கார்ஸ்
Published:Updated:

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?

 ##~##

'கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலையக் கூடாது’ என்ற நம்மூர் பழமொழியை, ஜப்பான் நிறுவனமான நிஸானுக்கு யாரோ கடைசியாகச் சொல்லிவிட்டார்கள். இந்தியாவில் நிஸான் அறிமுகம் செய்த மைக்ரா, சன்னி கார்களை, பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சிறு சிறு மாற்றங்களைச் செய்து பல்ஸ், ஸ்காலா என விற்பனைக்குக் கொண்டுவந்தது கூட்டணி நிறுவனமான ரெனோ. நிஸான், ரெனோவின் கார்கள் எதையும் கண்டுகொள்ளாமலேயே இருந்தது. ரெனோ கடந்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவந்த சின்ன எஸ்யூவியான டஸ்ட்டர், செம ஹிட்! நிஸானின் மைக்ரா, சன்னி, எவாலியா என எல்லா கார்களுமே விற்பனையில் சரிந்துகொண்டிருக்கும் நிலையில், நிஸானின் கண்களுக்கு ரெனோ டஸ்ட்டர் இப்போது ஆபத்பாந்தவனாகிவிட்டது. 

டஸ்ட்டரின் முன் பக்கத் தோற்றத்தையும், காருக்கு உள்ளே சில மாற்றங்களையும் செய்து, 'டெரானோ’ என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது நிஸான். டஸ்ட்டரில் இல்லாத விஷயங்கள் டெரானோவில் என்ன சேர்ந்திருக்கிறது? டஸ்ட்டர் வாங்கலாமா அல்லது டெரானோ வாங்கலாமா?

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?
நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?

டிசைன்

பல்ஸ், ஸ்காலா என சும்மா பெயருக்கு லோகோவை மட்டும் மாற்றிய ரெனோ போல இல்லாமல், உண்மையிலேயே காரின் டிசைனைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது நிஸான். கிரில், பம்ப்பர், ஹெட்லைட் என காரின் முன் பக்க முக்கிய பாகங்கள் அனைத்துமே டஸ்ட்டரில் இருந்து முழுமையாக மாறியிருக்கிறது. மேலும், டஸ்ட்டரில் இருந்து காரின் தோற்றத்தை முழுமையாக வேறுபடுத்திக் காட்ட, கார் தயாரிப்புக்கான ஷீட் மெட்டலை முழுவதுமாக மாற்றியிருக்கிறது நிஸான். புதிய மைக்ரா கார் போன்று V வடிவ பானெட் கிரில்லில், நிஸான் லோகோ இடம் பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட எக்ஸ்- ட்ரெயிலின் முன் பக்கம் போன்று இந்த காரை வடிவமைத்திருக்கிறது நிஸான்.

ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் முன் பக்கம் மட்டுமே! காரின் பக்கவாட்டில் இருந்து பார்த்தால் இது அப்படியே டஸ்ட்டர் தான். காரின் பின் பக்கத்தைப் பொறுத்தவரை டெயில் லைட்டைத் தவிர டஸ்ட்டருக்கும், டெரானோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், டஸ்ட்டரைப் போன்று மலிவாகத் தெரியாமல் டெரானோவில் ரூஃப் ரெயில் தரமாக இருக்கிறது. ஆனால், டஸ்ட்டரில் இருந்த முரட்டுத் தோற்றம் டெரானோவில் மிஸ்ஸிங். மேலும், தரமற்ற கதவுக் கைப்பிடிகள் டெரானோவிலும் தொடர்கிறது.

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?

காரின் உள்பக்கத்திலும் நிஸான் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது.  புதிய ஸ்டீயரிங் வீல், வட்ட வடிவ ஏ.சி வென்ட் மற்றும் டேஷ்போர்டில் ஸ்டோரேஜ் பாக்ஸுக்கு மூடி ஆகியவை குறிப்பிடும்படியான மாற்றங்கள். புதிய சிடி ப்ளேயர், யுஎஸ்பி போர்ட் மற்றும் ப்ளூடூத் கனெட்க்ட்டிவிட்டியும் உண்டு. ஆனால், டஸ்ட்டரில் இருந்த சில எர்கானாமிக்ஸ் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் டெரானோவில் தொடர்கிறது. ரியர் வியூ கண்ணாடிகளை அட்ஜஸ்ட் செய்யும் பட்டன், ஹேண்ட் பிரேக்குக்குக் கீழே வைக்கப்பட்டு இருப்பதோடு, ஏ.சி வென்ட் கன்ட்ரோல்கள் சென்டர் கன்ஸோலின் அடியில் போய்விட்டது. அதேபோல், டஸ்ட்டரின் டேஷ்போர்ட்டை அப்படியே டெரானோவில் எடுத்துப் பொருத்தி இருக்கிறார்கள்.

அடிப்படையில் இது டஸ்ட்டர் என்பதால், இட வசதியில் எந்த மாற்றமும் இல்லை. பின் இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார முடியும் என்பதோடு, டிக்கியிலும் பொருட்கள் வைக்க அதிக இடம் உண்டு. விலை உயர்ந்த வேரியன்ட்டில், பின் பக்கம் ஏ.சி வென்ட் வசதியும் உண்டு. ஆனால், இந்த ஏ.சி வென்ட் என்பது மிகவும் விலை மலிவானது என்பதோடு, வேகமாகப் பயணிக்கும்போது, இது தனியாகக் குத்தாட்டம் போடுகிறது.

இன்ஜின்

டஸ்ட்டரின் அதே 1.5 லிட்டர் டிசிஐ இன்ஜின், 84 bhp மற்றும் 105 bhp என இரண்டு பவர் ஆப்ஷன்களோடு டெரானோவிலும் கிடைக்கும். இது தவிர, 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலும் உண்டு. பெட்ரோல் மாடலில் 5-ஸ்பீடு கியர் பாக்ஸும், டீசல் மாடலில் 6-ஸ்பீடு கியர் பாக்ஸும் இருக்கிறது. டஸ்ட்டரின் வெற்றிக்குக் காரணம், டீசல் இன்ஜின்தான் என்பதும் டீசல் இன்ஜின் மாடல்தான் நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் என்பதும் நிஸானுக்குத் தெரியும். இருந்தும், பெட்ரோல் இன்ஜின் கொண்டுவரக் காரணம், டெரானோ விலை குறைவான கார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, வாடிக்கையாளர்களை ஷோரூமை நோக்கி வர வைப்பதுதான்.

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?

சஸ்பென்ஷன், பிரேக், வீல் என எதிலுமே டஸ்ட்டருக்கும், டெரானோவுக்கும் வித்தியாசம் இல்லை. அதனால், ஓட்டுதல் மற்றும் கையாளுமைக்கு டஸ்ட்டர் பிரபலம் என்பதால், அது டெரானோவிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

இரண்டு கார்களுமே கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான். ஆனால், எதை வாங்குவது? முன் பக்கத் தோற்றம், விலை, சர்வீஸ் நெட்வொர்க்கைப் பார்த்து இரண்டு கார்களில் ஒரு காரைத் தேர்ந்தெடுக்கலாம். ரெனோ - நிஸான் ஒப்பந்தப்படி, யார் மற்ற நிறுவனத்தின் காரை லோகோ மாற்றி விற்பனைக்குக் கொண்டு வருகிறார்களோ, அவர்கள் ராயல்டி தர வேண்டும். அதன்படி இப்போது நிஸான், ரெனோவுக்கு ராயல்டி தர வேண்டும் என்பதால், டெரானோவின் விலை டஸ்ட்டரைவிட 50,000 ரூபாய் முதல் 75,000 ரூபாய் வரை அதிகமாக இருக்கும். டெரானோவின் விலை 10 லட்சம் ரூபாய்க்குள் இருந்து துவங்கும் என அறிவித்திருக்கிறது நிஸான்.

சர்வீஸ் நெட்வொர்க்கைப் பொறுத்த வரை, நிஸானுக்கு சென்னையைத் தவிர்த்து வேலூர், மதுரை, ஈரோடு, சேலம், கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் இருக்கின்றன.

ரெனோவுக்கு சென்னையைத் தவிர்த்து திருப்பூர், திருச்சி, சேலம், புதுச்சேரி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளன. உங்கள் ஊரில் எந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் இருக்கிறதோ, அந்த காரை வாங்குவது சர்வீஸ் விடும்போது மிகவும் வசதியாக இருக்கும்.

முன்பக்கத் தோற்றத்தைத் தவிர, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாத டெரானாவுக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டுமா என்பதை, வாடிக்கையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?
நிஸான் டெரொனோ வாங்குவது லாபமா?