கார்ஸ்
Published:Updated:

மின்னல் க்ரூஸர்!

தொகுப்பு:ரா.ராஜா ராமமூர்த்தி

ட்ரையம்ப் நிறுவனத்தின் லேட்டஸ்ட் க்ரூஸர் பைக்கான தண்டர்பேர்டு ஸ்டார்ம், இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. க்ரூஸர்களிலேயே மிகவும் வித்தியாசமான பைக் இது என்கிறார்கள். ஓட்டிப் பார்த்து விடுவோமே!

மின்னல் க்ரூஸர்!

டிரையம்ப் தண்டர்பேர்டு ஸ்டார்ம், பார்த்ததும் 'அழகு’ என்று சொல்லத் தோன்றவில்லை. ஹீரோ போல இல்லாமல், வில்லன்போல மிரட்டலான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. அட்டைக் கறுப்பு வண்ணம் இதன் தோற்றத்துக்கு இன்னும் அமானுஷ்யமான ஃபீல் தருகிறது. ஆனால், ஒரு பிரீமியம் க்ரூஸர் பைக்குக்கான சிறப்பம்சங்களாக டூயல் எக்ஸாஸ்ட், மிரர்கள் மற்றும் ஃபோர்க்குகளில் க்ரோம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கைப் போலவே இருக்கும் இதன் ட்வின் ஹெட்லைட்டுகள், சாலையில் தனித்துவமாகத் தெரிகின்றன. ஃப்யூல் டேங்க்கில் இருக்கும் ஸ்பீடோ மீட்டர், சுவிட்ச்சுகளின் தரம் போன்றவை பைக்கை ஓட்டும்போது நல்ல அனுபவத்தைத் தருகின்றன. பில்லியன் சீட் மிகவும் சிறிதாக இருப்பதால், பின்னால் அமர்பவர்களுக்குச் சிரமம். ஆனால், ஓட்டுபவருக்கான சீட் வசதியாகவே இருக்கிறது. பைக்கின் ஒட்டுமொத்த கட்டுமானத் தரம் சிறப்பாக இருக்கிறது.

தண்டர்பேர்டு ஸ்டார்ம் பைக்கை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுப்பதும், திரும்ப பார்க் செய்வதுமே பெரிய வேலை. காரணம், இதன் 339 கிலோ எடை. இந்த பைக்கைத் தள்ளிக்கொண்டு போவதற்குக்கூட நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சாப்பிட வேண்டும். சிட்டி டிராஃபிக்கில் இதைச் சமாளிப்பது மிகச் சிரமம். பைக்கின் பெரிய தோற்றம், அகலமான ஹேண்டில்பார் காரணமாக, மற்ற வாகனங்களைக் குறைவான வேகங்களில் ஓவர்டேக் செய்யும்போது, கவனமாக இருக்க வேண்டும். இந்த க்ரூஸர் பைக்கின் டர்னிங் ரேடியஸ் பெரியது என்பதால், யு-டர்ன் போடுவதற்குள் மண்டை காய்ந்துவிடும். இதன் திராட்டில் ரெஸ்பான்ஸ் மிகவும் ஷார்ப். எனவே, டிராஃபிக்கில் மிகவும் யோசித்துத்தான் பைக்கை நகர்த்த வேண்டியிருக்கிறது. மேலும், கிளட்ச் மிகவும் டைட்டாக இருக்கிறது.

மின்னல் க்ரூஸர்!

நெடுஞ்சாலையில் தண்டர்பேர்டு ஸ்டார்ம் மின்னலைப் போலச் செல்கிறது. பொதுவாக, இது போன்ற பிரீமியம் க்ரூஸர் பைக்குகளில் V ட்வின் இன்ஜின்தான் இருக்கும். ஆனால், இந்த டிரையம்ப் பைக்கில் இருப்பது 1,699 சிசி பேரலல் ட்வின் இன்ஜின். மிகவும் வேகமாக 'ரெவ்’ ஆகிற இந்த இன்ஜின் காரணமாக, க்ரூஸருக்குப் பதிலாக ஸ்போர்ட்ஸ் பைக் அனுபவம் கிடைக்கிறது. இதன் சத்தமும் புல்லட் போல அதிரடிக்காமல், ஸ்போர்ட்ஸ் பைக் போல உறுமுகிறது. 96.6 bhp சக்தியை அளிக்கும் இந்த இன்ஜின், 2,950 ஆர்பிஎம்-ல் 15.9 kgm டார்க்கை அளிப்பதால், எந்த கியரிலுமே ஆக்ஸிலரேஷன் அபரிமிதமாக இருக்கிறது. இதுதான் இந்த இன்ஜினின் பெரிய ப்ளஸ் பாயின்ட். கிளட்ச் டைட்டாக இருந்தாலும், கியர் ஷிஃப்ட் தரம் சிறப்பாகவே இருக்கிறது.

இந்த இன்ஜினின் அருமையான பெர்ஃபாமென்ஸை நெடுஞ்சாலையில் அனுபவிக்க உதவுவது, பைக்கின் சிறப்பான ஸ்டெபிளிட்டி. அகலமான பின் பக்க டயர், பைக்கின் அதிகமான சக்தியையும், க்ரிப்பையும் அருமையாகச் சமாளிக்கிறது. சிட்டி டிராஃபிக்கில் வளைத்து ஓட்ட சிரமமாக இருந்தாலும், இதன் நம்பத் தகுந்த ஸ்டெபிளிட்டி காரணமாக, நெடுஞ்சாலையில் தைரியமாக வளைத்துத் திருப்பி ஓட்டலாம். அதிக எடை, அதிக வேகம் ஆகிய இரண்டையும் கட்டுக்குள் வைக்க, இருக்கவே இருக்கிறது முன்னும் பின்னும் இருக்கும் 310 மிமீ ஏபிஎஸ் டிஸ்க் பிரேக்குகள். பைக்கின் சஸ்பென்ஷன் இன்னும் கொஞ்சம் சாஃப்ட்டாக இருந்திருந்தால், நன்றாக இருக்கும்.  

மின்னல் க்ரூஸர்!

டிரையம்ப் தண்டர்பேர்டு ஸ்டார்ம் பைக்கின் விலை 13 லட்ச ரூபாய் (எக்ஸ்ஷோரூம் டெல்லி). தினம் தினம் ஓட்டி அனுபவிக்க சிறந்த பைக் இல்லை. எப்போதாவது நெடுஞ்சாலையில் பறக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பைக் இது.