மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நெடுஞ்சாலை வாழ்க்கை!
 ##~##

டெல்லி செல்லத் திட்டமிட்ட சமயம், வெயிலின் உக்கிரம் குறைந்திருந்தது. இந்த முறை ஒரே லாரியில்தான் பயணம். திருச்சி டு டெல்லி ட்ரிப் ஷீட். நான் ஸ்டாப் சர்வீஸ் என வாசகர் மணி சொல்லிவிட, உடம்பு தாங்குமா என்ற சந்தேகம் இருந்தது. திருச்சியில் இருந்து வனஸ்பதி லோடு ஏற்றிக்கொண்டுவரும் லாரியில், நாம் ஓசூரில் இணைந்துகொள்வதுதான் திட்டம்.

 திருச்சியில் இருந்து சேலத்துக்கு மாற்று (தற்காலிக) டிரைவர் லோடு ஏற்றிக்கொண்டு வர... வீடு சென்று ஓய்வெடுத்துத் திரும்பும் லைன் டிரைவர்கள், சேலத்தில் லாரியைக் கைப்பற்றுகிறார்கள். வாடகைக் கணக்குப் பார்த்து, டீசல் நிரப்பி, வழியில் தேவைப்படும் பணத்தைக் கையில் கொஞ்சமும் வங்கியில் கொஞ்சமும் பிரித்துவைத்துக் கொண்டு, பூஜை போட்டு லாரியை ஸ்டார்ட் செய்கிறார்கள்.

நானும் போட்டோகிராபர் விஜய்யும் ஓசூர் சேர்ந்தபோது, இரவு மணி 8. பஸ் நிலையம் எதிரே இருந்த ஹோட்டலில் இரவு உணவு முடித்துவிட்டு, நெடுஞ்சாலையில் அடையாளம் சொல்லியிருந்த ஏடிஎம் அருகே காத்திருந்தோம். இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தது லாரி. இரு டிரைவர்களில், ஒருவர் பெயர் சேட்டு, மத்திய வயதுக்காரர். திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. மற்றொருவர், சரவணன். இளைஞர். இன்னும் திருமணம் ஆகவில்லை. பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம். லக்கேஜை கேபினில் ஆங்காங்கே செட்டில் செய்து, நால்வர் உட்கார இட வசதி ஏற்படுத்திக்கொண்டு அமர்ந்ததும் டெல்லி நோக்கிக் கிளம்பினோம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

இம்முறை நாம் பயணம் செய்யும் லாரி அசோக் லேலாண்ட் அல்ல. மஹிந்திரா நேவிஸ்டர். 12 வீல்களைக்கொண்ட இதில் 21 டன் வரை பாரம் ஏற்ற முடியும். கன ரக வாகனச் சந்தையில் நவீன மாற்றங்களோடு களம் இறங்கியுள்ள மஹிந்திரா நேவிஸ்டர், கம்பெனி பாடியுடன் இருப்பதைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், கொங்கு மண்டல லாரி உரிமையாளர்களின் தேவைக்காக, இதை சேஸியாகவும் தருகிறது மஹிந்திரா. அதை பாடி கட்டுமானம் செய்திருக்கிறார்கள். இதில், அசோக் லேலாண்ட் லாரியைவிட விசாலமான கேபின். லாரியின் எடை மட்டுமே 10 டன். 21 டன் பாரமும் சேர்த்தால் மொத்தம் 31 டன்.

தமிழ்நாடு எல்லையான ஓசூர் புறநகரில் லாரிகளால் சூழப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் சீல் வாங்கிக்கொண்டு, கர்நாடக மாநிலத்தில் நுழைந்தோம். அத்திப்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த செக்போஸ்ட் யார்டுக்குள் லாரியை ஓட்டினார் சேட்டு. 300 ரூபாய் பணம் கொடுத்து முத்திரை வாங்கிக்கொண்டு பெங்களூரு செல்லும் சாலையில் திரும்பினோம். அடுத்து, நைஸ் ரோட்டில் ஏறி பெங்களூரு நகரைச் சுற்றிக் கொண்டு தும்கூர் பைபாஸில் இறங்கியபோது, மணி இரவு 12. நால்வழிச் சாலை என்பதால், அலுங்கல் குலுங்கல் இல்லாமல் சென்றுகொண்டு இருந்தது லாரி.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

நமது கொல்கத்தா பயண அனுபவத்தைப் பற்றி விசாரித்தனர் இருவரும். ''இந்தியாவுல தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை'' என்று நாம் சொன்னதும், சிரித்தார் சேட்டு. ''சார், தமிழ்நாட்டுலயும் நிறையப் பிரச்னை இருக்கு. நம்ம ஊரா இருக்கிறதால நாம சமாளிக்கிறோம். வெளிமாநில டிரைவர் வந்தா, எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரிதான்'' என்று சொன்னார். ''இந்தியாவிலேயே லாரியில் டீசல் திருடுற குரூப் ஓசூர் - பெங்களூரு ஏரியாவில்தான் இருக்கு. நாம லாரியில் இருக்கிற லோடு மேல கண்ணா இருப்போம். அந்தச் சமயத்துல லாரிக்குக் கீழே வேலையைக் காட்டிட்டுப் போயிடுவானுங்க'' என்று அதிர்ச்சியளித்தார் சேட்டு.

''சாலையில் ஓரங்கட்டி நிற்கும் லாரியின் அருகே மாருதி வேன் வந்து நிற்கும். அந்த வேன் - மோட்டார் பம்ப், மினி ஜெனரேட்டர், டீசல் பிடிக்க டிரம் சகிதம் ஒரு சர்வீஸ் வேன் போலக் கச்சிதமாக செட் செய்யப்பட்டிருக்கும். லாரியின் டீசல் டேங்க்கில் இருக்கும் பூட்டை உடைத்துத் திறந்து, உள்ளே பைப்பைச் சொருகி மோட்டரை ஆன் செய்தால்... சில நிமிடங்களில் லாரி டேங்க்கில் இருக்கும் 400 லிட்டர் டீசலும் வேனில் இருக்கும் டிரம்மில் நிறைந்திருக்கும். இவை அனைத்தும் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சில நிமிடங்களிலேயே நடந்து முடிந்துவிடும். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ சர்வீஸ் செய்கிறார்கள் என்றுதான் தோன்றும். டீசல் திருடுகிறார்கள் என்று கண்டுபிடித்துவிட்டாலும் தனியாக அவர்களின் அருகே நெருங்க முடியாது. கையில் இருக்கும் ஆயுதத்தால் தாக்கும் ஆபத்தும் இருக்கிறது. இப்படி நூதனமாகத் திருடும் கும்பல் இந்தப் பகுதியில் மட்டும்தான் இருக்கிறது'' என்று விளக்கினார் சரவணன். இப்படித் திருடப்படும் டீசலின் மதிப்பே குறைந்தது 20,000 ரூபாய் இருக்கும் என்பதுதான் அதிர்ச்சி.  

நெடுஞ்சாலை வாழ்க்கை!

தும்கூர், சிரா ஆகிய ஊர்களைத் தாண்டி இரியூர் எட்டியதும் லாரியை ஓரங்கட்டினார் சேட்டு. ''சமையலுக்கான பொருட்கள் இங்கு வாங்கினால்தான் கொஞ்சம் குறைவாக இருக்கும்'' என்றார். அந்த நள்ளிரவில் லாரிகளுக்காகவே இயங்கும் அந்தக் கடையில் நுழைந்தோம். அங்கு குக்கர், ஸ்டவ், பாத்திரங்கள், காய்கறிகள், அரிசி, மண்ணெண்ணெய், துண்டு, கைலி, சட்டை என அனைத்துமே லாரி டிரைவர்களுக்கானவை. சாப்பிடும் தட்டு இரண்டை எங்களுக்காக வாங்கினார் சரவணன். கொஞ்சம் காய்கறிகள் வாங்கிக்கொண்டு மீண்டும் லாரியில் ஏறினோம். ''நாளைக்கு மதியத்தில் இருந்து நம்ம சமையலைச் சாப்பிடுவோம். இல்லைன்னா ரொட்டி தின்னு வெறுத்துப்போவீங்க'' என்றவர், தூங்குவதற்கு ஆயத்தமானார்.

டிரைவர்களான இருவரின் டைம்டேபிள் பக்காவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆளுக்கு 6 மணி நேரம் ஸ்டீயரிங்கைப் பிடிக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் படுத்துத் தூங்கிவிடுகிறார்கள். இருந்தது ஒரே ஒரு பெர்த் மட்டுமே. அதில், அவர்கள் காலை நன்றாக நீட்டித் தூங்கி ஓய்வெடுத்தால்தான், அடுத்து சுறுசுறுப்புடன் ஸ்டீயரிங்கைப் பிடிக்க முடியும்.

சித்திரதுர்கா அடைந்ததும் சட்டென நால்வழிச் சாலையில் இருந்து பிரிந்து வலது பக்கம் இருந்து ஒற்றைச் சாலையில் புகுந்ததும் ஜெர்க் ஆனோம். ''என்ன ஆச்சு?'' என்றதும், ''டெல்லிக்கு பல ரூட்டு இருக்குது. நாம வந்த ரோடு பாம்பே போறது. டெல்லி போறதுக்கு இது ஒரு குறுக்கு வழி'' என்றார் சேட்டு. ஹாஸ்பேட் செல்லும் அந்த இருவழிச் சாலையில் ஏராளமான லாரிகள் வந்துபோய்க் கொண்டு இருந்தன. நிதானமான வேகத்தில் லாரி ஊர்ந்தது. நமக்கு முதல்நாள் என்பதால், தூங்குவதா அல்லது விழித்துக்கொண்டே இருப்பதா என்ற தடுமாற்றம். 3 மணிக்கு மேல் தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வர, பலகையில் தூங்கிவிட்டோம்.  

திடீரென விசில் ஊதும் சத்தம் பலமாகக் கேட்க... விழித்துக்கொண்டோம்.

(நெடுஞ்சாலை நீளும்)