கார்ஸ்
Published:Updated:

வணக்கம்

வணக்கம்

வணக்கம்

பல வகைகளில் கார் ஆர்வலர்களுக்கு இது, 'டபுள் டமாக்கா’ பண்டிகைக் காலம். தீபாவளி என்றால், புதிய டிசைனில் துணிமணிகள் வருவதுபோல்... புதுப் புது மாடல் கார்கள் அறிமுகமாவதும் இந்த சீஸன் கொண்டாட்டம். இருந்தாலும், 'கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டு புது கார்கள் அறிமுகமாகுமா?’ தொடர்ந்து எட்டு, ஒன்பது மாதங்களாக கார் மற்றும் பைக் விற்பனை இறங்குமுகமாக இருக்கிறதே... இந்த நிலையில் புது கார்கள் வருமா என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது மாதிரி, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, புதிய ஸ்கோடா ஆக்டேவியா, நிஸான் டெரானோ, பிஎம்டபிள்யூ 1 சீரியஸ், ஃபோக்ஸ்வாகன் கிராஸ் போலோ, மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே என வரிசையாக கார்கள் அறிமுகமாகின்றன.

முட்டிமோதும் அளவுக்கு வியாபாரம் நடக்கும் ஹேட்ச்பேக் மார்கெட்டில், கொஞ்சக் காலத்துக்கு முன்பு வாபஸான, ஹோண்டா ஜாஸ்கூட மீண்டும் வருகிறது.

கார் பிரியர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறதே... இது, கார்களின் விலையைத் தொட முடியாத உயரத்துக்குத் தூக்கிவைத்துவிடுமா என்ற சந்தேகத்துக்கும் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரி 'இல்லை’ என்று உரத்த பதில் சொல்லியிருக்கிறது. இப்போது கொடுக்கப்பட்டு வரும் தள்ளுபடிகளும் தொடரும் என்பதற்கான சமிக்ஞைகள் பலமாகத் தெரிகின்றன.

என்னதான் சொகுசு கார்களாக இருந்தாலும், கூடுமானவரை விலை குறைந்த மாடல்களை அறிமுகப்படுத்தி, வெகுஜன வரவேற்பைப் பெற்றுவிட வேண்டும் என்று, சமீபத்தில்தான் 'ஆடி க்யூ-3’ அறிமுகமானது. இதையடுத்து அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் மற்றும் பென்ஸ் 'ஏ’ கிளாஸ் ஆகிய இரண்டு கார்களைப் பற்றிய முழு விவரங்களையும், இந்த இதழில் கொடுத்திருக்கிறோம். அடுத்ததாக, ஹூண்டாய் ஐ10 மற்றும் ஐ20 ஆகிய இரண்டு கார்களுக்கும் இடையே இருக்கும் விலை ரீதியான இடைவெளி மிகச் சிறியதே என்றாலும், அப்படி ஒரு வெற்றிடம் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஹூண்டாய், கிராண்ட் ஐ10 என்ற காரைக் களம் இறக்கியுள்ளது. ஹூண்டாயின் சமீபத்திய வெற்றிகளுக்குக் காரணமாக இருக்கும் ஃப்ளூயிடிக் டிசைனில் வந்திருக்கும் இந்த காரைப் பற்றிய டெஸ்ட் ரிப்போர்ட்... 'ஐ10 காரா, கிராண்ட் ஐ10 காரா?’ என்றக் கேள்விக்கு முடிவு காண, உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

இந்த இதழில், பல புதிய அம்சங்களையும் பகுதிகளையும் சேர்த்திருக்கிறோம். குறிப்பாக, கார் வாங்க வரும் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு ஷோரூமிலும் எப்படி நடத்துகிறார்கள் என்ற 'ஷோ-ரூம் ரெய்டு’ பகுதி, உங்கள் புகைப்படத் திறனைக் கூர்தீட்டும் 'ரீடர்ஸ் ஆட்டோ ஃபோகஸ்’ மற்றும் போட்டிகள் உங்களைக் கவரும். லாஃபெராரி ப்ளோ-அப், உங்கள் வீட்டு வரவேற்பறையை நிச்சயம் அலங்கரிக்கும்!

என்றும் உங்களுக்காக

ஆசிரியர்