Published:Updated:

மலைப்பு... மயக்கம்... மர்மம்....2

கணேசன் அன்பு

சிக்ஸ் பேக்’ வைக்க ஆசைப்பட்டு, முதல் நாளே 10 மணி நேரம் ஜிம்மில் இருந்தால், என்ன ஆகும்? அடுத்த 10 நாட்களுக்கு கை, கால்களை அசைக்க முடியாது. அதுபோலத்தான் 18,000 அடி உயரம்கொண்ட மலை உச்சிகளில் பயணிக்க வேண்டும் என்றால், சிறிது சிறிதாக நமது உடலை  அந்த இடங்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். சிம்லா, மணாலி போன்ற நகரங்களில், ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு சாவகாசமாக மலை ஏறுவதே நல்லது.

சண்டிகர், ஸ்ரீநகர், லே போன்ற நகரங்களுக்குச் செல்ல, நம் நாட்டின் பல நகரங்களில் இருந்து விமான வசதி உண்டு. இந்த ஊர்களுக்குச் செல்ல ரயில்களும், பேருந்துகளும்கூட நல்ல சாய்ஸ்தான்.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....2

நேரடியாக ஸ்ரீநகர் அல்லது லே செல்வதைக் காட்டிலும், சண்டிகரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி சிம்லா, மணாலியைக் கடந்து அதிக உயரம்கொண்ட கனவாய்களின் வழியே 'லே’ நகரத்தை அடைவதே சாகசப் பிரியர்களின் சாய்ஸ். நாம் தேர்ந்தெடுத்ததும் இதே ரூட்தான்.

சென்னையில் இருந்து சண்டிகருக்கு விமானக் கட்டணம் சுமார் 10,000 ரூபாய். அதுவே, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே தெளிவாகத் திட்டமிட்டு முன்பதிவு செய்தால், 5,000 ரூபாயில் முடிந்துவிடும். சண்டிகரில் இருந்து சிம்லாவுக்கு அன்றைய தினமே சென்றுவிடலாம். பேருந்து அல்லது காரில் நான்கு மணி நேரப் பயணம்தான்.

எங்கள் பயணத்துக்கான வழித் தடங்களின் இறுதி வடிவம் தீட்டி, 12 பேர் கொண்ட குழு முடிவான சில நாட்களிலேயே உத்ரகாண்டிலும், ஹிமாச்சல் பிரதேசத்திலும் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. சிம்லாவில் இருந்து கல்பா செல்லும் வழித்தடத்தில் சங்லா பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு. போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விட்டது. மீட்புப் படையினராலும் நெருங்க முடியாமல், மாநிலத்தின் முதலமைச்சர் மூன்று நாட்களாக சங்லாவில் சிக்கித் தவித்த அபாயகரமான மலைச் சாலைகள் அவை. இதுபோன்ற காரணங்களால், குடும்பத்தினரும் நண்பர்களும் இமயமலைப் பயணத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். தடைகளே மேலும் மேலும் இமயம் நோக்கி எங்களை ஈர்த்தது.

விமான டிக்கெட்டுகளை ஏற்கெனவே பதிவு செய்திருந்ததாலும், அதே சமயத்தில் குறிப்பிட்ட

மலைப்பு... மயக்கம்... மர்மம்....2

தேதிகளில் சிம்லா, கல்பா, காசா சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படாததாலும் இந்த வழித் தடங்களை மாற்றி அமைத்து, சிம்லாவில் இருந்து மணாலி வழியாக லே அடையத் திட்டமிட்டோம்.  சென்னையில் இருந்து நாங்கள் புல்லட் பைக்குகளைக் கொண்டுசெல்லவில்லை. ராயல் என்ஃபீல்டு புல்லட், தண்டர்பேர்டு பைக்குகளை மணாலியில் வாடகைக்கு எடுத்துக்கொள்வது என முடிவெடுத்தோம்.

பயணத்தின் முதல் நாளன்று, முற்பகல் சென்னையில் புறப்பட்டு மும்பை வழியாக சண்டிகரை அடைந்தபோது, மாலை 6 மணி. ஏற்கெனவே பதிவு செய்திருந்த டெம்போ டிராவலர் வேன் தயாராக நின்றுகொண்டு இருந்தது. (இணையதளத்தின் மூலமாகவே குறைந்த விலையில் தரமான டிராவல் ஏஜென்ட்டுகளைப் பிடித்துவிடலாம். அல்லது தேசிய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாகவும் பதிவு செய்துகொள்ளலாம். இது போன்ற சாலைகளுக்கு டெம்போ டிராவலர் வரப்பிரசாதம்.)

சண்டிகர் நகரைக் கடந்து, சுமார் ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மலைப் பாதை ஆரம்பமானது. மெள்ள மெள்ள பனி மூட்டத்துடன்  கூடிய குளிர்காற்று வருடி வரவேற்றது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களைப்போல் இல்லாமல், இந்த மலைப் பாதை முழுவதும் தொடர்ச்சியாக வீடுகளும், விடுதிகளும் அமைந்திருந்தன. உணவுக்கோ, தங்குவதற்கோ எந்தச் சிக்கலும் இல்லை. தரம்பூர் எனும் சிற்றூரில் இரவு உணவை முடித்துவிட்டு, சிம்லாவை அடைந்தபோது, நள்ளிரவு 12 மணி.

மலைப்பு... மயக்கம்... மர்மம்....2

ஹிமாச்சல் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா. கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 7,300 அடி. ஒட்டுமொத்த கேரளாவின் பசுமையான பகுதிகளை மட்டும் 'எடிட்’ செய்து உருவாக்கியதைப் போல இருந்தது. அடுக்கடுக்காக இங்கு கட்டப்பட்டிருந்த வீடுகளின் அமைப்பைக் காணும்போது அச்சமும், வியப்பும் மேலோங்கின. மலை உச்சியில் இருந்து பாதாளம் வரை தொடர்ச்சியாக வீடுகள் கட்டப்பட்டு பள்ளத்தாக்கு நகரமாக அமைந்திருந்தது. இங்குள்ள மக்கள் எப்போதும் கைகளில் குடையுடன் சுற்றுகின்றனர். கணிக்க முடியாத கால நிலை. எந்த நேரத்திலும் மழை வரும். எங்கள் பயணத்தின்போதும் மழை, வெயில், மேக மூட்டம், தெளிந்த வானம், பனிச்சாரல் என 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கால நிலை கண்ணாமூச்சி ஆடியது.

1,000 ரூபாயில் இருந்து தரமான விடுதிகள் கிடைக்கின்றன. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் நுழைந்து மூன்று மாடிகள் மேலே சென்றால், அடுத்த தெருவில் விடுதியின் மற்றொரு வாயில் வந்துவிடும். அந்த நுழைவாயிலுக்கு அதுதான் தரைதளம்! பெரும்பாலான விடுதிகள் இதுபோலத்தான் இருந்தன. இதுபோன்ற விடுதிகளை முதன்முறையாகப் பார்த்துச் சிலிர்த்த எங்களை, 'மால் ரோடு’ மேலும் பரவசப்படுத்தியது.

மால் ரோடு, நகரின் பிரதான ஷாப்பிங் பகுதியாகும். இந்தச் சாலைக்குள் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. கட்டாயம் நடைப் பயணம்தான். ஆகவே, போக்குவரத்து நெரிசலோ, ஷாப்பிங் ஏரியாவில் புகை மூட்டமோ இல்லை. மாலை வேளையில் பனிமூட்டம்தான் உண்டானது. பிரதான சாலை... அதிலிருந்து பிரிந்து செல்லும் குறுகிய சந்துகள் என மொத்தப் பகுதியும் மேடும் பள்ளமுமாக இருந்தது. நம் ஊரில், நாம் பார்த்து அனுபவித்த பஜார்களுக்கு உண்டான எந்த ஒரு நெடியும் இல்லை. நறுமணம் வீசியது! எலுமிச்சைப் பழத்தில் இருந்து எலைட் வகை ஆல்கஹால் வரை இங்கு கிடைக்கின்றன. மால் ரோட்டில் அமைந்திருந்த கடைகள், விடுதிகள், அலுவலகங்கள் ஆகியவை பெரும்பாலும் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டவை. ஐரோப்பிய தெருவில் நடப்பதைப் போன்ற மாயை உண்டானது. அதேசமயம் ஹிமாச்சல் பிரதேசத்தின் மாநில தலைமைச் செயலகம், சென்னை நகரின் ஏதோ ஒரு மாநகராட்சி அலுவலகம்போல சின்ன அளவில் ஆரவாரமின்றி, மிகச் சாதாரணமாக இருந்தது. பாதுகாப்பு போலீஸ் ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை.

நகரின் மையத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில்  'குஃப்ரி’ (Kufri) எனும் ஒரு மலை உச்சி. இங்கே ஃ'பன் வேர்ல்டு’ எனும் இடம் இருக்கிறது. இந்த இடத்தை வாகனங்கள் மூலமாகவோ, நடைப் பயணமாகவோ அடைய முடியாது. குதிரைகள் மூலமாகத்தான் மலையேற வேண்டும். பாதை முழுவதும் ஒரு அடி ஆழத்துக்கு சகதி. கிட்டத்தட்ட 3 கி.மீ மலை ஏற்றத்துக்குப் பின்புதான் 'ஃபன் வேர்ல்டு’ பகுதியை அடைய முடியும். எங்கள் பயணத்தின் முதல் சாகசம், இந்த சகதிகள் நிறைந்த 45 நிமிட குதிரைப் பயணம்தான்.

ஐந்து அடி மட்டுமே அகலம்கொண்ட சகதியில் மூழ்கிய சாலையில், குதிரைகள் ஒட்டுமொத்தமாக முண்டியடித்துச் சென்றன. ஒரு பக்கம் மலை, இன்னொரு பக்கம் பாதாளம். எதிர்வரும் குதிரைகளுக்கு எங்கள் குதிரைகள் வழிவிட மறுக்கின்றன... குழுத் தலைவனாக ஒரு 'ட்ரோஜன்’ குதிரை முன்னோக்கிச் சென்றாலும், அதனை மற்ற குதிரைகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. அங்கேயும் அரசியல்போல!

மொத்த குதிரைகளுக்கும் இரண்டே சிறுவர்கள்தான் பாதுகாவலர்கள். ஒருவன் 'கஞ்சா’

மலைப்பு... மயக்கம்... மர்மம்....2

புகைத்தபடி பழைய ஷாருக்கான் பாடல்களைப் பாடிக்கொண்டு குதிரையில் வந்தான். இன்னொருவன், முழங்கால் அளவுக்கு ரப்பர் ஷூ அணிந்து சகதிகளில் நடந்துவந்தான். நாங்கள் விழி பிதுங்கி குதிரையின் கடிவாளங்களையே பார்த்துக் கொண்டு சென்றோம். குதிரைக் கட்டணம் ஒருவருக்கு 375 ரூபாய் (அரசாங்கம் நிர்ணயித்த கட்டணம்).

ஃபன் வேர்ல்டில் ஆப்பிள் தோட்டமும், தேநீர் கடைகளும், விதவிதமான 'பாரா க்ளைடிங்’ சாகச விளையாட்டுகளும் இருந்தன. மலை உச்சியிலிருந்து பார்த்த சிம்லா கூடுதல் பிரமிப்பைத் தந்தது. குஃப்ரி, மால் ரோடு இவைகளைத்  தவிர, சிம்லாவில் காணத் தகுந்த இடங்கள்...

ஜக்கூ ஹில்ஸ், 8,000 அடி உயரம் கொண்ட சிம்லாவின் மற்றொரு உச்சி.

சஞ்சீவி மலையைத் தேடி வந்தபோது அனுமன் ஓய்வு எடுத்ததாக நம்பப்படும் புராண காலச் சிறப்புமிக்க இடம். இங்கு அனுமன் கோயிலும் உள்ளது. சூரிய உதயமும் அஸ்தமனமும் இந்த உச்சியில் இருந்து காணும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.

மற்றொரு முக்கிய இடம், புனித மைக்கேல்ஸ் கதீட்ரல் தேவாலயம். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட வட இந்தியாவின் மிகப் பழமையான சர்ச். ஹிமாச்சல் பிரதேசத்தின் மியூஸியம், தாராதேவி கோயில் போன்றவையும் காண வேண்டிய முக்கியமான இடங்கள். இவை அனைத்தும் சுற்றுலா பயணிகளுக்கானவை. சாகசப் பயணிகள் அடுத்த நாளே மணாலி புறப்பட வேண்டியதுதான்!

மலையேற வேண்டும் அல்லவா? தயாராகுங்கள்!

(சிகர்...ரூம்)