கார்ஸ்
Published:Updated:

பிசினஸ் கிளாஸ்!

மெர்சிடீஸ் பென்ஸ் பி கிளாஸ் ஆட்டோமெட்டிக் பெட்ரோல்ஞா.சுதாகர் படங்கள்: ர.சதானந்த்

ன் கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்தே நாங்கள் கார் வைத்திருப்பவர்கள். ஆட்டோமொபைல் ஆர்வம் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே உண்டு. கார் வைத்திருப்பதும் அதைப் பராமரிப்பதும் எப்படி என்பதை, என் அப்பாவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். எனக்குத் தெரிந்து இதுவரை நாங்கள் 30 கார்களுக்கு உரிமையாளராக இருந்திருக்கிறோம். என் கைவசம் தற்போது பென்ஸ் பி கிளாஸ், ஸ்கோடா, சூப்பர்ப், மாருதி எர்டிகா, ஃபியட் பேலியோ, ஆஸ்டின்-8 (1946) ஆகிய கார்கள் இருக்கின்றன.

பிசினஸ் கிளாஸ்!

ஏன் பென்ஸ் பி கிளாஸ்?

ஏற்கெனவே பல கார்கள் வந்து போயிருந்தாலும், இதுவரை பென்ஸ் கார் வாங்கியது இல்லை

பிசினஸ் கிளாஸ்!

என்ற குறை இருந்தது. அது மட்டுமல்லாமல்,  நகருக்குள் ஓட்டுவதற்காக மட்டுமே ஒரு கார் வாங்கலாம் என யோசித்தபோது, சின்னதான, அழகான, ஸ்டைலிஷான காராகவும் பென்ஸ் பி கிளாஸ் இருந்தது. நான் காரை புக் செய்த சமயம்தான் இந்த காரை கோவையில் அறிமுகம் செய்தார்கள். கோவையில் முதல் பென்ஸ் பி கிளாஸ் என்னுடையதே!

ஷோரூம் அனுபவம்

கோவை சுந்தரம் மோட்டார்ஸில்தான் கார் வாங்கினேன். ஏற்கெனவே பல கார்களை அவர்களிடம் வாங்கி இருப்பதால், நல்ல தொடர்பிலும் இருந்தேன். பென்ஸ் பி கிளாஸ் விற்பனைக்கு வருவதற்கு முன்பே, என்னைத் தொடர்புகொண்டு காரின் சிறப்புகளைக் கூறினார்கள். நானும் பென்ஸ் வாங்கும் யோசனையில் இருந்ததால், உடனே புக் செய்துவிட்டேன். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் புக் செய்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு, நவம்பரில் காரை டெலிவரி செய்தனர். கார் வாங்குவதற்கு முன்பும் சரி, வாங்கிய பின்பும் சரி, அவர்கள் சேவையில் குறை சொல்ல முடியாத அளவுக்குத் திருப்தியான அனுபவத்தைத் தந்தது, கோவை சுந்தரம் மோட்டார்ஸ்.

பிசினஸ் கிளாஸ்!

எப்படி இருக்கிறது பென்ஸ் பி கிளாஸ்?

ஒரு முழு மாளிகையைச் சுருக்கி, சின்னக் குடிசைக்குள் வைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது பென்ஸ் பி கிளாஸ். பெரிய, விலை அதிகமான சொகுசு காரில் இருக்கும் அத்தனை அம்சங்களையும், இந்த சின்ன காருக்குள் அதே வசதிகளுடன் தந்திருப்பது அருமை. நான் திட்டமிட்டு வாங்கியது, நகருக்குள் ஓட்டுவதற்கு மட்டுமே! அந்த வகையில் பவர், பிக்-அப் போன்றவை பென்ஸ் கார்களுக்கே உரிய குணம். இதன் வெளிப்புறத் தோற்றம், மற்ற கார்களுடன் நிற்கும்போது தனியாகத் தெரிகிறது. இதுவரை அதிகபட்சமாக, கேரளா வரை (270 கி.மீ தூரம்) சென்றுவந்துள்ளேன். ஓட்டுதல் தரம் இனிதான அனுபவமாக இருந்தது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அந்த அனுபவத்துக்காக ஸ்டீயரிங் பிடிக்கலாம். இதுபோன்ற சொகுசான, பவர் ஃபுல்லான காரில் மைலேஜ் அதிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், அதிலும் குறை வைக்காமல், நகருக்குள் லிட்டருக்கு 10 கி.மீ வரை மைலேஜ் தருகிறது.

பராமரிப்பு?

இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததும் இல்லை. பயணத்தின்போது சிறந்த ரைடிங் கம்ஃபர்ட் கிடைக்கிறது. சத்தம் இல்லாத இன்ஜின் இதன் இன்னொரு ப்ளஸ். இது சின்ன காராக இருப்பதால், நகருக்குள் எவ்வளவு டைட்டான பார்க்கிங் ஏரியாவிலும் ஈஸியாக பார்க்கிங் செய்ய முடிகிறது.

ப்ளஸ்

அழகான வெளிப்புறத் தோற்றமும் காரின் முன்-பின் நேர்த்தியான வடிவமைப்பும் இது வெளிநாட்டு சொகுசு கார் என்ற தோற்றத்தை, பார்த்ததுமே ஏற்படுத்திவிடுகிறது. இன்டீரியர் டிஸைன், டேஷ்போர்டு, சீட், ரூஃப் என அத்தனையும் நேர்த்தியாகவும் தரமாகவும் இருப்பது இதன் சிறப்பு. மைலேஜ், நகருக்குள் லிட்டருக்கு 10 கி.மீ, நெடுஞ்சாலையில் 12 கி.மீ வரை கிடைப்பது, இந்த வகை கார்களில் அதிகம்.

ஓட்டுதல் அனுபவம் மிக மிக அருமை. சிறப்பம்சங்கள் அனைத்துமே கையாள எளிதாக உள்ளன. டிரைவர் சீட்டில் இருந்து பார்க்கும்போது, சாலை மிகத் தெளிவாகத் தெரிகிறது. கிரவுண்ட் கிளியரன்ஸும் கொஞ்சம் அதிகம் என்பதால், ஸ்பீடு பிரேக்கர்களைக் கண்டு பயப்பட வேண்டாம். டிக்கி ஸ்பேஸ் 486 லிட்டர். எனவே, அதிகமான பொருட்களை வைத்துக்கொள்ள முடிகிறது. ஐந்து பேர் வரை தாராளமாக அமரும் அளவுக்கு இடம் உண்டு. எளிதாக உள்ளே சென்று வர முடியும் வகையில் இருப்பது, இதன் மற்றொரு சிறப்பு. பராமரிக்க எளிதாகவும், செலவு குறைவாகவும் இருக்கிறது.

பிசினஸ் கிளாஸ்!

மைனஸ்

இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் காரில், பின் இருக்கைகளில் ஆர்ம் ரெஸ்ட் இல்லை. தரமான காராக இருந்தாலும் விலை அதிகம். எல்லா சிறப்பம்சங்களும் காரில் இருக்கின்றன. ஆனால், ரிவர்ஸ் கேமரா மட்டும் மிஸ்ஸிங். இதன் அலாய் வீல் டிஸைன் மிகப் பழைய மாடலில் இருப்பது போல இருக்கின்றன.

என் தீர்ப்பு

நகருக்குள் ஓட்டும் அளவுக்கு, அதிக வசதிகள்கொண்ட பவர்ஃபுல்லான சொகுசு கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு, பென்ஸ் பி கிளாஸ் சரியான கார். ஓட்டுநர் இல்லாமல் தாங்களே கார் ஓட்டுபவர்கள், பென்ஸ் பி கிளாஸ் அனுபவத்தைத் தவறவிடக் கூடாது.