மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

கொல்கத்தாவுக்கு 30 கி.மீ முன்பாக, டிரக் பார்க்கிங் ஏரியாவில் லாரியை நிறுத்திவிட்டு இறங்கியபோது, நள்ளிரவு 12 மணி. மூன்று லாரிகளில் டீத்தூள் ஏற்றிய லாரி, கொல்கத்தா நகருக்குள் வழிகாட்டி ஒருவரை அழைத்துக்கொண்டு அதிகாலைக்குள் செல்ல வேண்டும். நேரம் தவறினால், அடுத்த நாள் இரவு வரை காத்திருக்க வேண்டும்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

 இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் லாரி கைடுகள் எனும் வழிகாட்டிகள் சமூகமே உண்டு. நகர எல்லையில் காத்திருக்கும் லாரி கைடுகளுக்கு, நகரின் அத்தனை சந்து பொந்துகளையும் நிறுவனங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் ஒரே தகுதி. லாரியில் ஏறி லோடு இறக்க வேண்டிய இடம் வரை வழிகாட்டிவிட்டுத் திரும்பிவிடுவர். இந்தச் சேவைக்கு, ஊருக்குத் தகுந்ததுபோல 200 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை சேவைக் கட்டணம் வசூலிக்கிறார்கள். சில நகரங்களில் அமைப்பாகவே செயல்படுகிறார்கள். ஏஜென்ட்களில் அலுவலகத்திலேயே இருப்பவர்களும் உண்டு. ஏற்கெனவே சென்ற இடம்தான்; வழிகாட்டி தேவை இல்லை என்றால், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணம் மிச்சம்.

ஹாலோ பிளாக் மெஷின்கள் ஏற்றிய மற்ற இரு லாரிகளும் கொல்கத்தாவில் இருந்து இன்னும் சுமார் 250 கி.மீ பயணம் செய்து, முர்ஷிதாபாத் எனும் ஊருக்குச் சென்று லோடு இறக்கிவிட்டு, மீண்டும் இந்த பார்க்கிங்குக்குத் திரும்ப வேண்டும். கொல்கத்தா நகருக்குள் இருக்கும் லாரி ஏஜென்ட்டிடம் வருகையைப் பதிவுசெய்துவிட்டால், வரிசைப்படி லோடு கிடைக்கும்போதுதான் ஏற்றி ஊர் திரும்ப முடியும்.

 ##~##

பொதுவாக, லோடு கிடைப்பதில் தொழில் போட்டிகள் நிறைய உண்டு. பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல, வாடகை குறைவுதான். காரணம், தமிழகத்தில் ஏராளமான நேஷனல் பெர்மிட் லாரிகள் இருக்கின்றன. அதனால், போட்டி அதிகம். வாடகை மிகக் குறைவு என ஒருவர் மறுத்தால், வேறொருவர் அந்த வாடகைக்குத் தயாராக இருப்பார். வாடகை விஷயத்தில் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால், வேறு வழியில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வாடகைதான் தர வேண்டும். ஆனால், லாரி உரிமையாளர்களை கடனுக்குச் செலுத்த வேண்டிய மாதத் தவணை, வட்டி போன்ற விஷயங்கள் ஒன்றுசேரவிடாமல் தடுக்கின்றன. ஆனால், வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு அல்லது கேரளாவுக்கு லோடு கிடைத்தால், நியாயமான வாடகை கிடைக்கும். ஒருவழிப் பயணத்தில் நஷ்டமாவதை, திரும்பும் வழிப் பயணத்தில் சரிக்கட்டிவிடலாம் என்பதுதான் லாரி உரிமையாளர்களின் கணக்கு.

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் எல்லா லாரிகளுக்கும் இந்த ஏஜென்ட்களின் பங்கு முக்கியமானது. ஏஜென்ட்கள்தான் கிட்டத்தட்ட லாரிகளின் எஜமானர்கள். இவர்கள் மீது எவ்வளவோ புகார்கள் சொன்னாலும் இவர்களைத் தவிர்த்துவிட்டு லாரித் தொழில் சாத்தியம் இல்லை. அவசரத்துக்கு பண உதவியில் ஆரம்பித்து, அத்துவானக் காட்டில் ஏதாவது பிரச்னை என்றால் ஓடி வந்து உதவுவது வரை லாரித் தொழிலுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள் இந்த ஏஜென்ட்கள். இவர்களைவிட்டால் வேறு கதியில்லை என்பது நிதர்சனம். தெரியாத ஊரில், புரியாத மொழியில் உரையாடி, லோடு பிடித்து வாடகை பேசி ஊர் திரும்புவது சாத்தியமே இல்லை. ஏஜென்ட்களாகச் செயல்படுபவர்களுக்கு, தங்கள் பகுதியில் இருக்கும் தொழிலகங்கள் தொடர்புதான் முதலீடு. அலுவலகம்; டிரைவர்கள் ஓய்வெடுக்க இடம்; இவை போதும். வாடகைத் தொகைக்கு ஏற்ப, 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை இவர்களுக்கு கமிஷன் கிடைக்கும்.  

நெடுஞ்சாலை வாழ்க்கை!

லாரி டிரைவர்கள், இலக்கு இல்லாமல் எங்கு லோடு கிடைத்தாலும் செல்ல முடியாது. காரணம், ஒவ்வொரு வழியிலும் இருக்கும் போக்குகள், சிக்கல்கள், சவால்கள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பாதையில் தன்னம்பிக்கையுடன் சென்று வர முடியும். தமிழ்நாட்டில் இருந்து கொல்கத்தா செல்லும் டிரைவர்கள் பெரும்பாலும் இந்தச் சாலையில் பழக்கப்பட்டு இருப்பதால், இந்தச் சாலையிலேயே செல்ல விரும்புகிறார்கள். சில சமயங்களில் லோடு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது வாடகை கட்டுப்படி ஆகவில்லை என்றாலோ, வேறு ரூட்டில் சென்று பார்க்கலாம் என முடிவெடுப்பார்கள். அதுவும் அந்தப் பாதையில் ஏற்கெனவே அனுபவம் பெற்ற லாரியுடன் இணைந்துதான் செல்வார்கள். அதன்படி, கொல்கத்தா ரூட்டில் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற முருகன், ஹைதராபாத் ரூட்டில் புழங்கிக் கொண்டு இருந்த சிவக்குமாரின் லாரிக்கும் நடராஜனின் லாரிக்கும் வழிகாட்டி. எந்த இடத்தில் லாரியை நிறுத்த வேண்டும்; எங்கே நிறுத்தக் கூடாது; எவ்வளவு லஞ்சம் தர வேண்டும்; எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதுபோன்ற பல்வேறு விஷயங்களையும் தெரிந்துகொண்ட பிறகுதான், சுயமாக இந்த ரூட்டில் பயணிக்க ஆரம்பிப்பார்கள்.

நாம் லாரிகளில் ஏற்கெனவே பயணம் செய்திருந்தாலும் அவை சில கிலோமீட்டர் பயணங்கள்தான். இதுபோலத் தொடர்ச்சியாக லாரியிலேயே உண்டு, உறங்கிப் பயணம் செய்தது கிடையாது. மேலும், பயணம் தொடங்கிய சமயம் ஏப்ரல் மாதம். அதீத வெப்பம் எங்களை உருக்கிவிட்டது. உடல் வலியும் வேறு சேர்ந்துகொள்ள... அதிர்வுகளே இல்லாத ஏதாவது ஓர் இடத்தில் தூங்கி எழுந்தால்தான் களைப்பு போகும் என்று தோன்றியது. அந்த அளவுக்கு உடல் வலி. இவர்கள் கொண்டுவந்த லோடு இறக்கி, வரிசையில் காத்திருந்து லோடு ஏற்றி புறப்பட இன்னும் நான்கு நாட்கள் ஆகலாம். திரும்பவும் ஐந்து நாள் பயணம் செய்து ஊர் திரும்புவது நமக்குச் சாத்தியம் இல்லாத விஷயம். எனவே, ரயிலில் ஊர் திரும்ப முடிவெடுத்தோம்.

விடைபெறும் தருணம். ஒரு வாரமாக ஒன்றாகத் திரிந்த நண்பர்கள் பிரியும் நேரம் வரும்போது ஏற்படும் ஒருவித அமைதி, அனைவரிடமும் நிலவியது. ''சேலம் வந்தா வீட்டுக்கு வாங்கண்ணா... மேட்டூரூக்கு ஒரு தடவை வாங்க... என்ன தேவைன்னாலும் கூப்பிடுங்க...'' என்ற வார்த்தைகள் அனைத்தும் உணர்வுப்பூர்வமானவை.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

பார்க்கிங் ஏரியாவில் இருந்து நகருக்குள் இருக்கும் ஏஜென்ட் அலுவலகங்களுக்கு வந்துசெல்ல, ஏஜென்ட்களே கார் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது இலவசம் அல்ல. 50 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப பணம் வசூலிக்கிறார்கள். ஏஜென்ட்டின் கார் டிரைவர், பார்க்கிங் ஏரியாவில் வந்து ஏஜென்ட்டின் பெயரைச் சொல்லி அழைக்கிறார்.

இரண்டு டிரைவர்களில் ஒருவர் லாரிக்குக் காவலாக இருக்க... இன்னொருவர் கார் ஏறி ஏஜென்ட்டைச் சந்திக்கச் செல்வார். தனது ஏஜென்ட்டின் கார் ஒன்றில் நம்மை ஏற்றிவிட்டு, டிரைவரிடம் நல்ல விடுதியில் அறை எடுத்துக்கொடுக்குமாறு சொன்னார் முருகன். அதேபோல், கொல்கத்தா நகரின் மையப் பகுதியில் இருந்த விடுதியில் நள்ளிரவில் தட்டி எழுப்பி, நமக்கு அறை ஏற்பாடு செய்து கொடுத்தார் அந்த டிரைவர்.

விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த நாள் மாலை ரயிலில் சென்னை திரும்பினோம். நாம் ஊர் திரும்பி 10 தினங்களுக்குப் பிறகுதான் நாம் பயணம் செய்த லாரிகள் ஊர் திரும்பின.

மோட்டார் விகடன் வாசகர் மணி, சேலத்தில் இருக்கும் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ஒன்றின் மேலாளர். இந்தத் தொடரைப் படித்துவிட்டு போன் செய்தார். ''சார், நம்ம வண்டியில டெல்லி வரைக்கும் வர்றீங்களா? ஆனா, எங்க வண்டி எங்கேயும் நிற்காது. நான் ஸ்டாப் சர்வீஸ். அஞ்சே நாள்ல டெல்லி போயிடுவோம். தமிழ்நாட்டுல இருந்து டெல்லிக்கு பல ரூட் இருக்கு. நாங்க போற ரூட்ல ஏகப்பட்ட பிரச்னை இருக்கு... எப்ப வர்றீங்க?'' என்று கேட்டார்.

சரிதான். அடுத்து, 'டெல்லி சலோ!’  

(நெடுஞ்சாலை நீளும்)

நெடுஞ்சாலை வாழ்க்கை!