கார்ஸ்
Published:Updated:

மினி இப்போது ‘மினி இல்லை’

மினி கூப்பர் எஸ்தொகுப்பு: ர.ராஜா ராம மூர்த்தி

மினி இப்போது ‘மினி இல்லை’

பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் வந்தபிறகு, வெளியாகும் மூன்றாவது தலைமுறை மினி கார் இது. தீபாவளி சமயத்தில் நம் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் லேட்டஸ்ட் மினி காரை ஓட்டிப் பார்த்தோம். இதுவரை வந்த மினி கார்களிலேயே தற்போது வரவிருக்கும் புதிய தலைமுறை மினி கார்கள்தான் தொழில்நுட்ப ரீதியாகவும், மைலேஜ் விஷயத்திலும் சிறப்பானது என்கிறது மினி நிர்வாகம். மேலும், மினி கார்களின் பாரம்பரியம் மிக்க 'ஃபன் டு டிரைவ்’ அம்சமும் இதில்தான் நன்றாக இருக்குமாம்! நாம் டெஸ்ட் செய்தது மினி கூப்பர் எஸ் மாடல். மினி கார்களில், ஸ்போர்ட்டியான மாடல் இது.

 டிஸைன்

தற்போது வந்துள்ள மூன்றாவது தலைமுறை மினி கார்கள்தான், இதுவரை வெளியான மினி கார்களிலேயே மிகவும் பெரியது. பழைய மினியைவிட 98 மிமீ அதிக நீளமாகவும், 44 மிமீ கூடுதல் அகலமாகவும் இருக்கிறது புதிய கார். ஆனால், காரின் உயரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், மினி கார்களுக்கே உரிய ஸ்போர்ட்டியான உருவமைப்பைக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய டிஸைன் அம்சங்களான ஹெக்ஸகனல் க்ரில், புஷ்டியான பானெட், ஃப்ளோட்டிங் ரூஃப் போன்றவை இருந்தாலும், புதியதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக, இவற்றில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லை. உதாரணத்துக்கு, வட்ட வடிவ ஹெட்லைட்டுகளைச் சுற்றியிருக்கும் எல்இடி பட்டைகள், எதையோ பார்த்துப் பயந்தது போன்ற தோற்றத்தைக் அளிக்கிறது. டெயில் லைட்டுகள் தேவைக்கும் அதிகமான சைஸில் இருக்கிறது. ட்வின் பேரல் எக்ஸாஸ்ட் பார்க்க மிக அழகாக இருப்பதுடன், அருமையான சத்தத்தையும் அளிப்பதைப் பின்னால் தெரிந்துகொண்டோம்.

மினி கூப்பர் எஸ், பின்னிருக்கையில் உட்கார்ந்து பயணிக்க விரும்புபவர் களுக்கானது அல்ல. இதை நீங்களே ஓட்டுவதுதான் காருக்குச் செய்யும் மரியாதை. ஆனால், பின்னிருக்கை இட வசதி எப்படி இருக்கிறது? மினி கூப்பர் எஸ் மாடலின் பின்னிருக்கைக்கு நுழைந்து அமர்வதே கஷ்டமான காரியம். அப்படியே அமர்ந்தாலும், இட வசதி குறைவு. டிக்கி இட வசதி முன்பைவிட அதிகம் என்றாலும், இன்னும் வசதியான அளவுகளுக்கு வரவில்லை. இவையெல்லாம் எனக்கு முக்கியம் என்பவர்கள், தயாராகிக் கொண்டிருக்கும் ஐந்து கதவுகள்கொண்ட மினி காருக்குக் காத்திருக்கலாம். மூன்று கதவுகள் கொண்ட மினி, முழுக்க முழுக்க ஓட்டுதலை அனுபவிக்க விரும்புபவர்களுக்கான கார்.

மினி இப்போது ‘மினி இல்லை’

முன்னிருக்கைகள் ஸ்போர்ட்டியாக ஓட்டுவதற்கு ஏற்றவாறு, பக்கவாட்டு சப்போர்ட்டுகளைக் கொண்டுள்ளன. எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்கூட இல்லாத இந்த இருக்கையில் அமர்ந்தாலே கைகளும், கால்களும் காரை ஓட்டத் துடிக்கின்றன. புதிய மினியில் செய்யப்பட்டு இருக்கும் முக்கிய மாற்றம், ஸ்பீடோ மீட்டர் பழையபடி ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இருப்பது தான். இதனால், சென்டர் கன்ஸோலில் 8.8 இஞ்ச் ஸ்க்ரீன் வைக்க இடம் கிடைத்துள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் டிரைவிங் மோடுக்கு ஏற்ப, இதன் டிஸ்ப்ளே தீம் மாறிக்கொள்ளும். 'ஸ்போர்ட்’ மோடில் சென்டர் கன்ஸோலைச் சுற்றி இருக்கும் எல்இடி பட்டை, டேக்கோ மீட்டர் போல ஒளிர்கிறது. காரின் மொத்த கேபினிலும் பழைமையும், புதுமையும் சிறப்பாக ஒருங்கிணைந்துள்ளன.  

இன்ஜின்

ஜெட் விமானங்களில் இருப்பதைப்போல 'டாகிள்’ டைப் ஸ்டார்ட் பட்டனைத் தட்டியதும், சின்ன உறுமலுடன் இயங்குகிறது கூப்பர் எஸ். சிட்டி டிராஃபிக்கில் ஓட்டும்போது நன்றாகவே இருக்கிறது. ஸ்போர்ட்டியான காராக இருந்தாலும், நகரங்களுக்குள் ஓட்டும்போது சாதாரண காரைப் போல கட்டுக்குள் இருப்பது நன்மையே! இந்த நன்மைக்குக் காரணம், இதன் புதிய 1,998 சிசி, 4 சிலிண்டர், டர்போ, பெட்ரோல் இன்ஜின். 189 bhp சக்தியை 4,700 - 6,000 ஆர்பிம்-லும், 28.5kgm டார்க்கை 1,250 - 4,750 ஆர்பிஎம் -லும் அளிக்கிறது. மினி கூப்பர் எஸ் ஆட்டோமேட்டிக், 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் அடைந்துவிடும் என்கிறது மினி. பேடில் ஷிஃப்டிங்காக இருந்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்ஷிஃப்ட்டாக இருந்தாலும் காரின் ஆக்ஸிலரேஷன் சூப்பர்!

மினி இப்போது ‘மினி இல்லை’
மினி இப்போது ‘மினி இல்லை’

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில் மினி கூப்பர் எஸ் காரை ஓட்டும்போது, கார் அதுவாகவே விரும்பி ஓடுவதுபோல அருமையான அனுபவம். ஸ்போர்ட் மோடில் செட் செய்துவிட்டால், இதன் ஸ்பீடு சென்சிடிவ் ஸ்டீயரிங், செம ஷார்ப். இன்ஜின் நம் சொல்படி கேட்பதால், அவ்வப்போது ரெட் லைனுக்கு விரட்டலாம். மினியின் கையாளுமை, அதன் முன்னோர்களைப் போலவே சிறப்பாக இருக்கிறது. அவ்வப்போது எக்ஸாஸ்ட்டில் கேட்கும் வெடிக்கும் சத்தம், அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகிறது.

புதிய மினியில் இருக்கும் அப்டேட்டட் சஸ்பென்ஷன், சாதாரண சாலைகளில் நன்றாக இருந்தாலும், சாலை சிறிது குண்டும் குழியுமாக இருந்தாலும்கூட அதிகம் அதிர்கிறது. இதற்குக் காரணம், நாம் ஓட்டிய காரில் இருந்த 17 இன்ச் 'லோ  ப்ரொஃபைல் ரன் ஃப்ளாட்’ டயர்களாகவும் இருக்கலாம்.

முதல் தீர்ப்பு

புதிய மினி கூப்பர் எஸ் காரில் சொல்ல முடிந்த ஒரே ஒரு மைனஸ், இதன் இறுக்கமான ஓட்டுதல் தரம்தான். நிதானமாக ஓட்டும்போது பக்குவமான அனுபவத்தை அளிக்கும் கூப்பர், விரட்டும்போது நம்மை மிரட்டுகிறது. பழைய கூப்பர் எஸ் மாடலைவிட செம ஸ்போர்ட்டிதான். நம் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட இருக்கும் மினி கூப்பர் எஸ் காரின் விலை 28 லட்ச ரூபாயைத் தொடும். ஆனால், இந்தச் சின்ன காரில் இவ்வளவு காசைக் கொட்டத் தயார் என்றால், அதில் தவறு ஏதும் இல்லை!

AUTOCAR INDIA