பிஎம்டபிள்யூவின் ஆரம்பம்!
##~## |
பென்ஸ் ஏ-கிளாஸுடன் போட்டி போடத் தயாராகிவிட்டது பிஎம்டபிள்யூ. என்னதான் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்கள் இருந்தாலும், நகருக்குள் சுற்றிவர சின்ன கார் தேவைப்படும். ஆனால், சொகுசான சின்ன கார் இல்லை. இதனால், சொகுசு கார் வாடிக்கையாளர்கள் ஸ்விஃப்ட், ஐ20 போன்ற சின்ன கார்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பார்கள். 'இவர்களை ஏன் மாருதி, ஹூண்டாய் பக்கம் விட வேண்டும்’ என்ற பென்ஸின் சிந்தனைதான், ஏ-கிளாஸை ஹிட் ஆக்கியது. ஏ-கிளாஸின் வெற்றி இப்போது பிஎம்டபிள்யூவை, 1 சீரிஸ் என்ற சின்ன ஹேட்ச்பேக் காரை, இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவர வைத்திருக்கிறது.
டிசைன்
இதுதான் பிஎம்டபிள்யூவின் விலை குறைந்த ஆரம்ப மாடல் என்பதை, '1 சீரிஸ்’ என்ற பெயரே தெரிவிக்கிறது. அதற்காக, ஸ்டைலிலும் இதை ஆரம்ப நிலையிலேயே வைத்திருப்பது என்ன நியாயம்? ஏ-கிளாஸ் போன்று அதிரடியான முன் பக்க ஸ்டைலோ அல்லது ஆடி க்யூ-3 கார் போன்று பிரம்மாண்டமோ இல்லை. மிக மிகச் சாதாரணமான ஜெர்மன் கார் என்பதுபோல இருக்கிறது. பிஎம்டபிள்யூ என்பதை உறுதிப்படுத்த இரட்டை க்ரில் உண்டு. மற்றபடி ஹெட்லைட், பானெட் என எதிலுமே அசத்தும் டிசைன் இல்லை. ஹேட்ச்பேக் கார் என்பதற்காக, ஏ கிளாஸ் அளவுக்கு சின்ன கார் இல்லை. ஏ கிளாஸைவிட 32 மிமீ அதிகமாக இருப்பதோடு, செடான் கார்களைவிடவும் பெரிதாக, அதாவது 4,324 மிமீ நீளம் இருக்கிறது. ஆனால், அகலத்திலும் உயரத்திலும் இது, ஏ கிளாஸைவிட சின்ன கார். மேலும், ஏ கிளாஸில் 17 இன்ச் டயர்கள் இருக்க, இதில் இருப்பது 16 இன்ச் டயர்கள் மட்டுமே!

காருக்கு உள்ளேயும் அசரடிக்கவில்லை 1 சீரிஸ். சீட்டுகள் மிகவும் தாழ்வாக இருப்பதோடு, காரின் உயரமும் குறைவு என்பதால், உடலை வளைத்துத்தான் காருக்குள் செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், கஷ்டப்பட்டு டிரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட்டால், அதன் பிறகு வழக்கமான பிஎம்டபிள்யூவின் ஃபீல் வந்துவிடுகிறது. 8.8 இன்ச் ஸ்கிரீன் செம ஸ்மார்ட்டாக இருக்கிறது. டிரைவிங் பொசிஷன் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரிய வகையில் சூப்பராக இருக்கிறது.

ஆனால், இட வசதியில் சொதப்பி விட்டது பிஎம்டபிள்யூ. ஏ கிளாஸைவிட நீளமான காராக இருந்தும் இன்ஜினுக்கும், டிக்கிக்குமே அதிக இடம் ஒதுக்கியிருக்கிறது. காரின் முன்பக்கம் துவங்கும் டனல், பின் பக்கம் வரை நீள்வதால், இரண்டு பேர்தான் பின் இருக்கையில் உட்கார முடியும். அவர்களும் வசதியாக உட்கார முடியாத அளவுக்கு இட வசதி குறைவாக இருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி உட்கார இதில் இடம் இல்லை.

ஆனால், ஏ-கிளாஸ் அளவுக்குக் கண்ணாடிகள் சின்னதாக இல்லாமல், பெரிதாக இருப்பதோடு, ஹெட்ரூமும் அதிகமாக இருப்பதால், காருக்குள் அடைபட்ட ஃபீல் இல்லை. டிக்கி 360 லிட்டர் என்பதால், பொருட்களை வைக்க ஏராளமான இடம் உண்டு. இந்த விஷயத்தில் ஏ கிளாஸ் பின்தங்கி விடுகிறது.
இன்ஜின்
இரண்டு இன்ஜின் ஆப்ஷன் களுடன் 1 சீரிஸ் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடனும், 2 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 136 bhp சக்தியையும், டீசல் இன்ஜின் 143 bhp சக்தியையும் வெளிப்படுத்துகிறது.
பெட்ரோல் இன்ஜினின் மிட் - ரேஞ்ச் மற்றும் டாப் ஸ்பீடு பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கிறது. 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தைத் தருகிறது. ஆனால், 1,500 ஆர்பிஎம்-க்குக் கீழ் டர்போ லேக் அதிகமாக இருக்கிறது. இதனால், ஆரம்ப வேகங்களில் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. டீசல் இன்ஜினும் டர்போ லேக்குக்கு விதிவிலக்கு அல்ல. இரண்டு இன்ஜின்களிலுமே அதிக வேகத்தில் அதிர்வுகளை உணர முடிகிறது. இவ்வளவு குறைகள் இருந்தும் பிஎம்டபிள்யூ ஸ்கோர் செய்யும் ஒரே ஏரியா, ஓட்டுதல் மற்றும் கையாளுமைதான்.

கையாளுமை
'ஃபன் டு டிரைவ்’ கார்களை எப்படித் தயாரிப்பது என்று பிஎம்டபிள்யூவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டிக்கொண்டே இருக்கத் தூண்டும் வகையில், ஓட்டுதல் தரம் செம சூப்பர். ஸ்டீயரிங் செம க்யூக். கைகள் ஸ்டீயரிங்கின் மேல் கொடுக்கும் அழுத்தத்துக்கு ஏற்ப துல்லியமாக ரியாக்ட் செய்கிறது. கார் எந்த நேரத்திலும் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர முடிகிறது. சஸ்பென்ஷன் சாஃப்ட்டாக இருப்பதால் குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்கும் போது, அதிர்வுகளை அதிகமாக உணர முடிகிறது.

விலை
1 சீரிஸ் காரை, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து, இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது பிஎம்டபிள்யூ. சென்னையில் அசெம்பிள் செய்யப்பட இருப்பதால், இதன் விலை ஏ-கிளாஸ் காரைவிட குறைவாக அதாவது சுமார் 20-25 லட்ச ரூபாய்க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஏ-கிளாஸே முழுமையான பவர்ஃபுல் சொகுசு ஹேட்ச்பேக் காராக இல்லாத நிலையில், அதைவிட இட வசதியிலும், ஸ்டைலிலும் குறைவாக இருக்கும் பிஎம்டபிள்யூ எடுபடுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி!

