மதுரை, திருச்சி, திருச்செந்தூர் என குடும்பத்துடனும் சுற்றிவிட்டேன். இதில் எவ்வளவு தூரம் சென்றாலும் கார் ஓட்டிய களைப்பு கொஞ்சம்கூடத் தெரிவதில்லை. சஸ்பென்ஷன் அவ்வளவு கச்சிதம்.
எப்படி இருக்கிறது அமேஸ்?
இதன் இன்ஜினை வடிவமைத்தவர்கள் ஃபார்முலா கார் பொறியாளர்கள். எனவே, சத்தம் அதிகம் தராத அலுமினியம் பாடியில் இன்ஜினை மிக நேர்த்தியாக வடிவமைத்து உள்ளனர். வழக்கமான டீசல் இன்ஜினின் சத்தம் இதில் இல்லை. மிகவும் தனித்துவம் மிக்க 'லோ விஸ்காஸிட்டி’ ஆயிலை இதற்குப் பயன்படுத்துவதும் இந்த அமைதிக்கு ஒரு காரணம். அமேஸில் உள்ள 'எக்கோ மோட்’ கியருக்கு ஏற்ற ஆர்பிஎம்-ல் பயணித்தால், சிறந்த மைலேஜ் கிடைக்கிறது. எனக்கு நகருக்குள் லிட்டருக்கு 19.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 24.2 கி.மீ மைலேஜ் கிடைக்கிறது.

எனது முந்தைய காரான ஸ்விஃப்ட் காருடன் அமேஸை ஒப்பிடும்போது, அதிர்வுகள் மிகக் குறைவு. ஸ்டீயரிங் படு ஸ்மூத். இன்னொரு விஷயம், இதன் ஸ்பீடு கவர்னர். இது, மணிக்கு 150 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால், டீசல் சப்ளையை நிறுத்திவிடுகிறது. காரின் அளவுக்கும், எடைக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ற வேகம் இதுதான்.

ப்ளஸ்
காரின் இன்டீரியர் ஹோண்டா சிட்டி அளவுக்கு இல்லாவிட்டாலும், விலைக்கு ஏற்றபடி இருக்கிறது. கியர் லீவர் கைக்கு ஏதுவான இடத்தில் அமைந்துள்ளது. இதன் பின் சீட், வீட்டில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருப்பது போன்ற உணர்வை நமக்கு அளிக்கிறது. இதில் மூன்று பேர் மிக சௌகரியமாக உட்காரலாம். மற்ற ஹோண்டா கார்களைப் போல, இதிலும் மெஷினை விட மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைத்துள்ளது ஹோண்டா.
இதன் கவர்ச்சிமிகு மைலேஜ் என்னைப் போல அதிகம் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சி அளிக்கும். இதன் லெக்ரூம் தேவையான அளவு இருப்பதால், உயரமாக இருப்பவரும் சௌகரியமாக உட்காரலாம். இதன் வீல்பேஸ் மிகக் குறைவு. எனவே, குறுகலான சாலைகளிலும் தைரியமாகத் திருப்பலாம். ஓட்டுதல் தரம் சிறப்பாக இருக்கிறது. இந்த செக்மென்ட் கார்களில் இதுதான் சிறந்த காராக எனக்குத் தோன்றுகிறது.
மைனஸ்
காரின் கூரை மிக நெகிழ்வான பொருளால் செயயப்பட்டதுபோல மென்மையாக இருக்கிறது. இது, சில சமயம் எரிச்சல் உண்டாக்குகிறது. உள்ளே உள்ள பீஜ் இன்டீரியர் வண்ணம் கண்ணுக்கு அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. முக்கியமாக, இன்ஜின் அருகில் இருக்கும் கண்டன்சருக்குக் கீழே பெரிய இடைவெளி இருக்கிறது. சாலையில் இருக்கும் கல் இதன் வழியாக உள்ளே வந்து, இன்ஜினைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல், 100bhp சக்திகொண்ட காரில் 150 கி.மீ-க்கு வேகத்துக்கு மேல் செல்ல முடியாது என்பது குறையே! அதேசமயம், காரின் எடை குறைவாக இருப்பதால், அதிக வேகத்தில் செல்லும்போது அலைபாய்வது சற்று பயத்தை வரவழைக்கிறது. முன்பக்க சீட்டில், ஹெட்ரெஸ்ட் அட்ஜஸ்ட் செய்ய முடியாதது எனக்கு மைனஸாகப் படுகிறது. 'பவுன்ஸ் அப் பவர் விண்டோ’ என்பதால், விண்டோ மூடிக்கொண்டு இருக்கும்போது, கையைத் தெரியாமல் வைத்தால்கூட அடிபட்டுவிடும்.
