பெஞ்ச் மார்க் பென்ட்லி!தொகுப்பு:ர.ராஜா ராமமூர்த்தி
எந்த ஒரு கார் தயாரிப்பாளருக்கும் கை வராத ஒரு கலை, பென்ட்லி நிறுவனத்துக்கு மட்டும் நன்றாக வரும். முழு சொகுசு கார்களாக இருந்தாலும், பெர்ஃபாமென்ஸிலும் நன்றாக இருக்கும் என்பதால், மற்ற சொகுசு கார் தயாரிப்பாளர்களைவிட பென்ட்லிக்கு ஒரு ஸ்பெஷல் இமேஜ் உண்டு. இதற்குக் காரணம், பென்ட்லி 'சொகுசு கார்கள்’ என்ற கான்செப்ட்டையே வித்தியாசமாக அணுகுவதுதான். பென்ட்லி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கான்டினென்ட்டல் ஜிடி v8s காரை ஓட்டியபோது, அது புரிந்தது.

முழுக்க முழுக்க ஸ்டைலிங்கை மாற்றுவதற்குப் பதிலாக, பென்ட்லியின் டெக்னிக்கல் இன்ஜினீயர்களிடம் வேலையை ஒப்படைத்து விட்டார்கள் போல. வெளிப்புற வடிவமைப்பில் சாதாரண கான்டினென்ட்டல் காருக்கும், இந்த v8 s காருக்கும் சில வித்தியாசங்கள்தான். கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில், தாழ்வாகத் (காரின் உயரம் 10 மிமீ குறைக்கப்பட்டுள்ளது) தெரியும் கான்டினென்ட்டல் ஜிடி v8 s காரைப் பார்க்கும்போதே, இதயத் துடிப்பு எகிறுகிறது!

முன் பக்க க்ரில்லில் சின்ன மாற்றங்கள் இருக்கின்றன. முன் பக்க ஸ்ப்ளிட்டர், சைடு ஸ்கர்ட்ஸ், பின்பக்க டிஃப்யூஸர், ரியர்வியூ மிரர்கள் போன்றவை கறுப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 20 இன்ச் ஓப்பன் ஸ்போக் அலாய் வீல்கள், சிவப்பு வண்ண பிரேக் காலிபர்கள் போன்றவை v8 s காருக்கு என பென்ட்லி தந்திருக்கும் ஸ்பெஷல் அம்சங்கள். ஆப்ஷனலாக அளிக்கப்படும் 'Mulliner’ பேக்-ல் வைரங்கள் பதிக்கப்பட்ட லெதர் ட்ரிம், நகை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஃப்யூல் ஃபில்லர் கேப்(?!), 21 இன்ச் பிளாக் எடிஷன் அலாய் வீல்கள் அளிக்கப்படுகின்றன. இவை 'சீன்’ காட்ட விரும்புபவர்களுக்கு!
காரின் கேபின் முழுக்க முழுக்க ஸ்பெஷலாக கைகளால் உருவாக்கப்பட்டு இருந்தாலும், கன்ட்ரோல்கள் ஓட்டுபவரை மனதில் வைத்தே வடிமைக்கப்பட்டதில் புரிகிறது, பென்ட்லி இன்ஜினீயர்களின் அணுகுமுறை. மிக உயரமாக இருப்பவர்களும் வசதியாக உணரும் கேபின் இது.
கான்டினென்ட்டல் ஜிடியின் v8 இன்ஜின், இந்த 's’ மாடலில் 521 bhp சக்தியை 6,000 ஆர்பிஎம்-லும், 69.34 kgm டார்க்கை 1,700 ஆர்பிஎம்-லும் அளிக்கிறது. 0 - 100 கி.மீ வேகத்தை 4.3 விநாடிகளில் அடைந்துவிடும் என்கிறது பென்ட்லி. கான்டினென்ட்டல் ஜிடி க்ஷி8 ஷி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 309 கி.மீ உடன் எலெக்ட்ரானிக்காக 'லிமிட்’ செய்யப்பட்டு உள்ளது.
இதன் 8 ஸ்பீடு ZF க்விக் ஷிஃப்ட் கியர் பாக்ஸை ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்துவிட்டால் போதும், இன்ஜினில் இருந்து சக்தியை எடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்த இன்ஜின் அளிக்கும் டார்க், எந்த கியரில் இருந்தாலும் நீங்கள் கேட்டவுடன் காரை முன்னே சீறவைக்கிறது. ஆப்ஷனலாக அளிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் எக்ஸாஸ்டைச் சேர்த்துக் கொண்டால், இது அனைத்தும் சங்கீதம்!

V8 S காரின் ஷார்ப்பான டைனமிக்ஸுக்குக் காரணம், முழுவதும் சீரமைக்கப்பட்ட சஸ்பென்ஷன்தான். ஏற்ற இறக்கங்களுடன், வளைவு நெளிவுகளுடன் இருக்கும் மலைச் சாலைகளில் நீங்கள் செட் செய்திருக்கும் மோடுக்கு ஏற்ப தாலாட்டவோ, மிரட்டவோ செய்கிறது இதன் சஸ்பென்ஷன். 4 வீல் டிரைவ் என்பது எக்ஸ்ட்ரா ப்ளஸ். இதனால், 2.3 டன் எடை கொண்ட இந்த காரை, சின்ன காரைப் போல ஓட்டிச் செல்லலாம். ஸ்டீயரிங், சாலைக்கும் டயர்களுக்கும் இடையே நடப்பதை அப்படியே நம் கைகளில் எதிரொலிக்கின்றன. வேகமாக ஒரு வளைவை நெருங்கினால், பதற்றப்படத் தேவையில்லை என்பதை இதன் ஆப்ஷனல் கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக்குகள் உணர்த்துகின்றன. இவைதான் தயாரிப்பு கார்களில் பொருத்தப்படும் டிஸ்க் பிரேக்குகளிலேயே மிகப் பெரியது. கான்டினென்ட்டல் ஒரு பிரபல கிராண்ட் டூரர் கார். சாதாரண சாலைகளில் 'கம்ஃபோர்ட்’ மோடில் வைத்துவிட்டால் போதும், கப்பல் போலச் செல்கிறது பென்ட்லி கான்டினென்ட்டல் ஜிடி V8 S.
இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் விலை மதிப்புகொண்ட இந்த கார், பென்ட்லியின் புகழ் பெற்ற 'கான்டினென்ட்டல்’ வரிசை கார்களில் சேர்க்கப்பட தகுதிகொண்டது!