ஹோண்டா ஆக்டிவா 125தொகுப்பு:ர.ராஜா ராமமூர்த்தி
ஸ்கூட்டர் செக்மென்ட்டையே தூக்கி நிறுத்திய தயாரிப்பு, ஹோண்டா ஆக்டிவா. 1999-ம் ஆண்டில், தனது முதல் இந்திய ஸ்கூட்டராக ஆக்டிவாவை அறிமுகப்படுத்தியது ஹோண்டா. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ஆக்டிவாவின் விற்பனை விறுவிறுப்பு குறையாமல் இருக்கிறது. இது 125 சிசி ஸ்கூட்டர்களின காலம் என்பதால், ஹோண்டா இப்போது 125 சிசி இன்ஜினுடன் 'ஆக்டிவா 125’ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆக்டிவா 125 வெற்றி பெறுமா? ஒரு முன்னோட்டம்.


இந்தியர்களுக்குப் பிடித்தமான, உலோகத்திலான பெரிய பாடியைக் கொண்டிருக்கிறது ஆக்டிவா 125. ரொம்பவும் அதிரடி டிஸைன் இல்லாமல், மெல்லிய கோடுகளுடன் ஸ்மார்ட்டான தோற்றத்தில் இது டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. முன் பக்கம் ஹாலோஜன் ஹெட்லைட்டும், க்ளியர் லென்ஸ் சைடு இண்டிகேட்டர்களும் இருக்கின்றன. வழக்கமான ஆக்டிவா 110 போல இல்லாமல், சில்வர் கேஸிங்குக்குள் அனலாக் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்களும் இருக்கின்றன. 110 கி.மீ வரை காட்டும் ஸ்பீடோ மீட்டரில் மணிக்கு 30-50 கி.மீ வேகம் 'எக்கனாமி’ ஸோனாக இருக்கிறது.
சுவிட்சுகள், லீவர்கள் பயன்படுத்த வசதியாக இருக்கின்றன. இருக்கை நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. பில்லியனுக்காக அலாய் ஃபுட் ரெஸ்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பின் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது, ஆக்டிவாவுக்கே உரிய பாரம்பரிய டிஸைனுடன் டெயில் லைட் க்ளஸ்டரும், அலாய் கைப்பிடிகளும் இருக்கின்றன.
ஹோண்டா ஆக்டிவா 125-ல் 4 ஸ்ட்ரோக், 124.9 சிசி, ஏர் கூல்டு இன்ஜின் இருக்கிறது. இது 6,500 ஆர்பிஎம்-ல் 8.6 bhp சக்தியை அளிக்கிறது. 5,500 ஆர்பிஎம்-ல் 1 ளீரீனீ டார்க்கை அளிக்கிறது. கார்புரேட்டர் மூலம் எரிபொருள் கலவையைப் பெறும் இந்த இன்ஜினுக்கான சோக், ஹேண்டில்பாருக்குக் கீழ் இருக்கிறது. காலையில் ஸ்டார்ட் ஆக ரொம்ப நேரம் பிடிக்கிறது என்கிற குற்றச்சாட்டுகளுக்குச் செவி சாய்த்திருக்கிறது ஹோண்டா. ஆக்டிவா 125-ல் கிக் ஸ்டார்ட்டரும் உண்டு. பட்டன் ஸ்டார்ட்டுக்கு 'மெயின்டெனன்ஸ் ஃப்ரீ பேட்டரி’ கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 125-ஐ முழுமையாக டெஸ்ட் செய்யும்போதுதான், இந்த இன்ஜின் எவ்வளவு மைலேஜை அளிக்கிறது என்பது தெரியும்.
ஆக்டிவா 125-ல் 5 ஸ்போக் அலாய் வீல்களும், முன் பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் ஃபோர்க்குகளும், பின் பக்கம் சிங்கிள் ஷாக் அப்ஸார்பரும் இருக்கின்றன. முன் பக்கம் 12 இஞ்ச் வீலும், பின் பக்கம் 10 இஞ்ச் வீலும் இருக்கின்றன. முன் வீல்களுக்கான 190 மிமீ ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், ஆப்ஷனலாக அளிக்கப்படுகிறது. பின் பக்கம் வழக்கம்போல 130 மிமீ கேபிள் ட்ரம் பிரேக்குகள்தான். கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தையும் கொண்டு வரவிருக்கிறது ஆக்டிவா 125.
ஆக்டிவா 125 ஸ்கூட்டர், வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. நாம் முழுமையாக டெஸ்ட் செய்யும்போது கிடைக்க இருக்கும் மைலேஜும், ஏப்ரம் மாதம் இது டீலர்ஷிப்புகளில் விற்பனைக்கு வரும்போது சொல்லப்படும் விலையும்தான் இதன் உண்மையான வெற்றிக்குக் காரணிகளாக இருக்கும். சுமார் 60,000 ரூபாய்க்கு ஹோண்டா ஆக்டிவா 125 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!