யாருக்கு இந்த கார்?
ஆடி, பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு ஒதுங்கி வழிவிட்ட பென்ஸ் நிறுவனம், இப்போது மீண்டும் இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து விட்டது. முதல் இடம் பிடிக்க முக்கியக் காரணம், இந்தியாவில் பட்ஜெட் கார்களை விற்பனைக்குக் கொண்டுவந்ததுதான். 'சி-கிளாஸுக்குக் குறைவான கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதில்லை’ என்ற முடிவை மாற்றிக்கொண்டு பி கிளாஸ், ஏ கிளாஸ் என சின்ன ஹேட்ச்பேக் கார்களைக் கொண்டுவந்து வெற்றி பெற்றிருக்கிறது பென்ஸ். இந்தியாவில், பென்ஸின் விலை குறைவான கார் ஏ-கிளாஸ். ஐடி நிறுவனங்களில், சின்ன வயதிலேயே பெரிய பதவிகளைப் பிடிக்கும் இளைஞர்களையும், இளம் தொழிலதிபர்களையும் டார்கெட் பையர்ஸாகக்கொண்டு ஏ-கிளாஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது பென்ஸ். எப்படி இருக்கிறது ஏ-கிளாஸ்?

டிசைன்
##~## |
மெர்சிடீஸ் பென்ஸின் அனைத்து வசதிகளும், ஸ்விஃப்ட் போன்ற சின்ன காரில் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் பென்ஸ் ஏ கிளாஸ். ஆனால், நீளத்திலும், அகலத்திலும் இது மற்ற சின்ன கார்களைவிட பெரியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இது ஃபோர்டு ஃபியஸ்ட்டா அளவுக்கு நீளத்தில் பெரிய கார். இந்தியர்கள், டிசைனைப் பார்த்து மயங்குபவர்கள் என்பதை இந்தியாவில் ஆடியின் வெற்றியைப் பார்த்துத் தெரிந்துகொண்டது பென்ஸ். அதனால், முன் பக்கம் 302 வைரக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பது போல அமைக்கப்பட்டு இருக்கும் க்ரில் அசத்துகிறது. தீப்பந்தம் போன்று, 'டே டைம் ரன்னிங் லைட்’ உடன் ஹெட்லைட்ஸ் டிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், காரின் பின் பக்கம் சுமார் ரகம்தான். பின் பக்க விளக்குகள் பட்டாம்பூச்சியின் இறகைப்போன்று இருக்கின்றன. பின் பக்க இரட்டைக் குழல் எக்ஸாஸ்ட்டும், 17 இன்ச் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
காரின் உள்பக்கத்தைப் பொறுத்தவரை முழுவதும் கறுப்பு வண்ணம்தான். ஸ்போர்ட்டியான இருக்கைகள், கன்ட்ரோல்கள் என உள்பக்கம் இளமை ததும்புகிறது. பென்ஸ் லோகோ போன்று அமைந்திருக்கும் ஏ.சி வென்ட் டயல்கள் கவர்கின்றன. பின் பக்க இட வசதியைப் பொறுத்தவரை சூப்பர் என்று சொல்ல முடியாது. இளம் வாடிக்கையாளர்கள் காரை ஓட்டத்தான் செய்வார்கள்; பின்னால் அமர்ந்து செல்ல மாட்டார்கள் என்ற லாஜிக்படி, டிரைவரை ஒட்டியே எல்லா வசதிகளும் அமைந்திருக்கின்றன. பெடல்கள் சரியான இடத்தில் இருப்பதால், டிரைவிங் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. ஆனால், முன் பக்க விண்ட் ஸ்கிரீன் மிகவும் சிறிதாக இருப்பதால், சாலையை முழுவதுமாகப் பார்க்க முடியவில்லை. சீட்டின் உயரத்தை பட்டன் மூலம் அட்ஜஸ்ட் செய்யலாம். ஆனால், இந்த வசதி டிரைவருக்கு மட்டுமே! முன் பக்க பயணிக்கு மேனுவல் அட்ஜஸ்ட்தான். பின் பக்கம் பென்ஸ் என்பதற்கு உதாரணமாக எந்த வசதியும் இல்லை. சாதாரண கார்களில் இருக்கும் பின் பக்க சென்டர் ஆர்ம் ரெஸ்ட், கப் ஹோல்டர்கள்கூட இந்த பென்ஸ் காரில் இல்லை.

30 லட்ச ரூபாய் விலையை நியாயப்படுத்த ப்ளூடூத், ஏழு காற்றுப் பைகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், சன் ரூஃப், ஏபிஎஸ் என உயர்தர கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கின்றன. 341 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி, ஹேட்ச்பேக் கார்களைப் பொறுத்தவரை மிகவும் பெரிது. ஆனால், ஸ்பேர் வீல் டிக்கிக்கு அடியில் இல்லாமல், மேலே இருப்பதால் இடம் குறைந்து விட்டது.

இன்ஜின்
பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது பென்ஸ் ஏ கிளாஸ். இதில், நாம் டெஸ்ட் டிரைவ் செய்தது 1,595 சிசி திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜின் மாடல். 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினான இது, அதிகபட்சமாக 122 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. அதிகபட்ச டார்க் 20.39 kgm. டர்போ சார்ஜ்டு இன்ஜினாக இருந்தாலும், பெர்ஃபாமென்ஸில் தோல்வியடைகிறது ஏ-கிளாஸ். டார்க் மிகவும் குறைவாக இருப்பதால், குறைந்த ஆர்பிஎம்-ல் இருக்கும்போது எவ்வளவுதான் ஆக்ஸிலரேட்டரை மிதித்தாலும் கார் வேகமாகப் போகவில்லை. 2,000 ஆர்பிஎம் தாண்டிய பிறகுதான் கூடுதல் எனர்ஜியுடன் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்பதால், கியர் மாற்ற வேண்டிய தொல்லை இல்லை என்றாலும், வேகம் குறைவாக இருப்பது டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டும்போது கடுப்பாக இருக்கிறது. குறிப்பாக, சிக்னலில் இருந்து புறப்படும்போது, மற்ற எல்லா கார்களும் அடுத்த சிக்னலை நெருங்கும்போது தான் நம்முடைய கார் பிக்-எப் எடுக்க ஆரம்பிக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 10 விநாடிகளுக்கும் குறைவாக கடந்துவிடுகிறது என்றாலும், 122 bhp சக்திகொண்ட காருக்கு, இது குறைவு. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 220 கி.மீ.

புதிய பென்ஸ் கார்களில், கியர் லீவர் இப்போது சென்டர் கன்ஸோலுக்குப் பதில், ஸ்டீயரிங்குக்குப் பின்னால் ஒளிந்துவிட்டது. அதற்கு ஏ கிளாஸும் விதிவிலக்கல்ல. பார்க்கிங், நியூட்ரல், டிரைவ் பொசிஷனுக்கு ஸ்டீயரிங்குக்குப் பின்னால் இருக்கும் லீவரைத் திருப்பிக்கொண்டே இருந்தால் போதும்.
ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட இந்த காரில் எக்கனாமி, மேனுவல், ஸ்போர்ட் என மூன்று ஆப்ஷன்கள் உள்ளன. எக்கனாமி மோடில் ஓட்டினால், மைலேஜ் அதிகம் கிடைக்கிறது என்கிறது பென்ஸ். ஆனால், இந்த மோடில் ஓட்டினால், உங்களுக்கு ஙிறி அதிகமாகிவிடும். டர்போ லேக் மிகவும் அதிகமாக இருப்பதால், மிக மிக மந்தமாக நகர்கிறது ஏ-கிளாஸ். மேனுவல் மோடில் வைத்துவிட்டு 'பேடில் ஷிஃப்ட்’ மூலம் கியர்களை மாற்றி ஓட்டலாம். ஆனால், இதில் ஓட்டுவதும் கடுப்புதான். ஸ்போர்ட் மோடில்தான் கார் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருக்கிறது.
கையாளுமை
நகருக்குள் அதிகம் பயணிக்கிற கார் என்கிறபோது, கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், ஏ-கிளாஸில் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிகவும் குறைவு. சின்னச் சின்ன ஸ்பீடு பிரேக்கர்களிலும் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும். கீழே, இன்ஜின் அடிபடாமல் இருக்க தடுப்பு இருக்கிறது என்றாலும், ஒவ்வொரு முறையும் கீழே இடிக்கும் போது நமக்குப் பயமாகவே இருக்கிறது. கையாள்வதற்குச் சிறப்பாக இருந்தாலும், ஓட்டுதல் தரம் கொஞ்சம் ஸ்டிஃப்பாகவே இருக்கிறது.
மைலேஜ்
'ஏ’ கிளாஸில் லிட்டருக்கு 10 கி.மீ-க்கு மேல் மைலேஜை எதிர்பார்க்க முடியாது. எக்கனாமி மோடில் வைத்து ஓட்டினால், 11.5 கி.மீ வரை கிடைக்கும்.

பென்ஸின் இந்த சின்ன ஹேட்ச்பேக் காரின் சென்னை ஆன் ரோடு விலை 30.7 லட்சம். பென்ஸ் என்ற பிராண்ட் இமேஜைத் தாண்டி, உண்மையிலேயே சொகுசு காராக இல்லை பென்ஸ் ஏ-கிளாஸ். காருக்கு உள்ளே சில கவர்ந்திழுக்கும் சிறப்பம்சங்கள் இருந்தாலும், பெர்ஃபாமென்ஸில் பின்தங்கிவிடுகிறது!

படங்கள்: பத்ரி