கார்ஸ்
Published:Updated:

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2

விலை குறைவு... ஆனால்?

 ##~##

ந்தியாவின் விலை குறைவான டீசல் கார், டாடா இண்டிகா இவி2 கார்தான். இதை 'இந்தியாவின் பாப்புலர் கார்’ என்றும் சொல்லலாம். நிச்சயம் ஒரு முறையாவது இந்த இண்டிகா காரில் பயணித்திருப்பீர்கள். காரணம், இந்தியா முழுக்க டாக்ஸி மார்க்கெட்டில் இண்டிகா தான் கிங்! அதிக மைலேஜ், குறைந்த விலையை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் இண்டிகாவை, டாக்ஸி மார்க்கெட்டைத் தாண்டி வாடிக்கையாளர்களின் வீட்டில் முதல் காராக கொண்டு வர படாதபாடு படுகிறது டாடா. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த இண்டிகாவில் மாற்றங்கள் செய்துவருகிறது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் இண்டிகா eV2. பட்ஜெட் குறைவுதான் என்பவர்களுக்கான முதல் காராக இருக்குமா இண்டிகா?

 டிசைன்

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1999-ம் ஆண்டு இண்டிகாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது டாடா. இந்த 15 ஆண்டுகளில் இண்டிகாவின் தோற்றத்தில் பெரிய மாற்றம் எதையும் டாடா செய்துவிடவில்லை. புதிய இண்டிகா eV2 மாடலின் கிரில்லில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஹெட்லைட்டை ஸ்டைலாக மாற்றியிருக்கிறது. பக்கவாட்டுக் கண்ணாடிகளில் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் பின் பக்கத்தைப் பொறுத்தவரை, ஒற்றை க்ரோம் பட்டையோடு முடித்துக்கொண்டது டாடா.

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2

காரின் வெளிப்பக்கத்தைவிட, உள்பக்கத்தில் பல மாற்றங்களைக் காண முடிகிறது. கறுப்பு வண்ண டேஷ்போர்டில், பழுப்பு வண்ண சென்டர் கன்ஸோல் ஈர்க்கிறது. மியூசிக் சிஸ்டம், ப்ளூடூத் மற்றும் பென் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. பக்கவாட்டுக் கண்ணாடிகளை உள்ளுக்குள் இருந்தே பட்டன் மூலம் இயக்க முடியும் என்பதோடு, நான்கு கதவுகளுக்கும் பவர் விண்டோஸ் வசதி உண்டு. ஆனால், இந்த பட்டன்களை இயக்குவதுதான் சிரமம். கியர் லீவருக்கு அருகில் பட்டன்கள் வைக்கப்பட்டு இருப்பது, ஏற்றி இறக்க வசதியாக இல்லை.

இட வசதியைப் பொறுத்தவரை, இண்டிகாவில் எந்தக் குறையும் இல்லை. ஐந்து பேர் வசதியாக உட்காரலாம். ஆனால், இன்னமும் இண்டிகாவில் காரை ஓட்டுபவருக்கு வசதியாக, பெடல்களை வைக்க டாடா டிசைனர்கள் கற்றுக்கொள்ளவில்லை. நீண்ட நேரம் ஓட்டும்போது, கால்களுக்கு நாமே தண்டனை வழங்குவதுபோல இருக்கிறது.

டிக்கி இட வசதியைப் பொறுத்தவரை 220 லிட்டர் கொள்ளளவு கொண்டது என்பதால், அதிகப் பொருட்களை வைக்க முடியும். பின்பக்க இருக்கைகளை மடக்கிவிடும் வசதியும் உண்டு.

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2

இன்ஜின்

இண்டிகா விஸ்ட்டாவில் ஃபியட்டின் 1.3 மல்ட்டிஜெட் இன்ஜின் இருக்க, இண்டிகா eV2-ல் டாடா தயாரிப்பான 'டைகார்’ இன்ஜின் இடம் பெற்றுள்ளது. விஸ்ட்டாவைவிட 1 லிட்டர் அதிக திறன்கொண்டது டாடாவின் இந்த டீசல் இன்ஜின். பிஎஸ்-3, பிஎஸ்-4 என இரண்டு எமிஷன் அளவுகள்கொண்ட இரண்டு இன்ஜின் மாடல்களுடன் விற்பனைக்கு வருகிறது டாடா இண்டிகா eV2. இதில், நாம் டெஸ்ட் செய்தது 1396 சிசி திறன்கொண்ட பிஎஸ்-4 இன்ஜின். இது, அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்-ல் 70 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. இதே இன்ஜின், இண்டிகோ இசிஎஸ் மாடலிலும் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழைய இண்டிகாவைவிட, புதிய இண்டிகாவின் ட்யூனிங்கில் மாற்றம் இருப்பது தெரிகிறது. நகருக்குள் பயணிக்க மிகவும் ஈஸியாக இருக்கிறது. மூன்றாவது கியரில் 25 கி.மீ வேகத்துக்கு இறங்கினால்கூட இன்ஜின் ஆஃப் ஆகவில்லை. இதனால், நகரின் டிராஃபிக் நெருக்கடிகளில் இதை நம்பி ஓட்டலாம். பழைய கியர்பாக்ஸில் இருந்த லிங்கேஜ் ஷிஃப்ட்டுக்குப் பதிலாக, இதில் 'டிஏ-65’ எனப்படும் கேபிள் ஷிஃப்ட் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், அதிர்வுகள் குறைந்திருக்கின்றன. கியர் லீவரும் மாற்றுவதற்கு எளிதாகவே உள்ளது. ஆனால், கியர்களை மாற்ற நீண்ட தூரம் கையைக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்த வரை நகருக்குள் பயணிக்க எளிதாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, 100 கி.மீ வேகத்தைத் தாண்டினால், இன்ஜின் சத்தமும் அதிர்வுகளும் அதிகமாக ஆரம்பித்துவிடுகிறது.

0-100 கி.மீ வேகத்தைக் கிட்டத்தட்ட 15 விநாடிகளில் கடக்கிறது இண்டிகா eV2.

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2

கையாளுமை

ஸ்டீயரிங் - நகருக்குள் வளைத்து, நெளித்து, திருப்பி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே அமைந்திருக்கும் சாலையில் இதன் சஸ்பென்ஷனை டெஸ்ட் செய்தோம். கரடுமுரடான சாலையான இதில் பயணித்தபோதும் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இல்லை. காரின் பில்டு குவாலிட்டியும், பிளாஸ்டிக் குவாலிட்டியிலும் டாடா இன்னமும் முழுமையாகக் கவனம் செலுத்தவில்லை. சிகரெட் சார்ஜருக்கு மேலே இருக்கும் மூடியை இறுதிவரை எங்களால் மூடவே முடியவில்லை. அதேபோல், யுஎஸ்பி போர்ட்டுக்கு மேலே வைக்கப்பட்டு இருக்கும் மூடி, எந்த நேரத்திலும் உடைந்துவிடும் என்பதாகவே இருக்கிறது. பேனல்களுக்கு இடையே அதிக இடைவெளிகள் இருப்பதும், பில்டு குவாலிட்டி சுமாராக இருப்பதற்கான அடையாளங்கள். ஏபிஎஸ், காற்றுப் பைகள் என எந்தப் பாதுகாப்பு வசதிகளும் கிடையாது.

மைலேஜ்

பில்டு குவாலிட்டி, தரமற்ற பிளாஸ்டிக்ஸ் போன்ற குறைகள் மைலேஜ் பக்கம் வந்ததும் மறந்துவிடுகிறது. நகருக்குள் லிட்டருக்கு 15 கி.மீ வரை மைலேஜ் தருகிறது இண்டிகா. நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 20 கி.மீ மைலேஜைத் தொடுகிறது.

விலை

வசதிகள் அதிகம்கொண்ட எல்எக்ஸ் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 5.92 லட்சம். இதன் போட்டியாளரான ஏபிஎஸ், காற்றுப் பைகள் இல்லாத செவர்லே பீட் எல்டி மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 6.53 லட்சம். அதேபோல் ஃபோர்டு ஃபிகோ க்ஷ்ஜ்வீ மாடலின் விலை 6.72 லட்சம். ஃபிகோவில் பின் பக்க கதவுகளில் பவர் விண்டோ ஆப்ஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2

காசு அதிகம் இல்லை; அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் இன்ஜின் வேண்டும் என்றால், டாடா இண்டிகாவை வாங்கலாம். போட்டி கார்களைவிட கிட்டத்தட்ட 60 ஆயிரம் ரூபாய் விலை குறைவு என்பதோடு, மைலேஜும் அதிகம். ஆனால், தரத்திலும் பில்டு குவாலிட்டியிலும் இது, போட்டி கார்களைவிட சிறந்த கார் இல்லை. நகருக்குள்தான் அதிகமாகப் பயணம் செய்வேன்; பட்ஜெட் குறைவாக இருக்க வேண்டும் என்பவர்கள் வாங்கலாம். மற்றவர்களுக்கு இதைவிட நல்ல ஆப்ஷன் மார்க்கெட்டில் நிறைய இருக்கிறது!

டெஸ்ட் டிரைவ் - டாடா இண்டிகா eV2