ஹலோ ரோடு டெஸ்டிங்... ஒன்...டூ... த்ரீ...
##~## |
'விருப்பம்போல நம் வாகனத்தை ஓட்டிப் பார்க்க சாலைகள் இல்லையே!’ என்ற ஏக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு எல்லோரும் ரேஸ் டிராக் போக முடியாது. நால்வழிச் சாலையில் எந்த த்ரில்லும் இல்லாமல் வேகமாகப் பறப்பது மட்டுமே ஒருவரின் இந்த தாகத்தைத் தீர்த்துவிடாது.
ஓட்டுதல் அனுபவம் என்பது ஒற்றைச் சாலை; வளைவு நெளிவுகள், ஏற்ற இறக்கங்கள் கொண்ட மலைச் சாலை எனப் பல்வேறுவிதமான பரிமாணங்களில் கிடைக்கும்போதுதான், ஒருவர் தனது கார் அல்லது பைக்கின் முழுத் திறனையும் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட சாலைகள் தமிழகத்திலும் தென் மாநிலங்களிலும் எங்கெங்கு இருக்கின்றன என்று தெரியுமா? அதில் கார் அல்லது பைக் ஓட்டிய உங்கள் அனுபவத்தை இங்கே நீங்கள் மற்ற வாசகர்களோடு தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம். நீங்கள் குறிப்பிடும் சாலையின் புகைப்படத்தை இணைத்து அனுப்புவது அவசியம்.

தேன்கனிக்கோட்டை டு ஒகேனக்கல்
எஸ்யூவி, 4 வீல் டிரைவ், ஆஃப் ரோடிங் வகை வாகனங்கள் வைத்திருப்பவர்கள், தங்களது வாகனத்தின் சகலவிதமான திறன்களையும் பரிசோதிக்க, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் இருந்து, ஒகேனக்கல் வரை நீளும் சுமார் 64 கி.மீ சாலை ஏற்றது. பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக ஒகேனக்கல் வரை செல்கிறது இந்தச் சாலை. சமவெளி, மேடு பள்ளங்கள், கொண்டை ஊசி வளைவுகள் என அனைத்தும் ஒருங்கேகொண்டது இந்தச் சாலை.
சஸ்பென்ஷன், பாடி ரோல், ஸ்டெபிளிட்டி, ஸ்டீயரிங் கன்ட்ரோல், டயர் கிரிப், பிரேக் எஃபெக்ட் போன்ற விஷயங்களை இந்தச் சாலையில் மிக நன்றாக டெஸ்ட் செய்ய முடியும். அதிகபட்சம் 60 கி.மீ வேகத்துக்கு மேல் இந்தச் சாலையில் செல்வது பாதுகாப்பானது அல்ல. எனவே, மிதமான வேகத்தில் செல்வதுதான் ஓட்டுதல் சுகத்தை உணர உதவும். வளைத்து, திருப்பி, ஏறி இறங்கி, மிதந்து, தடதடத்து என இந்தச் சாலை தரும் அனுபவம்... ஓட்டிப் பார்த்தால் மட்டுமே உணர முடியும்!

