
நெடுஞ்சாலை வாழ்க்கை!

சேலத்தில் இருந்து கொல்கத்தா வரை நீளும் இந்தப் பயணத்தில், நான்காவது நாள் விசாகப்பட்டினம் தாண்டி ஒடிசா எல்லைக்கு முன்பாக உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பாதுகாப்பாகத் தூங்கி எழுந்தபோது, அதிகாலை 5 மணி. அனைவரும் பயணத்துக்கு ஆயத்தமானோம். அடுத்தது, இச்சாபுரம். இந்த ஊர்தான் ஆந்திரா - ஒடிசா எல்லை. ஆந்திர அரசின் ஐந்து துறைகளின் செக்போஸ்ட்டில் முத்திரைகள் வாங்கிக்கொண்டு, ஒடிசாவுக்குள் நுழைய வேண்டும்.
##~## |
''இச்சாபுரத்தில் எனக்குக் கொஞ்சம் வாடகை பாக்கி வாங்க வேண்டி இருக்கிறது. எனவே, ஊருக்குள் செல்ல வேண்டும். அங்கு வேலை முடிந்ததும் பின்பு செக்போஸ்ட் கடக்கலாம்'' என்றார் முருகன். நான்கு வழிச் சாலையில் இருந்து இச்சாபுரம் ஊருக்குள் நுழையும் சிறு சாலையில் லாரியைத் திருப்பினார் முருகன். சட்டென்று லாரிக்கு முன்னால் 10 வயது சிறுவன் ஒருவன் சைக்கிளுடன் வந்து மறித்தான்.
என்ன எனக் கேட்டபோது, கையில் இருக்கும் ரசீதுப் புத்தகத்தைக் காட்டினான். அருகே வருமாறு அழைத்ததும் சைக்கிளை நடு சாலையில் லாரியின் முன்பாகப் போட்டுவிட்டு வந்து ரசீதைக் காண்பித்தான். அது, ஏதோ ஒரு கோயில் நன்கொடை ரசீது. அதில், ஓர் அரசியல்வாதி கைகூப்பி நிற்பது போன்ற படம். எவ்வளவு என்று கேட்டபோது, '300 ரூபாய்’ என்றான் சிறுவன். முடியாது என்று முருகன் மறுக்கவும், ''லாரியை உள்ளே விட மாட்டேன்'' என அந்தப் பத்து வயதுச் சிறுவன், முருகனை மிரட்டினான். அருகே இருந்த கடைக்காரர், ''பணம் கொடுத்தால்தான் செல்ல முடியும். இல்லாவிட்டால் அவன் அவர்களுடைய ஆட்களை அழைத்து வருவான்'' என எச்சரித்தார். வேறு வழியில்லாமல் அவனிடம் 300 ரூபாய் கொடுத்துவிட்டு இச்சாபுரத்தில் நுழைந்தோம். ''கோயில் நன்கொடை ரசீது என்பது பெயருக்குத்தான். இது ரவுடி மாமூல். இது வட மாநிலங்களில் சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பதற்குத்தான் யாரும் இல்லை'' என அலுத்துக்கொண்டார் முருகன்.

இச்சாபுரம் செக்போஸ்ட்டில் முத்திரை வாங்க 1,250 ரூபாய் கட்டணம். டிரைவர்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது. முத்திரை வாங்கித் தருவதற்கு என்றே ஏராளமான புரோக்கர்கள் நடமாடுகிறார்கள். ஒவ்வொரு லாரியாக வந்து முத்திரை வாங்க வேண்டுமா என விசாரிக்கிறார்கள். அவர்களுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சர்வீஸ் சார்ஜ். முத்திரை வாங்கிக்கொண்டு ஒடிசாவுக்குள் நுழைந்தோம்.
ஒடிசாவில் ரம்பா மலை என்ற இடம் இருக்கிறது. கவர்ச்சியான பெயரைக்கொண்ட இந்த இடத்தை டிரைவர்கள், ''ஈரக்குலை நடுநடுங்கக் கடக்க வேண்டிய இடம் இது'' என்கிறார்கள். வங்காள விரிகுடாக் கடல் ஓரத்திலிருந்து நிலம் நோக்கி நீளும் மலைத் தொடரை, குறுக்கே சாலையில் கடக்கும் இடம். 'அன்பே சிவம்’ திரைப்படத்தில், கமலும் மாதவனும் பஸ் மீது பயணிக்கும் பாடல் காட்சி இந்த இடத்தில் படம் பிடிக்கப்பட்டதுதான். ஏரி, மலை, சாலை என அபாரமான லொக்கேஷன். ஆனால், லாரி டிரைவர்களுக்கு இந்த இடம் டெரர் கிளப்பும் இடம். ஒற்றைச் சாலையாக இருந்த காலத்தில், இந்த இடத்தில் கன ரக வாகனங்கள் 'எக்ஸ்ட்ரா கியர்’ எனச் சொல்லப்படும் லோடு கியரில்தான் ஏற முடியும்(இப்போதும் அப்படித்தான்). மணிக்கு 10 கி.மீ வேகத்துக்கு மேல் லாரி நகராது.

மலையேறுவதற்கு முன்பாக, ரம்பா கிராமத்தில் நுழைந்து அங்கே இருக்கும் ரயில்வே கிராஸிங்கைக் கடந்துதான் இந்த மலை மீது ஏற வேண்டும். இரவில், ரயில்வே கிராஸிங்கைக் கடக்க ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கும்போது, தயாராகக் காத்திருக்கும் கொள்ளையன் லாரியின் பின் பக்கம் ஏறிவிடுவான். மலை ஏறிக்கொண்டு இருக்கும்போது, லாரியில் இருக்கும் தார்ப்பாய் கிழிக்கப்படும். பின்பு, ஒவ்வொரு பொருளாக சாலையில் தூக்கிப் போட்டுக்கொண்டே வருவான். லாரியைப் பின்தொடர்ந்து வாகனத்தில் வரும் கொள்ளையனின் கூட்டாளிகள், கீழே விழுவதை சேகரித்துக்கொண்டே வருவார்கள். உயரமான மேட்டில் அதிகச் சத்ததுடன் லாரி ஏறும்போது, பின்னால் நடப்பது எதையும் டிரைவர் உணர முடியாது. பக்கவாட்டில் கடந்துபோகும் வாகனங்கள் சமிக்ஞை காட்டினால்தான் உண்டு. தனது லாரியில் பொருள் கொள்ளை போவது தெரிந்தாலும், அந்த மேட்டில் லாரியை நிறுத்தவும் முடியாது. நிறுத்தினாலும் கூட்டமாக இருக்கும் கொள்ளையர்களிடம் இருவராக இருக்கும் டிரைவர்களால் எதுவும் செய்ய முடியாது. அப்படியே தடுக்க முயற்சித்தாலும் ஆயுதங்களால் தாக்கப்படுவார்கள்.
இப்படிப்பட்ட இந்த இடத்தில், தற்போது நால்வழிச் சாலைக்காக மேடு ஓரளவு கரைக்கப்பட்டு இருந்தாலும், லாரிகள் மிக மெதுவாக ஊர்ந்துதான் மேட்டில் ஏற முடிகிறது. அதனால், பெரும்பான்மையான லாரிகள் இரவில் இந்த இடத்தைக் கடப்பது இல்லை. அப்படியே கடக்க வேண்டும் என்றால், பல லாரிகள் ஒன்று சேர்ந்து செல்கின்றன. நம் நாட்டில் நெடுஞ்சாலையில் கொள்ளைகள் நடப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கும்பல்களைத் தடுக்க முடியாத காரணம் என்ன என்பது போலீஸுக்கே வெளிச்சம்.
லாரியில் இருக்கும் பொருள் என்ன என்பதை, அது தார்ப்பாய் போட்டுக் கட்டப்பட்டு இருக்கும் விதத்திலேயே சொல்லிவிடுகிறார்கள் டிரைவர்கள். கொள்ளையர்களும் இதில் எக்ஸ்பெர்ட். விலை உயர்ந்த சரக்கு என்றால், அதைக் கொண்டுபோய் சேர்ப்பதற்குள் டிரைவருக்குத் தாவு தீர்ந்து விடும். திருடு போகும் பொருளுக்கு லாரி உரிமையாளர்தான் பொறுப்பு. அவருக்குப் பதில் சொல்ல வேண்டியது டிரைவர்தான்.
திருட்டுக் கொடுக்கும் எந்த டிரைவரும் நெடுஞ்சாலையில் உள்ள எந்தக் காவல் நிலையத்துக்கும் செல்ல விரும்புவதே இல்லை. காரணம், காவல் துறையினர் இவர்கள் பக்கமே திரும்பிவிடுவதுதான். ''நீயே திருடி விற்றுவிட்டு புகார் கொடுக்கிறாயா?'' என சாத்திவிடுவார்கள். திருடு போன பொருளுக்கான பணத்தை உரிமையாளரும் டிரைவரும்தான் செலுத்த வேண்டும் என்பதால், லட்சக்கணக்கில் பணத்தை இழப்பதும் இந்தத் தொழிலில் சகஜம். பணம் கட்ட முடியாத அளவுக்குப் பொருள் மதிப்பு அதிகமாகும்போதுதான், பொருளின் சொந்தக்காரர்களால் டிரைவர்கள் அடித்துச் சித்ரவதை செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் ஆங்காங்கே நடக்கிறது.
அதேபோல், லாரியின் தார்ப்பாய் (மதிப்பு 20,000 ரூபாய்.) பாரக் கயிறு (ரூ. 7,000) பேட்டரி (ரூ.12,000) ஆகியவற்றை திருடுவதற்கு என்றே பல கும்பல்கள் நெடுஞ்சாலையில் அலைகின்றன. பயணத்தின் ஒவ்வொரு கணமும் விழிப்புடன் இருந்து தமது உடைமைகளைப் பாதுகாக்காவிட்டால், உழைப்பும் விழிப்பும் வீணாகிவிடும்.
அயராமல் பாடுபடும் டிரைவர்களின் வாழ்க்கைமுறை, வேறு யாரும் வாழ விரும்பவே முடியாது. லாரியிலேயே சமைத்துச் சாப்பிட்டு, திறந்தவெளியில் கழித்து - குளித்து, மழை - வெயில், இரவு - பகல் பாராமல் நகர்ந்துகொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு அல்லல்படும் இவர்களை ஒருங்கிணைக்க, துயர் துடைக்க நம் நாட்டில் இதுவரை நாதி இல்லை!
- நெடுஞ்சாலை நீளும்
தவணையே தவம்!

பத்து டயர்கள் கொண்ட அசோக் லேலாண்ட் புதிய டாரஸ் லாரியின் சேஸி, சுமார் 18 லட்சம் ரூபாய். பாடி கட்டுவதற்கு சுமார் 4 லட்சம் ஆகும். சாலை வரி, நேஷனல் பெர்மிட், இன்ஷூரன்ஸ் எல்லாம் செலுத்தி சாலைக்குக் கொண்டுவர சுமார் 23 லட்சம் ஆகும். ஐந்து ஆண்டுகள் ஓடிய பழைய டாரஸ் லாரியை 11.5 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் சிவக்குமார். இதில், 7 லட்சம் ரூபாய் வங்கிக் கடன். மாதத் தவணை 25 ஆயிரம் ரூபாய். மொத்தம் 41 தவணைகளை எந்தத் தாமதமும் சிக்கலும் இல்லாமல் செலுத்தி முடித்தால்தான், லாரி அவருக்குச் சொந்தமாகும். தவணை தவறினால், லாரி பறிபோய்விடும். மாதத் தவணை 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50,000 ரூபாயாவது லாபமாகக் கிடைத்தால்தான், டிரைவர்களுக்கான சம்பளம் கொடுக்க சரியாக இருக்கும்!
