528 கிமீ ரேஞ்ச்... சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்... V2V சார்ஜிங் - கலக்க வரும் கியா EV6...

சட்டென லாங் ஷாட்டில் பார்க்கும்போது, என்னடா ஜாகுவார் ஐ–பேஸ்தான் நிக்குதோ என்று சந்தேகப்பட்டுப் போனேன். இது பில்ட்அப் இல்லை உண்மைதான். சரிந்து விழும் கூரை, முன் பக்கம் அந்த கிரில், க்ராஸ்ஓவரா எஸ்யூவியா என்று நம்மை மெஸ்மரிசம் செய்யும் டிசைன் என அப்படித்தான் இருந்தது கியா EV6.
ஹூண்டாய் என்ன செய்தாலும், கியாவும் அதை ரிப்பீட் செய்யும். ஹூண்டாயில் இருந்து க்ரெட்டா வந்தால், கியாவில் இருந்து செல்ட்டோஸ் வரும். ஹூண்டாய் வென்யூ வந்தால், கியா சோனெட் வரும். அல்கஸாரின் அண்ணனாக காரன்ஸ் கொண்டு வந்தது கியா. (கார்னிவல் எதைப் பார்த்து வந்துச்சுனுலாம் குறும்பா கேட்கப்புடாது!) அதேபோல், ஹூண்டாய் 2019–ல் கோனா எனும் எலெக்ட்ரிக் காரை லாஞ்ச் செய்தபோதே எதிர்பார்த்தோம். கியாவில் இருந்து எலெக்ட்ரிக் கார் வருமா என்று! `நிரோ’ என்றொரு எலெக்ட்ரிக் கார் வரும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் லேட்டாக, செம க்யூட்டாக ஒரு க்ராஸ்ஓவர் எலெக்ட்ரிக் காரைக் கொண்டு வந்திருக்கிறது கியா. அது, EV6. ஆனால், கோனாவைவிட ஒரு படி.. இல்லை சில படிகள் மேலே (விலையைத்தாங்க சொல்றேன்!) இதை பொசிஷன் செய்து கொண்டு வந்திருக்கிறது கியா.
கியாவின் EV6–ன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் காரைச் சுற்றிப் பார்க்க, நம்மை டெல்லிக்கு அழைத்திருந்தது கியா. ஓட்ட முடியலைன்னாலும் கியா EV6, நன்றாகவே இம்ப்ரஸ் செய்தது. அதன் அனுபவம் இங்கே!
வெளித்தோற்றம்
கியாவின் 5–வது காராக இருந்தாலும், EV6 தயாரிக்கப்பட்டிருப்பது புத்தம் புது ப்ளாட்ஃபார்ம். அதன் பெயர் E-GMP (Electric - Global Modular Platform). இதற்கும் ஹூண்டாயோடு தொடர்பு உண்டு. ஆம், ஐயனிக் க்யூ5 என்றொரு கார் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதன் ப்ளாட்ஃபார்மில்தான் கியா EV6–ம் ரெடியாகி இருக்கிறது. இந்த காரின் நீளம் 4,695 மிமீ. அகலம் 1,890 மிமீ. இது பெரிய எக்ஸ்யூவி 700–க்கு இணையான டைமென்ஷன்கள்.
ஆனால், சட்டென லாங் ஷாட்டில் பார்க்கும்போது, என்னடா ஜாகுவார் ஐ–பேஸ்தான் நிக்குதோ என்று சந்தேகப்பட்டுப் போனேன். இது பில்ட்அப் இல்லை உண்மைதான். சரிந்து விழும் கூரை, முன் பக்கம் அந்த கிரில், க்ராஸ்ஓவரா எஸ்யூவியா என்று நம்மை மெஸ்மரிசம் செய்யும் டிசைன் என அப்படித்தான் இருந்தது கியா EV6.
எல்லாமே கட்டிங் எட்ஜ் தொழில் நுட்பத்தின்படி டிசைன் செய்யப்பட்டிருக் கிறது EV6. கியாவின் ஃபேவரைட்டான புலி மூக்கு கிரில்லை இப்போது காலத்துக்கு ஏற்றபடி டிஜிட்டலைஸ் ஆக்கியிருக் கிறார்கள். அதாவது, டிஜிட்டல் டைகர் நோஸ் கிரில். பெரிய டிஆர்எல்களுடன் புகுத்தப்பட்டிருக்கும் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் அருமை. முத்துச்சிப்பி வடிவில் உள்ள காரின் பானெட்டுக்குக் கீழே காரை முழுவதும் நிரப்பும் அகலமான கிரில்… பானெட்டின் மேலே ஷார்ப்பான க்ரீஸ் டிசைன் என எல்லாமே கலக்கல்.
காரின் மேல் பக்கம் அந்த ரூஃப்லைன் சரிந்து விழுவதுதான் கொள்ளை அழகாக இருக்கிறது. அது எங்கே முடிகிறது என்று பார்த்தால்… ஸ்பாய்லரில். அப்படியென்றால், காரின் பின் பம்பர் வரை ரூஃப் விழுகிறதா என்றால் இல்லை; இதில் புதுமையாக ஸ்பாய்லரை காரின் மேலேயே வைத்திருக்கிறார்கள். பக்கவாட்டில் இரண்டு விங் இறக்கைகள் போல் ஒரு டிசைன். அந்த ரெஃப்லெக்டர் லைட்கள்கூட செம! முன் பக்கம் குறுகலமான, நீளமான கிரில்லைப் போலவே இந்த லைட்டையும் காரின் அகலம் முழுக்க ஒல்லியாக டிசைன் செய்திருப்பது அருமை. இவையெல்லாமே காரின் ஏடோடைனமிக் டிசைனுக்காகப் பார்த்துப் பார்த்துப் பண்ணப்பட்டவையாம்.

இதன் டோர் ஹேண்டில்கள், ஒரு மாதிரி சாஃப்ட் டச்சில் கொடுத்திருக்கிறார்கள். ஃப்ளஷ் பட்டன் ஸ்டைலில் நன்றாகவே இருக்கின்றன. இங்கேயும் ஒரு கேரக்டர் கோடு கார் முழுக்கப் பயணித்து, அப்படியே பின்னால் டெயில் லைட் வரை போகிறது. டர்ன் சிக்னல் இண்டிகேட்டர்களுக்குக் கீழே ஒரு க்ரோம் லைன் வேலைப்பாடு அருமை.
எஸ்யூவி என்பதால், 19 இன்ச் அலாய் வீல்கள் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் காரின் ஸ்டைலுக்கு மட்டுமில்லை; வேகத்துக்கும் நன்றாக ஈடு கொடுக்கும். சில கார்களில் வீல்கள் பக்கத்தில் இடைவெளி இருக்கும்; இதில் அப்படியில்லை. பின் பக்கம் டிஸ்க் பிரேக்ஸ் மற்றும் கேலிப்பர்கள் கொடுத்திருக்கிறார்கள். நச்சென இருக்கிறது. இதை ஜாகுவாருடன் ஒப்பிட்டதற்கு இன்னொரு காரணமும் உண்டு. இதன் Co-Efficient Drag என்று சொல்லக்கூடிய ஏரோ டைனமிக் அளவு ஜாகுவாரை நெருங்குகிறது. ஜாகுவார் ஐபேஸுக்கு 0.29 என்றால், EV6–க்கு 0.28. மொத்தத்தில், EV6 ரொம்பவே மாடர்னான லுக்கில்… ‘வாவ்’ என வாய் பிளக்க வைத்தது என்பது உண்மைதான்.
இன்டீரியர் டிசைன்
கியா EV6–ல் உள்ளே போக வாய்ப்புக் கிடைத்தது. வெளிப்பக்கம் போலில்லை; உள்பக்கம் புதுமையாகவும், கொஞ்சம் ப்ராக்டிக்கல் வசதிகளை மையப்படுத்தியும் டிசைன் செய்திருக்கிறது கியா டிசைன் டீம். இதன் ஃப்ளோர் மேட்களையும், டோர் பேடுகளையும் ரீசைக்கிள் செய்யப்பட்ட மெட்டீரியல்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.
பழைமை மாறாமல், அதேநேரம் ஓவர் புதுமையையும் புகுத்தாமல் இதன் டேஷ்போர்டு டிசைன் இருக்கிறது. ஆனால், அந்த நீளமான டச் ஸ்க்ரீனுக்கு ஒரு வாவ் போட வேண்டும். குட்டி சன் ரூஃப் கொடுத்திருக்கிறார்கள். கியர் நாப் ரோட்டரி ஸ்டைலில் இருந்தது.

முக்கியமாக, இந்த EV6–ல் ஏகப்பட்ட ஸ்டோரேஜ் இடவசதி கொடுத்திருக் கிறார்கள். அதுவும் பெருசு பெருசாக! உதாரணத்துக்கு, சென்டர் கன்சோல் அப்படியே ஃப்ளோட்டிங் ஸ்டைலில் மிதப்பது புதுமை என்றால், அதிலேயே ஒரு லேடீஸ் ஹேண்ட் பேக் வைக்கும் அளவு இடவசதி கொடுத்திருப்பது இனோவேஷன். ஆர்ம்ரெஸ்ட்டுக்குக் கீழே கையை விட்டால்… அதுவும் ஆழமாகப் போகிறது. நிறைய பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். க்ளோவ் பாக்ஸும் பெருசு. இதன் HVAC (Heat Ventilation and Air Conditioning) சிஸ்டத்தை முன் பக்கம் கொடுத்திருக் கிறார்கள். இது டாகிள் செய்யும்போது, சாலையில் இருந்து பார்வையை எடுத்தாக வேண்டும். மற்றபடி ஓவர்ஆலாக ஃபின் அண்ட் ஃபினிஷ், ப்ளாஸ்டிக் தரம் என்று எல்லாமே ப்ரீமியம்!
சீட் இடவசதி
முன்பக்கம் சீட்டில் உட்கார்ந்தால் டிரைவிங் பொசிஷன் பக்காவாக இருக்கிறது. மெமரி சீட்டுக்கு பட்டன் வசதி கொடுத்திருக்கிறார்கள். இதன் லேசான ஃப்ளாட் பாட்டம் லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல்கள் பக்கா! பேடில் ஷிஃப்டர்கள் இருந்தன. (ஆனால், ஓட்ட முடியவில்லையே!). ஆர்ம்ரெஸ்ட் கையை வைத்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது.
இதன் வீல்பேஸ் 2,900 மிமீ. இந்த செக்மென்ட்டின் அதிக வீல்பேஸ் EV6–ல் என்று சொல்லலாம். காரணம், பெரிய எக்ஸ்யூவி 700–ன் வீல்பேஸைவிட இது 150 மிமீ அதிகம். அதனால், இடவசதியைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. லெக்ரூம் ஓகே இல்லை; பக்கா ஓகே! எந்தளவு என்றால், முன் பக்கம் உயரமான ஒருவர் உட்கார்ந்து, அவருக்கு ஏற்ப சீட்டை நன்றாகப் பின்னால் தள்ளினால்கூட, பின் பக்கப் பயணிகளுக்கு நன்றாகவே லெக்ரூம் கிடைக்கும். இதன் ஃப்ளோரைக் கொஞ்சம் உயர்த்தியிருப்பதால், கால்களை மேல் நோக்கி வைத்துப் பயணிக்க வேண்டும் போல் தெரிகிறது. பேட்டரி பேக்கையும் பின்னால் வைத்திருப்பதால்… அதுவும் இதற்குக் காரணமாக இருக்குமோ!

நடுவே ஏசி வென்ட் டனல் காணாமல் இருந்தது கண்டு முதலில் திகைத்தேன். ஆனால், காரின் பக்கவாட்டில் டோர்களுக்குப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். அருமை! அப்படியென்றால், டனல் இல்லாததால் நடுப்பக்கப் பயணிக்குக் கால் வைக்கத் தொந்தரவு இருக்காது. இருந்தாலும், வாட்டசாட்டமான 2 பேர் என்றால், சொகுசாகப் பயணிக்கலாம். 3 பேர் ஒல்லியாக இருந்தால், சரியாக இருக்கும். கூஃபே கார் என்பதால், கொஞ்சம் உயரமானவர்கள் என்றால், ஹெட்ரூமுக்குக் கொஞ்சம் சிக்கலாக இருக்கலாம்.
இதன் பூட் வசதி 520 லிட்டர். ஏற்கெனவே சொன்ன மாதிரி ப்ராக்டிக்கலான கார்தான். ஆனால், ஃப்ளோரைக் கொஞ்சம் உயர்த்தி இருப்பதால், பொருட்களைத் தூக்கி வைத்து ஏற்ற வேண்டும். பின் பக்க சீட்களை 60:40 விகிதத்தில் மடித்துக் கொள்ளலாம். இதற்கு ரிமோட் வசதி உண்டு. 1,300 லிட்டர் வரை இடவசதி கிடைக்கும்.
எக்யூப்மென்ட் லிஸ்ட், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இதில் ஏகப்பட்ட யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, வென்டிலேட்டட் சீட்ஸ், மெமரி சீட்கள் என்று ஒரு சொகுசுக் காருக்குத் தேவையான எல்லா வசதிகளும் உண்டு. (கார் நிறுவனங்களுக்கு ஒரு கேள்வி – இது ஒரு சாஃபர் டிரைவன் கார் என்றால், பின் பக்கமும் வென்டிலேட்டட் சீட்ஸ் கொடுக்கலாமே!) 64 வகையான ஆம்பியன்ட் லைட்டிங், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சரவுண்ட் சிஸ்டம் இருந்தது. பின் பக்கம் லேப்டாப் கூட சார்ஜ் செய்து கொள்ளும்படியான 3–Pin ஏசி பவர் சார்ஜர் கொடுத்திருக்கிறார்கள். இதுவே ஒரு கனெக்டட் கார் ஃபீலிங் கொடுக்கிறது.
மற்றபடி, கியா EV6 ஒரு கனெக்டட் கார்தான். இதில் ஆப்பிள் கார் ப்ளே – ஆண்ட்ராய்டு ஆட்டோ என எல்லாமே உண்டு. இந்த 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் இந்த செக்மென்ட்டின் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாக இருக்கும்.
பாதுகாப்பைப் பொருத்தவரை, EV6 10 வகையான ADAS (Advance Driver Assist System)வசதிகளுடன் வந்திருக்கிறது. எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம், மல்ட்டி கொலிஷன் வார்னிங் பிரேக்கிங், லேன் கீப்பிங் அசிஸ்ட் என்று ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள். இந்த காரைச் சுற்றி 8 காற்றுப்பைகள் உண்டு – பக்கவாட்டு கர்டெயின் காற்றுப்பைகளோடு சேர்த்து.
பேட்டரி… மோட்டார்… சார்ஜிங்..
ஆல்வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரண்டு மாடல்களில் வருகிறது EV6. இரண்டிலுமே 77.4kWh லித்தியம் அயன் பேட்டரி செட்அப் கொடுத்திருக்கிறார்கள். பூட்டுக்குப் பின்னால் இருக்கிறது இது. கியா EV6 ஒரு விஷயத்தில் சொல்லியடிக்கக் காத்திருக்கிறது. அது சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங். 350kW DC சார்ஜரில் இதை சார்ஜ் ஏற்றினால், 10–80 சதவிகிதம் சார்ஜ் வெறும் 18 நிமிடங்களில் ஏறுமாம். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு இந்த சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்குக்கு வழிவகை செய்யுங்கள் கியா.
மற்றபடி நார்மலாக 50kW சார்ஜரில் இதை சார்ஜ் செய்தோமானால், 73 நிமிடங்களில் 80% ஏறுகிறது. இதற்குத் தனிக் கட்டணம். EV6 வாங்கும்போது, நமக்கு 22kW சுவரில் மாட்டப்படும் சார்ஜர் ஆன்ரோடு விலையோடு வருகிறது. இதன் சார்ஜிங் நேரம் பற்றிச் சொல்லவில்லை. நமக்குத் தெரிந்து, ஃபுல் சார்ஜிங்குக்கு சுமார் 8 – 11 மணி நேரம் ஆகலாம்.

இந்த சார்ஜிங்கில் இன்னொரு ஹைலைட் – V2L (Vehicle to Load) மற்றும் V2V (Vehicle to Vehicle) என்றொரு வசதி கொடுத்திருக்கிறார்கள். அதாவது, EV6 மூலம் இன்னொரு வாகனத்துக்கு அவசர நேரத்தில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். இது மிகவும் பரபரவென நடக்காது என்பதையும் சொல்கிறது கியா. அதாவது, ஸ்லோ சார்ஜிங். அதேபோல், EV6 மூலம் மற்ற எலெக்ட்ரானிக் சாதனங்களையும் இயக்கிக் கொள்ளலாம். கேம்பிங் அடிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்துக்கு, ஒரு எலெக்ட்ரானிக் கெட்டில் மூலம் காபி போடுவது, மைக்ரோவேவ் ஓவன் மூலம் உணவு தயாரிப்பது போன்றவற்றைச் செய்து கொள்ளலாம்.
இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர், 229bhp / 325bhp பவர் கொடுத்திருக்கிறார்கள். இது முறையே ரியர்வீல் மற்றும் ஆல்வீல் டிரைவுக்கான பவர். இந்த பெர்மெனன்ட் மேக்னட் சிங்க்ரனைஸ்டு மோட்டாரின் டார்க், 350 மற்றும் 605Nm. ஆல்வீல் டிரைவ் மாடல் ஜிவ்வென இருக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்வளவு ரேஞ்சா? விலையா?
கியா EV6–ன் அராய் ரேஞ்ச் பற்றி நமக்கு எதுவும் தகவல்கள் சொல்லவில்லை கியா. ஆனால், WLTP டெஸ்ட்டின்படி இதன் ரேஞ்ச், நம்மை வியக்க வைத்தது. Worldwide Harmonized Light Vehicles Test Procedure (WLTP) என்பது நம் நாட்டு அராய் மாதிரி, குளோபலாகக் கொடுக்கப்படும் சர்டிஃபைடு ரேஞ்ச். இதில் EV6, 528 கிமீ ரேஞ்ச் தரும் என்று கூறுகிறது கியா. நம் ஊர் ஓட்டுதலுக்கு, இதன் ரியல் டைம் ரேஞ்ச், அநேகமாக ஒரு 450 கிமீ வந்தாலே போதுமான விஷயம்தான்.
எம்ஜி ZS EV, ஆடி இ–ட்ரான், பென்ஸ் EQC, வரவிருக்கும் வால்வோ XC40 போன்றவற்றுக்குப் போட்டியாக கியா EV6 வருகிறது. என்னடா, இது படா படா கார்களுடன் போட்டி போடப் போகிறதா EV6 என்றால், நீங்கள் நினைப்பது சரிதான்; இதன் விலையும் கொஞ்சம் ஷாக்கிங் நியூஸ்தான். இப்போதுவரை இதன் விலையை கியா சொல்லவில்லை. அநேகமாக, இது சுமார் 55 லட்சம் முதல் 60 லட்சம் வரை இதை பொசிஷன் செய்யலாம்.
இறக்குமதி மூலம் CBU ஆக வருவதால், இந்த விலை நியாயம்தான். வேறு வழியில்லை கியாவுக்கு. ப்ரீமியம் எலெக்ட்ரிக் செக்மென்ட்டில், EV6–க்கு ஷாக் கிடைக்குமா… செக்மென்ட்டையே ஷாக் அடிக்க வைக்குமா என்று பார்க்கலாம்!