கார்ஸ்
Published:Updated:

ஈர்க்கும் விலையில் e2o

MAHINDRA REVA e2o ரா.ராஜா ராம மூர்த்தி படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ஹிந்திரா ரேவா நிறுவனம் தன்னுடைய e2o காரின் கவர்ச்சியை அதிகரிக்க, 'குட்பை ஃப்யூல், ஹலோ எலெக்ட்ரிக்’ எனும் புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், 'குவிக்-2-சார்ஜ்’ எனும் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் கொண்டுவந்துள்ளது. மஹிந்திராவின் கட்டுப்பாட்டுக்குள் ரேவா வந்தபிறகு, பெங்களூருவில் உள்ள அதன் தொழிற்சாலைக்கு முதல் விசிட் அடித்தோம்.

ஈர்க்கும் விலையில் e2o

பெங்களூருவில் இருந்து ஓசூர் செல்லும் சாலையில் இருக்கும் ரேவா தொழிற்சாலை, 'இண்டியன் க்ரீன் பில்டிங் கவுன்சில்’ வழங்கும் 'ப்ளாட்டினம்’ விருதைப் பெற்ற ஒரே இந்திய ஆட்டோமொபைல் தொழிற்சாலை. தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்தபோது, தேவையற்ற முறையில் மின்சாரமோ, கழிவுகளோ வீணாவதைக் குறைத்திருப்பது புரிந்தது. தொழிற்சாலையின் உள்ளே இயற்கை வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பக்கவாட்டுக் கண்ணாடிச் சுவர், வெப்பத்தைத் தடுத்து ஒளியை மட்டும் உள்ளே அனுமதிக்கிறது. மேலும், தொழிற்சாலை முழுவதும் இயற்கையான வென்டிலேஷன் கொடுக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 30,000 கார்களைத் தயாரிக்கும் திறன்கொண்டது இந்தத் தொழிற்சாலை.

மஹிந்திரா ரேவா e2o  சர்ப்ரைஸ் டெஸ்ட் டிரைவ்

ரேவா தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து முடிக்கும்போது, 'e2o காரை ஓட்டிப் பார்க்க விருப்பமா?’ என்று கேட்டார்கள். விடுவோமா? தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் சாலைகளிலும், டெஸ்ட் டிராக்கிலும் e2o காரை ஒரு மினி டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

மஹிந்திரா ரேவா e2o. பார்க்க சிறிதாக இருந்தாலும், உள்ளே நான்கு பேர் தாராளமாக

ஈர்க்கும் விலையில் e2o

உட்காரலாம். காரை ஆன் செய்ய ஸ்டீயரிங்குக்குக் கீழ் இருக்கும் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டனை முதலில் அழுத்த வேண்டும். பின்னர், காரின் சாவியை வைத்து அதே பட்டனை திரும்பவும் அழுத்தினால், சத்தமோ, அதிர்வோ இல்லாமல் கார் உயிர் பெறுகிறது. டேஷ்போர்டில் ஒளிரும் விளக்குகளை வைத்துதான் கார் ஆன் ஆவதையே தெரிந்துகொள்ள முடிகிறது. கியர் லீவரை 'F’ மோடுக்குக் கொண்டு வந்துவிட்டு காரின் ஆக்ஸிலரேட்டரில் காலை வைத்தேன். மிக மெல்லிய மோட்டார் சத்தத்துடன் கார் முன்னே நகர்ந்தது. ஆக்ஸிலரேஷன் மிக சீராக இருக்கிறது. காரின் பேட்டரி, டிரைவர் சீட்டுக்குக் கீழ் இருக்கிறது என்பதால், கார் வளையும்போது இதன் டைனமிக்ஸை நன்றாக உணர முடிகிறது. ஓட்டுவதற்கு ஸ்கூட்டிபோல மிக எளிதாக இருக்கிறது. ஒரே ஒரு மைனஸ் பாயின்ட், இதில் பவர் ஸ்டீயரிங் கிடையாது என்பதுதான்!

குட்பை ஃப்யூல், ஹலோ எலெக்ட்ரிக்

'குட்பை ஃப்யூல், ஹலோ எலெக்ட்ரிக்’ என்பது, ரேவாவின் புதிய மார்க்கெட்டிங் திட்டம். இந்த திட்டத்தின்படி e2o எலெக்ட்ரிக் காரை வெறும் 4.99 லட்ச ரூபாயில் வாங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் இல்லாமல் e2o காரை வாங்கினால், 7.64 லட்ச ரூபாய் ஆகும். இந்தத் திட்டம் கார் வாங்கும் செலவையும், அதன் பேட்டரி மற்றும் மெயின்டெனன்ஸ் செலவையும் பிரிக்கிறது.

எப்படி? இந்தத் திட்டத்தின்படி கார் மட்டும்தான் நமக்குச் சொந்தம். காரின் பேட்டரி ரேவாவுக்குச் சொந்தம். அதனால், பேட்டரியின் பராமரிப்பை ரேவாதான் பார்த்துக்கொள்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு எனர்ஜி விலையாக மட்டும் மாதந்தோறும் 2,599 ரூபாய் செலுத்த வேண்டும். இதனால், பேட்டரி பற்றிய கவலை இல்லாமல் இந்த காரைப் பயன்படுத்தலாம்.

ஒருவேளை பேட்டரி பழுதானால், அது சரிசெய்யப்படும் வரை மாற்று காரை வாடிக்கையாளர்களுக்கு ரேவா வழங்கும். இந்தத் திட்டம் மஹிந்திரா ரேவா விற்கப்படும் பெங்களூரூ, புது டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் இருக்கின்றன.

ஈர்க்கும் விலையில் e2o

'குவிக்-2-சார்ஜ்’

இது, மஹிந்திரா ரேவாவின் புதிய சார்ஜிங் தொழில்நுட்பம். சாதாரண பவர் சாக்கெட்டில் e2o காரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் பிடிக்கும்.

ஆனால், இந்தப் பிரத்யேகமான 'குவிக்-2-சார்ஜ்’ ஸ்டேஷனில் முழுமையாக சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம்தான் ஆகும். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 25 கி.மீ தூரம் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா ரேவா  கார்களை சார்ஜ் செய்ய பெங்களூருவில்  5 கி.மீ சுற்றளவுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் இருக்கிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 390 சார்ஜிங் ஸ்டேஷன்கள் (விற்பனையில் இருக்கும் நகரங்களில் மட்டும்) இருக்கின்றன.

எலெக்ட்ரிக் காருக்கு ரீசேல் வேல்யூ  அதிகம்!

''e2oல் பவர் ஸ்டீயரிங் இருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்குமே?''

ஈர்க்கும் விலையில் e2o

''நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், ஒரு எலெக்ட்ரிக் காரை உருவாக்கும்போது விலைக்கும், ரேஞ்சுக்கும், வசதிகளுக்கும் நிறைய பேலன்ஸ் செய்ய வேண்டியது இருக்கும். e2o காரில் பவர் ஸ்டீயரிங் சேர்த்தால், அதன் ரேஞ்ச் பாதிக்கும். ஏனென்றால், குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை அதுவே எடுத்துக்கொள்ளும். ரேஞ்ச் குறைந்தால், அதற்கேற்றவாறு பேட்டரியை மேம்படுத்த வேண்டியிருக்கும். இதனால், விலையும் அதிகமாகும். அதனால், பவர் ஸ்டீயரிங்கை e2o காரில் ரேஞ்ச் பாதிக்கப்படாதவாறு சேர்ப்பதற்கான ஆராய்ச்சியில் இருக்கிறோம்.''

''பெட்ரோல்/டீசல் கார்களுக்கு ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிட ஒரு முறை இருக்கிறது. ஆனால், e2o போன்ற ஒரு எலெக்ட்ரிக் காருக்கு ரீ-சேல் மதிப்பு இருக்குமா?''

''எலெக்ட்ரிக் கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிட, ஒரு தெளிவான திட்டம் இதுவரை இந்தியாவில் இல்லை. ஆனால், மற்ற கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கி டுவதற்கும், எலெக்ட்ரிக் கார்களுக்கான ரீ-சேல் வேல்யூவைக் கணக்கிடுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் இன்ஜின், நகரும் பாகங்கள் மற்றும் அதிர்வுகள் கிடையாது. எனவே, எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காரின் தேய்மானம் மிக மிகக் குறைவுதான்.

இதனால், பெட்ரோல் / டீசல் கார்களைவிட இதன் ரீ-சேல் வேல்யூ மிகவும் அதிகம். மேலும், ஒரு பெட்ரோல்/டீசல் காரின் இன்ஜின் வாழ்நாள் முடிந்த பின்பு, நம்மால் புது இன்ஜின் மாற்றி விற்க முடியாது. ஆனால், இதுவே பேட்டரியால் இயங்கும் கார் என்றால், பேட்டரியை மட்டும் மாற்றிவிட்டால் போதும்; உங்களுக்குப் புது காராக மாறிவிடும் அல்லவா?! இன்ஜினை மாற்றுவதைவிட பேட்டரியை மாற்றுவது எளிதுதானே!''

''மஹிந்திரா ரேவா e2o தமிழகத்தில் விற்பனைக்கு வருமா?''

''இது பற்றிப் பரீசீலித்துக் கொண்டு இருக்கிறோம். விரைவில் முடிவு தெரியும்.''