மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், அழுதா மலை ஏற்றத்தில் ஏறி, அப்பாச்சி மேடு கடந்தால், சன்னிதானம் கண்டு கை கூப்புவர். அதேபோன்றதுதான் ஒடிசாவில் இருக்கும் ரம்பா மலையும். லாரி டிரைவர்கள் இதைக் கடந்து விட்டால்... பாரம் நீங்கி, பதற்றம் குறைந்து, இலக்கை அடைய ஆயத்தமாவார்கள். 

 ##~##

ஒடிசா என்றாலே வறட்சியான மாநிலம் என்றுதான் நினைப்போம். ஆனால், கடலோரமாக அமைந்திருக்கும் இந்தப் பகுதியில், விவசாய நிலங்கள் செழித்திருக்கின்றன. அகலமான ஆறுகள், கால்வாய்கள், மலைகள், ஏரி, கடல் என இயற்கையின் அனைத்து கொடைகளும் அமைந்திருந்தாலும் ஒடிசா, வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது; நாளாந்தா பல்கலைக்கழகம் தழைத்த இந்த பூமி, இன்னமும் வளர்ச்சியே காணாமல் இருக்கிறது.  இங்கே சாலைகளில் பெரும்பான்மையாகக் காணப்படுவது லாரிகள் மட்டுமே!

ஒடிசாவின் நெடுஞ்சாலை ஓரம் பிளாஸ்டிக் கேன்களுடன் லாரிகளைக் கைகாட்டும் ஆட்களை ஆங்காங்கே கண்டபோது, அருகே உள்ள நகரங்களுக்குச் செல்வதற்காக 'லிஃப்ட்’ கேட்கிறார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், பிளாஸ்டிக் கேன்களை உற்றுக் கவனித்தபோதுதான் அது மண்ணெண்ணெய் என்பது தெரிந்தது. ஆச்சரியமாக, ''இதை ஏன் வைத்திருக்கிறார்கள்?'' என்று முருகனிடம் கேட்டபோது, ''டீசலுக்கு மாற்றாக ஊற்றுவதற்குத்தான்'' என்றபோது அதிர்ச்சிஅடைந்தோம். ஆந்திராவில் மாசுக் கட்டுப்பாடு அதிகாரிகளின் சோதனை அதிகம். மேலும், நெடுஞ்சாலையில் ஆங்காங்கே புகைப் பரிசோதனை வாகனங்களும் நிற்கின்றன. ஆந்திராவில், டீசலில் மண்ணெண்ணெய் கலந்து ஓட்டினால், கடுமையான அபராதம் விதிக்கிறார்கள். ஒடிசாவில் இந்தக் கெடுபிடி இல்லை. எனவே, சாலையோரம் நிற்கும் இவர்களிடம் மண்ணெண்ணெய் வாங்கி டீசலுடன் கலக்கிறார்கள் சில டிரைவர்கள். காரணம், டீசலைவிட லிட்டருக்கு 10 ரூபாய் விலை குறைவு. 100 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால், 1,000 ரூபாய் மிச்சம். ஆனால், இன்ஜின்?

நெடுஞ்சாலை வாழ்க்கை!

''எல்லா டிரைவர்களும் இதைச் செய்வதில்லை. ஒரு சிலர்தான் இதைச் செய்கிறார்கள்'' என்பதை ஒப்புக் கொண்டார் முருகன். இதைச் செய்வதற்கான காரணம்தான் முக்கியமானதாக இருக்கிறது. பல சமயங்களில் லாரி வாடகை கட்டுப்படி ஆகாது. அதாவது, டீசல், டோல்கேட், சாப்பாடு எனக் கணக்குப் பார்த்தால், சில ஆயிரங்கள் நஷ்டத்தில்தான் முடியும். அந்த நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டுவதற்காகத்தான் சிலர் இப்படி செய்கிறார்கள். டீசலில் மண்ணெண்ணெய் கலப்பதற்கான ஃபார்முலாவையும் சொன்னார் முருகன். ''100 லிட்டர் டீசலுக்கு - 100 லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு லிட்டர் கியர்பாக்ஸ் ஆயில். இந்தக் கலவை இன்ஜினைப் பாதிக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்ஜின் விரைவாகத் தேய்வதுடன் டீசல் பம்ப் சேதமாகும்'' என்கிறார் முருகன்.

ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வருக்கு 50 கி.மீ முன்பு, தாபா ஒன்றில் லாரிகளை ஓரங்கட்டினோம். இரவு 10 மணிக்கு மேல்தான் புவனேஸ்வர் நகரைக் கடக்க முடியும். நகருக்குள் மேம்பால பணிகள் நடப்பதால், லாரிகளுக்கு இரவில் மட்டுமே அனுமதி. பைபாஸ் இல்லையா எனக் கேட்டபோது, ''புவனேஸ்வர் நகரின் முன்னும் பின்னும் பல கிளை நதிகளைக் கடக்க வேண்டும்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

இதில், பைபாஸ் கட்டுவது பெரிய செலவு என நினைத்துவிட்டுவிட்டார்கள் போல. அதனால், நகருக்குள் நுழைந்துதான் செல்ல முடியும். லாரிகள் என்றாலே இளப்பம்தானே... எல்லா நகரிலும் திருடர்களைப்போல இரவில் மட்டுமே அனுமதிக்கிறார்கள்'' என்கிறார் முருகன்.

இரவு 9 மணிக்கு லாரியை இயக்கி நெடுஞ்சாலையில் ஊர்ந்த மற்ற வாகனங்களுடன் இணைத்துக் கொண்டோம். புவனேஸ்வரை நெருங்க நெருங்க... போக்குவரத்து நெருக்கடியால் தத்தளிக்க ஆரம்பித்தது சாலை. நகருக்குள் நடைபெரும் மேம்பாலப் பணிகளால், வாகனங்கள் செல்ல ஒதுக்கி இருந்த குறைவான இடத்தில், மெதுவாக ஊர்ந்து கிட்டத்தட்ட புவனேஸ்வரைக் கடக்க 2 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. புவனேஸ்வர் நகரைக் கடந்து கட்டாக், பட்ராக், பாலாசூர், சந்தோஷ்பூர் என நள்ளிரவு தாண்டியும் நிறுத்தாமல் பயணம் தொடர்ந்தது. ஏனென்றால், ''காலையில் மேற்குவங்க மாநிலத்தின் எல்லையில் நுழைய ஏகப்பட்ட சடங்குகள் இருக்கின்றன. அந்தச் சடங்குகளை எல்லாம் காலையிலேயே தொடங்கினால்தான், மாலையில் மேற்குவங்கத்தில் நுழைய முடியும்'' என்றார் முருகன்.

ராதா நகர், கிருஷ்ணாநகர் தாண்டி காலை 8 மணிக்கு லாரிகள் நிறுத்துவதற்காகக் கட்டிவைக்கப்பட்டு இருந்த பார்க்கிங் ஏரியாவில் ஒதுங்கினோம். இதுதான் ஒடிசா - மேற்கு வங்க எல்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எங்கும் லாரிகள்தான். லாரிகளை நிறுத்துவதற்காகவே பெரிய பெரிய மைதானங்களைக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், இங்கு பேருக்காகக் கட்டி வைக்கப்பட்டு இருந்த கழிவறைகளில், சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. மட்டை வெயில்; ஒதுங்குவதற்குக்கூட நிழல் இல்லை. டிரைவர்கள் பெரும்பாலும் லாரிகளுக்குக் கீழே நிழலில் ஒதுங்கி இருந்தனர்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நமது லாரிகளைக் கண்டதும் பைக்கில் பின் தொடர்ந்தார் ஒருவர். அவர் பெயர் பீமா. முருகனின் லாரிக்கு வழக்கமாக செக்போஸ்ட் கிளியரன்ஸ் வாங்கிக் கொடுப்பவர். புதிதாக இரண்டு லாரிகள் வந்திருப்பதைக் கண்டவர் உற்சாகமானார். ஏனெனில், புதிய லாரிகள் இரண்டுக்கும் மேற்கு வங்க மாநிலத்துக்கான வரி செலுத்த வேண்டும். லாரி ஒன்றுக்கு 4,500 ரூபாய். இங்கே இருப்பது ஒடிசா செக்போஸ்ட் மட்டுமே. மேற்குவங்கத்தின் செக்போஸ்ட் 30 கி.மீ தாண்டிப் போக வேண்டும். ஆனால், இங்கேயே இருந்து வாங்கிக்கொண்டு செல்வதுதான் நல்லது. இடையில் சோதனையில் சிக்கினால், மேலும் 5,000 ரூபாய் செலவாகும் என்பதால், பெரும்பாலும் இங்கே லாரியை நிறுத்திவிட்டு ஆளனுப்பித்தான் பணம் செலுத்தி ரசீது பெற்று வருகின்றனர். பீமாவிடம் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, ஓய்வெடுக்க லாரிக்குக் கீழே தஞ்சமானோம். பீமாவைப் போல ஏராளமான புரோக்கர்கள் இங்கும் இருக்கிறார்கள். தினசரி 3 முதல் 20 லாரிகளுக்காவது வேலை செய்கிறார்கள். சரக்கு வகைக்கு ஏற்ப சர்வீஸ் சார்ஜ் வேறுபடுகிறது. ''இவர்கள் சம்பாதிக்கும் அளவுக்குக்கூட எங்களால் சம்பாதிக்க முடியவில்லை'' என்று அலுத்துக்கொண்டார் முருகன்.

மாலை 5 மணிக்குத்தான் அனுமதிச் சீட்டு கிடைத்தது. மேற்குவங்க எல்லையில் நுழைந்தபோது, சாலையோரம் நின்ற இருவர் கைகாட்டி லாரியை நிறுத்தினர். இருவரில் ஒருவரிடம் லத்தி இருந்தது. என்ன சரக்கு, எங்கே செல்கிறது என்பதை விசாரித்தவர்கள், 'நூறு ரூபாய் கொடு’ என்றார்கள். பணம் இல்லை என்று முருகன் சொன்னதும், லத்தியைக் காட்டி, 'பணம் கொடுக்கவில்லை என்றால், இந்த இடத்தைத் தாண்ட முடியாது’ என்று மிரட்ட... இரண்டு பத்து ரூபாய் தாள்களைச் சுருட்டியபடி கியரை மாற்றி, ஆக்ஸிலரேட்டரை அழுத்தியவாறு அவர்களது கையில் பணத்தைத் திணித்துவிட்டு சர்ரென லாரியை நகர்த்தினார் முருகன்.  அதன் பின்பு, லாரி எங்கும் நிற்கவில்லை. நம்முடன் பயணித்த மூன்று லாரிகளில் ஒன்று கொல்கத்தா நகருக்கும், மற்ற இரண்டும் அங்கிருந்து இன்னும் 200 கி.மீ தூரமும் செல்ல வேண்டும். கொல்கத்தாவில் இருந்து வழிகாட்டும் கைடு ஒருவரை, கூட அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

கொல்கத்தாவுக்கு 30 கி.மீ முன்பு இருக்கும் டிரக் பார்க்கிங் ஏரியாவில் நுழைந்த போது இரவு 12 மணி. டிரைவர்களை, கொல்கத்தா நகருக்குள் உள்ள ஏஜென்ட் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் காரில், நம்மை அனுப்பிவைக்கத் தயாராகினர் நமது நண்பர்கள்.

பஸ் பயணமோ, ரயில் சிநேகமோ இது இல்லைதான். இதற்கு முன்பு இவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது; நாம் யார் என்று அவர்களுக்கும் தெரியாது. ஆனால், ஆறு தினங்களாக ஒன்றாக உண்டு - உறங்கி, அவரவர் சந்தோஷ - சோகக் கதைகள் பேசி, சிரித்து - நெகிழ்ந்து பல காலம் ஒன்றாக வாழ்ந்த உணர்வு, அந்தக் கணம் அனைவருக்கும் நிரம்பித் தளும்பியது.

(நெடுஞ்சாலை நீளும்)