கார்ஸ்
Published:Updated:

ஷோ - ரூம் ரெய்டு!

ஷோ - ரூம் ரெய்டு!

 ##~##

கார் கம்பெனிகள் என்னதான் தரமான கார்களைத் தயாரித்தாலும், எவ்வளவுதான் அட்டகாசமான அம்சங்களைக் கொடுத்தாலும், பணத்தைக் கொட்டி விளம்பரம் செய்தாலும்... காரை விற்பனை செய்யும் டீலர் சொதப்பினால்... என்னதான் நல்ல காராக இருந்தாலும் அது போணியாது என்பதற்கு கண் கண்ட உதாரணங்கள் பல உண்டு. ஒரு டீலர் செய்யும் தவறு, கார் கம்பெனியை மட்டுமல்ல; தான் விரும்பிய ஒரு நல்ல காரை வாங்க விடாமல் செய்வதன் மூலம், ஒரு வாடிக்கையாளரையும் பாதிக்கிறது என்பதே உண்மை.   

கார் வாங்க ஷோரூமுக்குச் செல்லும் ஒரு வாடிக்கையாளருக்கு, அங்கே என்ன மாதிரியான அனுபவங்கள் கிடைக்கின்றன என்பது கம்பெனியின் நிர்வாகத்துக்கு முழுமையாகத் தெரிய வாய்ப்பில்லை. கார் ஷோரூம்களில் வைக்கப்பட்டிருக்கும் ஃபீட்பேக் ஃபார்மில் 'எக்ஸலன்ட்’, 'குட்’, 'புவர்’ என்று பெட்டிகளுக்கு எதிரில் விழும் 'டிக்’குகள் நிச்சயம் மனம் விட்டுப் பேசாது. அதனால், ஷோரூம்களில் செய்ய வேண்டிய திருத்தங்களைச் செய்ய ஒரு கார் கம்பெனிக்கு கடைசி வரை வாய்ப்பில்லாமலேயே போய்விடும். அதனால், வாடிக்கையாளர்களுக்கும் கார் கம்பெனிகளுக்கும் பாலம் போட வேண்டியது அவசியமாகிறது.

வாடிக்கையாளர் கார் ஷோரூமுக்குப் போகும்போது, அவர் எப்போது புளகாங்கிதம் அடைகிறார். எப்போது புண்படுகிறார். அவரின் முகம் எப்போது மலர்கிறது; எப்போது சுருங்குகிறது என்பதை அறிவதே இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கம். முதலில் சென்னை ஹூண்டாயில் இருந்து ஆரம்பிக்கலாம்.

 ஹூண்டாய் மோட்டார் பிளாசா

நாள் : 14-8-2013

மத மதவென இருக்கும் மதிய நேரத்தில், மூன்று மணி சுமாருக்கு ஜஸ்ட் டயல் மூலம் கிடைத்த இந்த நம்பருக்கு (044) 42119532 கால் செய்தேன். 40 செகண்ட் ஃபுல் ரிங் போய் கட் ஆனது. நோ ரெஸ்பான்ஸ். அடுத்து 4220 4665 என்ற எண்ணுக்கு அழைத்தேன். ஒரு பெண் எடுத்துப் பேசினார். என் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டார். 'நேரில் வருகிறேன்’ என நானே கூறிவிட்டு, ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் ஷோரூமுக்குச் சென்றேன். ஹூண்டாய் டீலர்ஷிப்புகளிலேயே ஹூண்டாய் மோட்டார் பிளாஸா மட்டும் ஸ்பெஷல். காரணம், இந்த ஷோரூமை நடத்துவதே ஹூண்டாய் நிறுவனம்தான்.

ஷோ - ரூம் ரெய்டு!

வெளியே இருந்த 'வேலட் பார்க்கிங் உண்டு’ என்கிற போர்டு, சேலை வாங்கித் தராததால் கோபித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு இருக்கும் பொண்டாட்டி போல கோணலாக இருந்தது.

ஷோரூமினுள் நுழைந்ததும் சீருடை அணிந்த ஒரு பெண் வரவேற்றார். வெர்னா கார் விசாரிப்பதற்காக வந்திருப்பதாகத் தெரிவித்ததும், என்னை அமரச் சொல்லி, கல்யாண பத்திரிக்கை கொடுப்பதுபோல பணிவாக வெர்னா ஹேண்ட் - அவுட் ஒன்றைக் கொடுத்தார். சற்று நேரத்தில் அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞர், விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு, புன்னகையுடன் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

''வெர்னா வாங்கலாம்னு ஒரு யோசனை. அதான் விசாரிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்'' என்றேன்.

''டீசலா, பெட்ரோலா?''

''டீசல்தான் வாங்கலாம்னு இருந்தேன். ஆனா, அதுவும் பெட்ரோல் அளவுக்கு விலை ஏறிடும்கிறாங்க. அதான் குழப்பமா இருக்கு!'' என்றேன்.

''ஆமா ஆமா, இப்பவே டீசலுக்கும் பெட்ரோலுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டும் ஒண்ணுதான்(!)'' எனச் சொல்லி என் மண்டையைக் கிறுகிறுக்க வைத்தார். ஒரு வழியாக பெட்ரோல் கார் என இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்ததும், 'பேஸிக்’ வேரியன்ட் விலையைச் சொல்லி அதை வாங்க வைக்க முயற்சி செய்தார். அதில் உள்ள வசதிகளை தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் என்ற ஸ்டைலில் வரிசையாகச் சொல்லி முடித்தார். கார் பற்றி வெப்சைட்டில் நன்கு மேய்ந்துவிட்டு வருபவருக்கு, ஓரளவு அவர் சொன்னது புரியும். ஒன்றும் தெரியாமல் புதிதாக கார் வாங்க வருபவர்களுக்கு, முகத்தில் ஒரு வாளி ஐஸ் வாட்டரை ஊற்றியது போலத்தான் இருக்கும்.

லோன் பற்றிக் கேட்டேன். ''நான்கு நாட்களில் ப்ராசஸ் முடியும்'' என்றார். ''அந்த வேலை முடிந்ததும் நான்கு நாட்களில் கார் டெலிவரி கிடைத்துவிடும்'' என்றார். ஆனால், வெர்னாவின் ஆக்சுவல் டெலிவரி டைம், 'இரண்டு வாரங்கள்’ என நோட்டீஸ் போர்டில் போட்டிருந்தது.

வெர்னா காரின் அருகில்கூட என்னை அழைத்துச் செல்லவில்லை. காரில் அமர்ந்து பார்க்கும்படி சொல்லவில்லை. வெர்னாவின் சிறப்பு என எதையும் விளக்கவில்லை. டெஸ்ட் டிரைவ் பற்றிப் பேச்சே இல்லை. சர்வீஸ் நெட்வொர்க் சிறப்பாக இருப்பது பற்றி மூச்! 'எப்ப வாங்கப் போறீங்க?’ என்று ஸ்ட்ராங்காகக் கேட்கவில்லை.மற்ற போட்டி கார்களுடன் ஒப்பீடு செய்து வெர்னாவின் பலங்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆஃபர், டிஸ்கவுன்ட், கிஃப்ட் என எதைப் பற்றியும் எந்த விபரத்தையும் சொல்லவில்லை.

கார் விற்கிறோம். இதான் விலை. கேட்டா பதில் சொல்றோம். வேணும்னா வாங்கிக்கோ... அவ்ளோதான். இதுதான் ஹூண்டாய் மோட்டார் பிளாசாவில் கிடைத்த அனுபவம்.

ஷோரூம் நன்கு அலங்கரிக்கப்பட்டு சுத்தமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் அமர்ந்து பேச இடம் மிகக் குறைவாகவே உள்ளது. இன்னும் வசதியான இருக்கைகள் போடலாம். ஒரு கர்டஸிக்கு, 'குடிக்கத் தண்ணீர் வேண்டுமா?’ என்றுகூடக் கேட்கவில்லை. 'ரெஸ்ட் ரூம்’ எங்கே இருக்கிறது என்று கண்ணில் படவே இல்லை. பெண்கள் இதைக் கேட்கக் கூச்சப்படுவார்கள்.

டிஎஸ்சி ஹூண்டாய்

நாள் 14-8-2013

சூட்டோடு சூடாக டிஎஸ்சி ஹூண்டாய் ஷோரூமுக்கு ஜஸ்ட் டயல் மூலம் கிடைத்த நம்பருக்கு (044-42768696) போன் அடித்தேன். 'தி நம்பர் ஈஸ் நாட் இன் யூஸ்’ என்றது. அட்ரா சக்கை என நினைத்துக் கொண்டு, அடுத்த நம்பர் 044- 42867696 அடித்தேன். உடனே எடுத்தார் ஒரு பெண். நன்றாகப் பேசினார்.

உடனடியாக டிஎஸ்சி கிளம்பினேன். ஷோரூம் அருகில் சென்றபோதுதான், 'அங்கே கார் பார்க்கிங் உள்ளதா? வேலட் பார்க்கிங்கா?’ என பல கேள்விகள் எழுந்தன. ஒருவழியாக, அந்தப் பிரச்னைகளை முடித்து விட்டு உள்ளே சென்றால்... இங்கேயும் கச கசவென வாசலுக்கு முன் ஏகப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஃப்ரன்ட் ஆஃபீஸ் முன் கூட்டமாகப் பலர் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வளவு களேபரத்திலும் ரிசப்ஷனிஸ்ட் புது ஆள் நுழைவதைக் கவனித்து, அட்டெண்ட் செய்தது ஆறுதலாக இருந்தது.

ஷோ - ரூம் ரெய்டு!

'வெர்னா விசாரிப்பதற்காக வந்துள்ளேன்’ எனச் சொன்னதும், அந்தப் பக்கம் சடக்கென கிராஸ் ஆன ஒருவரை நிறுத்தி, ''யேய் வெர்னா, பார்க்கிறியா?'' என்றார் ரிசப்ஷனிஸ்ட். அவர், ஏதோ படபடவெனச் சொல்லி, 'சாரி’ சொல்லி ஓடிவிட்டார். சற்று நேரம் ஸோஃபாவில் அமர வைக்கப்பட்டேன்.

இங்கும் வாடிக்கையாளருக்கான இடம் குறைவுதான். நிறைய துப்புரவுப் பணியாளர்கள் சினிமா தியேட்டர் போல சாய்ந்து நின்று, ஷோரூமுக்குள்ளேயே பேசிக்கொண்டு இருந்தனர். சின்ன காம்பேக்டான ஷோரூம். கடமைக்காகவாவது குழந்தைகள் விளையாட சின்ன இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். இங்கு தண்ணீர் கொடுத்தார்கள். ரெஸ்ட் ரூம் இருப்பது நன்கு தெரிகிறது. வண்ண பலூன்கள் கட்டி இருந்தனர். கீழே விழும்போதெல்லாம் கர்ம சிரத்தையாக ஒருவர் எடுத்துக் கட்டிக்கொண்டு இருந்தார். 'பலூன் கட்டுபவர்’ என ஒரு பதவி உருவாக்கி இருப்பார்கள் போல.

மணிவண்ணன் என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 10 நிமிடங்கள் கழித்து வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, முதல் வேலையாக, ''வெர்னாவின் உள்ளே அமர்ந்து பாருங்கள்'' என்றார்.

''பானெட் விஸிபிளா இல்லை...'' என்றேன்.

''இந்த செக்மென்ட்ல அப்படித்தான் சார், தெரியாது'' என்றார். ''பின் சீட் சின்னதா இருக்கே...'' என்றேன். ''இந்த செக்மென்ட்ல அப்படித்தான் சார், சின்னதாத்தான் இருக்கும்'' என்றார். காரைப் பற்றி எது கேட்டாலும், இதே பதிலை வேறு வேறு மாடுலேஷன்களில் சொன்னார். மாதத்துக்கு 2,500 கி.மீ-க்கு மேல் ஓட்டினால் மட்டுமே டீசல் இன்ஜின் வாங்கப் பரிந்துரைத்தார். காரைப் பார்த்துவிட்டு சேரில் வந்து அமர்ந்தேன். பேச ஆரம்பிப்பதற்கு முன்பே அவருக்கு ஒரு போன் வந்தது. என்னை உட்கார வைத்துக்கொண்டே சுமார் 15 நிமிடங்கள் பேசினார். மூன்று முறை 'ஸாரி’ கேட்டார்.

காரைப் பற்றி விளக்குகையில் 'பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ்’ என சர்வ சாதாரணமாகிப் போய்விட்ட எல்லாவற்றையும் சொல்கிறார். 'ஹாரன் இருக்கு’ எனச் சொல்லி விடுவாரோ என நடுக்கமாக இருந்தது. லோன் பற்றிக் கேட்டதும்தான் இவரும் சொன்னார். மைலேஜ் பற்றிப் பேசவில்லை. இரண்டாவது, மூன்றாவது கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரியானது. முதல் முறையாக கார் வாங்க வருபவரின் பார்வையில் சுத்த மோசம். இங்கேயும் டெஸ்ட் டிரைவ் பற்றிப் பேசவேயில்லை. வெர்னாவின் சிறப்பைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. சர்வீஸ் நெட்வொர்க் சிறப்பாக இருப்பது பற்றிக் கூறவில்லை.

''எப்ப வாங்கப் போறீங்க?'' எனக் கொஞ்சம் ஆர்வமாகக் கேட்டார். ஆனால், மற்ற போட்டி கார்களுடன் வெர்னாவை ஒப்பீடு செய்யவில்லை.எப்போது டெலிவரி கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் ஏதும் அவராகவே கூறவில்லை. ஆஃபர், டிஸ்கவுன்ட், கிஃப்ட் என எதைப் பற்றியும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக, 'கொஞ்சம் ஆக்சஸரீஸ் இலவசமாகக் கிடைக்கும்’ என்று மட்டும் சொன்னார்.

 கேயுஎன் ஹூண்டாய்

நாள் 15/08/2013

ஜஸ்ட் டயல் மூலம் நம்பர் கண்டுபிடித்து அடித்தால்தானே சகுனம் சரியில்லை? அதனால், இந்த முறை கூகுள் மூலம் கேயுஎன் ஹூண்டாய் என தேடினேன். 'அட, டீலர் தனி வெப்சைட்டே வைத்துள்ளாரே’ என மனதில் பாராட்டிக்கொண்டே வெப்சைட்டுக்குப் போய் 044 4263 6365 என்ற நம்பரை எடுத்தேன். மதியத்தில் இருந்து மூன்று முறை அழைத்தேன். நோ ரெஸ்பான்ஸ். வெப்சைட்டில் கால் சென்டர் நம்பர் போல சேல்ஸ் எனப் போட்டு 044 - 4291 3333 என ஒரு நம்பர் போட்டிருந்தார்கள். அதை அடித்ததும் உடனே ஒருவர் எடுத்து, கர்ண கொடூரமான குரலில் பேசினார். ''சார், இன்னிக்கு ஷோரூம் ஓப்பனா இருக்குமா?''

ஷோ - ரூம் ரெய்டு!

''ம்..ம்ம் இருக்கும் சார்.''

''அண்ணா சாலை ஷோரூம் ஓப்பனா?''

''இருக்கும் இருக்கும். இன்னிக்கு வியாழக் கிழமைதானே... திறந்துதான் இருக்கும்.''

''இல்ல சார், இன்னிக்கி சுதந்திர தினம், அதான் கேக்கறேன்!''

''சுதந்திர தினம்லாம் ஒண்ணும் இல்லை(!) திறந்துதான் இருக்கும்.''

''அந்த நம்பர் அடிச்சேன், யாரும் எடுக்கலை. உங்ககிட்ட ஷோரூம் நம்பர் இருக்குமா?''

''இல்லை சார், நம்பர்தான் இல்லை. அதான் பிரச்னை... ஹி ஹி...''

''ஓகே சார், தேங்க்ஸ்'' எனக் கூறி கட் செய்தேன்.

அவர்கள் வெப்சைட்டில் பெரிதாக 'வேலை நேரம் 9 am - 9 pm - working on all days ’ எனப் போட்டிருந்தது. தந்தை சொல்லை நம்புவதைவிட, வெப்சைட் சொல்வதை நம்பும் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதால், அதைப் பரிபூரணமாக நம்பிக் கிளம்பினேன். நேரில் சென்றால், வெப்சைட்டில் குறிப்பிட்டிருந்த அண்ணா சாலை முகவரியில் ஷோரூம் இல்லை. மாற்றிவிட்டதாகச் சொன்னார்கள். மெட்ரோ ரயில் பணி காரணமாக மாற்றி இருக்கலாம். வெப்சைட்டில் முகவரியை மாற்றுவது இரண்டு நிமிட வேலைதான். புது முகவரிக்குச் சென்றேன். ஷோரூம் பூட்டிக் கிடந்தது.

மறுநாள், 16-ம் தேதி மீண்டும் நேரடியாகச் சென்றேன். மிகச் சின்ன காம்பேக்டான ஷோரூம். டீசன்டாக இருந்தது. ஆனால், இடம் மிகச் சிறிது என்பதால், வாடிக்கையாளரைக் கவரக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக இல்லை. இங்கேயும் கார் பார்க்கிங் குழப்பம்.

இந்த ஷோரூமில் பெண்களை நம்பவில்லை. ஃப்ரன்ட் ஆஃபீஸிலும் ஒரு ஆண்தான் அமர்ந்து இருந்தார். ஒரு பெண்ணும் கண்ணில் தட்டுப்படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். வெர்னா காரும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை. சேல்ஸ் ஆஃபீஸர் ராபி வந்தார். இவரும் ஏனோ மிதமான குழப்பத்தில் இருப்பதுபோலவே தோன்றினார். அவராகவே ஏதும் பேசவில்லை. நான் பேசப் பேச பதில் அளித்தார். மற்ற இருவரும் சொன்னது போலவே, இவரும் ஏ.சி, பவர் விண்டோ என 10 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிக்கொண்டு இருந்ததையே சொன்னார். இவர் என்ன வித்தியாசம் காட்டினார் என்றால்,  ''டெஸ்ட் டிரைவ் போக விரும்புறீங்களா'' எனக் கேட்டார். ''போகிறேனே'' என்றதும், ''இப்போ வண்டி வெளியில போயிருக்கு. நாளைக்கு வர முடியுமா?'' எனக் கேட்டார். இந்த விஷயத்தில் மட்டுமே மற்ற ஷோரூம்களைவிட இந்த ஷோரூம் பெஸ்ட்.

மற்றபடி, இவரும் மேலே இரண்டு ஷோ ரூம்களைப் பற்றிச் சொன்னதைப்போல, பல விஷயங்களை அவராகவே சொல்லவில்லை. மைலேஜ் பற்றிக் கேட்டதும், ''பெட்ரோல் லிட்டருக்கு சென்னையில் 15 கி.மீ கொடுக்கும்'' என்றார். மற்ற ஷோ ரூம் சேல்ஸ் பெர்ஸன்ஸ், '10 கொடுக்கும்’ எனச் சொல்லி இருந்தனர்.

இங்கே குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். உட்காருவதற்கு இடம் மிக மிகக் குறைவு. ரெஸ்ட் ரூம் எங்கே எனத் தெரியவில்லை. மொத்தத்தில் ஷோரூமுக்கு நிறைய ப்ரொஃபஷனல் அப்ரோச் தேவை.

ஷோ - ரூம் ரெய்டு!