கார்ஸ்
Published:Updated:

ரெடிமேட் எஸ்யூவி!

மஹிந்திரா எக்ஸ்யூவி 500சுரேன் படங்கள்: பத்ரி

மஹிந்திராவின் முகத்தை மாற்றிய கார், எக்ஸ்யூவி 500. இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விலைகொண்ட கார்களுக்கு வரவேற்பு அதிகம் இருக்காது என்ற கற்பனைக் கதைகளை உடைத்த காரும், மஹிந்திராவின் எக்ஸ்யூவிதான். இதன் வெற்றிக்கு முக்கியக் காரணமே, பிரம்மாண்டமான ஸ்டைல், அதிக சிறப்பம்சங்கள் மற்றும் குறைந்த விலை ஆகியவைதான். ஆனால், இதைத் தாண்டி ஒரு கார் பெரிய வெற்றியைப் பெற வேண்டுமானால், அது நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

ரெடிமேட் எஸ்யூவி!

முதலில் ஸ்டைலைப் பார்த்து, விலையைப் பார்த்து, அதிக சிறப்பம்சங்களைப் பார்த்து கார் வாங்கினாலும், வாடிக்கையாளர்கள் காரைப் பற்றி நல்ல விஷயங்களை வெளியே சொன்னால்தான் காரின் விற்பனை அதிகரிக்கும். இதற்கு மிக முக்கியம் இன்ஜினின் நம்பகத்தன்மை. கிலோ மீட்டர்கள் கரையக் கரைய, இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் கரைந்து விடக் கூடாது. அந்த விஷயத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எப்படி?

விற்பனைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட, 12,000 கி.மீ ஓடிய மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரை, டெஸ்ட் டிரைவ் செய்ய எடுத்தோம். மஹிந்திரா நிறுவனத்தின் கார், இரண்டரை ஆண்டுகளாக இதன் மெயின்டனன்ஸ் பெர்ஃபெக்ட்டாக இருந்திருக்கும் என்பதால், இதுதான் இந்த டெஸ்டுக்குச் சரியான கார் எனத் தேர்ந்தெடுத்தோம்.

டிஸைன்

சில வண்ணங்களில் அழகாகவும், அதே சமயம் அதிரடியாகவும் இருக்கக்கூடிய கார், எக்ஸ்யூவி 500. கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் எக்ஸ்யூவியின் டிஸைனை ஒருபடி மேலே உயர்த்திக் காட்டுகிறது. ஆனால், நம்முடைய டெஸ்ட்டுக்கு வந்த காரின் வண்ணம் சிவப்பு. வெயிலில் அதிகம் நின்றிருக்குமோ என்கிற அளவுக்கு கலர் கொஞ்சம் டல். காரின் பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை, மஹிந்திரா கார்களிலேயே எக்ஸ்யூவி 500 கார்தான் பெஸ்ட் என்று சொல்லலாம். பிளாஸ்டிக் பாகங்களின் தரம் பிரமாதமாக இல்லை என்றாலும், குறை சொல்லும்படி இல்லை.

ஆடியோ சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேஷன் என எல்லாமே சிறப்பாக வேலை செய்தன. இருக்கைகள்தான் எக்ஸ்யூவி 500 காரின் மிகப் பெரிய பலம். முன் பக்கம் இரண்டு பேர் வசதியாக கால்களை நீட்டி உட்கார முடியும் என்பதோடு, பின்பக்க இருக்கைகளில் மூன்று பேர் வசதியாக உட்கார்ந்துவிடலாம்.

எக்ஸ்யூவி 500 காரின் டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்துவிட்டாலே, கொஞ்சம் திமிர் கூடிவிடுகிறது. இதன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால் வெளிச்சாலை முழுவதுமாகத் தெரிவதோடு, மற்ற கார்கள் எல்லாம் மிகச் சின்ன கார்கள் போலவும், 'தம்பிங்களா கொஞ்சம் ஓராமாப் போங்க’ என்று சொல்லும் அளவுக்கு டிரைவிங் பொசிஷன் மிகப் பெரிய கான்ஃபிடன்ஸைக் கொடுக்கிறது. எக்ஸ்யூவி 500 காரை, கட்டுமானத் தரத்தில் சிறந்த கார் என்று சொல்ல முடியாது.

ரெடிமேட் எஸ்யூவி!

இன்ஜின்

பழைய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் இன்ஜினை மாற்றங்கள் செய்து, ரீ-ட்யூன் செய்து தயாரிக்கப்பட்டதுதான் எக்ஸ்யூவி 500 காரில் இருக்கும் 140 bhp சக்திகொண்ட எம்-ஹாக் இன்ஜின். 2,179 சிசி திறன்கொண்ட இது, ஸ்கார்ப்பியோவைவிட 20 bhp சக்தி அதிகம் கொண்டது. ஸ்கார்ப்பியோவின் இன்ஜினுக்கும், எக்ஸ்யூவி 500 இன்ஜினுக்கும் உள்ள பெரிய வித்தியாசமே, இதன் ட்யூனிங்தான். ஸ்கார்ப்பியோவின் பவர் குறைவுதான் என்றாலும், மிகவும் வேகமான கார் போல சீற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், எக்ஸ்யூவி இன்ஜின் ஒரே சீராக இருக்கிறது. டர்போ சார்ஜர் வேலை செய்ய ஆரம்பித்த பிறகும் சட்டென வேகம் பிடித்து பயமுறுத்தாமல், சீராகச் செல்கிறது. ஓர் இன்ஜினுக்கு 12,000 கி.மீ என்பது மிகக் குறைவு. ஆனால், சில இன்ஜின்களின் பெர்ஃபாமென்ஸில் சில மாற்றங்கள் இருக்கும். அதாவது, வேகம் குறைய ஆரம்பிக்கும். அது போன்ற மாற்றங்கள் எதுவும் எக்ஸ்யூவி 500 காரில் இல்லை.

கியர்பாக்ஸின் பெர்ஃபாமென்ஸும் சிறப்பாக இருந்தது. ஆனால், கியர் ஷிஃப்ட்தான் கடுப்பைக் கிளப்பியது. காரணம், கியர் லீவருக்கு முன்னால் கறுப்பு வண்ண கப் ஹோல்டர் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதை இந்த இடத்தில் எதற்கு வைத்திருக்கிறார்கள் என்று புரியவே இல்லை.

ரெடிமேட் எஸ்யூவி!

பிரேக்ஸ்

பிரேக்குகளைப் பொறுத்தவரை, ஏபிஎஸ் பிரேக் இருந்தும் இரண்டு முறை சடர்ன் பிரேக் அடித்தபோது, பிரேக் லாக் ஆனது. அதுவும் பின் வீல்களில் பிரேக் லாக் ஆனது. எலெக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் வசதிகொண்ட இந்த காரில், எந்த வீலுக்கு ஃபோர்ஸ் அதிகம் தேவைப்படுகிறதோ, அந்த வீலுக்கு ஃபோர்ஸ் அதிகம் செல்லும்போது சில சமயங்கள் பிரேக் லாக் ஆகும். ஆனால், அப்படியும் லாக் ஆகாமல் தடுப்பதுதான் ஏபிஎஸ் எனப்படும் 'ஆன்டி லாக் பிரேக்ஸ்’ வசதி. ஆனால், இது நாம் டெஸ்ட் செய்த எக்ஸ்யூவி 500 காரில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. மஹிந்திரா கவனிக்க வேண்டிய ஏரியா இது.

ஓட்டுதல் மற்றும் கையாளுமை

ஜீப் முதல் ஸ்கார்ப்பியோ வரை மஹிந்திரா வாகனங்களில் பயணம் செய்தவர்களுக்கு ஓட்டுதல் தரம் எப்படி இருக்கும் என்பது புரியும். மஹிந்திரா என்றாலே, தூக்கித் தூக்கிப் போடும் என்ற குற்றச்சாட்டுகளுக்கு, கொஞ்சம் மெனக்கெட்டு உழைத்திருக்கிறார்கள். அதனால், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் அலுங்கல் குலுங்கல்கள் குறைந்திருக்கின்றன, அவ்வளவே! முன் பக்க இருக்கையில் உட்கார்ந்து பயணித்தால், தப்பித்தீர்கள். பின் இருக்கைகளில் மாட்டிக் கொண்டால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது குதிரை சவாரிதான். ஓட்டுதல் தரம் குறை சொல்லும்படி இருந்தாலும், கையாளுமையில் டிஸ்டிங்ஷன் வாங்குகிறது எக்ஸ்யூவி 500. காரின் ஸ்டெபிளிட்டியும் சிறப்பாக இருக்கிறது!

ரெடிமேட் எஸ்யூவி!

'பாஸ்தா’ சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களின் உணவாகத் தான் இருந்தது. ஆனால் இன்று, நம் ஊர் மசாலா கம்பெனிகளே ரெடிமேட் பாஸ்தாவை பாக்கெட்டில் அடைத்து விற்கும் நிலை வந்துவிட்டது. இதில், பல ரெடிமேட் பாஸ்தாக்களை வாயில் வைக்கமுடியாது. சில மட்டுமே நினைவில் நிற்கும். அதுபோல், எஸ்யூவி மார்க்கெட்டில் பல கார்கள் விற்பனைக்கு இருந்தாலும் விலை, சிறப்பம்சங்கள், ஸ்டைல் என்பதைத் தாண்டி, குறைந்த மெயின்டனன்ஸ் கொண்ட கார் என்ற பெயரையும் வென்றிருக்கிறது எக்ஸ்யூவி 500. லோக்கல் எஸ்யூவிதான். ஆனால், குறை சொல்ல முடியாத எஸ்யூவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 500.