கார்ஸ்
Published:Updated:

கிராண்ட் மாஸ்டர்!

ஹூண்டாயின் விலை குறைவான டீசல் கார்!

கிராண்ட் மாஸ்டர்!
 ##~##

ஹூண்டாய் இப்போது மாதத்துக்கு சுமார் 7,000 ஐ10 கார்களையும், 5,000 ஐ20 கார்களையும் விற்பனை செய்கிறது. என்றாலும், மார்க்கெட்டைப் பொறுத்தவரை இந்த இரண்டு கார்களுக்கு இடையில், ஓர் இடைவெளி இருப்பதாகக் கணித்திருக்கும் ஹூண்டாய், அதை நிரப்புவதற்காக இப்போது கிராண்ட் ஐ10 என்ற புதிய காரை அறிமுகப்படுத்துகிறது. 

இதை, கிராண்ட் ஐ10 என்பதைவிட 'மினி ஐ20’ என்று குறிப்பிட்டு இருந்தால், இன்னும் பொருத்தமாக இருக்கும். ஆம், ஐ10 காரைவிட ஐ20 காரின் சாயல்தான் இதில் அதிகம். ஐ10 வீல்பேஸைவிட கிராண்ட் ஐ10 காரின் வீல்பேஸ் 100 மிமீ அதிகம். அதனால், காருக்கு உள்ளேயும் டிக்கியிலும் இடம் அதிகமாகி இருக்கிறது. புதிய கிராண்ட் ஐ10 விற்பனைக்கு வந்தாலும், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஐ10 காரும் விற்பனையில் இருக்கும்.

கிராண்ட் மாஸ்டர்!

வடிவமைப்பு

ஃப்ளூயிடிக் டிசைன் என்பதுதான் சமீப காலமாக ஹூண்டாய் கார்களின் வெற்றியின் ரகசியமாகி இருக்கிறது. அதனால், அதே ஃப்ளூயிடிக் டிசைனை கிராண்ட் ஐ10 காரிலும் பார்க்க முடிகிறது. ஆனால் ஐ20, வெர்னா... ஏன் விலை குறைவான இயான் கார் அளவுக்குக்கூட இதில் ஃப்ளூயிடிக் டிசைனுக்கே உரிய க்ரீஸ் கோடுகள் எடுப்பாக இல்லை. விலை குறைந்த கார் என்பதால், ஹூண்டாய் சற்று அடக்கி வாசித்திருக்கிறது. அறுகோண வடிவ கிரில் மற்றும் ஹெட்லைட்ஸ் ஹூண்டாய் ஸ்டைலின்படியே வடிவமைக்கப் பட்டு இருக்கின்றன.

கிராண்ட் மாஸ்டர்!

கதவுகளும் நீளமாக இருப்பதால், காருக்குள் ஏறுவதும் இறங்குவதும் சுலபம். பின்னால் இருந்து பார்க்கும்போது, இதற்கும் ஐ20 காருக்கும் நிறைய ஒற்றுமைகள் தெரிகின்றன. காரின் வீல்பேஸ் 100 மிமீ அதிகமாகி இருப்பதால், பின்னோக்கிச் சரிவதைப்போல ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் காரின் கூரை, இதில் மேலும் கவர்ச்சியாக இருக்கிறது. 14 இன்ச் வீல் டிசைனும் இதற்கு அழகு சேர்க்கிறது.

இந்த செக்மென்ட் கார்களில் இல்லாத அம்சங்களான, இண்டிகேட்டர் விளக்குகளைக்கொண்ட ஆட்டோ ஃபோல்டிங் மிரர்ஸ், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரியர் ஏ.சி வென்ட், ஆடியோ கன்ட்ரோல் கொண்ட ஸ்டீயரிங் வீல் எனப் பல புதிய சிறப்பம்சங்களை இதில் ஹூண்டாய் சேர்த்திருக்கிறது.

இரட்டை வண்ண டேஷ் போர்டு, டீசன்ட்டான பிளாஸ்டிக் பாகங்கள், அசத்தலான டயல்கள் என இதில் சொல்லிக்கொள்ளும்படியாக பல நல்ல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. தாராளமான டிக்கியைத் தவிர பாட்டில் வைக்கவும், செய்தித் தாள்கள் வைக்கவும் கார் முழுதும் ஏராளமான இடம் கொடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் செய்ய உதவியாக இருக்கிறது. ரியர் பார்சல் ஷெல்ஃப் கூடுதல் போனஸ். விலை அதிகமான வேரியன்ட்டில் பாதுகாப்புக்காக ஏபிஎஸ், காற்றுப் பைகள் ஆகியவை கூடுதலாக இருக்கும்.

உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதிகொண்ட டிரைவர் சீட்டும், கோ-டிரைவர் சீட்டும் ஸ்போர்ட்டியாக இருக்கின்றன. பின் சீட்டில் கால்களை நீட்ட தாராளமாக இடம் இருக்கிறது. இங்கே மூன்று பேர் உட்கார முடியும் என்றாலும், ரியர் ஏ.சி வென்ட் இருப்பதால், நடுவில் உட்காரும் மூன்றாவது நபருக்கு காலை நீட்டி உட்காருவது சிரமமாக இருக்கும்.

கிராண்ட் மாஸ்டர்!

பின் சீட்டின் உயரத்துக்கும் ஜன்னல் கண்ணாடிக்கும் இடையில், உயர இடைவெளி கணிசமாக இருப்பதால், தாழ்வாக உட்கார்ந்திருப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இன்ஜின்

பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு வகை இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிராண்ட் வெளி வருகிறது. பெட்ரோல் இன்ஜின் என்றால், அதில் ஐந்து கியர்களுடன் 1.2 கப்பா இன்ஜின். ஆனால், நாம் ஓட்டிப்

கிராண்ட் மாஸ்டர்!

பார்க்கக் கொடுக்கப்பட்டது டீசல் இன்ஜின் கொண்ட கிராண்ட் ஐ10.

கிராண்ட் ஐ10 காரின் அட்ராக்ஷனே மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.1 லிட்டர் VGT டீசல் இன்ஜின்தான். செவர்லே பீட், மாருதி ரிட்ஸ் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகிய டீசல் ஹேட்ச்பேக் கார்களோடு போட்டி போட, ஹூண்டாய் இதில் 70 bhp திறன்கொண்ட இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது. இதில் டர்போ லேக் இல்லை. அதனால், நகருக்குள் ஓட்ட வசதியாக இருக்கிறது.

ஆனால், மிட் ரேஞ்சில் தேவைப்படும் அளவு சக்தி வெளிப்படவில்லை. அதனால், நெடுஞ்சாலையில் முன்னே செல்லும் வாகனங்களை ஓவர் டேக் செய்வது சுலபமாக இல்லை. ஹைவேஸில் செல்லும்போதும் இந்த இன்ஜின் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது.

ஹேண்ட்லிங்கைப் பொறுத்தவரை, என்னதான் வேகமாகச் சென்றாலும் இது தற்போது விற்பனையில் இருக்கும் ஐ10 காரை விட நிலைத்தன்மையோடு பயணிக்கிறது. ஸ்டீயரிங் மிகவும் லைட்டாக இருக்கிறது. துல்லியமாகவும் இருக்கிறது. ஆனால், எதிர்பார்க்கும் ஃபீட்பேக் கிடைக்கவில்லை. ஃபிகோவின் ஸ்டீயரிங் தான் இந்த செக்மென்டின் பென்ச் மார்க். இதை எட்ட கிராண்ட், நிறைய கவனம் செலுத்த வேண்டும்.

பெர்ஃபாமென்ஸில் கிராண்ட் ஐ10 சுமாராக இருப்பதால், இது நிச்சயம் கூடுதலாக மைலேஜ் தர வேண்டும். முழுமையான டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, அதைக் கண்டுபிடித்து விட முடியும்.

ஹூண்டாய், இதன் விலையை அனேகமாக 4 - 5 லட்சம் ரூபாய்க்குள் தான் நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் மாஸ்டர்!
கிராண்ட் மாஸ்டர்!