கார்ஸ்
Published:Updated:

ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!

ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!

 ##~##

ப்போதும் எனக்கு ட்ரெண்டியாக இருப்பது தான் பிடிக்கும். ஹேர் ஸ்டைல் முதல் மொபைல் போன், பைக் வரை எல்லாம் அப்படித்தான். ஸ்டைலிஷான டிசைனுக்காக நீண்ட நாள் காத்திருந்து வாங்கிய பைக் இது.

 ஏன் தண்டர்பேர்டு?

எந்த ஸ்டைல் பைக்காக இருந்தாலும், திருச்சியில் அறிமுகமானதுமே முதலில் அந்த பைக்கை வாங்கும் நபர் நானாகத்தான் இருக்க வேண்டும் என நினைப்பேன். ஏற்கெனவே அப்பாச்சி 150, கரீஸ்மா, ஆர்டிஆர்180 வைத்திருந்ததால், ஸ்போர்ட்டிவாகவும், அதேசமயம் எல்லா சிறப்பம்சங்களும் கொண்ட ஸ்டைலிஷான பைக் வாங்க வேண்டும் எனக் காத்திருந்தேன். அதற்கேற்றவாறு ராயல் என்ஃபீல்டில் 'டெஸர்ட் ஸ்டார்ம்’ வாங்கலாம் என திருச்சி என்.ஏ மோட்டார்ஸ் ஷோரூம் சென்று புக் செய்தேன். பைக் வர பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பது தெரியும்.

ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!
ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!

இதற்கிடையே புதிய தண்டர்பேர்டு அறிமுகமாக, ஷோரூமில் இருந்து என்னை அழைத்தனர். ஷோரூமில் புத்தம் புதிய தண்டர்பேர்டு பைக்கைப் பார்த்ததும் எனது எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். தண்டர்பேர்டு 350 பைக்கின் லுக் ரொம்பவே என்னைக் கவர, டெஸர்ட் ஸ்டார்ம் புக்கிங்கை கேன்சல் செய்துவிட்டு தண்டர்பேர்டு 350 பைக்கை புக் செய்தேன். தற்போது கிளாஸிக் கலெக்ஷன்தான் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு அதிகம் விற்கப்படுகிறது. கிளாஸிக் டிசைனிலும் சரி, நியூ டிரெண்டிலும் சரி, இரண்டு அம்சங்களையும் கொண்டிருந்தது தண்டர்பேர்டு 350.

ஷோரூம் அனுபவம்

புக் செய்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் தண்டர்பேர்டு கிடைத்தது. நினைத்தபடியே திருச்சியில் நான்தான் முதல் வாடிக்கையாளர். ஷோரூமில் உள்ள ஒவ்வொருவரும் பைக்கைப் பற்றி அனைத்தும் தெரிந்துவைத்திருந்தார்கள். ஒரு ஸ்க்ரூவின் சுற்றளவு முதல் பைக்கைப் பற்றி அவர்கள் விவரித்த விதம் அருமை. பைக் வாங்கிய பிறகு இதுவரை இரண்டு முறை ஃப்யூஸ் போனது. போன் செய்தவுடன் வீட்டுக்கே வந்து சரிசெய்து கொடுத்தார்கள். பைக் ஓட்டும் போது  ஹெல்மெட்டின் அவசியம் குறித்து அவர்கள் சொன்ன பிறகுதான், 4,500 ரூபாய்க்கு நல்ல ஹெல்மெட் வாங்கினேன். பைக்கை விற்க வேண்டும் என்ற நோக்கத்தைவிட, வாடிக்கையாளர் சேவைக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்த விதம் என்னை அதிகம் கவர்ந்தது.

மைலேஜ்?

மைலேஜைப் பொறுத்தவரையில் என் டிரைவிங் ஸ்டைலுக்கு லிட்டருக்கு 38 - 42 கி.மீ வரை தருகிறது. சமீபத்தில் ஊட்டி சென்று வந்தேன். கரெக்ட்டாக 40 கி.மீ மைலேஜ் தந்தது.

ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!

பெர்ஃபாமென்ஸ் எப்படி?

பக்கவாக இருக்கிறது. வழக்கமான புல்லட் சத்தம் இல்லை என்றாலும், நான் இதுவரை ஓட்டிய பைக்குகளிலேயே இதுதான் சிறந்த பைக். எவ்வளவு தூரம் ஓட்டினாலும் கொஞ்சமும் அலுப்பு இல்லை. அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகம் வரை சென்றிருக்கிறேன். மற்ற பைக்குகளைப்போல இல்லாமல், ஒரே சீராக வேகத்தை அதிகரிக்க முடிகிறது. 140 கி.மீ வேகத்தில் சென்றாலும், பைக் நம் கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சரியம். 350 சிசி இன்ஜினில் 20 லிட்டர் பெட்ரோல் நிரப்பலாம். ஒரு முறை டேங்க் நிரப்பினால் போதும், திருச்சியில் இருந்து சென்னை வரை சென்று வரலாம். ரோட்டில் போகும் எவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைப்பது இதன் சிறப்பம்சம்.

ப்ளஸ்

பின் பக்கமாகப் பார்த்தால், அச்சு அசல் ஹார்லி டேவிட்சன்தான். ஓடோ மீட்டர், ஃபியூல் இண்டிகேஷன் முதற்கொண்டு அனைத்தும் டிஜிட்டலைஸ் செய்யப் பட்டுள்ளது. பின்பக்கத்தில் எல்இடி லைட்ஸ், ஹெட்லைட்டில் புரொஜெக்டர் லேம்ப் என அட்டகாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்ஜின் வடிவம் அப்படியே மனதைக் கொள்ளை கொள்கிறது. ஊட்டிக்கு ரைடிங் சென்றபோது 70 - 80 டிகிரி கோணத்தில் இருந்த மலைகளில் ஏறும்போதுகூட, எந்தவித சலனமும் இல்லாமல் ஜிவ்வென்று ஏறுகிறது.

மைனஸ்

கறுப்பு தவிர மற்ற நிறங்களில் இந்த பைக் கிடைப்பது இல்லை. செல்ஃப் ஸ்டார்ட்டர், இரண்டு முறைக்கு மேல் இக்னீஷன் செய்தால்தான் ஸ்டார்ட் ஆகிறது. இது ஏன் என்றே புரியவில்லை. ஆனால் பழகிவிட்டதால், இது ஒரு குறையாக எனக்குத் தெரியவில்லை.

என் தீர்ப்பு!

புல்லட் பைக் வாங்க வேண்டும். கிளாஸிக்காகவும் ட்ரெண்டியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், நிச்சயம் இந்த பைக்கைப் பரிசீலிக்கலாம். 350 சிசி இன்ஜின் அளவு போதாது என நினைப்பவர்கள் இதிலேயே 500 சிசி பைக்கை வாங்கலாம். வாங்கும் முன் உடலைப் பலப்படுத்திக் கொள்வது மிக அவசியம் அப்போதுதான் பைக்கை லாவகமாகக் கையாள முடியும். அதேபோல், பராமரிப்பும் முக்கியம்.

ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க வேண்டும் என்று ஆசை. ஆனால், பட்ஜெட் தாங்காது என்றால், தாராளமாக தண்டர்பேர்டு வாங்கலாம். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை இது ஒரு மினி ஹார்லி டேவிட்சன்.

ரீடர்ஸ் ரிவியூ - மினி ஹார்லி!