“நாங்கள் என்ன செய்ய முடியும்?”கா.பால முருகன் படங்கள்: தி.விஜய்
“நாங்கள் என்ன செய்ய முடியும்?”மஹாராஷ்ட்ரா வழியாகச் செல்லும் லாரிகள், இரவில் கடக்க விரும்பாத இடமான தீம்பூர்னி டு அஹமதுநகர் சாலையில், நள்ளிரவில் பயணம் செய்துகொண்டு இருந்தோம். மற்ற இருவரும் தூங்கிவிட, சரவணனிடம் இந்தச் சாலையில் நடக்கும் கொலை, கொள்ளைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே, அவ்வப்போது எங்கள் லாரியைக் கடக்கும் ஒவ்வொரு வாகனத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தபடி இருந்தேன்.

அடர் வனக் கறுப்பு விரிந்து கிடக்கும் அந்த இரவில், வானத்தில் இருந்து கசிந்த லேசான வெளிச்சத்தில் சாலையோரத்து வேலிகளும் புதர்களும், தூரத்து வரைபடமாக சிறு மரங்களும் நகர்ந்துகொண்டே இருக்க... ஒற்றையடிப் பாதையில், நடுநிசி வேளையில் கை விளக்கு ஏந்தி தனித்து நடக்கும் மனநிலை. சிதிலமான அந்தச் சாலையில், லாரியின் முகப்பு விளக்குகளின் ஒளி, தள்ளாடியபடியே முன்னேறிக் கொண்டிருந்தது. தூரத்தில் ஊர்ந்து செல்லும் ஏதாவது ஒரு வாகனத்தைக் கண்டதும், 'நாம் தனியாக இல்லை’ என்று மனம் சந்தோஷமாகும். ஆனால், சரவணன் அதையெல்லாம் ஓவர்டேக் செய்து கொண்டே இருந்தார். மீண்டும் தனியாகும் உணர்வு இருளைப்போலச் சூழ்ந்து கொள்ள... மிக அபாரமான நீண்ட இரவு அது.
ஒரு லாரியைக் கொள்ளையடிக்க ஏதாவது ஒரு சூத்திரம் இருக்க வேண்டுமல்லவா? இப்போதெல்லாம் ஆளரவமற்ற நடுக்காட்டில் காத்திருந்து, வாகனத்தை மறித்து யாரும் கொள்ளையடிப்பது இல்லையாம். நாங்கள் கடந்துவந்த சில ஊர்களில் இருந்த வேகத் தடைகளில் ஏறி இறங்கும் அவகாசம் அவர்களுக்குப் போதுமானது. சாலையில் நிற்கும் ஆட்கள் லாரியைக் கண்காணிப்பார்கள். லாரியின் தார்ப்பாய் கட்டப்பட்டு இருக்கும் வடிவத்தை வைத்து, வேகத் தடையில் ஏறி இறங்கும்போது லாரி குலுங்குவதை வைத்து; மணத்தை வைத்து லாரியில் என்ன சரக்கு இருக்கிறது என்பதைக் கணித்துவிடுவார்கள். எந்த மாநிலத்து வாகனம்; அதில் ஆட்கள் எத்தனை; அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்வார்கள். இதில், எந்த மாநிலத்தின் வாகனம், சரக்கு என்பதைக் கணக்கிட்டு, வாடகைப் பணம் அவர்கள் கையில் எவ்வளவு இருக்கும் என்பதையும் ஊகித்துவிடுவார்கள். எல்லா அம்சங்களும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், திருட்டுக் குழு - லாரியை வேறொரு வாகனத்தில் பின்தொடரும்.

சாலையின் இருபுறமும் ஒளி இல்லை; வேறு வாகனங்கள் வரவில்லை போன்ற தருணத்துக்காகக் காத்திருப்பார்கள். சட்டென முன்னேறி சாலையின் குறுக்கே வாகனத்தைக் கொண்டுவந்து லாரியை நிறுத்திவிடுவார்கள். அனைத்தும் 15 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்துவிடும். குழுவாக வருபவர்கள், ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் வருவார்கள். அந்த 15 நிமிடங்களில் லாரியில் இருக்கும் சரக்கு, பணம், செல்போன் என விலை உயர்ந்த பொருட்கள் எதுவுமே நம்மிடம் இருக்காது. நமக்கு பய உணர்வை ஏற்படுத்துவதற்காக அடிப்பார்கள். அந்த அடிகள் கைகளா, ஆயுதமா என்பது நம் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. இந்த இடத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும்போதோ அல்லது பணம் தர மறுக்கும்போதோதான் அடுத்தகட்ட சம்பவமாக கொலை நடக்கிறது.
''நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் நால்வர் இருக்கிறோம். மேலும், இது பவர் அதிகமான லாரி என்பதால், நம்மிடம் நெருங்கமாட்டார்கள்'' என்றார் சரவணன் சிரித்துக்கொண்டே. ஆனால், என்னால் சிரிக்க முடியவில்லை. தூரத்தில் தாபா இருப்பதன் அடையாளமாக வண்ண விளக்குகள் தெரிந்ததும் கொஞ்சம் ஆசுவாசமானேன். ''டீ குடிக்கலாம்'' என லாரியை ஓரங்கட்டினார் சரவணன். அங்கு, சுமார் 100 லாரிகளாவது நின்றிருந்ததைக் கண்டு ஆச்சரியமானேன். ''இதுதான் இந்தப் பக்கத்தோட பார்டர். வடக்க இருந்து வர்றவங்க இங்க ஹால்ட் போட்டுட்டு காலையில கிளம்புவாங்க!'' என்றார். அங்கே மதுரையைச் சேர்ந்த ஒரு டிரைவரைச் சந்தித்தேன். அவர் என்னை டிரைவர் என நினைத்துக் கொண்டு, ''தனியாவா இந்த ஏரியாவ பாஸ் பண்ணுனீங்க? என்று ஆச்சரியத்தோடு கேட்டார். ''ஏம் பாஸு ரிஸ்க் எடுக்குறீங்க. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது!'' என்று என்னை எச்சரித்தார்.
மீண்டும் அஹமதுநகர் நோக்கிப் புறப்பட்டோம். திடீரென கரடு முரடாக இருந்த சாலை, பளிச்சென மாறி தடபுட சத்தம் இல்லாமல் லாரி சீறியதைக் கண்டு, நகரை நெருங்கிவிட்டோம் என நினைத்தேன். சாலையின் இருபுறமும் இருந்த கட்டடங்கள் அது ராணுவ முகாம் பகுதி என்பதை உணர்த்தியது. சுமார் ஐந்து கி.மீ தூரம் கடந்ததும் சாலையில் செக் போஸ்ட் தென்பட, வரிசையாக லாரிகள் நின்று கொண்டிருந்தன. ''இது ஒன்றும் கட்டணச் சாலை இல்லையே'' என்ற சந்தேகத்தை சரவணனிடம் கேட்டேன். ''இது கட்டணச் சாலை இல்லை. ஆனால், கன்டோன்மென்ட் ஏரியா என்பதால், கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை 'நாக்கா’ என்கிறார்கள். அரசியல்வாதி யாராவது கான்ட்ராக்ட் எடுத்திருப்பார். 15 ரூபாய் டிக்கெட்டுக்கு இன்று எவ்வளவு கேட்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை'' என்றார் சரவணன்.
முன்னால் நின்றிருந்த ராஜஸ்தான் பதிவு எண்கொண்ட லாரி டிரைவருடன், செக்போஸ்ட்டில்

இருந்த இளைஞன் கடுமையாக வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தான். லாரி டிரைவரும் கீழே இறங்கி சரிசமமாக அவனுடன் மோதிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சட்டென்று பக்கவாட்டில் ஒதுங்கிய அந்த இளைஞன், கையில் உருட்டுக் கட்டையுடன் திரும்பிவந்தான். அவனுடன் இன்னும் சிலபேர் சேர்ந்துகொள்ள, அந்த டிரைவரை அடிக்கப் பாய்ந்தான். அந்த இளைஞன் அடிக்க முனைந்த டிரைவருக்கு, அவனுடைய தந்தை வயது இருக்கும். அவன் காலைத் தொட்டு மன்னிக்குமாறு வேண்டினார், அந்த வயதான டிரைவர். கண் முன்னே என்ன நடக்கிறது என்பது புரியாமல் உறைந்து போயிருந்தேன். அவன், லாரியைப் பின்னால் எடுத்துக்கொண்டு திரும்பிச் செல்லுமாறு மிரட்டத் துவங்க... சட்டையில் ஆங்காங்கே துழாவி பணத்தை அவன் கையில் கொடுக்கவும், ''ஜாவ்ரே, ஜா....’ என்று அவரை நோக்கி வசைச் சொல் ஒன்றை உதிர்த்தான் அந்த இளைஞன். அந்த இருட்டில், வயதான டிரைவர் கூசிக் குறுகியபடி லாரியில் ஏறுவதைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தது.
அடுத்து, உருட்டுக் கட்டையைத் தோளில் சாய்த்தவாறு எங்கள் லாரியருகே வந்து கை நீட்டினான். சரவணன் எவ்வளவு என்று கேட்கவும், ''180 ரூபாய்'' என்றான். ''போனமுறை நூறு ரூபாய்தானே தந்தேன்'' என்றதும், ''இஷ்டம் இருந்தால் பணம் கொடு. இல்லாவிட்டால், லாரியைத் திருப்பிக்கொண்டு செல்'' என்று அலட்சியமாகச் சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு ரசீது எடுத்துவந்து சரவணன் கையில் திணித்தான். அதை வாங்கிப் பார்த்தபோது, 15 ரூபாய் என அச்சிடப்பட்ட ரசீதுகள் பத்துக்கும் மேற்பட்டவை இருந்தன. அந்த வயதான டிரைவர், இவனிடம் ஏன் வாக்குவாதம் செய்தார் என்பது புரிந்தது.
''எங்களால் இவர்களை என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார் சரவணன்.
(நெடுஞ்சாலை நீளும்)