திருட்டுப் பட்டம்!கா.பாலமுருகன்

##~## |
திருச்சி டு டெல்லி செல்லும் லாரியில் ஓசூரில் இரவு 10 மணிக்கு ஏறி, பெங்களூரு, சித்திரதுர்கா தாண்டி லாரி சென்றுகொண்டு இருந்தபோது, நாம் தூங்கிக்கொண்டு இருந்தோம். திடீரென பலமாக விசில் ஊதும் சத்தம் கேட்க, திடுக்கிட்டு விழித்தோம்.
அதிகாலை 6 மணி இருக்கும். இரு வழிச் சாலை என்பதால், சாலையின் இருபுறமும் ஏராளமான லாரிகள் ஓரங்கட்டி நின்றுகொண்டு இருந்தன. என்ன நடக்கிறது எனப் புரியாமல் விழித்தோம். சாலையின் இருபக்கமும் ஆங்காங்கே ஆட்கள் நின்றுகொண்டு விசில் ஊதி சைகை காட்டிக்கொண்டு இருந்தனர். லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு பேப்பர்களுடன் இறங்கினார் சேட்டு. சாலையின் ஓரம் குறுக்குவாட்டில் நிறுத்தப்பட்ட ஜீப்பில், கர்நாடகா மாநிலப் போக்குவரத்துத் துறை அதிகாரி அமர்ந்திருக்கிறார். அவர் அருகே நிற்கும் உதவியாளரிடம் 100 ரூபாயைத் தந்துவிட்டு, திரும்பினார் சேட்டு.
அந்த அதிகாரி, லாரியின் எந்த விஷயங்க¬ளையும் ஆராயவில்லை; கேட்கவில்லை. அவருக்குத் தேவை பணம். அதைத் தந்துவிட்டுச் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். இதேபோல், தாவணக்கெரே, ஹாஸ்பேட் ஆகிய இடங்களில் சாலையோரத்தில் கம்பீரமாக ஜீப்பின் முன் சீட்டில் அமர்ந்து செய்தித் தாள் படித்தபடி காத்திருந்த அதிகாரிகளுக்கு, மொய் செய்வதுபோல டிரைவர்கள் கொடுத்துத் திரும்பிக்கொண்டு இருந்தார்கள்.

ஹாஸ்பேட் அணையைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் சாலை ஓரத்தில் இருந்த 'மதுரை மெஸ்’ என்ற மோட்டலில் லாரியை ஓரங்கட்டினார் சேட்டு. ''மணி 9 ஆகிவிட்டது. இங்கு குளித்துச் சாப்பிட்டு விடுவோம். இதைத் தாண்டினால், தமிழ்நாடு உணவு நாம் செல்லும் சாலையில் கிடைக்காது'' என்று சரவணன் சொன்னதும் குளிக்க ஆயத்தமானோம். குளிப்பதற்கு பெரிய சிமென்ட் தொட்டியில் நீர் தளும்பிக் கொண்டு இருந்தது. ஆனால், அங்கு கழிவறை இல்லை. எல்லாமே திறந்த வெளியில்தான். நாம் இதுவரை சென்றுள்ள நெடுஞ்சாலைப் பயணத்தில், பெரிய பெட்ரோல் பங்க்களில் மட்டுமே கழிவறை வசதி இருக்கிறது. வேறு எங்கும் அதற்கென இடம் ஒதுக்கும் வழக்கம், நெடுஞ்சாலையில் இருக்கும் லாரி டிரைவர்களுக்கான உணவகங்களில் இல்லை.
கர்நாடகா மாநிலத்தில் 'மதுரை மெஸ்’ என தமிழில் பெயர்ப் பலகை வைத்துள்ள இந்த ஹோட்டலுக்கு, இந்த வழியாகச் செல்லும் தமிழக லாரி டிரைவர்கள் வருகிறார்கள். தமிழக லாரி டிரைவர்கள் பெரும்பாலும் சமைத்துச் சாப்பிடுபவர்கள். ஆனால், குறிப்பிட்ட ஹோட்டலில் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நின்று செல்வதை முக்கியமாகக் கடைப்பிடிக்கிறார்கள். காரணம், வழியில் உள்ள பிரச்னைகளை, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது இதுபோன்ற இடங்களில்தான். மதுரை மெஸ்ஸில் சரவணனைச் சந்தித்துப் பேசிய சேலம் - ஓமலூர் லாரி டிரைவர் கோவிந்தன், நம்மை யாரென்று விசாரித்தார்.

லேசாகத் தயங்கிய சரவணன், ''சொந்தக்காரங்க... டெல்லியை லாரியில் போய்த்தான் பார்க்கணும்னு அடம் பிடிச்சாங்க... அதான் கூட்டிட்டு வந்தேன்'' என்று பதில் சொன்னார். ''லாரியில நாங்க படுற பாடு பெரும்பாடு. இதுல உங்களுக்கு என்ஜாய்மென்ட் வேற... நாலு பேரு கேபின்ல உட்காந்து வர்றது ரொம்ப சிரமமா இருக்குமே... யாராவது ஒருத்தரை என்னோட வண்டியில ஏத்திவிடு... நானும் டெல்லிக்குத்தானே வர்றேன்'' என அழைத்தார். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் நம்மைப் பார்த்தார் சரவணன். ''பரவாயில்ல, நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம்'' என மறுத்த நம்மை, விடாப்பிடியாக அழைத்தார் கோவிந்தன்.
ஓசூரில் லாரியில் ஏறிய கையோடு, சரவணன் மற்றும் சேட்டுவிடம் சொன்ன முதல் விஷயம், 'நாங்கள் பத்திரிகையாளர்கள் என்பதை யாருக்கும் சொல்லக் கூடாது. யார் கேட்டாலும் உறவினர்கள் லாரியில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்றதால், அழைத்து வந்ததாகச் சொல்ல வேண்டும்’ என்று சொல்லியிருந்தோம். மேலும், எங்களுக்காக உங்களது அன்றாடப் பணியில் எந்த மாறுதல்களும் செய்ய வேண்டாம். வழக்கமாக என்ன செய்வீர்களோ, அதை அப்படியே கடைப்பிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். கோவிந்தன் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று சரவணன் சொன்னதால், நாங்கள் வந்த விஷயத்தை அவருக்கு விளக்கினோம். ஆச்சரியமான கோவிந்தன், ''ஆஹா... அப்படிப் போடு. நீங்கெல்லாம் எப்ப சிக்குவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம். எங்க தொழில் எவ்வளவு சிரமம்னு நீங்களே புரிஞ்சுக்குவீங்க. எத்தனை பேருகிட்ட அடி வாங்குறோம். உங்களுக்கு ஒரு அடியாவது வாங்கிக் கொடுத்தாதான், எங்க தொழிலோட அருமை ஊர் உலகத்துக்குப் புரியும். மஹாராஷ்ட்ராவுல உங்களுக்கு அடி வாங்கித் தர நான் கேரன்ட்டி'' என ஆர்வமானார்.
''ஏன் அடி வாங்கணும்?'' என்று நாம் கேட்க, ''நாங்க மட்டும் எதுக்குன்னு தெரிஞ்சா வாங்குறோம். அதிகாரிங்க, போலீஸ், ரௌடினு எவ்வளவு பேருகிட்ட வாங்குறோம் தெரியுமா..?'' என்றவர், கர்நாடகாவில் நடக்கும் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''செக்போஸ்ட் இருக்கோ இல்லையோ, ஆளுங்க கரெக்ட்டா இருப்பாங்க. தவறாமப் பணம் கொடுத்துட்டுப் போகணும். அதைவிட முக்கியமான பிரச்னை ஒண்ணு கர்நாடகாவுல இருக்கு. லாரியில இருக்குற சரக்கு திருடு போயிட்டா, போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடந்தாலும் கேஸ் பதிவு பண்ண மாட்டாங்க. 'நீயே திருடிட்டு கேஸ் கொடுக்கிறயா?’னு பொருளைச் தொலைச்சவனைத் திருடனாக்கிடுவாங்க.
பொருள் போனா பொழப்பே போயிடும். பொருளுக்கு ஈடா ஆயுசு முழுக்க லாரி ஓட்டினாலும் அடைக்க முடியாது. கம்ப்ளெய்ன்ட்டுனு கொடுத்து பதிவு செஞ்சாதான் இன்ஷூரன்ஸ் மூலமா கொஞ்சமாவது தப்பிக்க முடியும். அதே மாதிரி, பெங்களூரு சிட்டிக்குள்ள சரக்கு ஏற்றி இறக்க ராத்திரியில்தான் போக முடியும். ராவும் பகலுமா வண்டியை ஓட்டிட்டு வந்து பெங்களூரு அவுட்டர்ல காத்துக்கிடந்து, ராத்திரியானதும்தான் உள்ளே போவோம். வேற ஊர்கள்ல இருக்கிற மாதிரி லாரி பார்க்கிங் ஏரியா பெங்களூருல கிடையாது. ஊருக்கு அவுட்டர்ல லாரியை எங்க நிறுத்துறது? ரோட்டோரத்துல தான் நிறுத்தி ஆகணும். இங்க நிறுத்தக் கூடாதுனு போலீஸ் வந்து கேஸ் போடுவாங்க. ஒரு பக்கம் கேஸ் போடுவாங்க... இன்னொரு பக்கம் கேஸ் வாங்க மாட்டாங்க. அம்மிக் கல்லுல சிக்கின மாதிரி நசுக்குனா, நாங்க என்னதான் செய்றது?'' என்று ஆதங்கத்தைக் கொட்டினார் கோவிந்தன்.
குளித்து காலை உணவை முடித்துப் புறப்பட்டபோது மணி 10.45. ''உங்க பின்னாலதான் நானும் வர்றேன். சந்திச்சுப் பேசிக்கிட்டே இருப்போம். மஹாராஷ்ட்ரா மனுசங்களைப் பத்தி நெறைய சொல்லணும்'' என விடைகொடுத்தார் கோவிந்தன். ''இன்று மாலை மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நுழைந்துவிடுவோம்'' என்று சொன்னார் சேட்டு.
சாலையின் இருபுறமும் நிலவாகுக்குத் தகுந்ததுபோல பயிர்களும் மாறிக்கொண்டே இருந்தன. காய்ந்த நிலம், சட்டெனப் பளிச்சிடும் பச்சை வயல் என நிலப்பரப்பைத் தீர்மானிக்க முடியாத வகையில் இருந்தது கர்நாடகத்தின் வட பகுதி.
அலமாட்டி அணையின் பிரம்மாண்டமும் அதன் கால்வாய்களும் பொறாமை கொள்ளவைத்தது நிஜம். சீரான வேகத்தில் லாரி சென்றுகொண்டு இருந்தது. சரவணன் மதியச் சாப்பாடுக்குச் சமையல் வேலையை ஆரம்பித்தார். பிஜப்பூர் கடந்து கர்நாடக எல்லையான ஜால்கியில் உள்ள ஆர்டிஓ செக்போஸ்டில் சடங்குகளை முடித்துவிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நுழைந்தபோது, மணி மாலை 6.30
மஹாராஷ்டிராவில்தான் நமக்கு அடி வாங்கிக் கொடுக்க, சபதம் போட்டிருந்தார் கோவிந்தன்.
(நெடுஞ்சாலை நீளும்)

தி.விஜய்