மோட்டார் நியூஸ்
ஃபோர்டு எக்கோஸ்போர்ட் புக்கிங் நிறுத்தம்!

ஒன்பது மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீண்டுகொண்டே போனதால், தற்காலிகமாக எக்கோஸ்போர்ட் காரின் புக்கிங்கை நிறுத்தியிருக்கிறது ஃபோர்டு. 1.5 லிட்டர் மற்றும் 1 லிட்டர் எக்கோபூஸ்ட் பெட்ரோல் இன்ஜின் மாடல்களின் புக்கிங் முழுவதுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், டீசல் இன்ஜின் மாடல்களின் விலை உயர்ந்த வேரியன்ட்டான டைட்டானியம் ஆப்ஷனல் மாடலின் புக்கிங்கும் நிறுத்தப்பட்டிருக்கிறது. டீசல் இன்ஜின் கொண்ட குறைந்த விலை வேரியன்ட்டுகளுக்கான புக்கிங் மட்டும் தொடர்ந்து நடைபெறுகிறது. டீசல் கார்களுக்கான குறைந்தபட்ச காத்திருப்புக் காலம் மூன்று மாதங்களாகும். பெட்ரோல் மாடல்களுக்கான புக்கிங் மீண்டும் துவங்கும்போது, காரின் விலையும் உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
விற்பனைக்கு வந்தது ஃபோக்ஸ்வாகன் க்ராஸ்போலோ!

விற்பனையில் பின் தங்கிக்கொண்டே போகும் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், போலோ காரின் விற்பனையை உயர்த்த புதிய மாடல்களை விற்பனைக்குக் கொண்டுவந்து கொண்டே இருக்கிறது. போலோ, போலோ ஜிடி வரிசையில் தற்போது க்ராஸ்போலோ எனும் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது ஃபோக்ஸ்வாகன். க்ராஸ்போலோ கொஞ்சம் ஆஃப் ரோடிங் ஸ்டைலில் முன்பக்கமும், பக்கவாட்டிலும் மிரட்டலான கிளாடிங்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் மேற்கூரையில் 75கிலோ வரை எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல ரூஃப் ரெயில் பொருத்தப்பட்டுள்ளது. போலோவில் இருக்கும் அதே 1.2லிட்டர் இன்ஜின்தான் க்ராஸ் போலோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 7.75 லட்சம். சென்னையில் இதன் ஆன் ரோடு விலை 9 லட்சத்தை நெருங்கும்.
புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே!

மாருதி நிறுவனம் புதிய வேகன்-ஆர் ஸ்டிங்ரே காரை செப்டம்பர் முதல் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்த கார் விற்பனைக்கு வந்தாலும் பழைய வேகன் ஆர் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். புரொஜெக்டர் ஹெட்லைட், க்ரோம் க்ரில், அகலமான ஏர் டேம் என புதிய வேகன்-ஆர் தோற்றத்தில் அதிரடியாக இருக்கிறது, காரின் உள்பக்கத்தைப் பொறுத்த வரை விலை உயர்ந்த மாடலில் மட்டும் காற்றுப் பை மட்டும் ஏபிஎஸ் பிரேக் உண்டு. சாதாரண வேகன்-ஆர் போல் ட்யூயல் டோன் டேஷ்போர்டு இல்லை. இதில், முழுக்க முழுக்க காரின் உள்பக்கம் கறுப்பு வண்ணம் மட்டுமே. சென்னையில் இதன் விலை 4.50 லட்சம் ரூபாயைத் தொடும்.
கோவையில் ஃபர்ஸ்ட் கியர்- 13

வாகனங்களின் பெருக்கத்தாலும், பல்வேறு காரணங்களாலும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அடைந்துவருவது நாம் அறிந்ததே! இதைத் தடுப்பதற்கு இளம் தலைமுறையின் யோசனைகளையும், செயல்முறை விளக்கங்களையும் அறிந்து கொள்ளும்விதமாக கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் 'ஃபர்ஸ்ட் கியர்-13’ எனும் கருத்தரங்கு, கடந்த ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 84 பொறியியல் கல்லூரிகளில் இருந்து சுமார் 1,200 மாணவர்கள் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் மாசு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு, மாணவர்களின் செயல்முறை விளக்கங்கள் மூலம் விடை தேட முயன்றனர். மாணவர்களே உருவாக்கிய வாகன மாதிரிகளையும் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும், ஆர்.சி கார் ரேஸ், விநாடி வினா, பொருட்காட்சி என இரு தினங்களும் ஆட்டோமொபைல் சார்ந்த போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கியது கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி!
- த.சித்தார்த்
இனிமேல் எஸ்திலோ இல்லை!

விற்பனையில் தேய்ந்துகொண்டே போன எஸ்திலோ காரின் தயாரிப்பை, முழுவதுமாக நிறுத்தியிருக்கிறது மாருதி. சின்ன கார்களில் மாருதியின் மிகவும் புகழ்பெற்ற கார் ஜென். 1993-ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜென், விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. ஜென் என்றால் ஜப்பானிய மொழியில் முழுமை என்று அர்த்தம். திடீரென 2006-ம் ஆண்டில் இந்த காரின் உற்பத்தியை நிறுத்திய மாருதி நிறுவனம், 2007-ம் ஆண்டின் துவக்கத்தில் ஜென் எஸ்திலோ எனும் பெயரில் ஒரு சின்ன காரைக் கொண்டு வந்தது. இந்த காருக்கும் பழைய ஜென் காருக்கும் தோற்ற ஒற்றுமை எதுவும் இல்லாததால், இது விற்பனையில் எடுபடவே இல்லை. இதனால், ஜென் என்கிற பெயரைத் தூக்கிவிட்டு, எஸ்திலோ என்ற பெயருடன் மீண்டும் இதே காரை 2009-ம் ஆண்டு சின்னச் சின்ன மாற்றங்களுடன் மாருதி கொண்டுவந்தது. ஆனால், விற்பனையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த எஸ்திலோவின் கடந்த ஆண்டு விற்பனை, வெறும் 854 கார்கள் மட்டுமே! இதனால் இப்போது முழுவதுமாக எஸ்திலோவின் தயாரிப்பை நிறுத்திவிடுவது என முடிவெடுத்து இருக்கிறது மாருதி.
''எல்லோரும் ஹெல்மெட் போடணும்!''
- அஜீத் வேண்டுகோள்!

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கை வாங்கிய கையோடு, பெங்களூருவுக்கு பைக்கிலேயே பறந்திருக்கிறார் அஜீத். ரேஸ் வீரர் கருண் சந்தோக்கின் தம்பியும், 'வீரம்’ படத்தில் நடிப்பவருமான சுஹைல் சந்தோக்தான் அஜீத்துக்கு ரைடிங் பார்ட்னர். சுஹைலின் பைக் யமஹா ஆர்-1, அஜீத்தின் பைக் பிஎம்டபிள்யூ என்றாலும் இருவருமே வேகத்தை மீறாமல் முழுப் பாதுகாப்பு உடைகளோடு பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தப் பயணம் குறித்து சுஹைல் சந்தோக்கிடம் பேசியபோது, ''இந்தியாவில் ஹெல்மெட் அணியாததால் நிறைய பைக் விபத்துகள் நடக்கிறது. நெடுஞ்சாலையில் வேகமாகப் பயணம் செய்யும் நண்பர்கள் பலரும் பாதுகாப்பு உடைகளை அணிவதில்லை.
70 ஆயிரம்... 1 லட்சம் கொடுத்து பைக் வாங்கும்போது, ஒரு சில ஆயிரங்கள் கொடுத்து நல்ல ஹெல்மெட்டையும், பாதுகாப்புச் சாதனங்களையும் வாங்கலாமே! 'நாம் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உடைகளோடு பயணிக்கும்போது, அதைப் பார்க்கும் இளைஞர்களும் இனிமேல் அதுபோல் பயணிப்பார்கள். அதனால், நாம் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்’ என அஜீத் அழைத்தார். அதனால்தான் இந்தப் பயணம்'' என்றார்.
''இனிமேல் இதுபோல் இன்னும் பல பைக் ட்ரிப்புகள் இருக்கும்'' என்றார்.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா செப்டம்பர் ரிலீஸ்!

விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்ட ஆக்டேவியா, மீண்டும் விற்பனைக்கு வருகிறது. புதிய ஆக்டேவியா, ஸ்கோடா லாராவை விடவும் 90 மிமீ நீளமாகவும், 45 மிமீ அகலமாகவும் இருக்கிறது. புதிய ஆக்டேவியாவில் பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. லேன் மாறும்போது எச்சரிக்கை செய்யும் லேன் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம், கார் ஓட்டுனருக்கு சோர்வு ஏற்படும்போது எச்சரிக்கை செய்யும் அலார்ம் மற்றும் காருக்குள் 9 காற்றுப் பைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக்காகவே சூழலுக்கு ஏற்ப லோ பீம் - ஹை பீம் மாறும் வசதி மற்றும் டிராஃபிக் ஸைன் அசிஸ்ட் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. டிராஃபிக் ஸைன் வசதி என்பது சாலையில் இருக்கும் எச்சரிக்கைப் பலகைகளைப் படம் பிடித்து அதை நேவிகேஷன் ஸ்கிரீனில் காட்டும். பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வர இருக்கிறது புதிய ஆக்டேவியா. 1.4 லிட்டர் திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 140bhp சக்தியை வெளிப்படுத்தும். இது தவிர 120150bhp சக்திகொண்ட 2 லிட்டர் டீசல் இன் ஜின் மற்றும் 105bhp சக்தியை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் ஆக்டேவியா விற்பனைக்கு வரும். ஸ்கோடா ஆக்டேவியாவின் விலை 14 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம். செப்டம்பர் இறுதியில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும்.
