மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை!

- கா.பாலமுருகன் படங்கள்: தி.விஜய்

நெடுஞ்சாலை வாழ்க்கை!

சூரில் லாரி ஏறிய மறுநாள் மாலை, கர்நாடக எல்லையான ஜால்கி என்ற ஊரைக் கடந்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நுழைந்தோம். ஜால்கியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக மஹாராஷ்ட்ராவில் உள்ள சோலாப்பூர் மார்க்கமாகச் செல்வதுதான் ரூட். ஆனால். அந்த வழியாகச் செல்லாமல், லாரிகள் நிரம்பிய ஒற்றைச் சாலை ஒன்றில் லாரியைத் திருப்பினார் சேட்டு.

சோலாப்பூர் நெடுஞ்சாலையில் செக்கிங்/கட்டிங் அதிகம். அதனால், ஏராளமான லாரிகள் இந்தச் சிறு சாலையில் நெரிபடுகின்றன. மெதுவாக பண்டரிபுரம் நோக்கி ஊர்ந்துகொண்டு இருந்தோம். டிரைவர்கள் இருவரும், 'இரவு 10 மணிக்கு முன்பாக அஹமதுநகர் அடைந்துவிட வேண்டும்’ என்று மதியமே பேசிக் கொண்டிருந்தனர். கடுமையான போக்குவரத்து நெரிசலால், குறித்த சமயத்தில் இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்த சரவணன், நிதானமாக லாரியைச் செலுத்தினார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

புகழ்பெற்ற வைணவ தலமான பண்டரிபுரத்தில் நுழைந்தபோது, ஜன நடமாட்டத்தில் அந்த ஊர் தளும்பிக்கொண்டிருந்தது. ''இந்த ஊர் கோயிலுக்குப் போயிருக்கீங்களா?'' என சரவணனைக் கேட்டேன். ''தமிழ்நாட்டுல இருந்து இந்தக் கோயிலுக்கு நெறையப் பேர் வர்றாங்கன்னு தெரியும். ரொம்ப பிரபலமான கோயில்னு சொல்வாங்க. ஆனா, மாசத்துல ரெண்டு மூணு தடவையாவது இந்த வழியாத்தான் போறேன். இதுவரைக்கும் சாமியைப் பார்க்கக் கொடுத்துவைக்கலை. அதே மாதிரி, ஷீரடி சாயிபாபா கோயில் வழியாத்தான் போகணும். அங்கேயும் போனது இல்லை!'' என்றார். உடனே சேட்டு, ''அஜ்மீர் தர்கா எங்களுக்கு ரொம்ப முக்கியமான இடம். அந்த ஊருக்குப் போயிருந்தாலும் அங்க போகக் கொடுத்துவைக்கலை. டில்லியில எல்லா இடங்களும் தெரியும். ஆனா, முக்கியமான இடங்களுக்குப் போனது இல்லை. லாரியையும் சரக்கையும் வெச்சுக்கிட்டு வேற எந்த விஷயத்தையும் யோசிக்க முடியுறது இல்லை'' என்று இயலாமையைப் பகிர்ந்துகொண்டார் சேட்டு. ''பண்டரிபுரம் வந்தா அஹமதுநகர் கடக்கணுமேங்கிற அவசரம் வந்துடும். ஷீரடி போகும்போது எப்படியும் நடுராத்திரியா இருக்கும். இப்படியே ஒரு 10 வருஷம் ஆயிடுச்சு'' என்று நொந்துகொண்டார் சரவணன்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

''அஹமதுநகருக்கு உள்ள 10 மணிக்கு மேல போக முடியாதா... அங்க என்ன பிரச்னை?'' என்றதும் இருவரும் சொல்லத் தயங்குவது புரிந்தது. ''உங்கப் பிரச்னையைத் தெரிஞ்சுக்கதானே வந்திருக்கேன். சொல்லுங்க'' என்றதும், சொல்ல ஆரம்பித்தார் சரவணன். ''பண்டரிபுரம் தாண்டி தீம்பூர்னிங்கிற ஊர்ல இருந்து அஹமதுநகர் வரைக்கும் 150 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இந்த தூரத்தை ராத்திரியில கடக்கிறது ரொம்ப ரிஸ்க். பெரும்பாலும் வெளிச்சத்திலேயே போயிடுவோம். முடியாதவங்க அந்தப் பக்கம் அஹமதுநகர்லேயும், இந்தப் பக்கம் தீம்பூரினியிலேயும் மோட்டல்ல ஹால்ட் போடுவாங்க. இந்த 150 கிலோ மீட்டர் தூர ரோட்ல ஊருங்க கம்மி. ஆள் நடமாட்டம் சுத்தமா இருக்காது. காடு மாதிரி இருக்கும். சிங்கிள் ரோடுதான். இந்த ரோட்லதான் திருட்டு, வழிப்பறி ஜாஸ்தி. அதனாலதான் இந்த ஏரியாவை 10 மணிக்கு முன்னாடி தாண்டிடுவோம்னு நெனைக்கிறது...'' என்றவர், இரவு உணவுக்கு லாரியை ஓரங்கட்டினார். மதியம் சமைத்த சோறும் பல்வேறு காய்களின் கூட்டணியில் உருவான சாம்பாரின் மணமும் அபாரம். சரவணன் வைத்த ரசம், அமிர்தம். சாப்பிட்டு முடித்ததும் சரவணன் டிரைவர் சீட்டில் அமர்ந்தார். சேட்டு, தூங்குவதற்கு ஆயத்தமானார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை!

எதிரே வரும் தமிழக அறிமுக லாரிகளை அடையாளம் கண்டு, நேர்த்தியான சப்தத்தில் ஒரு ஹாரன் கொடுக்கிறார் சரவணன். அதேபோல், அந்த லாரியும் ஒரு சத்தம் கொடுத்துக் கடக்கிறது. வழியில் பிரச்னை எதுவும் இல்லை என்பதன் சங்கேத பாஷை இது. பிரச்னை என்றால், டபுள் ஹாரன் கொடுத்து கையால் சிக்னல் செய்வது வழக்கம். புரிந்துகொள்ள முடியாதவர், அடுத்துவரும் லாரியை நிறுத்தி, பிரச்னை என்னவென்று தெரிந்துகொண்டு முன்னேறுவதுதான் உத்தமம். பேசிக்கொண்டே தீம்பூர்னி என்ற இடத்தை அடைந்தபோது, இரவு 11 மணிக்கு மேலாகி இருந்தது. சாலையில் இருபக்கமும் இருந்த தாபாக்களில் ஏராளமான லாரிகள் நின்றிருந்தன. 'லாரியை நிறுத்தப்போகிறார். இனி காலையில்தான் பயணம்’ என நாம் நினைத்தபோது, லாரி நிற்காமல் சென்றுகொண்டே இருந்தது. சேட்டு நன்றாகத் தூங்கிவிட்டார். விஜய், உண்ட மயக்கத்தில் பலகையில் சாய்ந்துவிட்டார். உண்மையில் எனக்குக் கொஞ்சம் பதற்றம். லேசாக பயம் எட்டிப் பார்த்தது. அதை மறைக்க, ''வழிப்பறின்னா எப்படி?'' என்றேன்.

''என்ன எப்படின்னு எல்லாம் கணக்கு கிடையாது. பைக்குல வருவானுங்க... ஜீப்புல வருவானுங்க, சிலசமயம் மினி வேன்லகூட வருவானுங்க. திடீர்னு லாரியை ஓவர்டேக் பண்ணி மடக்கி நிறுத்துவானுங்க. திபுதிபுன்னு அஞ்சாறு பேரு கையில கட்டை கத்திகளோட லாரியில ஏறிடுவானுங்க... பணம், செல்போன்னு நம்மகிட்ட இருக்குறதைக் கொடுத்திடணும். இல்லைன்னா அடி ஜாஸ்தியா விழும். சில சமயம் கத்தியில கீரல் போட்ருவானுங்க. என்ன லோடுன்னு தெரிஞ்சுகிட்டு அவங்களுக்குத் தேவையானதா இருந்தா, தார்ப்பாயைக் கிழிச்சு முடிஞ்சவரைக்கும் அள்ளிக்கிட்டுப் போயிடுவானுங்க. இந்த ஏரியாவுல எப்பவுமே பிரச்னைதான். ஆனா, போலீஸ் மருந்துக்குக்கூட நடவடிக்கை எடுக்குறதா எங்களுக்குத் தெரியலை!'' என்றவர் ஆக்ஸிலேட்டரை ஆவேசமாக மிதித்தார். ''சரி, ரிஸ்க்குன்னு சொல்லிட்டுப் போறீங்க... ஹால்ட் போடலையா?'' என்றேன். ''விடுங்க சார், ரெண்டு பேருக்கு நாலு பேரா இருக்கோம். நம்ம லாரியில, ஆக்ஸிலரேட்டர மிதிச்சா 80 கிலோ மீட்டர் வேகம் வரைக்கும் போகும். பார்த்துக்கலாம்'' என்றார் அலட்சியமாக.

''இந்த லைனுல ஓடுற நாமக்கல் பக்கத்துல இருக்கிற வலையப்பட்டி டிரைவர் ஒருத்தர, இந்த ரோட்ல  இருக்குற முஜல் பைபாஸ்கிற இடத்துல வெச்சுக் கொன்னுட்டானுங்க. அதேமாதிரி, போன புது வருஷம் அன்னிக்கு கரிமில்லாங்கிற இடத்துல, சேலம் பனைமரத்துப்பட்டி டிரைவர் மணி... இவரையும் கொன்னுட்டானுங்க. இருக்கிறதைக் கொடுத்து உயிர் தப்பிச்சிருக்கலாம். அதுக்குப் பிறகு ஆயுசு பூராவும் கடனைக் கட்டிக்கிட்டே இருக்கணும். அவனுக்கு என்ன கோவமோ தெரியலை, கொஞ்சம் வீம்பு பண்ணிருப்பான்போல. நெஞ்சுல குத்திட்டானுங்க. டிரைவர் சீட்டுல உக்கார்ந்தபடியே செத்துப்போனான். அந்த இடத்தை ஒவ்வொரு தடவையும் கடக்கும்போது அந்த டிரைவர் ஞாபகம் வந்து நெஞ்சைப் பிசையுது சார்... என்ன பொழப்பு...'' என்றபோது, ஆறுதலாகச் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

(நெடுஞ்சாலை நீளும்)