ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்தமிழ் படங்கள்: க.தனசேகரன்


என் ரெண்டு தங்க மீன்களுக்கும் ரெண்டு நாள் லீவு வருது... ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஏற்காட்டுக்கு ஒரு சின்ன ட்ரிப் போலாமா?'' என்று 'ஹலோ விகடனில்’ மெசேஜ் செய்திருந்தார் வாசகர் பாலச்சந்தர். கள்ளக்குறிச்சியில் கமலா நேரு தெருவுக்குச் சென்று, ''புதுசா மஹிந்திரா குவான்ட்டோ வாங்கியிருக்காரே... பாலச்சந்தர்னு..?'' என்று கேட்டால், சரியாக வழி காண்பிக்கிறார்கள். தன் மனைவி - இரண்டு மகள்கள், சில்க்கி ப்ரௌன் கலர் குவான்ட்டோவுடன் பயணத்துக்குத் தயாராக நின்றிருந்தார் பாலச்சந்தர். ''ஐ... ஹில் ஸ்டேஷன், மங்க்கி பாக்கக் கூட்டிட்டுப் போங்க அங்கிள்...'' என்று குதூகலித்தனர் மகள்கள் அபிநயாவும் பவ்யாவும். கள்ளக்குறிச்சியில் இருந்து சின்னசேலம், ஆத்தூர் வழியாக சேலம் சென்று, அங்கிருந்து ஏற்காடு போவதாகத் திட்டம்.
கிட்டத்தட்ட ஸைலோவின் தம்பி மாதிரி இருந்த குவான்ட்டோவின் இன்ஜினை ஆன் செய்ததும், உறுமியபடி கிளம்பியது. மூன்று சிலிண்டர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் பிக்-அப்புக்குக் குறைவே இல்லை. ஆனால், 2000 ஆர்பிஎம் வரை குவான்ட்டோவின் சொல்படிதான் நாம் கேட்க வேண்டும். பவர் 100 bhp என்பதால், நெடுஞ்சாலையில் பறக்கிறது குவான்ட்டோ. கேபின் இடவசதிதான் மிகப் பெரிய ப்ளஸ். ஆனால், எர்கனாமிக்ஸ்படி பார்க்கும்போது, பட்டன் சிஸ்டம், ஹேண்ட் பிரேக் சரளமாகப் பயன்படுத்துவதற்குக் கொஞ்சம் பழக வேண்டும். ''கார் மேளா பகுதியில் நீங்க சொல்லியிருக்கிற மாதிரி கேபின் தரமும், கியர் பாக்ஸும் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு!'' என்றார் பாலச்சந்தர்.

நாம் பயணித்தது சி8 டாப் வேரியன்ட் என்பதால், காற்றுப் பைகள், ஏபிஎஸ் என்று பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், குழந்தைகள் இருந்ததால், டாப் ஸ்பீடுக்கு வேலை வைக்கவில்லை.
8 லட்சம் ஆன் ரோடு விலைக்கு - 7 சீட்டர் வசதி; ஏபிஎஸ்; ஏர் பேக்; எலெக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்; ஆடியோ; யுஎஸ்பி போர்ட் வசதி என்று ஒரு காம்பேக்ட் எஸ்யூவியாக குவான்ட்டோ தன் கடமையைச் செய்வதாகப் பெருமைப்பட்டார் பாலச்சந்தர். ''மோட்டார் விகடன் ரெவ்யூ பார்த்துத்தான் குவான்ட்டோ வாங்கினேன்! தேங்க்ஸ்!'' என்று நன்றி சொன்னார்.
சேலத்துக்கு முன்பாக வலதுபுறம் திரும்பி, ஒரு பெட்ரோல் பங்க்கில் 55 லிட்டர் கொள்ளளவு

கொண்ட குவான்ட்டோவில் டீசலை நிரப்பினோம். நகரத்தில் 14.2 கி.மீ-யும் நெடுஞ்சாலையில் 17.3 கி.மீ-யும் மைலேஜ் தருவதாகச் சொன்னார் பாலச்சந்தர். ஹஸ்தம்பட்டி தாண்டியதும் கொண்டை ஊசி மலைப் பாதை வரவேற்க ஆரம்பித்தது. ஏற்காடு ஆரம்பத்திலேயே கடுமையான போலீஸ் செக்கிங். பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட விஷயங்கள், மது பாட்டில்களுக்கான ஃபார்மாலிட்டி செக்கிங் இல்லை. தேர்தல் நேரம் என்பதால், பணப் புழக்கம் சேலத்தில் அதிகமாக இருப்பதாகச் சொன்னார்கள் காவல்துறை அதிகாரிகள். பைக்கில் ஹாயாக டூர் வந்த சில காதலர்களையும் வளைத்து வளைத்து ஜாலியாக விசாரித்து, காதல் ஜோடிகளைத் தவிக்க விட்டுக்கொண்டிருந்தது காவல் துறை.
பொதுவாக, மலைப் பிரதேசங்கள் என்றால், விலங்குகள் பயம் இருக்கும். ஆனால், 'மலைகளின் அரசன்’ என்று சொல்லப்படும் ஏற்காட்டில் வெறுமனே குரங்குகளும், சில நேரங்களில் அதிசயமாக காட்டுப் பன்றிகளும் மட்டுமே ஹாய் சொல்லின. ''டைகர், எலிஃபென்ட்லாம் எங்க போச்சு டாடி?'' என்றாள் பவ்யா. ஆனால், இரவு நேரங்களில் காட்டெருமைகள் உலவும் என்றார்கள்.

இருள் வருவதற்குள் ஏற்காட்டில் தஞ்சம் அடைந்திருந்தோம். ஒரு சின்ன ஹேட்ச்பேக் கார், அளவான குடும்பம், மிதமான மாதச் சம்பளம்கொண்ட நடுத்தரவாசிகளுக்கு ஏற்காடு சரியான டூரிஸ்ட் ஸ்பாட். ஊட்டி - கொடைக்கானலை விட ஏற்காட்டில், இட்லிக் கடை முதல் இன்டர்நெட் சென்டர் வரை எல்லாமே மலிவு. ''ஏழைகளின் ஊட்டி ஏற்காடுனு சரியாத்தான் சொல்லியிருக்காங்க!'' என்றார் பாலச்சந்தரின் மனைவி.
ஏற்காட்டில் தமிழ்நாடு ஓட்டலில் டீலக்ஸ் ரூம் என்றால், இருவருக்கு 1,000 ரூபாயும், சாதாரண ரூம் என்றால், 750 ரூபாயும் கட்டணம். சில தனியார் காட்டேஜ்களில் இதைவிட மலிவாகவே அறைகள் கிடைக்கின்றன. ஹை கிளாஸ் மக்களுக்கு என காஸ்ட்லி ஓட்டல்களும் உண்டு. நாம் சென்றது சீஸன் டைம் இல்லை. ''இதுவே ஏப்ரல்-மே மாதங்கள் என்றால், முன்கூட்டியே புக் செய்துவிட்டு வந்தால்தான் தங்க முடியும்!'' என்றார் தனியார் காட்டேஜ் ஓனர் ஒருவர்.
ஏற்காட்டில் எப்போதுமே டெம்பரேச்சர் 30 டிகிரிக்கு மேலேயும் போகாது; 13 டிகிரிக்குக் கீழேயும்

இறங்காது என்பதால், மிதமான குளிருக்கும், சில்லென்ற வெயிலுக்கும் எப்போதும் கேரன்ட்டி. அழகான காலை வெயிலில், எமரால்டு ஏரிப் பக்கமாக குவான்ட்டோவை ஒதுக்கியபோது, ''ஹை... போட்டிங்... போட்டிங்..'' என்று குதூகலித்தனர் பவ்யாவும் அபிநயாவும். ஏரியை ரியல் எஸ்டேட் 'ஏரியா’ ஆக்கிவிடாமல், ஏற்காட்டின் பாதியாக, சுற்றுலாத்தலத்தின் மீதியாக வைத்திருக்கிறார்கள். இங்கு படகுச் சவாரிக் கட்டணமும் மிதமாகவே இருந்தது. நான்கு பேர் கொண்ட குழுவுக்கு பெடல் போட் என்றால், 100 ரூபாய். இதுவே மோட்டார் போட் என்றால் 200 ரூபாய். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஏரியில் பயணித்தவாறே ஏற்காட்டின் அழகை ரசிப்பது செமத்தியான அனுபவம். ஏரியோரம் இருக்கிற வண்டிக் கடைகளில் கடலையும், காலிஃப்ளவர் பக்கோடாவும் கொறித்தபடி மான் பூங்காவுக்கு ஒரு விசிட் அடித்துவிட்டு, மறுபடியும் குவான்ட்டோவில் ஏறினோம்.
கிளியூர் அருவி போய் ஏமாந்துவிட்டு, (செப்டம்பர், அக்டோபர் மாதம்தான் சீஸனாம்) மறுபடியும் எமரால்டு ஏரி வழியாகப் பயணித்து, பகோடா பாயின்ட்டுக்கு குவான்ட்டோவைக் கிளப்பினோம். பகோடா பாயின்ட் என்பது வெறும் வியூ பாயின்ட் மட்டுமே. இங்கிருந்து ஆத்தூர் மற்றும் அயோத்தியாபட்டினத்தின் மொத்த அழகையும் பார்க்க முடியும். இதை பிரமிட் பாயின்ட் என்றும் சொல்கிறார்கள். முன்பு ஆதிவாசிகள் நான்கு தூண்களைக் கொண்டு கோபுரம் (பகோடா) அமைத்து, மலை உச்சியில் இருந்து ஊரைக் கண்காணிப்பார்களாம். நாளடைவில் இது 'பகோடா பாயின்ட்’ என்று பெயர் மாற்றம் வந்ததாகச் சொன்னார்கள். பகோடா பாயின்ட்டில் அமெரிக்கன் ஸ்வீட் மசாலா கார்ன் 20 ரூபாய்க்குக் கிடைக்கிறது. மசாலா மக்காச்சோளத்தைக் கொறித்துவிட்டு, அங்கிருந்து மலை உச்சிக்குச் சென்றோம். அண்ணாமலையாருக்கும், சேர்வராயனுக்கும் இங்கு கோயில்கள் இருக்கின்றன. காபி எஸ்டேட்களுக்கு நடுவில், மலை உச்சியில் இருக்கும் இந்தக் கோயில்களுக்குச் செல்வதே ஒரு அட்வென்ச்சர் ட்ரிப்தான். 'கரணம் தப்பினால் மரணம்’ என்கிற ரீதியில் பயணித்து கடவுள்களைத் தரிசித்து விட்டுக் கீழே இறங்கினோம்.

கீழிறங்கினால், ATV என்னும் 'ஆல் டெரைன் வெஹிக்கிள்’ சவாரி நம்மை வரவேற்றது. காடு, மலை, பீச் மணல், மேடு - பள்ளங்களில் பயணிக்க உதவும் ஆல் டெரைன் வெஹிக்கிள்ஸ், சாகச விரும்பிகளுக்கு ஏற்ற வாகனம். மூன்று பேர் அமரக் கூடிய வாகனம் என்றால், அரை கி.மீ தூரத்துக்கு 150 ரூபாய் கட்டணம். குழந்தைகளுக்கும் இங்கு சவாரி உண்டு. அரை கி.மீ தூரத்துக்கு 100 ரூபாய். ஏடிவி வாகனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆவதால், 120 சதவிகிதம் வரி கட்டுவதாகவும், இறக்குமதிச் செலவே, வாகனத் தயாரிப்புச் செலவைவிடவும் அதிகம் ஆவதாகச் சொன்னார் பணியாளர் ஒருவர். செம ஜாலியாக குழந்தைகள் இருவரும் தனித்தனியே ஏடிவி-யில் பயணித்தபடி, போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், கரடி குகை, பொட்டானிக்கல் கார்டன், மான்ட்ஃபோர்ட் பள்ளி என்று இன்னும் எக்கச்சக்க ஸ்பாட்கள் மீதமிருந்த போதிலும், நேரமின்மையால் கிளம்ப ஆயத்தமானோம். மீண்டும் கொண்டை ஊசி வளைவுகள், போலீஸ் செக்கிங் என்று சேலத்தை நோக்கி ஆக்ஸிலரேட்டரை மிதித்தோம்.
''ப்ச்... டூர் முடிஞ்சிடுச்சா? நாளைக்கு ஸ்கூலுக்குப் போகணுமே....'' என்று சில்லென்ற ஏ.சி குளிரிலும் அபிநயாவின் கண்கள் வியர்க்க ஆரம்பித்திருந்தன.