ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - குரங்கணிக்கு குதூகலப் பயணம்!
##~## |
''சொகுசு கார் தோத்துப் போகும்... டீசல் வண்டியோட கியர் பாக்ஸ் மாதிரியே இருக்காது; அவ்வளவு ஸ்மூத்தா இருக்கும். டாப் ஸ்பீடுல போனாக்கூட வைப்ரேஷன் இருக்காது சார்... ஒரு தடவை வந்து பாருங்களேன்!'' என்று பத்தாவது தடவையாக மெசேஜ் செய்திருந்தார் வாசகர் சதீஷ்குமார்.
தடாலென பண்ருட்டி போய், அவர் வீட்டு கராஜில் இறங்கிய போது, சிங்கம் மாதிரி சிங்கிளாக நின்றிருந்தது மாருதி ஸ்விஃப்ட் டிசையர். ''இந்த மயிலிறகுப் பச்சை கலர் என் ஃபேவரைட்!'' என்றபடி, தனது முதல் சம்பளத்தில் வாங்கிய டிசையருடன், பயணத்துக்குத் தயாராக இருந்தார் சதீஷ்.
சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராகப் பணிபுரியும் சதீஷ், ''ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்பில் நானும் என் டிசையரும் இடம் பிடிக்கிறதுதான் என் இப்போதைய குறிக்கோள்!'' என்றார். ''டேய் அண்ணா, உன் படத்தை நிப்பாட்டு; வண்டியை ஸ்டார்ட் பண்ணு!'' என்று பின் சீட்டை ஆக்கிரமித்தார் உடன் வந்த ஜெ.பி என்கிற ஜெயப்பிரகாஷ் - சதீஷின் தம்பி.


மாருதி டிசையரின் இன்டீரியர், ஒரு மிகப் பெரிய லக்ஸுரி காருக்குச் சவால்விட்டது. ஆங்காங்கே கதவுகளுக்கும், டேஷ் போர்டுக்கு மத்தியிலும் உள்ள மர வேலைப்பாடுகளில் ரசனை தெரிந்தது. ஒரு அருவிபோல் வடிவமைக்கப்பட்டிருந்த டேஷ் போர்டு, தெளிவான ஆர்பிஎம்- ஸ்பீடோ மீட்டர்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவர் சீட் அட்ஜஸ்ட்மென்ட், ரியர் டீ-ஃபாகர், ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல்... இவற்றையெல்லாம் பார்த்தபோது, சதீஷ் சொன்ன முதல் வார்த்தை ஞாபகம் வந்தது.
''இவனுக்கு லட்சுமிமேனனும், 'கும்கி’ மாணிக்கமும் விளையாண்ட இடத்தைப் பார்க்கணும்னு ஆசையாம். 'குரங்கணி’னு ஒரு மலைக் கிராமம்... பக்கத்துல கொட்டக்குடி ஆறு... தேனி போய், போடிநாயக்கனூர்ல இருந்து 17 கி.மீ.தான்... எல்லாம் விசாரிச்சுட்டேன்... போகலாமா?'' என்றார் சதீஷ்.
டேப்லெட்டை ஸ்டாண்டில் வைத்து, பண்ருட்டியிலிருந்து தேனி வரை செட் செய்து, ஜிபிஎஸ்-ஸை ஆன் பண்ணினார் சதீஷ். விருத்தாசலம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், பெரியகுளம், தேனி என்று ரூட் மேப் தெளிவாக வழி சொல்லியது. ''கார் கம்பெனிகள், இனிமேல் செடான் கார்களிலும் சாட்டிலைட் நேவிகேஷன் ஆப்ஷன் கொடுத்தால் நல்லா இருக்கும். இது மாருதியிலேயே சொல்லி எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் 8,000 ரூபாய்க்கு ஃபிட் பண்ணினோம்!'' என்றார் ஜெ.பி.
டிசையரின் விற்பனையை ஏன் இன்னும் எந்த செடான் காராலும் வீழ்த்த முடியவில்லை என்கிற காரணம், அதை ஓட்டி அனுபவித்தால்தான் தெரியும். 1248 சிசி கொண்ட 4 சிலிண்டர் டீசல் இன்ஜின், கியரைப் போட்டு கிளட்ச்சில் இருந்து காலை எடுத்ததும் சீறுகிறது. பெட்ரோல் இன்ஜினை விட 11bhp குறைவாக இருந்தாலும், பவர் டெலிவரி, பிக்-அப், பெர்ஃபாமென்ஸ் என்று எதிலும் குறை வைக்கவில்லை டிசையரின் டீசல் இன்ஜின். அதிலும், சில மலைக் கிராமங்களில் 'இவ்வளவு பெரிய மேட்டுல ஏறுமா?’ என்ற சந்தேகத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது டிசையர். லோ ரேஞ்ச், மிட் ரேஞ்ச், ஹை ரேஞ்ச் என்று எல்லா ரேஞ்சிலும் பவர்... பவர்... பவர்தான்.

எந்த அலட்டலும் இல்லாமல், நம் புகைப்பட நிபுணரையும் சேர்த்து நான்கு பேரையும் சுமந்துகொண்டு, 130 கி.மீ வேகத்தில் பெரம்பலூர் தாண்டி திருச்சியைக் கடந்தபோது, அந்த அதிசயம் நிகழ்ந்தது. எப்போதுமே வறண்டு கிடக்கும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களைப் புடம் போட்டு வார்க்கும் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்துக்கு அடியில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த சந்தோஷத்திலும் நமக்கு ஒரு 'தோஷம்’ என்னவென்றால், இது நேராக கடலில் போய்க் கலந்து வீணாகிறது என்பதுதான். ''நேத்து ஒரு நாள்ல மட்டும் கிட்டத்தட்ட 12 டிஎம்சி தண்ணி, காவிரியிலிருந்து கொள்ளிடம் வழியா கடலில் கலந்து வீணாப் போயிடுச்சு. இது ஒட்டுமொத்த சென்னையோட ஆறு மாசத்துக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யுமாம். PWD டிபார்ட்மென்ட், கொஞ்சம் கவனமா வேலை பார்த்து, குளங்களைத் தூர் வாரி, நீர்வழிப் பாதைகளை ஆக்கிரமித்திருக்கும் இடங்களை அகற்றியிருந்தால், இதைச் சேமிச்சு இருக்கலாம். தண்ணி குடுக்கலைனு சொல்றோம்; ஆனா, கிடைக்கிற தண்ணியைச் சேமிச்சுப் பாதுகாக்க மாட்டேங்கிறோம்!'' என்று பொலிடிக்கலாக ஃபீல் பண்ணிப் பேசினார் சதீஷ்.
திருச்சிக்குக் கொஞ்சம் தள்ளி மணிகண்டம் என்னும் இடத்தில் 'யு டர்ன்’ அடித்து, இடதுபுறம் திரும்பி திண்டுக்கல் பைபாஸை அடைந்திருந்தபோது, வயிற்றுக்குள் மதிய உணவு அலாரம் அடித்தது. சுமாரான மதிய உணவு அருந்திவிட்டு, மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தோம். வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி வழியாக பெரியகுளத்தை அடைந்தோம்.

''பெரியகுளம்னதும் நம்ம ஓபிஎஸ்தான் ஞாபகத்துக்கு வர்றாரு. இப்படி ஒரு விசுவாசி கிடைக்க அம்மா ரொம்பக் கொடுத்துவைக்கணும். அவரை மாதிரியே அவர் தொகுதியும் ரொம்ப அமைதியா இருக்கு!'' என்றார் ஜெ.பி.
பெரியகுளம் தாண்டியதும் வடபுதுப்பட்டியில் அழகான சாறலுடன் கூடிய சின்ன மழை பிடித்துக்கொண்டது. டிசையரில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என்பதால், வெளியே குளிர்ந்த காற்றுக்கு எதிராக உள்ளே லேசான வெதுவெதுப்பு பரவ ஆரம்பித்து, ரொம்ப சுகமாக இருந்தது.
பச்சைப் பசேல் வயல்களுக்கு மத்தியில் பயணித்து, கம்பம் வழியாக சுருளி அருவியை அடையத் திட்டம் போட்டோம். நினைத்தபடியே இருள்வதற்குள் சுருளியில் டிசையரை பார்க் செய்துவிட்டு, மழையில் மலையில் ஏறினோம். சுருளிக்குப் போகிறவர்களை காவல் துறையினர் கடுமையான சோதனைக்குப் பிறகே அனுப்புகிறார்கள். ''மலையில ஏறி சரக்கடிச்சுட்டு பாட்டிலை உடைச்சிப் போட்டுர்றானுக...'' என்றார் ஒரு காவல்துறை அதிகாரி. அதே போல், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் சுருளியில் தடை.

ஒவ்வொரு மரத்துக்கும், அதனுடைய பெயர், வரலாறு என்று அந்தந்த மரத்திலேயே போர்டு வைத்திருப்பது சுருளியின் ஸ்பெஷல். 'மலை மங்கை அணிந்திட்ட வெள்ளிக் கொலுசோ... கொடும்பாறை தன்னில் குளிராடி வந்தவளோ..’ என்று மொக்கையாய் கவிதை பாடியபடி அருவியில் நனைய ஆரம்பித்து இருந்தார்கள் அண்ணனும் தம்பியும். இருள் துவங்கும் நேரம் என்பதால், சுருளியில் அதற்குப் பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை. குளித்துவிட்டு இறங்கும்போது, லேசான இருள் கப்பியிருந்தது. வழியில் சில காட்டு அணில்களின் சத்தமும், அருவியின் இரைச்சலும் செம த்ரில்லிங் அனுபவமாக இருந்தது.
திரும்பி தேனியில் தங்கிவிட்டு, மறுநாள் கிளம்ப எத்தனிக்கையில், ''மோட்டார் விகடனா? கிரேட் எஸ்கேப்ல நானும் கலந்துக்கலாமா?'' என்று சதீஷிடம் கைகுலுக்கிக் கொண்டிருந்தார் தாஸ். அட.. 'நான் மகான் அல்ல’ வில்லன்... 'சூது கவ்வும்’ டாக்டர் என்றதும் சட்டென நினைவில் வருவாரே... அவரேதான்!

''நான் ஸ்விஃப்ட் வெச்சிருந்தேன். பெட்ரோல் போட்டு மாளலை! இப்போ ஃபோர்டு ஃபியஸ்டா கிளாஸிக் டீசல் வெச்சிருக்கேன். என் சாய்ஸ் ஓ.கே.வா?'' என்று ஐடியா கேட்டார் தாஸ் என்கிற அருள்தாஸ். டிசையரைக் கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்த்துவிட்டு, ''பரவாயில்லையே... பெர்ஃபாமென்ஸ் சூப்பரா இருக்கு. மைலேஜ்தான் எப்படின்னு தெரியலை?'' என்ற தாஸுக்கு, தனது டிசையர் கிட்டத்தட்ட 20 கி.மீ. மைலேஜ் தருவதாகச் சொன்னார் சதீஷ். டிசையரில் நடிகர் தாஸையும் சேர்த்து ஓவர் லோடு ஏற்றியபோதும், இந்தியன் இடி அமீன்களான ஸ்பீடு பிரேக்கர்களை அசால்ட்டாக எதிர்கொள்கின்றன முன் பக்க மெக்ஃபர்சன் ஸ்ட்ரட்டும், பின் பக்க டார்சன் பீம் சஸ்பென்ஷனும்!
போகிற வழியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இறங்கி, 'பை’ சொல்லிவிட்டுக் கிளம்பினார் தாஸ். 'தொப்பி’ படத்துக்காக தேனி வந்து தங்கியவரை எதேச்சையாகச் சந்தித்ததில் செம ஜாலியாக இருந்தனர் சதீஷ§ம் ஜெ.பி.யும்.
ஆண்டிப்பட்டி பக்கத்தில் 'மறவப்பட்டி’ என்னும் கிராமத்தில் 'விளக்குமாற்றடி திருவிழா’ செம ஃபேமஸ். ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கும் இந்தத் திருவிழாவில், மாமன்-மச்சான் போன்ற பங்காளிகள் ஒருவருக்கொருவர் விளக்குமாற்றால் நையப்புடைத்துக் கொள்வது இங்கே கொஞ்சம் ஜாலியாகவும், டெரராகவும் இருக்குமாம்.. 'டைம்பாஸ்லகூட படிச்சேன்!’ என்று சொல்லிவிட்டு, குரங்கணிக்கு ஜிபிஎஸ் சிஸ்டத்தை செட் பண்ணினார் சதீஷ்.

குரங்கணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்தான் பெரும்பான்மையான மலைக் கிராமத்துப் படங்களின் ஃபேவரைட் லொகேஷன்கள். கார்ப்பரேஷன் பள்ளி வாசல்களில் இருந்து ஜாலியாகப் பேசிக்கொண்டு, தெளிந்த நீரோடை போல குழந்தைகள் வீடு திரும்புவது, குரங்கணி போன்ற கிராமங்களுக்கு எக்ஸ்ட்ரா அழகு. பள்ளி முடிந்ததும், கலவரமாகி, ஏரியாவை டிராஃபிக் ஜாம் ஆக்கி, பிள்ளை பிடிப்பவர்களைப் போல பெற்றோர்களும், டிரைவர்களும் வெறிகொண்டு நிற்கும் தனியார் பள்ளிகள் இங்கு கிடையாது; நிமிடத்துக்கு ஒருமுறை எஸ்எம்எஸ்ஸில் குதூகலிக்கும் யுவதிகளோ, 'ஆன் தி வே டா மச்சான்’ என்று சீன் போடும் செல்போன் பார்ட்டிகளோ இங்கு கிடையாது; டூ-வீலர் கிடையாது; பணம் பிடுங்கும் மருத்துவமனைகள் கிடையாது; குழாயடிச் சண்டை கிடையாது. மொத்தத்தில் நகர வாழ்க்கைக்கு நல்ல சவால் விடுகிறது குரங்கணி.
இங்கு மெயின் பிசினஸே இலவ மரங்களிலிருந்து காய்கள் பறித்து, பஞ்சைப் பிரித்தெடுப்பதுதான். இலவம் பஞ்சு மெத்தை, தலையணை போன்றவைக்கு குரங்கணி பிரபலம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்நேரமும் இலவம் பஞ்சு அப்பிய உடம்புடனேயே அலைகிறார்கள். கிராமத்தின் மேலிருந்து விழும் அருவிக்கு 'கொட்டக்குடி ஆறு’ என்று பெயர். ஆறு இறங்கிய பகுதியிலேயே பயணித்தால், கொட்டக்குடி கிராமம் வருகிறது. இங்கு ஒரே ஒரு வீட்டில்தான் தொலைபேசி வசதி இருக்கிறது.

'ஊருக்கு மேலே கார் போக வழி கெடையாது. இங்கினயே நிப்பாட்டுங்க!’ என்று சொன்னார் ஒரு பெரியவர். பஞ்சு அப்பிய தலையுடன் ஒரு பெண், பரதேசி ஹீரோ ஸ்டைலில், ''நாளைக்கு ஷூட்டிங் இருக்கு.. வர்றவுக வர்லாம்... தலைக்கு 100 ரூவா..'' என்று அறிவித்து விட்டுச் சென்றார். கிராமத்தில் ஓரளவு படித்த பெண் என்பதால், அவருக்கு இந்தப் பொறுப்பு. ''சொய்ங் சொய்ங் பாட்டுல ஊர்ப் பெரியவர்கிட்ட செலவுக் காசு வாங்கும்ல ஒரு பொண்ணு... அது நாந்தேன்!'' என்றார் வெள்ளந்தியாய். 'கும்கி’, 'மைனா’ என்று பல படங்களில் நடித்த அனுபவம் இருக்கிறதாம் இவருக்கு.
'கும்கி’ புகழ் ஆற்றில் குளிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடக்கமாகப் பாய்ந்து கொண்டிருந்த அழகான ஆற்றில் முங்கிக் குளித்துவிட்டு, திரும்பவும் டிசையரில் ஏறினோம். சில்வண்டுக் குழந்தைகளும் வெள்ளந்திப் பெரியவர்களும் நம்மை டாட்டா காட்டி வழியனுப்ப, அந்திப் பொழுதில் மலைப் பாதைகளில் டிசையரின் டீசல் இன்ஜின், மலைக் கிராமத்தை மாசுபடுத்தாமல் இறங்கிக் கொண்டிருந்தது.
'இன்னொருவாட்டி எப்படியாவது குரங்கணிக்கு வந்துடணும்’ என்று என்னைப் போலவே காருக்குள்ளே இருந்த மற்ற மூவரின் மனசும் தனித்தனியே நிச்சயமாய் சபதம் பூண்டிருக்கும்.
